ஞாயிறு, 12 மே, 2019

சுளுந்தீ: மருத்துவ மரபணு கொண்டவரால் மட்டுமே தொகுக்க முடியும் :- சித்த மருத்துவர் கீதா.

அருமையான எழுத்துக்கோர்வை....
எழுவதற்கு மனமில்லாமல் படித்துக்கொண்டிருக்கிறேன்...
எதை ஈர்க்கிறோமோ அதை அடைய முடியும்...
என் தேடலில் உங்க நாவலுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு....
சின்ன சின்ன விடயங்களை எவ்வளவு அழகாக கதையாக சொல்கிறீர்கள்...
இலக்கிய நயத்தோடு இடையிடேய வட்டார மொழியில்... வார்த்தைகளையும் நிறைய நுட்பங்களையும் இது நாவல் அல்ல ஆய்வுக்கட்டுரை போல உள்ளது....
சேராங்கொட்டையில் இருந்து சாயம் எடுக்கும் முறை அப்பப்பா வியந்து தான் போயிருக்கேன்....
புளியரையும் தேனும் சித்தரின் உணவு என்ன ஒரு ஆராய்ச்சி...
ஒரு மருத்துவ மரபணு மட்டுமே இப்படி தொகுக்க முடியும்...
குழித்தைலம் இறக்கும் முறை...
ராசபிளவைக்கு கருஞ்சித்திரமூல தைலம்... என்ன ஒரு மருத்துவ அறிவு...
வாழ்வியலாக மருத்துவம் பார்த்தவர்களுக்கே உரிய நடை....
கூடவே இனக்குழுக்களுக்கு நேரும் ஆபத்து...
முல்லை நில மக்களின் வாழ்வாதாரம் பற்றிய குறிப்பு நீண்டுகொண்டே போகிறது ஐயா...
விரைவில் புத்தக வாசிப்பை முடித்து விட்டு தொகுக்கிறேன் நன்றி....

தமிழர் சமூக வரலாற்று நெருப்பைக் காத்து நிற்கும் சுளுந்தீ :- வழக்கறிஞர் பா.அசோக்.


பொதுவாக நாவல்கள் அதிகம் வாசிப்பதில்லை.
சுஜாதாவோடு அது மறந்து விட்டது.

சாருவையும் எஸ்ராவையும் படிக்கும் மனநிலை இப்போது ஏனோ வருவதில்லை. இத்தனைக்கும்
சாருவின் தீவிர வாசகன் நான்.

 ஒருகாலத்தில் அவருடைய பிளாக்கை காலையும் மாலையும் இரவு என மூன்று நேரமும் திறந்து பார்ப்பவன். சாருவின் பதிவுகள் வராவிட்டால் ஏதோ இழந்தது போலிருக்கும். பின்னர் அவருடைய அதீதமான self boasting என் மனநிலையை பிறழ வைத்து விடுமோ என பயமே வந்துவிட்டது. விக்கியும் கூகுளாண்டவரும் அவருக்கு நிறைய அருள் புரிந்துள்ளனர் என தெரிந்த பிறகு சாரு  பூசாரியை விடுவது இயல்பு தானே.

2017 இல் அண்ணன் நந்தன் ஸ்ரீதரன் கைகளில் இருந்ததால் சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை வாசித்தேன். வித்தியாசமான நாவல் பரபரப்பான ஆங்கில நாவல் மாதிரி வெகு இயல்பான சுயநல மனிதர்கள் வியாபார உத்திகள் என நகர்ந்தது.

பின்னர் Shankar A வினுடைய தொடர் நாவல். விறுவிறுப்பான ஒன்று.

மிக நீண்ட நாள் கழித்து
வழக்கறிஞர் Suthakaran Inthiran புண்ணியத்தால் இரண்டு மூன்று நாவல்கள் வாசிக்க ஆரம்பித்தேன். அவரின் பரிந்துரை தவிர்த்து நான் தொட்டது பாலகுமாரனின் உடையார் ..
கைசுட்டது தான் மிச்சம்.
மீண்டும் தெனாலிராமனின் பூனையானது போலிருந்தது.

சுதாகரனிடம் நான் கேட்டது ஏர்மகராசனின் தமிழ் எழுத்துகள் பற்றிய நூல் ஒன்று. ஆனால் அவர் தருவித்தது

     சுளுந்தீ.

புத்தகம் வந்த இரண்டு மூன்று நாட்கள் வாசிக்கவேயில்லை . தமிழ் இந்து.. Lakshmi Gopinathan ஆகியோரின் நூல் விமர்சனங்கள் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது.

நேற்று வீட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலில் இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். அதன் பிறகு கீழே வைக்கவில்லை.  வைக்க முடியவில்லை. எவ்வளவு செய்திகள். டாவின்சி கோடுக்கு பிறகு ஒரே நாளில் வாசித்த நூலிது.

பன்றி மலை சுவாமிகள் பற்றி செவிவழி  செய்திகள் தான் அறிந்துள்ளேன். இதில் அவரும் ஒரு பாத்திரம்.

அல்கெமி, அரபு நாடுகளின் வேதியல் வெளிப்பாடு என்றால் வெடியுப்பும் கந்தகமும் தமிழ் சித்த மருத்துவத்தின் பிள்ளைகள்.

பாஷாணம் எனும் விஷப்பொருளை மருந்தாக்க தெரிந்தவன் தமிழன்.

மேலை நாட்டு தாவரவியல் ஆய்வாளர்கள் flora's and faunas களை தொகுக்கும்  போது ஒரு தமிழ் மருத்துவ சமுதாயத்தை சார்ந்த நபர் துணை நின்றது மறந்த வரலாறு. அவர் பெயரும் இராமன் என்றே நினைக்கிறேன்.

சுளுந்தீயில் தான் எத்தனை செய்திகள்..
தமிழ் இந்துவில் வந்த விமர்சனத்தில் தொ.பரமசிவன் நாவல் எழுதினால் எப்படி இருக்குமோ அது போல என எழுதியிருந்தார்கள்.

அதில் ஒரே ஒரு திருத்தம்

 தொ.பரமசிவனும் ஆ.சிவசுப்பிரமணியனும்
இணைந்து எழுதிய நாவல் என கண்டிருப்பதே சரி என்பது என் கருத்து.

வெங்கம்பய என்பது நம் காதுகளில் அவ்வப்போது விழும் வசைச்சொல் அதன் பொருள் புரியாமல் பலபேரும் பயன் படுத்தி வருகிறோம். இந்த நாவல் வாசித்த பிறகு தான் பொருள் தெரிந்தது.
Necrophilia என எதிராளிக்கு தெரிந்தால் நம் பாடு என்ன ஆகும்.

நிலவியல்.. வானியல்.. மருத்துவம் .. வேதியல்.. வாய்மொழி வரலாறு.. சாதிய வேறுபாடு .. போர்முறைகள்.. சமூக பொருளாதாரம் என எல்லா களங்களையும் தொட்டுவிட்டு போகிறார் நூலாசிரியர் இரா. முத்துநாகு.

நீ சிரைக்க தான் லாயக்கு என எவரையும் திட்டிவிட முடியாது. சிரைப்பதில் கூட எவ்வளவு நுணுக்கங்கள்.

உண்மைக்கு வெகு அருகில் இருக்கும் நாவல்களில் ஒன்று. நாவல் படிப்பதில் ஒரு அறிவும் கிட்டாது அவை வெறும் உணர்ச்சி குவியல்களே என எண்ணும் என் போன்றவர்களின் கருத்தை சுக்கு நூறாக்கி விட்டுப்போன நூலிது.

காப்பியடித்து அடுத்தவன் உழைப்பை சுரண்டி நாவல் எழுதி அதையும் அரசியல் ரீதியாக புரமோட் செய்து  அகா "டம்மி " விருது வாங்குவோர் மத்தியில் தனது உச்சபட்ச உழைப்பை அறிவை கொட்டியிருக்கும் முத்துநாகுவின் அரும்பணி போற்றுதலுக்குரியது.

வாசித்துவிட்டோம் என வெறுமனே கடந்து போகமுடியவில்லை .
எத்தனை மரபார்ந்த அறிவை இழந்திருக்கிறோம் என்ற பெருஞ்சுமை மனதில் ஏறுகிறது.

மாடனின் குதிரையாகவே ...
நாவல் தந்த எண்ணங்களை சுமந்து அலைகிறது மனம்.

கொட்டும் மழையில் கூட அணையாது நிற்பது சுளுந்துக்குச்சியின் தீ.

காலமழை எத்தனை பெய்யினும்
தமிழர் சமூக வரலாற்று நெருப்பை காத்து நிற்கும் சுளுந்தீ.

வியாழன், 9 மே, 2019

சுளுந்தீ :அறிவுத்தீக்கான வரலாற்றுச் சித்த மருந்து. :- இலட்சுமி கோபிநாதன், வழக்கறிஞர்.

ஒரு நாவலிற்கான கருவையும் கதைக் களத்தையும் தேர்வு செய்தபின்னர் அந்த நாவல் முழு வடிவம் பெற்று வாசகனை அடைவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது என்பதை உணர்த்துகிற நாவல்.  சில நூல்களைத்தான் நாம் காலமெல்லாம் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று தோன்றும். அப்படி எனக்குத் தோன்றிய நாவல் இது.

மதுரைக்கு அருகே உள்ள கன்னிவாடி கிராமமும் ஏனைய மதுரை மாவட்டத்தின் நிலப்பரப்பையும் அதைச் சுற்றிய வரலாற்றையும் பேசுகிறது இந்த நாவல். நாயக்கர் ஆட்சிக்காலம். மன்னருக்கு அடுத்தபடியாக குறுகிய எல்லையில் அதிகாரம் கொண்ட அரண்மனையாரின் ஆட்சியிலும், ஆட்சிக்காகவும் நடக்கும் சம்பவங்களே கதை.
சின்ன கதிரியப்ப நாயக்கரான அரண்மனையார், அந்த எல்லையில் வாழ்ந்து அங்குள்ளவர்களுக்கு வைத்தியம் பார்க்கிற சித்தர், அவரின் சீடராக வரும் நாவிதரும் பண்டுவருமான ராமன், அவரது மகன் மாடன், ராமனையும் மாடனையும் பழிவாங்கத் துடிக்கும் தளபதி, இவர்கள்தான் முக்கியமான கதை மாந்தர்கள்.

நாவலின் முதல் பகுதி ஒரு  சித்த மருத்துவக் களஞ்சியம். ராஜபிளவு எனச் சொல்லப் படுகிற நோயில் தொடங்கி, அறுந்த காதை ஒட்டவைக்கும் வைத்தியம், காது வளர்க்கும் வகை, பெண்களுக்கு வரும் பெரும்பாடு எனும் கரு சம்பந்தமான நோய், வெட்ட வாய்வு நோய், பசிப்பிணி, மூல நோய், ஓரண்ட வாயு எனும் ஆண்களுக்கு வரும் நோய், குழந்தை பிறப்பிற்கு என கிட்டத்தட்ட நம் சமகாலத்தில் நாம் சந்தித்து வரும் எல்லா நோய்களுக்குமான மருத்துவக் குறிப்புகள் சித்தர் வாயிலாக சொல்லப்பட்டுள்ளது. அதையெல்லாம் வாசிக்கும்போது நாம் ராமனாக மாறி சித்தருக்கு சீடராக இருக்கக்கூடாதா என மனம் ஏங்கித் தவிக்கிறது. சித்தர் பொடவிலிருந்து வெளியே வரும்போதெல்லாம் நம் மனமும் பொடவை பக்தியோடும் பணிவோடும் நோக்கி நிற்கிறது. நம் மருத்துவ அற்புதங்களைக் கொன்று புதைத்துவிட்டு மூக்கிலும் நரம்புகளிலும் ஊசிகளை சொருகிக் கொண்டு கை நிறைய பலவண்ண மாத்திரைகளிடம் தஞ்சம் புகுந்திருக்கிறோம்.

சித்தர் சமாதியானதும் தான் ராமனின் கதை தொடங்குகிறது. சித்தரே ராமனை சீடனாக அறிவித்தாலும் கூட, பந்த பாசம் கொண்ட ராமனால் சித்தராக வாழ முடியவில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. தனது மகனை எப்படியாவது அரண்மனைப் படையில் வீரனாக சேர்த்துவிட வேண்டும் என்பதே நாவிதரான ராமனின் கனவாக இருக்கிறது. ஆனால் பிறப்பால் நாவிதரான ராமனின் மகனால் அரண்மனை வீரனாக முடியவே முடியாது என்பதே யதார்த்தம். குலத்தொழிலே கட்டாயம். ஆனாலும் ராமன் தன் மகனை மிகச் சிறந்த வீரனாக வளர்க்கிறார். படைவீரனாகும் கனவையும் அவனுக்குள் விதைக்கிறார். அரண்மனையாரின் மிகுந்த மரியாதைக்குரியவராய் இருந்தும் ராமனால் தன் காலத்தில் தன் மகன் மாடனை அரண்மனை வீரனாக்க இயலவில்லை. அதே நேரம் தன்னுடைய குலத்தொழிலான நாவிதத்தின் நுணுக்கங்களையும் அதன் பெருமைகளையும் தன் மகனுக்குக் கற்றுத் தருகிறார் ராமன். இந்த இடத்தில் நாவிதத்தின் மகிமைகளை ராமன் சொல்லும்போது நம் சடங்குகளைப் பற்றிய பல செய்திகள் நமக்குத் தெரிய வருகிறது.

ராமன் திடீரென மறைந்துவிட மாடனை வீரன் கனவு துரத்துகிறது. ஒரு வீரனாவதற்காகவே வளர்க்கப்பட்டவனால் குடிமக்களிடமும் அதிகார வர்க்கத்திடமும் குழைந்து பிழைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் நல்லவனாக இருந்தாலும் கூட, மாடன் ஊராறால் வெறுக்கப் பட்டு சதியால் கொலை செய்யப் படுகிறான். இதுதான் கதை.

இந்தக் கதைக் களத்தில் எத்தனை எத்தனை வார்த்தைகளுக்கான காரணங்களோடு கூடிய அர்த்தங்கள். நாம் சாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தைகளான ஈத்தரப்பய போன்ற வார்த்தைகளுக்கான பின்புலங்கள் தெரிய வரும்போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. செந்தூரம் எனப்படுகிற பாஸ்பரஸ் சித்த மருத்துவத்தில் மிக முக்கிய மருந்து. அதிலிருந்து வெடி தயாரிக்கப்பட்டதால் வெடிமருந்து என்கிற பெயர் புழக்கத்திலிருக்கிறது என்கிற விளக்கம். என ஏகப்பட்ட நமக்கு அறியாத விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன இந்த நூல் முழுவதும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இன்று வரை நம் சமூகம் கண்டு பயப்படும் சித்து வேலை, பில்லி சூனியம் ஆகியவற்றின் பின்னால் உள்ள சூட்குமங்கள் பற்றிய எளிய விளக்கங்கள் அந்தந்த கதை மாந்தர்களை வைத்தே விளக்கப் பட்டுள்ள விதம் மிக மிக அருமை. அதில் கொஞ்சம்கூட பகுத்தறிவின் பிரச்சார நெடி இல்லை.
நாவலின் இறுதிப் பகுதியை வாசிக்கையில் எங்கே நாம் சாப்பிட்டு வருவதற்குள் மாடனைக் கொன்று விடுவார்களோ என்கிற பதற்றத்தில் சாப்பிடக்கூட பொறுமையில்லாமல் பரபரவென வாசிக்க வைக்கிற கதையின் ஓட்டம்.
இது புதினமாக இருந்தாலும் பெரும்பாலும் அனைத்து செய்திகளும் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது என்பதால் ஆசிரியரின் உழைப்பின் தீவிரம் நமக்குப் புரிகிறது. குலநீக்கம் என்பதின் பின்னால் உள்ள சூழ்ச்சி மற்றும் குல நீக்கம் செய்யப் பட்டுள்ளவர்களின் வேதனைகளையும் மிக அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த நாவல்.
ஆனந்தா வருடப் பஞ்சம் பற்றிய பகுதி வரும்போது மனசு துக்கப் படத்தயாரகிக் கொண்டிருந்தது. ஆனால் பஞ்ச காலத்தைப் பற்றி எழுதும்போதுகூட சோகத்தை எழுத்தில் வலிந்து திணிக்காமல் மிக மிக யதார்த்தமாய் பஞ்சத்தின் இயல்பையும் அதைக் கடந்து வர மக்கள் செய்த நடவடிக்கைகளையும் பஞ்சத்தைக் கடக்க கிணறு வெட்ட நிலத்தடி நீரை உறிஞ்சுகிற பூதம் புறப்பட்ட விதத்தையும் ஆசிரியர் எதியிருக்கிற விதம் நமக்கு வாழ்வின்  மீதான நம்பிக்கையை வளர்க்கிறது.

இன்னும் எழுத எவ்வளவோ இருக்கிறது. முழுமையாக எழுதினால் சுளுந்தீ பற்றிய விமர்சன நூலே எழுதலாம். ஆசிரியர் திரு.முத்து நாகு அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பரிந்துரைத்ததோடு மட்டுமல்லாமல் வீட்டுக்கு வி,பி.பி.யில் வரவழைத்து உதவிய அன்புத் தம்பி சுதாகருக்கு அன்பும் நன்றியும்.

சுளுந்தீ - அறிவுத்தீக்கான வரலாற்று சித்த மருந்து.

சுளுந்தீ- நாவல்
இரா.முத்துநாகு
ஆதி பதிப்பகம்
VPPயில் புத்தகத்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்
+91 99948 80005-திரு.முரளி

புதன், 8 மே, 2019

ஆரிய வைதீகச் சமய மரபும் பிள்ளையாரும் : மகாராசன்

உ’ எனும் எழுத்துக் குறியைப் பிள்ளையார் எனும் கடவுளோடு தொடர்புபடுத்தியும்,  பிள்ளையாரை ஆரிய / வைதீகச் சமயக் கடவுளராகக் முன்வைப்பதுமான சமய உரையாடல்கள் ஒருபுறம் இருப்பினும், தமிழ்ச் சமூக வரலாற்றிலும் ஆரிய / வைதீகச் சமய மரபிலும் பிள்ளையாருக்கான இடம், அதன் தோற்றப் பின்புலம், அதன் பரவலாக்கம் போன்ற சமூக மற்றும் சமயப் பண்பாட்டு  நோக்கிலான கருத்தாடல்களும் ஆய்வுகளும் வேறுவகையிலான செய்திகளை முன்வைக்கின்றன. அவ்வகையில், பிள்ளையாரைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘பிள்ளையார் அரசியல்’ எனும் நூல், பிள்ளையாரைப் பற்றிய சமயப் பண்பாட்டுத் தரவுகளைத் தந்திருக்கிறது.

ஆரிய / வைதீகச் சமய அடையாளமாகப் பிள்ளையார் கருதப்பட்டாலும், அச்சமய மரபில் குறிக்கப்படுகிற மற்ற கடவுள்களைப் போலான இடம் வழங்கப்படவில்லை. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்து சமயம் என்று அழைக்கப்பெறும் பிராமணிய சமயத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன், முருகன் என மேல்நிலையில் உள்ள தெய்வங்கள் ஒருபுறமும், பரிவார தெய்வங்கள் என்ற பெயரில் அனுமன், சண்டேஸ்வரர் போன்ற தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன. இவை இரண்டிலும் இடம்பெறாமலும், பிராமணிய சமயத்திற்கு வெளியிலுள்ள நாட்டார் தெய்வங்கள் வரிசையில் இடம்பெறாமலும், தனக்கெனத் தனியானதோர் இடத்தைப் பெற்றுள்ள தெய்வம் பிள்ளையார் ஆகும் என்கிறார்.

வைதீகச் சமயப் பெருங்கோயில்களில் மட்டுமின்றி, இவருக்கெனத் தனியாகவும் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருக்கள், கூரையின்றி வெட்டவெளியிலும்கூட பிள்ளையார் இடம் பெற்றிருக்கிறார். இத்தகைய வழிபாட்டு மரபில் உள்ள பிள்ளையார் எனும் விநாயகரின் உருவம் மனிதன், விலங்கு, தேவர், பூதம் என்கிற நான்கின் இணைப்பாகக் காட்சி தருவதாகக் குறிக்கப்படுகிறது.

யானைத் தலையும் காதுகளும் தும்பிக்கையும் விலங்கு வடிவமாகவும், பேழை போன்ற வயிறும் குறுகிய கால்களும் பூதவடிவமாகவும், புருவமும் கண்களும் மனித வடிவமாகவும், இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் தேவ வடிவமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய இவரது உருவம் மனித விலங்கு உருவ இணைப்பாக அமைந்துள்ளது. இத்தகையப் பிள்ளையாருக்கு வடமொழிச் சுலோகங்கள் கூறி ஆகம முறையிலும் வழிபாடுகள் நிகழ்த்தப்படுவதால், அதன் அடிப்படையில் இவர் உயர்நிலைத் தெய்வமாகவே காட்சியளிக்கிறார். எனினும்,  வேதங்களிலும் பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம் பெறவில்லை என்று அமிதா தாப்பன் குறிப்பிடுகிறார். குப்தர் காலத்திற்கு முந்திய சிற்பங்களில் பிள்ளையார் வடிவம் இல்லை என்று கூறும் ஆனந்தகுமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகிறார் .

பிள்ளையாரின் தோற்றம் குறித்துப் பல்வேறு கதைகள் வழக்கில் உள்ளன. பிள்ளையாரின் தோற்றம் குறித்த புராணக் கதைகளில் அவர் ஏதாவது ஒரு வகையில் யானையுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். யானை முகமும் மனித உடலும் இணைந்த பிரமாண்டமான உருவத்தை உடைய பிள்ளையார், எலி ஒன்றின் மீது வீற்றிருக்கிறார். இந்நிலையில், யானையுடன் பிள்ளையார் தொடர்புபடுத்துவதற்கான காரணத்தையும், எலியை வாகனமாகக் கொண்டிருப்பதற்கான காரணத்தையும் ஆ.சிவசுப்பிரமணியன் தமது நூலில் விளக்கப்படுத்தி இருக்கிறார். அது வருமாறு:

பிள்ளையார் வழிபாட்டின் தோற்றம் குறித்து அறிந்துகொள்ள கணபதி என்ற அவரது பெயர் உணர்த்தும் செய்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கணபதி என்ற சொல்லின் பொருள் கணங்களின் கடவுள் என்பதாகும். கணா + பதி என்ற சொல்லைப் பிரித்து கணங்களின் தலைவன் என்று பொருள் கொள்வர். கணபதியின் மற்றொரு பெயரான கணேசன் என்ற சொல்லைக் கணா + ஈசர் என்று பிரித்து கணங்களின் கடவுள் என்று பொருள் கொள்வர்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மந்திரர், கணநாயகா என்று பிள்ளையாரைக் குறிப்பிடுகிறார். கணத்தின் தலைவன் என்பது இச்சொல்லின் பொருள். ரிக் வேதத்தில் இடம்பெறும் கணபதி என்ற சொல், ஒரு குழு அல்லது படை அல்லது சபையின் தலைவனைக் குறிப்பதாக மோனியர் வில்லியம்ஸ் கருதுகிறார். கணபதி என்ற சொல்லுக்குக் கணங்களைப் பாதுகாப்பவர் என்று அந்நூலின் உரையாசிரியரான மஹிதார்  குறிப்பிடுகிறார்.

சில மக்கள் குழுவினர், குறிப்பாகப் பழங்குடிகள் தங்களை விலங்கு, தாவரம் போன்ற இயற்கைப் பொருட்களிடமிருந்தோ, புராண மூதாதையர்களிடம் இருந்தோ தோன்றியதாகக் கருதினர். இவ்வாறு தாம் கருதும் தாவரம் அல்லது விலங்கைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இவ்வாறு விலங்குகள் தாவரங்கள் இயற்கை பொருட்கள் போன்றவற்றில் இருந்து குறிப்பிட்ட குலம் தோன்றியதாக நம்பியதன் அடிப்படையில் அதன் தோற்றத்திற்குக் காரணமான பொருள் ஒரு குலத்தின் குலக் குறியாக அமைகிறது. இவ்வாறு குலக்குறியானது குலத்தின் சமூக பண்பாட்டு வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இனி, யானை எலி ஆகியன குலக்குறியாக விளங்கியதைக் காண்போம். மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாகும். மாதங்கி என்ற சொல் யானையைக் குறிப்பதாகும். குலக் குறியான யானையின் பெயராலேயே இக்குழு மதங்கர்கள் என்று பெயர் பெற்றது. வேத காலம் முடிவதற்கு முன்னரே இக்குழுவினர் ஒரு சாதியாக உருப்பெற்று மௌரியப் பேரரசுக்கு முன்னதாகவே அரசு அதிகாரத்தை நிலை நிறுத்தி இருந்தனர்.

லலிதா விஸ்தாரகா என்ற புத்த மத நூல், பசனாதி என்ற கோசல மன்னனை யானையின் விந்தில் இருந்து தோன்றியவனாகக் குறிப்பிடுகிறது.  இக்கருத்து குலம், குலக்குறியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய ஒன்று. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி வாழ்வின் எச்சமாகவே இதைக் கொள்ளவேண்டும்.

இதுபோன்று மூசிகர் என்ற பிரிவு தென்னிந்தியாவில் இருந்துள்ளது. இவர்களை வனவாசிகள் உடன் இணைத்து மகாபாரதம் குறிப்பிடுகிறது. மூஷிகம் என்ற வடமொழிச் சொல் எலியைக் குறிப்பிடுகிறது. இந்தியப் பழங்குடிகள் பலருக்கு எலி குலக்குறியாக உள்ளது. ஒரு குலக் குழுவினர் மற்றொரு குழுவினருடன் போரிட்டு வென்றால், தோல்வியடைந்த குலத்தின் குலக்குறி அழிக்கப்படும் அல்லது வெற்றி பெற்றதுடன் இணைக்கப்படும். ஆளும் குலமானது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தும்போது, பிற குலங்களின் குலக்குறிக் கடவுளர்களை இணைத்துக்கொண்டு தன்னுடையதாக மாற்றிக்கொள்ளும் என்று தாம்சன் குறிப்பிடுவார். இக்கருத்தின் பின்புலத்தில் பின்வரும் முடிவுக்கு நாம் வரலாம்.

யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடிக் குலம் ஒன்று, எலியைக் குலக்குறியாகக் கொண்டிருந்த குழுவுடன் போரிட்டு அதை வென்றபோது, அவ்வெற்றியின் அடையாளமாக அக் குலக்குறியைத் தன் குலக் கடவுளின் வாகனமாக மாற்றியுள்ளது. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி ஒன்று, விரிவடைந்து அரசு என்ற அமைப்பை உருவாக்கியபோது அதன் குலக்குறியான  யானை கடவுளாக மாற்றமடைந்தது.  ஆயினும், பிராமணிய சமயம் இக்கடவுளை உடனடியாகத் தன்னுள் இணைத்துக் கொள்ளவில்லை. தமது தெய்வங்களுக்கு வெளியிலேயே அதை நிறுத்தி வைத்தது. நான்காவது வருணமான சூத்திரர்களின் கடவுளாகவே அவர் மதிக்கப்பட்டார்.

பல்வேறு பழங்குடி அமைப்புகளை அழித்துப் பேரரசு உருவாகும்போது, தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாகத் தன் சமய வட்டத்திற்குள் பழங்குடிகளின் தெய்வங்களையும் இணைத்துக் கொள்ளும். அந்தவகையில், குப்தப் பேரரசில் ஆளுவோரின் சமயமாக விளங்கிய பிராமணிய சமயம், சூத்திரர்களின் கடவுளான பிள்ளையாரைத் தன்னுள் இணைத்துக் கொண்டது. இதன் விளைவாக விக்னங்களை உருவாக்கும் விநாயகர் விக்னங்களைப் போக்குபவராக மாறினார். பழங்குடிகளின் குலக்குறி என்ற தொடக்ககால அடையாளம் மறைந்து பிராமணிய சமயக் கடவுளர் வரிசையில் இடம் பெற்றார் எனப் பிள்ளையாரின் தோற்றப் பின்புலத்தைக் குறித்து விளக்கியுள்ளார் ஆ.சிவசுப்பிரமணியன்.

மேற்குறித்த தரவுகளின் அடிப்படியில் நோக்கும்போது, கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் வேறு வேறு குலக்குறி வழிபாட்டு அடையாளங்களாக இருந்தவை ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் எனும் வழிபடு கடவுளாகத் தோற்றம் கொண்டிருக்கிறது எனக் கருதமுடிகிறது. அதாவது, அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்த பகுதியை கி.பி 320 முதல் 551 வரை  ஆட்சி செய்தது குப்தப் பேரரசுதான்.  இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக அது இருந்திருக்கிறது.

குப்தர்கள் காலத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய உருவாக்கம் ஒரு நிறுவனத் தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பாக, ஆரிய / வைதீகச் சமயத் தொன்மங்கள் உருவானது இக்காலகட்டத்தில்தான். மேலும், சமக்கிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்ததும் அதே காலகட்டம்தான்.

இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் சமக்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. அவ்வகையில், அதே காலகட்டத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் வழிபாடானது இந்தியத் துணைக் கண்டத்தின் வடபகுதியில் தோற்றம் கொண்டு நிலவி வந்திருக்கிறது எனக் கருதலாம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் வழிபடு கடவுளராக இருந்த பிள்ளையாரோடு தொடர்புடைய மற்றொன்று சமக்கிருத மொழியாகும். ரிக், யசூர், சாமம், அதர்வனம் என்கிற நான்கு வேதங்களும் எழுதாக் கிளவியாக இருக்க, வியாசரின் மகாபாரதமே எழுதப்பட்ட கிளவியாக - அய்ந்தாவது வேதமாக எழுத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில், வியாசரின் மகாபாரதம் சமக்கிருத மொழியில் எழுதப்பட்டதாகும். வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதே மகாபாரதம் என்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,  பிள்ளையார் வழிபடு கடவுளாகத் தோற்றம் பெற்றதே கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் எனும்போது, எழுதாக் கிளவியாக இருந்த சமக்கிருத மொழியில் பிள்ளையார் முதன் முதலாக  எழுதியதான காலமும் கி.பி.3ஆம் நூற்றாண்டு வாக்கில்தான்  இருந்திருக்க வேண்டும். ஆக, பிள்ளையாரும் சமக்கிருத மொழியும் இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதியைச் சார்ந்த ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டின் அடையாளங்கள் என்றே உறுதியாகக் கருத முடியும்.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005

சுளுந்தீ : அனைவரின் உள்ளத்திலும் ஏற்ற வேண்டிய அறிவுத்தீ! :- மூ.செல்வம்


மதுரை நாயக்கர் ஆட்சியின் தலைமையிடமாக இருந்த, கன்னிவாடி ஜமினின் வளமையையும் வறுமையையும் மிக அழகாக சித்தரிக்கும் வரலாற்றுப் பெட்டகம்.
    முப்பது பகுதிகளையும், 471 பக்கங்களையும் கொண்டுள்ள இந்நூலில், முக்கியமில்லா பக்கங்கள் எதுவுமில்லை, அரிய தகவல்களும் சுவாரசியங்களும் பக்கத்திற்குப் பக்கம் கொட்டிக்கிடக்கிறது.
     இரண்டு மூன்று முறை தெளிவாக வாசித்துவிட்டால், வாசித்தவர் சித்த மருத்துவராக மாறிவிடும் அளவிற்கு மருத்துவச் செய்திகள் குவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று நாவல் மட்டுமல்ல சித்த மருத்துவ பெட்டகம் கூட. இவ்வளவு செய்திகளையும் எவ்வாறு இவரால் திரட்ட முடிந்ததுவென வியந்து, ஆசிரியர் இரா.முத்துநாகு அவர்களை ஆராயும் போது, அவருடைய தாத்தா கண்டமனூர் ஜமினில் அரண்மனை பண்டுவராக இருந்த செய்தி இடம்பெற்றிருந்தது, பரம்பரை பரம்பரையாக மருத்துவக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவரால் தான் இவ்வளவு நுணுக்கமான செய்திகளை கொடுக்க முடியும் என உணர்ந்தேன்.
     கன்னிவாடி ஜமினில் நாவிதர் குடியில் பிறந்த, செங்குளத்து மாடனின் வீரத்தைப் பேசுகிறது நூல். அம்பட்டயர், முடிவெட்டுபவர், சவரம் செய்பவர் என அழைக்கப்படுபவர்களே நாவிதர்கள். பிறப்பு முதல் இறப்பு வரை மனித சமூகத்திற்கு நாவிதர்களின் பங்கு வியக்கத்தக்கது என்பதனை, அழகாக விரிவாக விளக்குகிறது. நூலை படித்து முடித்த பின்பு நாவிதத் தொழில் செய்பவர்களை உயர்வாகவே எண்ணத் தோன்றுகிறது.  நவிதர்களும் பண்டுவர்களும் போற்றி பாதுகாக்க வேண்டிய கலைக்களஞ்சியம் இந்நூல்.
     புதைக்கப்பட்ட சொலவடைகள் (பழமொழிகள்) பலவற்றை புதைகுழியிலிருந்து மீட்டெடுத்து புலக்கத்தில் விட்டிருப்பது பாராட்டுக்குரியது.
    வருசநாட்டுப் பகுதியில் என் அப்பனும் அம்மையும் தேடி வைத்த காட்டில் கொட்டமுந்திரி பறித்த போதும், இலவம் நெற்றை உடைத்த போதும், நாவலில் வரும் பன்றிமலை சித்தரும், பண்டுவ  இராமனும், வல்லத்தாரையும், மாடனும், கொன்றி மாயனும், வங்காரனும் மாறிமாறி என் நினைவுக்குள் வந்து, கேள்விகள் பலவற்றை எழுப்பி, என்  வேலையைக் கெடுத்த போது, என் மனம் சொன்னது நீ படித்தது சிறந்த நூல் என்று.
     நூலின் எழுத்து நடை சிறுவயதில் கேட்ட முன்னோர்களின் பேச்சுக்களை நினைவுபடுத்தியது.
     சுளுந்தீ அனைவரின் உள்ளத்திலும் ஏற்ற வேண்டிய அறிவுத்தீ!
     கற்றது கடலளவு சொன்னது கையளவு!

மூ. செல்வம்,
முதுகலை ஆசிரியர்,
வாலிப்பாறை.

வெள்ளி, 3 மே, 2019

வ.உ.சி : சாதி கடந்தவர்; சுயசாதி எதிர்ப்பைச் சுமந்தவர் :- இரெங்கையா முருகன்.


1900 கால கட்டத்தில்  ஒரு ஏழை விவசாயியைக்  காரணம் ஏதுமின்றி சம்பந்தமில்லாமல் பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளாக்கினர்.  இது சம்பந்தமாக நீதிமன்ற  வாய்தா என்ற பேரில் மன உளைச்சலுக்கு உட்படுத்தி பல தடவை அலைக்கழிக்க வைத்தனர். கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக ஓட்டாபிடாரத்தில் அருகே அமைந்துள்ள கிராமத்திலிருந்து தூத்தூக்குடிக்கு கால் நடையாகவோ, வண்டி மாடு கட்டியோத்தான் செல்ல வேண்டும்.

பல காலமாக நீதிமன்றத்துக்கு அலைவதுடன் தாங்க முடியாத மன உளைச்சலுக்கும் ஆட்பட்டிருந்த அந்த தலித் விவசாயி ஒரு நாள்  கோயில் அருகே மயக்க மடைந்து சரிந்து விழுந்துள்ளார். மிகவும் விசனமடைந்து துக்கித்த நிலையில் காணப்பட்டார்.

அச் சமயம் தற்செயலாக  மயக்கமடைந்து சரிந்து வீழ்ந்த அன்பரை எதிர் நோக்கி உதவ முன் வருகிறார். மயக்கத்திலிருந்து தெளிந்த அந்த விவசாயி தனது மனக் குமுறலை ஆற்றாது உதவ வந்தவரிடம் ஒரு தகவலாக தனக்கு நேர்ந்த பிரச்னைகளை விலாவாரியாக தெரியப் படுத்துகிறார்.

வந்தவரோ பேர் போன பரம்பரை வக்கீல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த எளியோன் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் விவசாயி. அக் காலத்தில் இந்த எளியவர்களை ச்சீ என உதாசீனப்படுத்தும் மன நிலையில் இருந்த சூழலில் வந்து உதவுபவரோ வழக்கத்திற்கு மாறான வித்தியாசப் பண்புடையவர்.

அந்த விவசாயிக்கு  உதவ வந்தவர், நொந்து போன அவரது மனதிற்கு நல்ல வார்த்தைகள் கூறி ஆசுவாசப்படுத்தி விட்டு அவரது மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட கோர்ட் வழக்கு விவரங்களை கேட்டு குறிப்பு எடுத்து கொள்கிறார். மேலும் இனி மேல் தாங்கள் நீதிமன்ற படி ஏற வேண்டியது வராது. நல்ல செய்தி வீடு தேடி வரும். கவலைப் படாமல் வீடு போய் சேருங்கள்  என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்.

 மயக்கமடைந்த ஏழை விவசாயிக்கு எல்லாம் கனவா இல்லை நனவா என்ற குழப்பத்துடன் அவரும் தனது வீட்டை நோக்கி நடையை கட்டிவிட்டார். மயக்கம் அடைந்து விழுந்த கோவில் அந்தப் பகுதிகளில் பிரசித்திப் பெற்ற உலகம்மன் கோவில்.

மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஏழை விவசாயிக்கு  கோர்ட் விவகாரத்தில் நன்றாக வாதாடியதன் விளைவாக  நீதி வென்றது.அந்த செய்தி  தலித் ஏழை விவசாயி வீட்டிற்கு  வந்து சேர்ந்தது. அவரால் நம்ப முடிய வில்லை. வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் திக்கு முக்காடி விட்டார்.

அந்த சமயத்தில் அந்த விவசாயி தனது  குடும்பப் பரம்பரை வாரிசுகளிடம் பின் வருமாறு கூறுகிறார். அந்த உலகம்மன் தெய்வம்தான் கடவுள் மாதிரி வந்து எனக்கு உதவுவதற்காகவே அவரை அனுப்பி வைத்துள்ளார். அவர் மூலம் வெற்றியும் கிடைத்துள்ளது. ஆகையால் இனி நமது கடைசி வம்சாவளி வரை ஆண்குழந்தை பிறந்தால் உலக நாதன் என்றும், பெண் குழந்தை பிறந்தால் உலகம்மை என்றும் பெயர் வையுங்கள் என்று சத்தியம் வாங்கிக் கொண்டாராம்.

இந்த ஏழை விவசாயிக்கு உதவ முன் வந்தவர் பேறு போன வக்கீல் குடும்பத்தைச் சார்ந்த உலகநாத பிள்ளையின் தவச் செல்வர் கப்பலோட்டிய தமிழன், தியாகத்தின் இலக்கணம் வ.உ.சிதம்பரனார். இச் செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டவர் திரு. லேனா குமார் அவர்கள்.

அவருக்கு இச் செய்தியை பகிர்ந்தவர் பாதிக்கப்பட்ட அந்த விவசாயி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் நாவலாசிரியர் சோ. தர்மன் அவர்கள்.

இந்த செவி வழிச் செய்திக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று தேட ஆரம்பிக்கும் போது வ.உ.சி. தனது சுயசரிதையில் ஒரு இடத்தில் கீழ் வருமாறு குறிப்பிடும் நான்கு வரி இடம் பெறுகிறது. இதை ஒரு அனுமானமாக எடுத்துக் கொள்ளலாம்.

“முடிமனில் என்னுடை முன்னோர் நாள் முதல்
அடிமை புரியும் அறிவினைக் கொண்ட
வேத நாயகம் எனும் மேம்படு  பள்ளனை
ஏத மில்லாமலே எண்ணிலா வழக்கில்
அமிழ்த்தினர் போலிஸார்;அனைத்தினும் திருப்பினேன்”.

இந்த வரிகளை கொண்டு மேற்கண்ட சம்பவம் ஒருவாறாக இணைத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. வலியவர்கள் எளியோரை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு வ.உ.சி.யின்  வாழ்வில் பல செய்திகள் கொட்டிக் கிடைக்கிறது. உதாரணமாக சில செய்திகளை காணலாம்.

சாதிச் செருக்கு மிகுந்த அக்காலத்தில் இரண்டு கண்களை இழந்த ராமையா தேசிகன் என்ற தேவேந்திர குல வகுப்பைச் சார்ந்தவரை தனது வீட்டில் வைத்து பாதுகாத்து உணவிட்டு வந்தவர். ஆனால் அதே வேளையில் தனது தெருவாசிகளுக்கும்  தன் சாதி சார்ந்த சமூகத்தாருக்கும்  தெரியாமல் பாதுகாத்து வருகிறார். பிறகு நாள் செல்லச் செல்ல இச் செய்தி தெரிய வந்து அவரது சமூகத்தாரிடமிருந்தே எதிர்ப்பு வருகிறது. வ.உ.சியை சாதி நீக்கம் செய்யும் அளவுக்கு போய்விடுகின்றனர்.

வ.உ.சி.யின் சுயசரிதை வரிகளில் காணலாம்

”சிவப் பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென்
தவப் பயனால் இலம் தங்கப் பெற்றேன்.
ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால்
தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள்
குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென்
தலத்தினில் உள்ளோர் சாற்றினர் குற்றம்
கேட்டதும் அவ்வுரை கிழவோன் தன்னை
ஓட்டிடக் கருதி யான் உரமில்லாமையால்
‘அவளிடத்’ துரைத்திட அடுக்களை சென்றேன்.
‘’எல்லாம் உணர்ந்த என்னுயிர் நாத!
எல்லாம் கடவுளா யிருக்க வேண்டும்
உருவம் முதலிய ஒன்றினும் பேதம்
மருவுதலிலாமை மலை போல் கண்டும்,
கற்பனை யாகக் காணும் குலத்தின்
சொற்பிழை கொளலெனச் சொல்லிய தூய!
துறந்தவர் தமையும் தொடருமோ குலம் இவண்
இறந்த அம் மொழியினை ஏற்றிடா தொழிப்போம்
ஒன்றிடா தமர்த்தி ஊழியம் புரிந்திடின்
பிழையெனார் உலக பேதமை உணர்ந்தோர்.

அச் சமயம் வ.உ.சி.யின்  மனைவி பார்வை இழந்த இவருக்கு இது வரை தட்டில்தான் சாப்பாடு  அருகில் வைத்து வந்தேன். இனி மேல் நானே  கண்களை இழந்த அவருக்கு சாப்பாட்டை அவரது வாயில்  ஊட்டி விடுகிறேன் என்பதோடு மட்டுமல்லாமல் ஊட்டியும் விட்டவர். இது குறித்து வ.உ.சி.யிடம் முறையிட பயந்தார்கள் அவரைச் சார்ந்த சமூகத்தார்கள்.  காரணம் அவரது முரட்டுத்தனம். முரட்டு வக்கீல் பிள்ளை என்றே அழைப்பார்கள்

வள்ளுவ வகுப்பினரைச் சார்ந்த சுவாமி சகஜானந்தரை தனது வீட்டில் ஒரு அங்கத்தினராகவே போற்றி பாதுகாத்தவர். வ.உ.சி.தன்னுடைய அலுவல் பணிகளுக்கிடையே சகஜானந்தரையும் உடன் அழைத்துச் செல்வார். அச் சமயம் வ.உ.சியுடன் பணியாற்றுபவர்கள் வ.உ.சி.க்கு பயந்து அவர்  இல்லாத நேரத்தில் சகஜானந்தரிடம் சாதி குறித்து விசாரிப்பார்கள். வ.உ.சி.யின் அறிவுறுத்தலின் படி நானோ துறவி. துறவிக்கு ஏது சாதி என்று கூறி விடுவார்.

ஏழைகளுக்கும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கும் தனது சொந்த செலவில் வாதாடிய தென்னகத்தின் ஒரே வக்கீல் அக் காலத்தில் வ.உ.சி. ஒருவரே. இன்றைய மேம்பட்ட அரசியல்வாதிகள் 1927 ம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில்  வ.உ.சி. உரையாற்றிய அரசியல் பெருஞ்சொல் சொற்பொழிவை பால பாடமாக படியுங்கள். ஏரி, குளம், பொது தண்ணீரை எல்லா சமூக மக்களும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், சமூக மக்களிடையே பிணக்கு ஏற்படும் போது பிரச்னை இல்லாமல் எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும் ,கல்வி, மருத்துவம் இலவசமாக வழங்கிட வழி செய்தல், சுயாட்சி குறித்து மிகு விவர தகவல், தமிழ் சித்த மருத்துவத்தின் மேன்மை, தமிழர் பண்பாட்டுச் சிறப்பு, தமிழ் மொழியை வளர்ப்பதற்கென  பல்கலை கழகங்கள் முக்கியத்துவம் போன்ற பல்வேறு விசயங்களை அலசி ஆராய்ந்த சொற்பொழிவு .

இன்றைய சாதி + அரசியல் வாரிசு தலைவர்கள் வோட்டு வங்கி தேர்தல் அரசியல் சுய லாபத்திற்காக வலியவர்களாகிய இவர்கள் எளியவர்களை எவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள். சமூகத்தை எவ்வளவு பிளவுபடுத்த கங்கணம் கட்டி வேலை செய்கிறார்கள். பல தலைவர்கள் மேடையில் வீராவேசம் பேசுவார்கள். தனது சொந்த வாழ்க்கையில் சம்பந்தமில்லாத வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கிறார்கள். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க நாமும் வ.உ.சியை போன்ற உண்மையான தியாக வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க தவறியதன் பலன்தான்  சினிமாகாரர்களையும், சுயநல மிக்க கேடுகெட்ட அரசியல் வாரிசுகளுக்குத்தான் நாம் குடை பிடித்து வரவேற்க காத்திருக்கிறோம்.

மன்னுயிர் அனைத்தும் தன்னுயிர் என்ன
    மகிழ்வொடு தாங்கிய ரேனும்

இன்னலுற் றயர்ந்தோம் எனக்கலுழ்ந் திடில் தன்
    இரு விழி நீரினை உகுப்பான்.

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

தமிழைத் தாழ்த்தும் நாகசாமிகள் விவாதத்திற்கு வரத் தயாரா? :- மொழியியல் அறிஞர் மா.சோ.விக்டர்.



“இவர்கள், குறிப்பாக அந்தணர்கள், தங்களுக்கு ஒன்றும் தெரியாது என ஒத்துக் கொள்ளமாட்டார்கள், சிறிதும் தயங்காமல், ஆடம்பர ஒலி கொண்ட சொற்களை அளந்து பார்த்து, தங்கள் மனதில் தோன்றும் முதல் சொற்களை, அவை உண்மைக்குப் புறம்பாக இருப்பினும், முழு அதிகார அரியணைக் கூற்றாகக் கொடுப்பதற்கு அஞ்சமாட்டார்கள். இக்கூற்றுகள், எத்துணை பொய்யானவை என்பது, அவர்களுடைய ஆசிரியர்கள் நூல்களை, இங்கு மங்கும் படிக்கும் போது தெளிவாகத் தெரியும்.” - வீரமா முனிவர்.1

300 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த பிராமணர்கள் பற்றி, வீரமாமுனிவர் எழுதி வைத்த குறிப்பு இது!

“தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தில் எனது பணிகள் என்பது, கடந்த 60 ஆண்டுகளாக உலகம் அறிந்தது. எனவே, என்னை தமிழ் மொழிக்கு எதிரானவன் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியது, ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல”.

“எனது கருத்தே அல்ல: திருக்குறள் வேதங்களிலிருந்து வந்தது” என்று நான் தெரிவித்ததாக, ஸ்டாலின் கூறியுள்ளார். இது எனது தனித்த பார்வையல்ல. எனக்கு முன்பாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய அறிஞர்களின் கருத்தாகும். தமிழைக் கற்றுணர்ந்த மிகப் பெரிய அறிஞர்களான பாதிரியார் பெஸ்கி, எல்லிஸ், ஜி.யு. போப், உ.வே. சாமிநாதய்யர் ஆகியோரின் கருத்துகளையே எதிரொலித்தேன். போப் தனது புத்தக்கத்தில், பகவத் கீதையை, திருக்குறள் பின்பற்றுகிறது எனத் தெரிவித்து இருக்கிறார். எனவே, திருக்குறள் தொடர்பாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தமிழ் அறிஞர்களின் விளக்கத்தைக் கோரியிருக்க வேண்டும். 300 ஆண்டுகள் பழமையான தமிழ் வரலாற்று ஆய்வுகளைப் பற்றி, மு.க. ஸ்டாலின் அறிந்திருப்பார் என நான் கருதவில்லை. உலகத் தமிழ் அறிஞர்கள் மத்தியில், அவர் தமிழ் மொழி குறித்து தனது அறியாமையை வெளிபடுத்திவிட்டார்.”

- தினமணி, 08.03.2019.

மேற்கண்ட மறுப்பு அறிக்கை, தமிழ்நாடு தொல்லியல் துறை மேனாள் இயக்குநர் திரு. நாகசாமி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

திரு. மு.க. ஸ்டாலினுக்கு தமிழைப் பற்றி எதுவும் தெரியாது என்ற மிகப்பெரிய உண்மையை, திரு. நாகசாமி கண்டுபிடித்துவிட்டார் எனலாம். திருக்குறள், பகவத் கீதையின் வழி நூல் என்பதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த அறிஞர்கள் கூறியிருந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட அறிஞர்களில் பெஸ்கி என்ற வீரமாமுனிவர் மட்டும் 300 ஆண்டுகளுக்கு முன்பு அறியப்பட்டவர். மற்றவர் அனைவரும், கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்திருந்தவர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் கூறிய செய்திகளை, திரு. நாகசாமி தெரிவிக்கவில்லை. அவ்வாறு எவரும் கூறவில்லை என்பதுதான் உண்மை நிலை.

பாதிரியர் பெஸ்கி, அந்தணர்களைப் பற்றிக் கொண்டிருந்த மதிப்பீடு, திரு. நாகசாமி அவர்களுக்கு பொருந்தும். பெஸ்கி என்கிற வீரமாமுனிவர், தம் வாழ்நாளில் படைத்துள்ள 36 நூல்களில், திருக்குறள், பகவத்கீதையின் வழிநூல் என்று எங்குமே குறிப்பிடவில்லை. முழுப் பொய்யைக் கூறி, திரு. நாகசாமி, இல்லாத சான்றுகளை, இருப்பதாகக் கூறுகிறார்.

எல்லிஸ், ஜி.யு.போப் ஆகிய இரு ஐரோப்பியர்களும் தமிழின்பால் பற்று கொண்டவர்கள். கால்டுவெல்லைப் போல், சமற்கிருதத்தால் தமிழ் வளம் பெற்றது, சமற்கிருதத்தின் உதவியின்றி, தமிழால் தனித்தியங்க முடியாது என்று அவர்கள் சொன்னதாகப் பதிவுகள் இல்லை. எல்லிஸ், திராவிடம் என்ற சொல்லையே பயன்படுத்தாதவர்.

திரு. உ.வே. சாமிநாதய்யரைப் பற்றி முரண்பாடான செய்திகள் உள்ளன. ‘தமிழ்த்தாத்தா’ என்று அனைவராலும் போற்றப்படும் திரு. உ.வே.சா வின் மறு பக்கம் பற்றிப் பலரும் அறியாதிருக்கின்றனர். புறனானூற்றுப் பாடல் ஒன்றில், மூலத்தையே அவர் திருத்தியிருப்பது, அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது 2.

‘என் சரித்திரம்’ என்ற தம் வரலாற்று நூலில், பெருமாள் கோயில் இருப்பதால், அரியலூர் என்ற பெயர் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1830களில், ஆங்கிலேயர் வெளியிட்டுள்ள கெசட்டில், அரி என்ற சொல்லுக்குப் பனைமரம் என்றும், பனை மரங்கள் மிகுந்திருந்ததால், அவ்வூர், அரியலூர் என்று சொல்லப்பட்டது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாவை வணங்கி வந்த நடைமுறை, சங்க காலத்திலேய இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். “படைத்தோன் மன்ற அப்பண்பிலான்” என்ற புறநானூற்று வரியில் உள்ள, படைத்தோன் என்ற சொல்லுக்கு, பிரம்மன் என்று உரையெழுதியுள்ளார். இவ்வுலகில் படைத்ததாகக் கூறப்படும் இறைவன் பண்பில்லாதவன் என்று, பக்குடுக்கையார் சாடுகிறார். பண்பில்லாத கடவுளாக, பிரம்மனை திரு. உ.வே.சா கூறுகிறாரா என்று தெரியவில்லை.

‘பிள்ளையார் வணக்கம்’ சங்க காலத்திலேயே இருந்தது என்று மற்றொரு உண்மைக்கு மாறான தகவலை, திரு. உ.வே.சா முன் வைக்கிறார். உ என்ற எழுத்து பிள்ளையாரைக் குறிப்பதாகவும் கூறுகிறார் 5. தமிழரின் உலகளாவிய மாந்த நேயத்தைக் கொச்சைப்படுத்தும் விளக்கம் இது!

தமிழ் இலக்கியங்கள், உலகம் என்ற சொல்லை முதன்மைப்படுத்தியே, தொடங்குகின்றன. சங்க இலக்கியங்கள் முதல் இடைக்கால இலக்கியங்கள் வரை இந்நடை பொருந்தும்6. பிற்காலத்தில், உலகம் என்ற சொல்லைச் சுருக்கி, உ என்ற எழுத்தை மட்டும், தமிழர்கள் பயன்படுத்தி வந்தனர். பிள்ளையார் வணக்க முறை, பல்லவர் காலத்திலிருந்து தொடங்குவதாக வரலாறு கூறுகிறது.

முரண்பாடான செய்திகளைத் தரும் திரு. உ.வே.சாவை, திரு நாகசாமி, தன் கருத்துக்கு வலிமை சேர்க்க முயல்கிறார். எதைச் சொன்னாலும் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற காலம் ஒன்று இருந்தது. இன்று, ஆய்வுகள் மலர்ந்து, உண்மைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. திரு. நாகசாமி, பழைய சிந்தனை களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழ் மரபில் தோன்றிய தமிழனால் தான், தமிழ் மொழியின் தொன்மையையும், நுட்பத்தையும் ஆழத்தையும் ஆய்வு செய்ய இயலும். அயன்மொழிக்காரர்களும், வெளி நாட்டவரும் தமிழர் வரலாற்றையும் தமிழையும் ஆய்வு செய்வது, நுனிப்புல் மேய்வதையொக்கும்” என்று தேவநேயப் பாவணர் உறுதிபடக் கூறுகிறார். வீட்டில் ஒரு மொழியும், நாட்டில் ஒருமொழியும், ஏட்டில் ஒரு மொழியும் கொண்டுள்ள திரு. நாகசாமி, தமிழ்மொழியையும், தமிழர் வரலாற்றையும் ஆய்வு செய்யத் தகுதியற்றவர். அவர் துணைக்கு அழைத்திருப்பவர்களும் அவ்வாறே என்க.

ஒரு தொல்லியலாளருக்கு, பன்முகத் திறமைகள் வேண்டும். சுவர்களில் உள்ளவற்றை தூசி தட்டி, படித்துப் பார்ப்பது மட்டும் தொல்லியலாளரின் பணியன்று. தமிழரின் பல்லாண்டுக்கால வரலாற்றை, கி.மு. 500 ஆண்டுகளில் சுருக்கி, அதனை அரசாங்க ஒப்புதலோடு பதிவு செய்தவர், திரு. நாகசாமி அவர்கள். இடைக்காலக் கல்வெட்டுகளையே, தமிழ்நாடு தொல்லியல் துறை முதன்மைப் பணியாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளது.

பனிக்காலம், பனி உருகல் காலம், கண்டப் பெயர்ச்சி, நிலத்தடித் தட்டுகளின் பெயர்ச்சி, ஆழிப்பேரலைகளுக்கான தோற்றக் காரணங்கள் பற்றிய செய்திகள் எவையும் தமிழ்நாட்டுத் தொல்லியலாளர்கள் அறிந்திருக்கவில்லை. சங்க இலக்கியங்களிலும், தமிழ் மொழியின் மூலம், வேர் போன்ற நுட்பமான துறை களிலும் நாகசாமிக்குப் பயிற்சி இல்லை.

ஆதிச்சநல்லூரின் பொருநையாற்று நாகரிகம், மதுரை, கீழடியின் வையையாற்று நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், யூப்ரடீஸ் - தைகிரீஸ் சமவெளி நாகரிகம், நைல் ஆற்று நாகரிகங்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, பழந்தமிழர் நாகரிகமே என்பதை திரு. நாகசாமி அறிந்திருக்கமாட்டார். சுமேரிய, பாபிலோனிய, எபிறேய மொழி இலக்கியங்களில், ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், திரிந்தும் திரியாமலும் இருப்பதையும் திரு. நாகசாமி அறிந்திருக்கவில்லை.

இவ்விலக்கியங்களில், பழந்தமிழர் வரலாறு பொதிந்து கிடப்பதை, தொல்லியலாளர்கள் அறிய முயற்சிப்பது மில்லை. கிணற்றுத் தவளைகள் போல், கடந்த 100 ஆண்டுகளாக, சொன்னவற்றையே, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் தொல்லியல் துறையை, பின்னோக்கித் தள்ளிச் சென்ற பெருமைகளுக்கு உரியவர் திரு. நாகசாமி.

அவருக்குத் தெரிந்தவை, சமற்கிருதம், வேதங்கள், பகவத் கீதை, இதிகாசங்கள், புராணங்கள் போன்றவையே. சமற்கிருதத்திலிருந்தே தமிழ் மொழி தோன்றியது என்று, தமிழ்நாட்டு அறிஞர்கள் எவரும் இதுவரை சொல்லவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழைப் படித்து, தமிழர்களால் வாழ்வு பெற்ற தமிழரல்லாதவர்கள் தாம் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

மொழி, வரலாறு பற்றி ஆய்வு செய்த திரு. நாகசாமி, சமற்கிருத மொழியின் தோற்றக்காலம் பற்றி, விளக்க முன்வருவதில்லை. தமிழின் தொன்மையையும் அவர் அறிந்திருக்கவில்லை. அரைவேக்காட்டு அறிவுடன், திரு. நாகசாமி கூறும் செய்திகளை, தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டியதில்லை. திரு. நாகசாமியை விட, திறமை மிக்க, அறிவு சார்ந்த வரலாற்று மொழியில் துறை சார்ந்த ஆய்வாளர்கள், தமிழகத்தில் உள்ளனர் என்பதை, திரு. நாகசாமி மறந்துவிட வேண்டாம்.

தமிழ்ச் சொற்களால் கி.மு.2000 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு கமுக்க மொழி. மன்னர்களுக்கும், பிற்காலத்தில் வணிகர்களுக்கும் பயன்பட்டிருந்தது. இக்கமுக்க மொழி பற்றிய செய்திகள் மேலை நாகரிகங்களிலும் காணப் படுகின்றன 7.

சிந்து வெளி நாகரிக மறைவுக்குப் பின் தோன்றிய வட்டார அரசுகள், தங்கள் ஆவணங்களை, கமுக்க மொழியில் பதிவு செய்து வைத்திருந்தன. அடுத்தடுத்து இந்தியாவுக்குள் நுழைந்த ஊணர்கள், பாரசீகர்கள், மங்கோலியர்களின் மொழிகள், இக்கமுக்க மொழியில் கலந்தன. தொடக்கத்தில் ஆரியர்களுக்கு இம்மொழி பற்றிய தெளிவு இருந்ததில்லை. பிற்காலத்தில் அக்கமுக்க மொழிகளுடன் கலந்து, பிராகிருதம் என்ற மொழி உருவாயிற்று8.

பிராகிருதம், கிரேக்கர்களின் வருகைக்குப் பின், சமற்கிருதமாக உருப்பெற்றது. சமற்கிருதம் (SAMSKRU) எனத் திரிந்தது. ஆங்கிலத்தில் சான்ஸ்கிரீட் எனப்பட்டது. கிரேக்கர்களின் வருகைக்கு முன் அம்மொழிக்கு, கீர்வாணம் என்ற பெயர் இருந்ததாக, சிவத்தியாநாநந்த சுவாமிகள் தனது, ரிக்வேத சம்ஹிதை என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் 11. அக்கால அளவுகளில், சமற்கிருதத் துக்கான வரிவடிவம் கண்டறியப்படவில்லை.

சமற்கிருத வேதங்கள் மற்ற இலக்கியங்கள் அனைத்தும் வாய் மொழியாகவே, தலைமுறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில். குசராத்தில் ஆட்சி செய்த ருத்திர தாமன் காலத்தில்தான், முழுமை செய்யப்படாத சமற்கிருத எழுத்துக்களைக் கொண்ட கல் வெட்டு, முதன் முதலில் அறியப் படுகின்றது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே, வாய் மொழியாகச் சொல்லப்பட்ட வேதங்கள் உள்ளிட்டவை, எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டன. இந்தச் செய்திகள் பற்றியெல்லாம், திரு நாகசாமி உள்ளிட்ட தொல்லியலாளர்கள் வாய் திறப்பதில்லை.

வேதங்களில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று பலர் கூறுவதுண்டு. வேதங்களே தமிழில்தான் எழுதப்பட்டன என்ற கருத்தும் உண்டு. இந்தியர்களுக்கு, ஆரியர்கள்தாம், அறிவியல், கணக்கியல், வானியல் போன்ற வற்றைக் கற்றுத் தந்தனர். தமிழரும் அவர்களிடமிருந்தே கற்றனர் என்று திரு. நாகசாமி கூறி வருகிறார்.

இதற்கு மாறான செய்தியை, சமற்கிருத அறிஞர், மோனியர் வில்லியம்ஸ் கூறுகிறார் 12. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வானியல், அறிவியல் தொடர்பான செய்திகளுக்கும் ஆரியர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், அவர்கள் பஞ்சாபில் குடியேறுவதற்கு முன்பே (4000 - 2500), இந்தியப் பழங்குடிகள் அவற்றை அறிந்திருந்தனர் என்றும், அச்செய்திகளையே, 1400 - 1000 ஆண்டுகளில் வேதத்தில் இணைத்துக் கொண்டனர் என்றும், ஆரியர்கள் கூறிவரும் பொய்யைப் போட்டு உடைக்கிறார். மோனியர் வில்லியம்ஸ்

வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்த வேதங்கள், கி.பி. 200 ஆண்டுகளுக்குப் பிறகே, எழுத்து வடிவம் பெற்றன என்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறுகிறார். ரிக் வேதத்தின் 10 ஆவது அதிகாரமான புருஷ சூக்தம், கி.பி 500 ஆண்டுகளுக்குப் பிறகே, வேதத்தில் இணைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். முதல் பகுதிகளில் காணப்படும் மொழி நடையும், 10ஆவது சூக்த மொழி நடையும் மாறு பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார் 13. இவற்றுக் கெல்லாம், தொல்லியலாளர்கள் மறுப்போ, விளக்கமோ கூறுவதில்லை.

முன்னர் சொல்லப்பட்ட செய்திகளுடன், எழுத்து வடிவில் கொடுக்கப்பட்ட காலங்களில், அந்தச் சூழ் நிலைக்கு ஏற்ப புதிய செய்திகளையும் இணைத்துள்ளனர். அவ்வாறுதான், மனுவின் சட்டங்கள், வங்காள ஆளுநரும், நடுவர் மன்றத் தலைவருமான வில்லியம் ஜோன்சிடம், மூலத்தை விட, விரிவாக இணைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டன. கி.பி.1780களில் தான் மனுவின் சட்டங்கள் எழுத்து வடிவம் பெற்றன.

மகாபாரதக் கதை, வாய் மொழியாகவே சொல்லப் பட்டு வந்த நிலையில், கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட, மூலக்கதையோடு பல கிளைக் கதைகள் இணைக்கப்பட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பகவத் கீதையும் அவ்வாறு, கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, இணைக்கப்பட்டது. திருக்குறள், பகவத்கீதையின் தழுவல் என்று கூற, எவ்வகையான சான்றுகளும் இல்லை.

கருத்தியல் முரண்பாடுகளும் மிகுதியாக உள்ளன. “உலகில் சாதிக் கட்டமைப்புகள் தகர்க்கப்படும்போது, மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து வந்து, அக்கட்டமைப்பைத் தகர்த்தவர்களை அழிப்பேன். ஏனெனில், சாதிக் கட்டமைப்பையும் வர்ணாசிரம தர்மத்தையும் உருவாக்கியவன் நான்தான்,” என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார் என்று பகவத் கீதை கூறுகிறது. சாதியமைப்பை, பகவத் கீதை நேர்மைப்படுத்துகிறது. திருக்குறள், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறுகிறது. அன்பைக் கற்பிக்கும் திருக்குறள், அழிவுகளை நேர்மைப்படுத்தும் பகவத் கீதையின் தழுவல் என்பது, அறியாமையின் உச்சகட்டம்!

பகவத் கீதை, கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப் பட்டது எனக் கூறப்படும் செய்திகளை மறுத்து, அந்நூல் எக்காலத்தில் எழுதப்பட்டது என இதுவரை, திரு. நாகசாமி விளக்கம் தரவில்லை. தமிழரின் போர் முறைக்கு மாறுபட்டு, போர்களில், சூழ்ச்சி, வஞ்சித்தல் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்றும், உறவுகளைக் கொல்வது கூட தவறில்லை என்றும் பகவத் கீதை கூறுவதை அனைவரும் அறிவர்.

திருக்குறள், கி.மு.31 ஆண்டுகளில் எழுதப்பட்டது அல்லது, திருவள்ளுவரின் பிறப்பாண்டு என்று கருதப்பட்டது. உரோமானிய தத்துவ ஞானியும், கவிஞருமான செனகா (Seneka), திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும், இலங்கையைப் பற்றிய தன் குறிப்புகளில் எழுதியுள்ளார் என பேராசிரியர் மருதநாயகம் மேற் கோள் காட்டுகிறார். திருக்குறளின் பெருமையும் புகழும் உரோமைக்கும் சென்றடைந்து, அதனின்றும் மேற்கோள் சொல்லப்பட்டிருப்பதால்,கி.மு. 300 ஆண்டுகளில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்து உறுதிப் படுகின்றது. இச்செய்திகளையெல்லாம் திரு. நாகசாமி அறிந்திருக்கமாட்டார்.

இலங்கையில், கொழும்புக்கு தென்கிழக்கேயுள்ள ஓரிடத்தில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு கிடைத்த எலும்புக் கூடுகள் மற்றும் பொருட்களை கார்பன் முறைப்படி ஆய்வு செய்ததில், அவ்வெலும்புக் கூடுகள், கி.மு. 37000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த மக்களுடையது எனக் கண்டறியப் பட்டுள்ளது 14. தமிழரின் தொன்மையை விளக்கும் சான்று இது!

எவ்வகையிலும் பகவத் கீதையினின்றே கருத்துகளைப் பெற்று திருக்குறள் எழுதப்பட்டது என்பதற்கானச் சான்றுகளை, திரு.நாகசாமி வெளியிடட்டும். 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர்கள் கூறியதையே நான் எடுத்துக் கூறினேன் என்று தப்பிக்க முயல வேண்டாம். தொடக்கத்தில் வீரமாமுனிவர் கூறியுள்ள உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கூற, அந்தணர்கள் அஞ்ச மாட்டார்கள் என்ற கூற்றினை மீண்டும் படித்துப் பார்க்கவும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பற்றியும் அந்நிறுவனம் அளிக்கும் 5 இலக்கம் பணத்துடனான விருது பற்றியும் திரு. மு.க. ஸ்டாலின், தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அத்தேர்வுக் குழுவினின்று திரு. நாகசாமியை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இக்கருத்து வரவேற்கத் தக்கது மட்டுமில்லாமல் பாராட்டத் தக்கதும் கூட எனலாம்.

செம்மொழி நிறுவனத்தில் அளிக்கப்படும் விருதுகள், மற்ற விருதுகளைப் போல் முரண்பாடுகளைக் கொண்டவையே. மத்திய அரசின் ஆட்சியிலுள்ளவர்கள் விரும்பியவர்களுக்கே தொல்காப்பியர் விருதுகள் அளிகப்படுகின்றன. மற்ற விருதுகளையும் போல், தகுதி வாய்ந்த தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை.

கோவையில் நடை பெற்ற செம்மொழி மாநாட்டில். திரு. ஐராவதம் மகாதேவன் தலைமையில், சிந்துவெளி நாகரிகம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. திரு. மகாதேவனின், மாணாக்கர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இருவர், கட்டுரை படித்தனர். அக்கட்டுரையில், சிந்துவெளி மொழியில், தமிழ்ச் சொற்களை விட, கன்னடச் சொற்களே மிகுதியாகக் காணப்படுகின்றன என்று படித்தனர். பார்வையளர்கள் திகைத்துப் போயினர்.

செம்மொழி மாநாட்டில், தமிழ்மொழி சிறுமைப் படுத்தப்பட்டது. இக்கட்டுரைகளை வடித்துக் கொடுத்த திரு. ஐராவதம் மகாதேவனுக்கு, தொல்காப்பியர் விருது, செம்மொழி நிறூவனத்தால் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில், அந்நிறுவனத்தின் இயக்குநர், நிதி காப்பாளர், பதிவாளர் ஆகிய மூன்று பேருமே, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராதவர். இந்நிகழ்வு, காங்கிரஸ் ஆட்சியில்தான் நடை பெற்றது.

தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்க வேண்டும் என்று, திமு.க அரசு காங்கிரஸ் அரசுடன் போராடிப் பெற்றதாக விளம்பரம் செய்யப்பட்டு, விழாக்களும் எடுக்கப்பட்டன. இத்தகுதிச் செய்தியை அறிவித்த மாந்த வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், தமிழ் மொழியின் வரலாறு, 1000 ஆண்டுகள் பழமையுடையது என்று கூறினார். தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் தோன்றவே, 1500 ஆண்டுகள் என வைத்துக் கொள்ளுங்கள் என்றார். (செயகாந்தன், தமிழை நாய்மொழி என்று கூறி, பின்னர் சிங்க மொழியென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்). மீண்டும் எதிர்ப்புகள் தோன்றவே, தமிழுக்குத் தொடர்பில்லாத ஆ.ராசா என்ற அமைச்சர், மாந்தவள மேம்பாட்டுத் துறையின் அறிவிப்பை வரவேற்று, ஆண்டுக் கணக்கை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், இந்த ஆணை கிடைத்ததே போதும் என்றும் அறிக்கை விட்டார். திரு. கருணாநிதி அவர்களால் விளக்கம் தர இயலாத நிலையில், ஆ. ராசா விளக்கமளித்தார். முதற்கோணலே, அடுத்தடுத்த கோணல்களுக்கு மூலமாக அமைந்தன.

திரு. கருணாநிதியை, தலைவராகக் கொண்டு, செம்மொழி நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. ஆட்சி மாறி செயலலிதா முதல்வராக வந்துவிட்டால், தலைவர் பதவி அவருக்குப் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாக, பதிவுச் சட்ட வரைவுகள் பலமுறை திருத்தப் பட்டன. இவற்றை எவரும் சொல்லி நான் எழுதவில்லை. தொடக்கத்தில், 5 ஆண்டுக்காலம், அந்நிறுவனத்துக்குச் சென்று வந்தவன் நான். உண்மையில் அந்நிறுவனத்தின் தலைமை, மாந்த வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கே உரியது. திரு. கருணாநிதி, தமக்குக் கீழ் ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்று இரு குழுக்களை அமைத்துக் கொண்டார். அக்குழுக்களில் இடம் பெற்றிருந்தவர்களில் எவரும் தமிழஞர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் திரு. கருணாநிதியின் அன்பிற்குரியவர்கள். தொடக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும், 20 கோடிகள் அளவில் தொகைகள் வந்தன. அத்தொகை, எவ்வாறு செலவு செய்யப்பட்டிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

தமிழ் மொழியை ஆய்வு செய்வதில், சரியான திட்டமிடல் இல்லாததால், திட்டம் தீட்டத் தகுதியானவர்கள், அங்கு இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும், பல கோடிகளை, டெல்லிக்கே திருப்பி அனுப்பினர்.

தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுக்கும் காங்கிரஸ் அரசு செம்மொழித் தகுதிகளை வழங்கியது. அழகிப் போட்டியில் அனைவருக்கும் முதல் பரிசு வழங்கப்பட்டதை ஒப்பு நோக்குக. மலையாளம், செம்மொழித் தகுதியுள்ள மொழியென்பதை, திரு. ஐராவதம் மகாதேவன் தான் கேரள அரசுக்கு எழுதிக் கொடுத்தார்.

தமிழுக்குத் தலையையும், கன்னடத்துக்குத் தோளையும், மலையாளத்துக்குக் கைகளையும் காட்டியவர் திரு.மகாதேவன். இவருக்கு மட்டும் செம்மொழி நிறுவனம் ஆய்வுக்காக பல இலட்சம் கொடுத்தது. செம்மொழி நிறுவனம் ஒரு குழுவின் சொத்தாகவே மாறிப்போனது.

பாரதிய சனதாக் கட்சி, ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையே தொடர்ந்தது. தம் பங்குக்கு பல உதவிகள் செய்தனர். விருதுகள் வழங்கினர். தி.மு.க. முற்றிலுமாக அந்நிறுவனத்திலிருந்து விடுவிக்கப் பட்டது. திரு. கருணாநிதியுடன் ஏறக்குறைய 50 ஆண்டுகள் உடனிருந்த திரு. நாகசாமி பற்றி, திரு. ஸ்டாலினுகுத் தெரியாதா? கடந்த 50 ஆண்டுகளில், தமிழ் எவ்வாறு தமிழகத்தில் முடக்கப்பட்டுள்ளது என்பதை தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள், தமிழைப் போற்றி வளர்ப்பதாக உறுதி கூறி ஆட்சிக்கு வந்து, ஆங்கிலப் பள்ளிகளைத் திறந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் வளமை சேர்த்தது.

இன்று, திரு. ஸ்டாலின், திரு. நாகசாமியை எதிர்ப்பது, பா.ஜ.க.வை குற்றம் கூறுவதற்காக மட்டுமே என்க. ஆரியத்தைத் தமிழகத்தின்று அகற்றியே தீருவோம் என்றவர்கள், பின்னர் எவ்வாறு அவர்களுடன் சமரசம் செய்து கொண்டார்கள் என்பதை நாடறியும்.

பண்டாரம், பரதேசிகள் என்று கூறியவர்கள், பின்னர் நண்பர்களானர்கள். கூடாநட்பு கேடாய் முடியும் என்றவர்கள், பின்னர் தோழமை கொண்டனர். திராவிடம் பேசும் திரு. ஸ்டாலினும், தேசியம் பேசும் திரு. நாகசாமியும், அரசியலுக்கான அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் தமிழுக்கோ, தமிழ்நாட்டுக்கோ எப்பயனும் ஏற்படப் போவதில்லை. தமிழர்களைப் பகைவர்களாகக் கருதும் இரண்டு தேசியக் கட்சிகளும், தமிழ் நாட்டுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை. தமிழர்கள் விழிப்புணர்வு பெறுவதைத் தவிர, இன்று வேறு வழிகள் இல்லை.

திரு. நாகசாமி, நூல்களையும், அறிக்கைகளையும் வெளியிடுவதை நிறுத்திக் கொண்டு, சமற்கிருதம், தமிழ், பகவத் கீதை, தமிழர் வரலாறு, ஆரியர் வரலாறு பற்றி, பொதுமக்கள் மத்தியில் அல்லது தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக வெளிப்படையான விவாதத்துக்கு முன் வரவேண்டும். திரு. நாகசாமியின் பொய்யான, கற்பனையான, ஒரு சமூகத்தை உயர்த்தும் உள்நோக்கம் கொண்ட பிதற்றல்களை, தமிழறிஞர்கள் சந்திக்கக் காத்திருக்கின்றனர்.

ஒன்று அவர் விவாதமேடைக்கு வரவேண்டும் இல்லையேல், இதுபோன்ற வரலாற்றுத் தொடர்பற்ற கற்பனைச் செய்திகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரங்கள், அரைகுறைகளை வேண்டுமானால் வளைத்துக் கொள்ளலாம், அறிஞர்களை வளைக்கவோ, தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரவோ இயலாது என்பதை, திரு. நாகசாமியும், அவரை ஆய்வாளர் என்று நம்பிக் கொண்டிருக்கிற தேசிய கட்சியும், உணரவேண்டும். நெய்யும் மெய்யும் வெளிப்பட்டே தீரும் என்ற பாவாணரின் மொழியில், இதனை உணர்த்த விரும்புகிறேன்.

அடுத்த 10 ஆண்டுகளில், இந்திய மொழிகளுக்குத் தாய்மொழி தமிழே என்றும், தமிழே உலக மொழிகளுக்கு மூலம், வேர் என்றும், உலக அரங்கில் உறுதியாக நிறுவப்படும். அதற்கான காலம் கனிந்து கொண்டிருக் கிறது!"

அடிக்குறிப்புகள்:-
===============
1. வீரமாமுனிவர் அருளிய சதுரகாதி, பதிப்பாசிரியர், டாக்டர்.சூ. இன்னாசி, வீரமாமுனிவர் ஆய்வுக் கழகம், பாளையங்கோட்டை, 1979, முன்னுரை, பக். XVII-XVIII..

2. குரவன் என்ற சொல்லை எடுத்துவிட்டு, பார்ப் பார் என்ற சொல்லைத் திணித்துவிட்டதாக, எல்லிசின் குறிப்புகளை மேற்கோள் காட்டி, பேரா.ப. மருதநாயகம் பதிவு செய்துள்ளார்.

3. DISTRICT GAZETTIER, TRICHINOPOLY,1830.

4. புறநானூறு, 194, பக்குடுக்கை, நன்கணியார்.

5. என் சரித்திரம் அரியலூர் மாவட்டப் பண்பாட்டுப் பேரவை.

6. ஏம வைகல் எய்தின்றால் உலகே - பெருந்தேவனார், குறுந்தொகை.

நீர் நின்று அமையாது உலகம் போல - நற்றிணை, முதல் பாடல்.

தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகெ - அகநானூறு, கடவுள் வாழ்த்து.

மண் திணிந்த நிலனும் - புறநானூறு

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு - முருகாற்றுப்படை

மலை நாறிய வியன் ஞாலத்து - மதுரைக் காஞ்சி.

உலகெலாம் ஓதற்கரியவன் - திருமுறை - என விரியும்.

7. Special Language: The professional and secret language practiced by the scribes, appear in both Egypt and Mesopotamia. It was even more difficult for more than a few to mester these skills. - Dictionary of the Bible,P.779.

8. Pragrit: The Languages other than Sankrit, that apoken and written in North India. Monier Williams, Introduction in his Dictionary, P.XX.

9. Sankrit: Perfectly constructed Speech. - Ibid, P.XX

10. குறி: குறி அறிந்தோரே - தொல்காப்பியம்.

11. சிவத்தியாநாநந்தர், ரிக்வேத சம்கிதை, இராயப் பேட்டை, 1938, முன்னுரை.

12. Rig Veda: The Oldest of its (Vedas) hymns being assigned by some who rely on certain astronomical calculations to a period between 4000 and 2500 B.C., before the settlement of the Aryans in India and by others who adopt a different reckoning to a period between 1400 B.C.- 1000 B.C., when Aryans had settled down in Punjab.
Monier Williams, A Sanskrit - English Dictionary, P.1015.

13. Dr.B.R.Ambetkar, “Who is Sutra?”

14. தகவல் மற்றும் படங்கள், அமெரிக்காவின் நவேடா மாநிலம், கர்சான்சிட்டி, மாநிலத் தலைமை, நூலகத்திலிருந்த, The Encyclopedia - anthropology, Vol.VII, என்ற நூலிலிருந்து, கட்டுரை ஆசிரியரால் எடுக்கப்பட்டது.

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 மார்ச் 16 – 31 இதழ்)

===============================
கண்ணோட்டம் இணைய இதழ்
===============================
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: tamizhdesiyam.com
===============================