திங்கள், 27 ஆகஸ்ட், 2018

பெருங்கடல் வேட்டத்து: மீனவர்களின் ஆறாத வடுவைப் பேசுகிற படம் :- செல்வம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் கோரத்தைப்  பேசுகிறது இப்படம். மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அரசுகளின் மீட்பு நாடகத்தை ஆதாரத்தோடு தோலுரித்துக் காட்டுகிறது. 

மூன்று நாட்கள் இரவு பகலாகக் கடலில் நீந்திக் காப்பாற்றுவார்கள் என்று எண்ணித் தத்தளித்த தமிழர்களைப் பிணமாகக் கூட மீட்க முடியவில்லை.

 வல்லமை படைத்த ஆட்சியாளர்களால்.  "மகனை இழந்த தாய் மூச்சடக்கி அழும்போது பார்ப்பவர்களுக்கு நெஞ்சு  அடைத்துக் கொள்கிறது" . கணவனை இழந்த பெண்கள் கதறும் போது கண்கள் வறண்டு விடுகின்றன. ஆண்களே இல்லாத ஊராக எதிர்காலமே இல்லாத வாழ்வாக இருக்கும் மீனவர்களின்   அவல நிலையை எதார்த்தமாக  எடுத்துக் காட்டுகிறது இப்படம்.

தமிழ்நாட்டில் இவ்வளவு நவீனத்துவ காலத்தில் மீனவர்களைக் காப்பதற்கு எந்த வழியும் இல்லையா? அவர்கள் வாழ்வு ஏன் இவ்வளவு அவலப் போராட்டம் நிறைந்ததாக உள்ளது என்ற ஆதங்கம் எழுகின்ற அளவிற்கு  ஒரு சிறந்த படமாக  சிறப்பான முறையிலே படமாக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் வாழ்வியல் கஷ்டங்களை சாமானியனின் நெஞ்சத்தில் ஆறாத வடுவாய்ப் பதிவு செய்கிறது
             "பெருங்கடல் வேட்டத்து".

செல்வம்,
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக் குண்டு,
தேனி மாவட்டம்.

சனி, 25 ஆகஸ்ட், 2018

வரலாற்றுவழி தமிழ்த் தேசியமும் கற்பனையான இந்திய தேசியமும் :- த.செயராமன்




 தமிழினத்திற்கு ஒரு பெருமை உண்டு. உலகின் மிகப் பழமையானதும், இன்று வரைப் பயன்பாட்டில் உள்ளதும், செறிவான சொல்வளமும், இலக்கிய வளமும் கொண்ட ஒரு செவ்வியல் மொழிக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். மற்றவர்களுக்கெல்லாம் தான் பிறந்தது முதல் நாவில் தவழ்வது தாய்மொழி. தமிழைப் பொறுத்தவரை, 24 மொழிகளைப் பெற்றெடுத்ததுடன், 82 உலக மொழிகளுக்கு மூலமாக விளங்குவதால் மற்ற பல மொழிகளுக்குத் தாய்மொழி. மாந்த இனம் தோன்றிய பகுதியாகக் கருதப்படும் ஆப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியிலிருந்து மடகாஸ்கர் மற்றும் இன்றையத் தென்னிந்தியப் பகுதியைத் தழுவி தெற்கில் கடலில் இருந்த பெருநிலப்பரப்பு கடலில் படிப்படியாக மூழ்கி மறைந்ததாலும், எஞ்சியுள்ள தொல்மாந்தர் தோன்றிய நிலப்பரப்பில் தொடர்ந்து வாழும் பேற்றினைக் கொண்டவர்கள் தமிழர்கள். உணவு சேகரிக்கும் நிலை, வேட்டையாடும் நிலை ஆகியவற்றைக் கடந்து, ஆற்றங்கரைகளில் நிலை கொண்டு, வேளாண் சமூகமாக மாறி, உபரி உற்பத்தியைப் பெருக்கி, உலக அளவில் வணிகம் செய்து, செல்வத்தைக் குவித்தவர்கள் தமிழர்கள்.
தமிழ்த் தேசத்தின் வரலாற்றுவழி இருப்பு

 தமிழர்களுக்குக் கூடுதலாகவும் ஒரு பெருமை உண்டு. ஐரோப்பாவில் முதலாளிய உற்பத்திமுறை தோன்றிய பிறகே மொழி அடிப்படையிலான தேசங்கள் தோன்றின. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் ஒன்றன்பின் ஒன்றாகத் தேசங்கள் எழுந்தன. 1789-இல் வெடித்த பிறகு ஜனநாயகக் குடியரசுகளாகத் தேசங்கள் மாறின.

 கிரேக்கத்தில் 'பொலிஸ்' என்று அழைக்கப்பட்ட ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, தீப்ஸ், கொரிந்து போன்ற ‘நகர நாடுகள்’ (City States) இருந்தன. தமிழர்களைப் போலவே கிரேக்கர்களும் பழம் பெருமை வாய்ந்தவர்கள். ஆனால், சங்க காலத்திலேயே, மூவேந்தர்களின் தமிழ் அரசுகள் ஒற்றை தேசமாக அறியப்பட்டது. ‘தேசம்’ என்ற சொல்லாலேயே பண்டைத் தமிழகம் அழைக்கப்பட்டது என்பது பலருக்கும் வியப்பளிக்கும். இதற்குக் கல்வெட்டுச் சான்றும் உள்ளது.

 வடஇந்தியாவில், இன்று பாட்னா எனப்படுகிற பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மௌரிய வம்சத்தின் மூன்றாவது பேரரசராகிய அசோகரின் (கி.மு.268-232) பேரரசில்  இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி அடங்கியிருந்தாலும், தெற்கே தமிழர்களின் நிலப்பரப்பு அதில் அடங்கவில்லை. சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர மற்றும் தம்பபண்ணி (இலங்கை) ஆகியவை தம் எல்லைப் பகுதியில் சுதந்திர நாடுகளாகவும் நட்புறவோடும் உள்ளன என்று அசோகர் தம் 2 மற்றும் 13-வது பாறைச் சாசனங்களில் தெரிவிக்கிறார்.

ஹத்திக்கும்பா கல்வெட்டில் தமிழ்த்தேசம்!
 அசோகருடைய சமகாலத்திய கலிங்க (ஒடிசா) அரசராகக் கருதப்படும் காரவேலர் மிக முக்கியத் தகவலைத் தம் ஹத்திக்கும்பா கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார். கடந்த காலத்தில், தனது நாட்டுக்கே (கலிங்கம்) அச்சுறுத்தலாக, 113 ஆண்டுகளாக நிலவி வந்த, தமிழர் அரசுகளின் கூட்டமைப்பான ‘திரமிரதேச சங்கதா’ வை(தமிழ்த் தேச சங்கம் -Tramiradesa Sanghata) தான் தோற்கடித்துவிட்டதாகக்  காரவேலர் பெருமை பேசுகிறார்.  கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்களை ஒரு தேசமாகக் கருதியமைக்கு இது ஒரு கல்வெட்டுச் சான்றாகும். தமிழ்த்தேசியம் என்பது இயல்பான வரலாற்றுவழித் தேசியம் ஆகும்.

தமிழ்த் தேசத்துக்கு மொழியே முகம்
 உலக வரையறுப்புகள் மற்றும் பிரகடனங்களின்படி, ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான இறையாண்மையுள்ள தேசத்தை நிறுவிக் கொள்ளலாம். அது அந்தத் தேசிய இனத்தின் பிறப்புரிமை. இத்தேசிய இனங்கள் அதன் பொதுமொழி மூலம் அடையாளம் காணப்படுகின்றன. மொழிதான் ஒரு தேசிய இனத்தின் முகம். மொழியின் அடிப்படையில்தான் நாடு -என்பது தொல்காப்பியர் காலத்திலேயே உணரப்பட்டது. மூவேந்தர்கள் ஆண்டாலும், தமிழ்மொழி எதுவரைப் பேசப்படுகிறதோ அதுவே தமிழ்த்தேசம் என்ற பார்வை சங்க காலத்திலேயே இருந்தது.
'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்'
என்று தொல்காப்பிப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார்.
 ‘தமிழ் கெழு மூவர் காக்கும்,
 மொழி பெயர் தே எம்’- என்று தமிழ் வழங்காப் பகுதியை அகநானூறு குறிப்பிடுகிறது.

 தமிழ்த் தேசத்தை ‘தமிழ்நாடு’ என்று பதிவு செய்யும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம். தமிழ்வழக்கும் பகுதியை 'தமிழ்நாடு' (சிலப்.25-165) என்றும், 'தென் தமிழ்நாடு' (சிலப்.10-58) என்றும் அது குறிப்பிடுகிறது.

 அதுபோன்றே, ‘தமிழ்நாடு’ என்று தமிழகத்தைக் கம்பர் (கி.பி. 13-ம் நூற்றாண்டு) குறிப்பிடுகிறார். ‘அகன் தமிழ்நாடு’ (கிட்கிந்.749) ‘தென் தமிழ்நாடு’ (கிட்கிந். 750, 918), ‘செந்தமிழ்நாடு’ என்று கூறும் கம்பர், வட மொழி பரவிவிட்ட வடஇந்தியப் பகுதியையும், தமிழ் வழங்கும் பகுதியையும் வெவ்வேறாகப் பிரித்துக் காட்டுகிறார். ‘வடசொற்கும், தென் சொற்கும் வரம்பாகி நின்ற வேங்கடம் (கிட் கிந். 745) என்று வேங்கடமலையை தமிழகத்தின் எல்லை ஆக்குகிறார். மொழியின் அடிப்படையிலேயே தேசங்கள் என்பது தமிழ்ப் புலவர்களின் தெளிவான பார்வையாகும். பக்தி இலக்கியமாகிய பெரியபுராணம், 'அருந்தமிழ்நாடு', 'தண்டமிழ்நாடு', 'தென்றமிழ்நாடு', 'வண்டமிழ்நாடு', 'கன்னித்தமிழ்நாடு', 'தமிழ் வழங்குநாடு', 'தமிழ்த்திருநாடு', 'செந்தமிழ்நாடு' என்று மொழியையும், நாட்டையும் இணைத்துத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

 தமிழர்களுக்கான தேசம் எது? என்பதைத் தெளிவாக இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உயைாசிரியர் இளம் பூரணார், தொல்காப்பியம் நூற்பா-496 -க்கு பொருள் கூறும்போது,  ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பதைக் கூறும்போது,
 ‘நும் நாடு யாது என்றால்,
 தமிழ்நாடு என்றல்’ என்று கூறுகிறார்.
ஐரோப்பாவில் தேசம் அல்லது மொழிவழி நாடு பற்றிய பார்வை கி.பி. 15-ம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது. ஆனால் தமிழர்கள் சங்ககாலம் முதலே தங்கள் தாயகம், மொழி அடிப்படையில் தேசம் பற்றியப் பார்வையில் தெளிவாக இருந்தார்கள்.

 சங்க காலத்தில், தமிழகத்தை
‘இமிழ் கடல் வேலித் தமிழகம்’
என்று பதிற்றுப்பத்தும்,
‘வையக வரைப்பில் தமிழகம்’ என்று புறநானூறும், இக்காலத்திற்குப் பின் எழுதப்பட்ட பரிபாடல் திரட்டு ‘தமிழ் நாட்டகம்’ என்றும் குறிப்பிடுகின்றன.

மொழியின் அடிப்படையில் தமிழர் என்ற இன அடையாளம்
 பக்தி இலக்கியக் காலத்தில் தமிழர்கள் தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்தினர். பூதத்தாழ்வார் ‘இருந்தமிழ் நன் மாலை இணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது’ (நாலாயிர திவ்விய பிரபந்தம்) என்று தம்மை தமிழன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார். தமிழர்கள் தங்களையும், ஆரியர்களையும் வெவ்வேறாகப் பிரித்து அறிந்தனர். சிலப்பதிகாரம், வடமொழியாளர்களை 'வடவாரியர்' என்று குறிப்பிடுகிறது. அப்பர் திருமறைக்காட்டில் சிவபெருமானுக்கு சமஸ்கிருதத்திலும் தமிழிலும் வழிபாடு நடப்பதை ஆரியம் வேறு, தமிழ் வேறு என்று வேறுபடுத்திக் காட்டும் வகையில்
"ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்"
என்று குறிப்பிடுகிறார். தமிழர்களுடைய பண்பாடும், வடஇந்தியப் பண்பாடும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை.
 ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’,
‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’
என்ற ஆன்றோர் வாக்குகள், தமிழனத்தின் அறம் சார்ந்த விழுமியத்தின் வெளிப்பாடுகள். ஆரியரின் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்தே இவ்விழுமியங்கள் (Values) முன்நிறுத்தப்பட்டன.

 தமிழ், தமிழகம், தமிழ்நாடு என்று தமிழ் இலக்கியங்கள் பேசினாலும் திருக்குறள் மாந்த இனம் முழுமைக்கும் நன்னெறி புகட்டும் பொதுமறையாக எழுதப்பட்டமையால், அதில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்த்தேசம் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. அதனால்தான் பாரதியார்
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என்று பாடினார்.

புராதன இந்தியா என்பது உண்டா?
 இந்தியா என்ற நாடு ஆங்கிலேயரின் வாளின் வலிமையால் உருவாக்கப்பட்டு, பிரிட்டிஷ் காலனியாதிக்கப் பகுதியாகிறது. அதற்கொரு நிர்வாகக் கட்டமைப்பையும் ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். வெற்றிகொள்ளப்பட்ட பகுதிகள் சிறிதாயிருந்தபோதும், பின்னர் காலனியப் பேரரசாக உருவெடுத்தபோதும் 'இந்தியா' என்றே ஆங்கிலேயர் அழைத்தனர். இந்தியாவுக்கென ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு ஆங்கிலேயர்களால் 1773-இல் உருவாக்கப்பட்டு, வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு அதன் முதல் கவர்னர் ஜெனரல் ஆக்கப்பட்டார்.

 ஆங்கிலேயர் வரும்வரை இந்தியத்துணைக் கண்டம் ஒற்றை நிர்வாகத்தின் கீழ், ஒரு நாடாக இருந்ததே இல்லை. இன்று பலரும் கருதிக்கொள்வதுபோல இந்திய தேசம் அல்லது பாரத தேசம் என்ற ஒன்று வரலாற்றில் இருந்ததே இல்லை. புராணிகர்கள் குறிப்பிடுகிற 56 தேசங்களிலும் கூட இந்திய தேசம், பாரத தேசம் என்ற ஒன்று கிடையாது. ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’ என்ற நூலை 1918-இல் பி.வி.ஜகதீச ஐயர் எழுதினார். இதில் சொல்லப்படும் 56 தேசங்களில் சீனம், பாரசீகம், காந்தாரம், காம்போஜம், நேபாளம் கூட இருக்கின்றன. ஆனால் பாரத தேசம் அதில் இல்லை. சோழ தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம், திராவிட தேசம் அதில் இருக்கின்றன.
பாரத தேசம் என்ற கருத்தியல் உருவாக்கம்

 அமாவாசை தர்ப்பணத்தின்போது சொல்லப்படும் மந்திரத்தில்
‘மன்வந்த்ரே அஷ்டா விம்ஸதி தாமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மோரோ’
என்று வருகிறது. 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் விரிவாக நடத்தப்பட்ட  சமஸ்கிருதம் தொடர்பான மொழி ஆய்வுகளால் உயிரூட்டப்பட்ட ஆரிய இன உணர்வால் உந்தப்பட்டவர்கள் தங்களுக்கான தேசத்தை ‘பாரதம்’ என்று அழைக்கத் தொடங்கினர். இந்தியத் துணைக் கண்டத்தை பரதகண்டம் என்றும் பல அறிவாளர்கள் குறிப்பிடத் தொடங்கினர். இந்திய அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்படும் 22 மொழிகளில் சிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்குத் தாயகம் கிடையாது. சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்தவர்கள் இந்திய விடுதலைக்குப்பின் தாயகம் இல்லாத சமஸ்கிருதத்திற்கு தாயகம் வழங்கும் வகையில், இந்தியாவுக்குப் 'பாரதம்' என்று பெயர் சூட்ட விரும்பினார்கள். இந்திய அரசியல் சட்டம் 1946 முதல் 1949 வரை எழுதப்பட்டது. 1948 செப்டம்பர்  வரையிலும் இந்தியா என்ற பெயரே ஏற்கப்பட்டது. இந்தியா என்பது வரலாற்றில் அறியப்பட்ட பெயர் என்பதால்,  இந்தியாவுக்கு ‘பாரதவர்ஷம்’ என்று பெயர் வைக்க எழுப்பப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால், சேத் கோவிந்ததாஸ் போன்ற இந்து மதவாதிகள் அரசியல் சட்ட அவைக்குள்ளும் வெளியிலும் பாரதம் என்று பெயரிட வற்புறுத்தி வந்தனர். 1949 செப்டம்பர் 17-ஆம் தேதியன்று கொண்டுவரப்பட்ட திருத்தம் இந்தியாவின் பெயராக ‘இந்தியா அதாவது பாரத்’ என்று அறிவித்தது. அதன் பிறகு, தொடர் பிரச்சாரத்தின் மூலம் ‘பாரத தேசம்’ என்ற சொல்லாடல் புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

 இவ்வாறு புராதன இந்தியாவில் இல்லாத, உலகறிந்த வரலாற்றிலும் இல்லாத பாரததேசம் என்ற சொல்லாடல் முன்னிலைப்படுத்தப்படுவதன் நோக்கமே இந்துத்துவத் திட்டமான இந்து இந்தியாவைப் படைப்பதே. தமிழ்மொழியில், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என எந்த நூலிலும், பாரததேசம் என்றோ, இந்திய தேசம் என்றோ எந்தக் குறிப்பும் கிடையாது. அதைப் போன்றே இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எந்த மொழியிலும் இந்தியா பாரதம் போன்றவை குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால் இந்தக் கருத்தியல்களும் சொல்லாடல்களும் சமீபத்தியவை.

இந்து தேசியம் சாத்தியமா?
 இந்தியத் தேசியத்தை உருவாக்கி அதை மெல்ல இந்து தேசியமாக அமைத்துவிடும் முயற்சிகள் தொடர்கின்றன. இந்த நோக்கத்தைக் கொண்ட அரசியலாளர்கள், தேசம், தேசியம், தேசியஇனம் போன்றவை குறித்த அரசியல் அறிவியல் அடிப்படையில் எவ்விதப் புரிதலுமின்றி குழப்பமான கருத்துகளை வெள்ளோட்டம் விடுகிறார்கள். இந்து தேசியம் என்ற ஒன்று உருவாகவே வாய்ப்பில்லை. இந்தியத்துணைக் கண்டத்தில் பல்வேறு சமயங்கள் காலாகாலமாக இருந்து வருகின்றன. இதில் பெரும்பான்மையினருடையதாகக் கருதப்படும் இந்து மதம் என்பது ஆங்கிலேயர்கள் வரும்வரை இருந்ததேயில்லை. ஆங்கிலேயர்கள்தாம் முன்பிருந்த பல மதங்களையும், வழிபாடுகளையும் ஒருங்கிணைத்து செயற்கையாக உருவாக்கி இந்து மதம் என்று பெயரிட்டார்கள். இந்தியாவில் அரசு நிர்வாகத்தை கைக்கொண்ட ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிர்வாகத்தை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில் 1794-ஆம் ஆண்டு மானவ தர்மசாஸ்திரத்தை சர் வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ‘இந்து சட்டம்’ (Hindu Law) என்று பெயரிட்டார். இந்த மொழிபெயர்ப்பு நூலின் அடிப்படையில், எச்.டி.கோல்புரூக் ‘தி இந்து லா’ என்ற இந்து சட்டத் தொகுப்பை உருவாக்கினார்.

 இவ்வாறு பல்வேறு மதங்களை இணைத்துச் செயற்கையாக இந்து மதம் உருவாக்கப்பட்டதைக் காஞ்சி சங்கராச்சாரியார் தம் நூலில் குறிப்பிடுகிறார் :

 "நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும், வெள்ளைக்காரன் நமக்கு இந்து என்று பொதுப்பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம்.... வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப்பெயர் தந்து, இன்று இந்திய தேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்! "
 (தெய்வத்தின்குரல், பாகம் 1, ஏழாம் பதிப்பு, வானதி பதிப்பகம், சென்னை, 1988, பக்.305-306)

 இந்து என்பது ஒரு இனமோ, ஒரு மதமோ அல்லது நாடோ அல்ல. அது குறிப்பிட்ட புவியியல் பகுதியைக் குறித்தது. அக்கேமீனட் பேரரசுக்கால கிரேக்க கல்வெட்டு சிந்துநதிக் கரையோரப் பகுதிகளை ‘ஹிந்துஷ்’ என்று குறிப்பிடுகிறது. பிற்கால அராபியர் சிந்துநதிக்கு அப்பால் இருந்த இந்திய துனைக்கண்ட மக்களை ‘அல்ஹிந்த்’ என்று குறிப்பிட்டனர். 19-ம் நூற்றாண்டில் அதிகாரத்திலும், பதிவியிலும் அதிக பங்கு கேட்க அவரவர் சமுகத்தினர் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட வேண்டிய தேவை எழுந்தது. ஆகவே, அதிகாரத்தை துய்க்க துடித்த மேல் தட்டு மக்களால் இந்து என்ற சமய உருவாக்கம்  வரவேற்கப்பட்டது. செயற்கையாக அனைத்து மதங்களையும் இனைத்து இந்த வரையறுக்குள் பௌத்தர், சமணர், பழங்குடிகள் கொண்டுவரப்பட்டனர். 1955-ஆம் ஆண்டு இந்து சட்டம் தொகுக்கப்பட்டபோதும், இந்து என்பது இலக்கணப்படுத்தப்படவில்லை ‘எவன் ஒருவன் மதத்தால், இஸ்லாமியனோ, கிறித்துவனோ, பார்ச்சியோ, யூதனோ அவனுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று அது குறிப்பிடுகிறது.

இந்தியா என்ற கட்டமைப்பு
 ஆங்கிலேயரின் வாளின் நுனியால் இணைக்கப்பட்ட இந்தியா; செயற்கையாக இணைக்கப்பட்ட இந்து மதம்; 200 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எழுந்த விடுதலைப் போராட்டம்; ஆங்கிலேயரே உருவாக்கிய மையப்படுத்தப்பட்ட ஓர் அரசதிகாரம்; ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னும் ஒரு நாடாகத் தொடரும் நிலை; அதைக் கட்டிக்காக்க ஓர் இறுக்கமான அரசியலமைப்பு இதுதான் இந்திய தேசியத்தின் இரகசியம். 1980-களில் தான் அனைத்து இந்திய தேசியம் உருவாகப் தொடங்கியது. ஆங்கிலம் அறிந்த மத்திய தர வர்க்க அறிவாளிகள், பிராமணர்கள் இந்திய அளவில் கைகோர்த்தனர். இந்திய உருவாக்கத்தில் பலன் இருப்பதாக உணர்ந்தனர். இவர்களே இந்திய தேசியம் என்ற செயற்கை தேசியத்தை உருவாக்கப் பங்களித்தவர்கள்.

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்தவர்கள் விபரம் அறிந்தவர்களாக இருந்தபடியால், இந்தியாவை ஒரு ‘தேசம்’ (Nation) என்று இந்திய அசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அதைப் போலவே, பல்தேசிய இன மக்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தங்கள் மரபு வழித் தாயகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்குக் குறைந்த பட்சம் உண்மையான கூட்டாட்சி முறையாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி வழங்க வேண்டும் என்றுதான் அரசியல் அமைப்பு அவையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அன்றைய இந்து-முஸ்லிம் கலவரச் சூழலில் அனைத்து அதிகாரங்களும் மைய அரசில் குவிக்கப்பட்டன. அரசியல் அறிவியலாளர் கே.சி.வியர் கூறுவதுபோல, இன்று நிலவுவது 'அரை-குறைக் கூட்டாட்சி’ (Quasi Federal) இந்திய அரசியல் சட்டத்தில் அதை எழுதியவர்கள் 'கூட்டாட்சி’ (Federal) என்ற சொல்லைத் தவிர்த்தார்கள்.

 இந்தியா என்ற நாடு எப்போதாவது ஒரு தேசமாகக் கருதப்படுமா? என்ற சந்தேகம் இந்தியத் தலைவர்களுக்கே இருந்தது.  இந்திய விடுதலை வீரரும், பிரம்மசமாஜ் உறுப்பினருமான பிபின் சந்திரபால், 1881-ஆம் ஆண்டில் ‘ஓர் இந்தியா’ என்பது கற்பனையான நிறைவேறாக் கனவு (Chimera), சாத்தியமில்லாதது, ஆனால் உருவாக்கப்பட்டால் நலம் தரும், என்று கருத்தறிவித்தார். பலகோடி செலவில் முன்னெடுக்கப்பட்ட தொடர் பிரச்சாரமும், கற்பிதமும், எதிர்க்கருத்துகள் தண்டனைக்குரிய குற்றமாக நடைமுறைப்படுத்தப்பட்டமையும் இந்தியாவை ஒரு தேசமாகக் காட்டுகின்றன.

 இரஷ்யாவைச் சேர்ந்த ஆய்வாளர் ஏ.எம். டயகாவ் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
 "இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியா இங்கிலாந்தின் காலனியாக இருந்த உண்மை காரணமாக வெளி உலகத்திற்கு இந்தியா ஏதோ ஒன்றிப்போன தன்மை கொண்டது போலவும், அதில் வசிக்கும் மக்கள் கூட்டம் அத்தனையும் ஒரே வகையைச் சேர்ந்தது போலவும் ஒரு தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது... சக்திவாய்ந்த தேச விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவில் வசிக்கிற அத்தனை மக்களும் ஓரளவு அதிகமாக அல்லது குறைவாகப் பங்கு பெற்றது இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிப்போய் இருக்கிறார்கள் என்ற பிரமையை மேலும் படைத்திருக்கிறது... இந்தியாவில் இங்லீஷ்காரர்களைப்போல, பிரெஞ்சு, இத்தாலிக்காரர்களைப்போல தொகையில் குறைவில்லாத மக்கள் வாழ்கிறார்கள் என்பதும், அவர்கள் தங்கள் தனிப்பட்ட கலாச்சாரத்தாலும், மொழியாலும், இலக்கியத்தாலும், பழக்கவழக்கங்களாலும், தங்களது தனித் தேசிய குணாதிசயங்களாலும் பிரத்யேகத் தன்மை பெற்றிருப்பவர்கள் என்பதும், தங்களது வரலாற்று முறையான வளர்ச்சியில் ஒரு நீண்ட பாதையைக் கடந்து வந்திருப்பவர்கள் என்பதும் ஒரு சிலருக்குத்தான் தெரியும்."

இந்தியா நாடா? தேசமா?
 இந்தியா ஒரு நாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அது ஒரு தேசமல்ல. ‘நேஷன்’ (Nation) என்னும் ஆங்கிலச்சொல் ‘தேசம்’ ‘தேசிய இனம்’ இரண்டையும் குறிக்கும். இதற்கு அடிப்படையானவை நான்கு கூறுகள். அவை,
1. ஒரு பொதுமொழி,
2. ஒரு தொடர்ச்சியான வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு.
3. ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு.
4. பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் ‘தாம் ஓரினம்’ என்ற உளவியல்   -இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் போக்கில் உருவான மக்கள் சமுதாயமே ஒரு தேசம் ஆகும்.

 இந்த அடிப்படைக் கூறுகளை இந்தியா நிறைவு செய்யவில்லை. ஆகவே, அது ஒரு நாடு, தேசமல்ல (a State and not a Nation). மார்க்சியரான பிரகாஷ் காரத் ‘சோஷியல் சைன்டிஸ்ட்’ (எண் 37)-இல் இவ்வாறு கூறுகிறார். அதுதான் உண்மை.

 "இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்பது முழுக்க முழுக்க வரலாற்றறிவியலற்ற வார்த்தையாகும். மொழியால், எல்லையால், பண்பாட்டால் தெளிவாகப் பிரிந்துள்ள பெரிய தேசியஇனங்கள் குறைந்தபட்சம் 12 இருக்கின்றன. தெலுங்கு, அஸ்ஸாமி, வங்காளி, ஒரியா, தமிழ், மலையாளி, கன்னடிகா, மகாராஷ்டிரியன், குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி (ஹிந்துஸ்தானி) மற்றும் காஷ்மீரி, இவைகளுக்கப்பால் மணிப்புரி, திரிபுரி, நாகர்கள், கரோ மற்றும் சந்தால் போன்ற ஏராளமான சிறு தேசிய இனங்களும் இருக்கின்றன.

 உலகம் முழுவதும் ஒவ்வொரு தேசிய இனமும், அதன் மொழியாலேயே அறியப்படுகிறது. ஆங்கிலேய தேசிய இனம் ஆங்கில மொழியாலும், பிரெஞ்சு தேசிய இனம் பிரெஞ்சு மொழியாலும், ஜெர்மானிய தேசிய இனம் ஜெர்மன் மொழியால் அறியப்படுவதுபோலவே, தமிழ்த் தேசிய இனம் தமிழ்மொழியாலும், மராட்டிய தேசிய இனம் மராட்டிய மொழியாலும், வங்காள தேசிய இனம் வங்காள மொழியாலும் அறியப்படுகின்றன. இத்தகைய தேசிய இனங்கள் தனித்தனி சுதந்திர தேசங்களையும் அமைக்க உலக  சாசனங்களால் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன.

 இந்திய தேசியம் என்பது ஒரு தேசியம் என்பதற்கான அடிப்படைத் தகுதிகளை நிறைவு செய்யவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் தேசிய இனங்களின் தனி அடையாளங்களை அழித்து ஓர் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துகிறது. இது நிலப்பரப்பு தேசியம் (Territorial Nationalism) ஆகும்.  இந்தியத் தேசியரான ம.பொ.சிவஞானம் ‘இந்திய தேசியத்தின் வயது 100’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் வயது அவ்வளவே.
ஒரு மதம் ஒரு தேசத்தை உருவாக்காது

 65 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவில் இறையாண்மையுள்ள 50 தேசங்கள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளின் பண்பாடுகள் வேறுபாடு காணமுடியாத அளவிற்கு ஒற்றுமை உடையன. கிறித்துவ மதம் ஐரோப்பா முழுவதையும் ஒரே உலகமாக இனைத்து இருந்தது. இடைக்காலத்தில், போப்பாண்டவருக்கு அத்தனை அரசுகளும் அடங்கிக் கிடந்தன. ஆனாலும் இந்தக் கிறித்தவ பண்பாட்டு ஓர்மை அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்திவிடவில்லை. மொழியையே அடையாளமாக கொண்டு தனித்தனி தேசங்கள் எழுந்தன. இஸ்லாமிய நாடுகள் 23 உள்ளன. அவற்றுள் பெரும்பாலனவை மேற்கு ஆசியாவில் இருக்கின்றன. ஒரே இறைவன் பற்றிய நம்பிக்கை, புனித குரான் ஆகியவை இஸ்லாமியர்களை ஒரு தேசமாக இணைத்துவிடவில்லை. பண்பாடு மற்றும் சமயம் என்பது வேறு. அரசியல் என்பது வேறு. அரசியல் தேசியஇனஅடிப்படையிலேயே அமையும்.

 ஏசு கிறித்துவின் புகழ்பாடுவதாலேயே ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒரே தேசம் என்று கூறுவது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறானது, இராமன் உள்ளிட்ட கடவுளர்களை இந்தியாவில் பல இலக்கியங்கள் குறிப்பிடுவதால் இந்தியா ஒரு தேசம் என்று வாதிடுவது. காப்பிய நாயகர்களை இந்திய எல்லை தாண்டியும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இயல்பான மொழிவழித் தெசியத்தை மறுக்கலாமா?

 இயல்பான மொழிவழி தேசிய இனங்களின் இருப்பையும், அடையாளத்தையும் முற்றிலுமாக அழித்து, இந்திய தேசியம் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடக்கி விடவும், அதை மெல்ல மெல்ல இந்து தேசியமாக மாற்றியமைக்கவும், சமயச்சார்பற்ற இந்தியா என்ற கருத்தியலைக் கைவிட்டு, ஆரிய, வேத, சமஸ்கிருத, இந்திச் சார்புடைய ‘பாரததேசம்’ என்பதை நிலைநிறுத்திவிடவும், விடாது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி' - ஆகிய தமிழ்க்குடி போன்றே, பல தேசிய இனங்கள் விட்டுக் கொடுத்துத்தான், இந்தியா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் மரபுவழி தேசியங்களையும், தேசங்களையும் அழித்து ஒரு மொழி, ஓர் இனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தும் மதவாத தேசியத்தை முன்னிறுத்தினால், அது இந்தியாவின் இருப்புக்கே ஆபத்தாய் முடியும்.
 பேராசிரியர் த.செயராமன்.
 மேனாள் வரலாற்றுத்துறைத் தலைவர்,
     தமிழ்த் தேசிய ஆய்வாளர்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வெள்ளச் சேதம்: மழையினால் வந்ததல்ல; மனிதத் தவறுகளால் வந்திருப்பது - கேரளா நமக்குத் தரும் பாடங்கள் :- சுந்தரராசன், பூவுலகின் நண்பர்கள்



கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையை பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் 206.4 மி.மீ மழையும் காசர்கோட்டில் 67 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இந்த அளவிற்கு கடும்மழை பொழிவு இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கருத்தில் கொண்டு கேரளாவிலுள்ள 39அணைகளில் 35அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. கொச்சின் விமான நிலையம் இன்னும் ஒருவார காலத்திற்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உரியிழந்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டுகிறது, முகாம்களில் சில லட்சக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமை சரியாக எவ்வளவு மாதங்கள் என்பதை கணக்கிடமுடியாது என்றும் ஏற்பட்டுள்ள பொருட்ச்சேதம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதைம்  புரிந்துகொள்ள முடிகிறது.

கேரளா சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனையின் தீவிரம் முதல்முறையாக அந்த மாநிலம் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கலாம், ஆனால் இதற்கான எச்சரிக்கைகளை உலகம் வழங்கிக் கொண்டே வந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புவனேஸ்வர் நகரும், கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன. மும்பை நகரம் அடிக்கடி "திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாகிவிட்டது, 2017ஆம் ஆண்டு பெங்களூரு நகரமும், சென்னை 2015லும், ஸ்ரீநகர் 2014 ஆம் ஆண்டும் "திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வரக்கூடிய காலங்களில் "தீவிர காலநிலை நிகழ்வுகள்" (extreme climate events) இன்னும் அதிகமாகும் என்றும் 3 மணி நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் சர்வதேச காலநிலை விஞ்ஞானிகளும், பல்வேறு ஆய்வு அமைப்புகளும் தெரிவித்துவந்தன. மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கையும் இதனை உறுதிப்படுத்தியது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் காந்திநகரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT, Gandhinagar) முக்கியமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. புவியின் வெப்ப அளவு 1.5 முதல் 2 டிகிரி அளவிற்கு உயரும் போது இதைப்போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகமாகும் என்றும் அதுவும் குறிப்பாக "குறுகிய நேரத்தில் அதிகம் மழை பெய்யும்" (Short duration rainfall extremes) தீவிர நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும்  அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. காலநிலை மாதிரிகளை (Climate models) கொண்டு விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர், மூன்று மணி நேரத்தில் மிக அதிக மழை பெய்யக்கூடிய தீவிர நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் 25% அதிகரிக்கும் என்றும் இவற்றை தாங்கக்கூடிய வகையில் நம்முடைய நகர வடிவைமைப்புகள் இருக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறது ஆய்வு.

கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீற்றம் எதிர்பார்த்ததுதான் என்கிறார் புகழ்பெற்ற சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில். இவர்தான் மேற்குத்தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதற்கான அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர். காட்கில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்திருந்தால் இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

இப்போது கேரளாவிலுள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், இது முழுமையாக மழையினால் ஏற்பட்டது அல்ல என்றும் அதிகமானது மனித தவறுகளால்தான் என்கிறார் காட்கில். அறிவியல்பூர்வமற்ற முறையில் நிலமும் மண்வளமும் பயனப்டுத்தப்பட்டதும், நீர்நிலைகளையும் சதுப்புநிலங்களையும் ஆக்கிரமித்து அந் நிலங்களின் பயன்பாட்டை மாற்றியதுதான் முக்கிய காரணம் என்கிறார். 

தமிழகத்திற்கு என்ன பாடம்?

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு சென்னை சந்தித்த வெள்ளத்திற்கு பிறகும் நாம் பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை, இப்போது கேரளாவும் நமக்கு பாடங்கள் சொல்லித்தருகிறது. இனியும் தாமதிக்காமல் தமிழகத்திற்க்கென "காலநிலை குறித்த" கொள்கைகளை வகுத்து தீவிரமாக நடைமுறைப்படுத்தவேண்டும். 1076கி.மீ நீள கடற்கரை கொண்ட தமிழகம் காலநிலை மாற்றத்தால், அதிக தீவிரமான காலநிலை நிகழ்வுகளை சந்திக்கும்/சந்தித்துக்கொண்டுமிருக்கிறது. காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன்னால் நடக்கும் நிகழ்வு, அதன் தாக்கத்தை எப்படி நாம் குறைக்கமுடியும்(mitigation), மற்றும் காலநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்ள முடியும் (adaptability) என்பதை கணக்கில் கொண்டு நம்முடைய அனைத்து திட்டங்களும் தீட்டப்பட்ட வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட போவது நகரங்கள்தான், ஏனென்றால் குறைந்தநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நம் நகரங்கள் கட்டமைக்கப்படவில்லை, குறிப்பாக நகரத்திலுள்ள வடிகால்கள் தினம் பெய்யக்கூடிய மழையின் அளவைக்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. இனிமேல் குறைந்த நேரத்தில், குறிப்பாக மூன்று மணிநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நாம் தயாராக வேண்டும். மாதாந்திர அல்லது தினசரி சராசரிஅளவுகள் எல்லாம் பழங்கதை, இனிமேல் மூன்று மணி நேரத்தில் தீவிர மழைப்பொழிவு சராசரிகள்தான் நம்முடைய செயல்பாடுகளை தீர்மானிக்கும். "நகர்ப்புற வெப்ப தீவு விளைவுகளும்" (urban heat island effect) நகரங்களில் பெய்யும் மழையின் தன்மையை மாற்றக்கூடியது, தமிழகம் அதிகமாக நகர்மயமான மாநிலம் என்பதை இங்கே நாம் நினைவில்கொள்ளவேண்டும். காலநிலை நிகழ்வுகள் கொண்டுவரப்போகும் பொருளாதார இழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும், சில செ.மீ. கடல்மட்டம் உயர்வு நாட்டின் பொருளாதாரத்தை புரட்டிபோட்டுவிடும் என்கிறார் ஸ்டெபானி ஹல்லேகட்டே, இவர் உலகவங்கியின் "பேரழிவு குறைப்பு மற்றும் மீட்பு" அமைப்பின் பொருளாதார நிபுணர். சென்னை தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல, தமிழக பொருளாதாரத்தின் அச்சாணி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் முகம் (face of employment).  சென்னை கடற்கரை நகரம் என்பதை நாம் குறித்துக்கொண்டு அதற்கென தனிப்பட்ட முறையில் "காலநிலை மாற்றத்தை "எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப உதவிகளின் மூலம் இன்னும் துல்லியமாக கணிக்கக்கூடிய காலநிலை மாதிரிகளை உருவாக்கவேண்டும். பொதுவாக விஞ்ஞானிகள் "பொது சுழற்சி மாதிரிகளை" வைத்துதான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தோராயமான தரவுகளை மட்டுமே தரக்கூடியவை, வெப்பசலனங்களால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுப்பது கிடையாது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் புவியின் வெப்பம் உயர உயர இந்த வெப்பசலனங்கள் மேல் எழுந்து, குளிர்ந்து, மழைப்பொழிவு அதிக அளவில் நடைபெறும். இவற்றை கணக்கிலெடுக்கும் வகையில் நம்முடைய ஆய்வு மாதிரிகள் உருவாக்கப்படவேண்டும், மற்றொரு ஆய்வு "இரு தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கு" இடையே உள்ள இடைவெளியை பற்றியதாக இருக்கவேண்டும்.

சமீபத்தில் அமெரிக்காவின் "நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்" "காலநிலை மாற்றம்" குறித்து  வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மேலும் கவலைகொள்ளக்கூடிய விஷயங்களை கொண்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. தற்சமயம் ஐரோப்பிய நாடுகள் மிகக்கடுமையான வெப்பநிலையை சந்தித்துக்கொண்டிருப்பது இந்த ஆய்வுகளின் கூற்றுக்களை உண்மையாக்கிக்கொண்டிருக்கிறது.

"காலநிலை மாற்றம்" மிக முக்கியமான பிரச்சனையாகும், மானுடத்தின் இருத்தியல் (existence) குறித்ததாகும். அதன் தாக்கத்தை குறைப்பதும் எதிர்கொள்வதற்கான வழிகளை மேற்கொள்ளவது மட்டுமே நம்முடைய இருப்பை உறுதிப்படுத்தும். மேலும் இது நாளைய பிரச்சனை அல்ல இன்றைய பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வியாழன், 12 ஜூலை, 2018

யானைத் தடங்கள் : இரவி பேலட்

யானைத் தடங்கள் நிரம்பிய ஒரு மலை வனம் சிதைவுக்குள்ளாகிக் கொண்டிருப்பதைத் தமது பயணப் பாடுகளின் வழியே விவரிக்கிறார் ஓவியர் இரவி பேலட்.

சென்ற மே மாதம் மூனாா் சென்றிருந்தபோது காட்டு நடைக்கு என்னுடன் உள்ளுா் ஆள் எவரும் வரத் தயாாில்லை.  காட்டில் திாிவது இப்போது அச்சமூட்டும் விஷயமாகிவிட்டது.  எந்நேரத்திலும், எங்கும், எப்போதுவேண்டுமானாலும் யானைகள் தன்னிச்சையாய் கட்டற்று உலாவுகின்றன.

தனது வரையறுத்த பாதைகளும், பாரம்பாியமான வாழ்விடங்களும் பறிபோக யானைகள் மிரண்டு குழம்பிப் போய்விட்டன.  அங்குள்ளோாின் அடாவடி ஆக்கிரமிப்பில் யானைகள் பிரசவிக்கும் பிரத்தியேக இடங்கூடத் தப்பவில்லை.  கோபமுற்ற யானைகள் சில இடங்களைச் சிதைத்துப் போட்டிருக்கின்றன.  அப்படிச் சிதைத்துப் போட்ட இடங்கள் யாவும் யானைகளுக்கானது மட்டுமே. (இதில் யானைகள் பிரசவ இடமும் அடக்கம்)

வனச்சோலை அழிப்பு, தண்ணீா்ப் பிரச்சனை, வாழ்விட ஆக்கிரமிப்பு என இப்பகுதி யானைகள் மிகுந்த அல்லறுற்று அலைக்கழிகின்றன.  ஆனால், அங்குள்ளோா் அறமற்று அநியாயமாய் யானைகள் மீது ஆக்ரோஷமான கோபத்திலிருக்கிறாா்கள்.

சில யானைகள் மனிதா்களைக் கண்டதும் குறிப்பாய் ஒற்றை யானை, பசித்த புலி போல் எதிா்கொள்கின்றன.  மனிதா்களும் யானையினைப் பாிவற்று ஒரு மகா எதிாி போலப் பாவிக்கிறாா்கள்.

இதில் போதிய பாதுகாப்பற்று காட்டில் உலவுவது பயங்கரமான காாியம்போலானது.  வசீகரமான ரம்மியம்மிக்க இந்தக் காட்டுப் பகுதி இப்போது பயங்கரப் பகுதியாக மாறிப் போனதில் மிகுந்த வருத்தம்.
புத்துணா்வுமிக்க ஏகாந்தமான ஒரு காட்டுவெளி நடைப் பயணத்தை ஒரு சாகசப் பயணமாக மேற்கொள்ள எனக்குத் தைாியமில்லை.  இம்முறை காட்டுப் பயணத்தைக் கைவிட்டது மிகுந்த துயரமாகிவிட்டது.

இம் மலைப் பகுதியில் சுமாா் நான்கு வருடம் முன்பு நானாக காட்டுக்குள் வழிதவறி விட்டேன்.  மறுபடியும் வந்த வழியே பின்னோக்கி வந்து, வழிப்போக்கா் ஒருவாின் உதவியோடு சாியான பாதை கண்டு, இருப்பிடம் வந்து சோ்ந்தது ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது.  இப்போது அதை நினைத்தால் நடுக்கமாக இருக்கிறது.

செவ்வாய், 26 ஜூன், 2018

எட்டு வழிச் சாலை : அழியப் போகும் பல்லுயிர்ச் சூழல்.

5 மாவட்டங்களில் 8 மலைகளை அழிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன்மலை, தர்மபுரி மாவட்டத்தில் சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுத்திமலை, வேதிமலைகள் உடைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்காக இயற்கை வளங்களை அழித்ததால், நாம் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறோம். எனவே, இயற்கை கொடுத்த கொடையான மலை வளத்தை அழிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என இயற்கை ஆர்வலர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

வட தமிழகத்தின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க காத்திருக்கும் கார்ப்பரேட்டுகள்
மலைகளை அழிப்பதால், அங்கு வாழும் உயிரினங்கள் மடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மலைகளில் இருந்து வரும் நீர் வழித்தடங்கள் முற்றிலும் காணாமல் போகும் நிலையும் உருவாகியுள்ளது.

இச்சாலையை கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைக்க முடிவு செய்துள்ளனர். இந்த மலைத்தொடரில் ஜருகுமலையின் பகுதியான சேலம் நிலவாரப்பட்டியில் இருந்து அயோத்தியாப்பட்டணத்திற்கு இடைப்பட்ட இடங்களில் மூன்று இடங்களில் மலையை குடைந்து சுரங்கபாதை அமைக்கப்படுகிறது.

இதுதவிர அருநூற்றுமலை, சேர்வராயன்மலை, கல்வராயன் மலையையொட்டி சாலை அமைக்கப்படுகிறது. இதில், 16 வனப்பகுதிகள் உள்ளன. சுமார் ஆயிரம் ஏக்கர் வன நிலங்கள் பாதிக்கப்படும். இவ்வனப்பகுதிகளில் கரடி, மான், காட்டெருமை, நரி, காட்டுபன்றி உள்ள விலங்குகளும், பறவையினங்களும் உள்ளன. குறிப்பாக சேர்வராயன் மலைத்தொடரில், அரிய வகை பறவையினங்கள் வாழ்கின்றன. இந்த உயிரினங்கள் பெருமளவு அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் ராவண்டவாடி, அனந்தவாடி ஆகிய இடங்களும் பெரிய வனப்பகுதியாகும். அதேபோல், செங்கல்பட்டில் நம்பேடு, சிறுவாச்சூர் என்ற இடங்களும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. செய்யாறு பகுதியில் சிறு மலைகள் இருக்கின்றன. இங்கு வாழும் உயிரினங்களும் மடியும் நிலை உள்ளது. இம்மலைகளில் உற்பத்தியாகும் நீர்வழித்தடங்கள் கடுமையாக பாதிக்கும். வன நிலங்களை கையகப்படுத்தும்போது, வனத்தில் இருக்கும் விலங்குகள் ரோட்டுக்கு வந்து வாகனங்களில் அடிப்பட்டு இறக்கும் சம்பவம் நிகழும்.

மேலும், வாகனங்களின் இரைச்சல் சத்தம் அதிகரிக்கும்போது, பறவைகள் இடம் பெயர்ந்துவிடும். ஜருகுமலை, அருநூற்று மலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை, சித்தேரிமலை, கவுத்திமலை, வேதிமலையில் ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும்.

கடந்த 1990-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலையில் வனப்பகுதிகள் அழிப்பால் 50 சதவீத மழைப்பொழிவு குறைந்துள்ளது. தற்போது 8 வழிச்சாலை அமைத்தால், இயற்கை வளம் முழுமையாக பாதிக்கும். இதனால் மழைப்பொழிவு குறைந்து வறண்ட பூமியாக இந்த 5 மாவட்டங்களும் மாறும். வெயிலின் தாக்கம் அதிகரித்து தட்பவெட்ப நிலையும் நிரந்தரமாக மாற வாய்ப்புள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் சேர்வராயன்மலை அடிவாரத்தில் வாணியாறு அணை உள்ளது. இந்த அணையையொட்டி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதனால் சேர்வராயன்மலையில் இருந்து வழிந்தோடும் நீர், வாணியாறு அணைக்கு வந்து சேராது. இப்படி பல்வேறு வகையில் விவசாயிகள், மலைகளில் வாழும் பழங்குடியின மக்கள், விலங்கினங்கள் பாதிக்கும் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் எருமபாளையம், நிலவாரப்பட்டியில் விவசாயிகள், பொதுமக்கள் கடந்த சில நாட்களாக சாலை மறியல், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Raju imanuel அவர்களது பதிவிலிருந்து.

திங்கள், 25 ஜூன், 2018

எட்டு வழிச்சாலை : சுற்றுச்சூழல் மீது தொடுக்கப்படும் போர் ! :- சந்திரமோகன்.


 சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைக்கு அழிக்கப்பட உள்ள அடர்ந்த வன நிலங்களின் குறைந்த பட்ச அளவு 120 ஹெக்டேர் [300 ஏக்கர்], நீளம் 10 கி.மீ முதல் 13 கி.மீ வரை இருக்கும்" என NHAI திட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

 செங்கல்பட்டு அருகேயுள்ள சிறுவாஞ்சூர், ஆரணி அருகே நம்பேடு, போளூர் அருகே அலியாள மங்கலம், செங்கம் அருகே ராவண்டவாடி (கவுத்தி மலை பகுதி), மஞ்சவாடி (சேர்வராயன் மலை), சேலம் அருகேயுள்ள  ஜருகு மலை ஆகிய பகுதிகளில் அடர்ந்த வனங்கள், காட்டு மரங்கள், வன விலங்குகள், அரிய உயிரினங்கள் அழிக்கப்பட உள்ளன.  தமிழக வனத்துறை இதுவரை
தெளிவுபடுத்தவில்லை.

சேர்வராயன் மலைப்பகுதியில் ஏற்படவுள்ள அழிவு பற்றி மட்டும் பார்ப்போம்.
சேர்வராயன் மலையின் கிழக்கு புறத்தில் மஞ்சவாடி கணவாய் பகுதியில், சுமார் 1.78 கி.மீ நீளத்தில் மலைப் பகுதியில், சுமார் 100 ஏக்கர் வன நிலத்தை அழித்து இந்த பசுமை வழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த வனப் பகுதியில் மலைச் சரிவில் 18 ஏக்கர் பரப்பில் "வால்" போன்ற நீளமான செங்குட்டை ஏரி உள்ளது. இதைப் பிளந்து கொண்டு தான் பசுமைச் சாலை செல்கிறது.

 இதனால் சுற்றுச் சூழல் இயற்கைக்கு என்ன பாதிப்பு ??
கடல் மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயரமுள்ள இந்த வனப் பகுதி, காட்டு மரங்கள், புற்கள் (Grass), செடிகொடிகள், பிரண்டைகள் ஆகியவற்றை கொண்டுள்ள, காடுவாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வனமாகும். ஈட்டி, கருங்காலி, வேப்ப மரங்கள், நாக மரங்கள்  துவங்கி 5 ஆண்டுகள் வளர்ச்சியுள்ள தேக்கு, சந்தன மரங்கள் நிறைந்துள்ள பகுதியாகும். சாலை நெடுகிலும்  பல்லாயிரக்கணக்கான மூங்கில் மரங்கள் நிறைந்துள்ள பகுதியாகும். வனத்திலுள்ள  மரங்கள் தான் நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கின்றன ; சுற்றுச் சூழலில் உள்ள கார்பன் டை ஆக்சைடு & கார்பன் மோனோ ஆக்சைடு போன்றவற்றை உறிஞ்சிக் கொண்டு, ஆக்சிஜனை/ சுத்தமான காற்றை நமக்கு வழங்குகின்றன.

மூங்கில் தோப்புகள் அழிவதால் ....

 இத்தகைய உயரம் குறைந்த இடத்தில் தான் மூங்கில்கள் பெருமளவில்  விளைகிறது. மூங்கிலின் அடிப்பகுதி பெருமளவில் கார்பன்டையாக்சைடு உறிஞ்சும் ஆற்றல் மிக்கது; ஆழமான வேர்கள் இல்லாததால் குறைவான நீரையே எடுத்துக் கொள்ளும் ; அதே சமயம் சுற்றிலும் ஈரப் பதத்தை பாதுகாக்கும். மூங்கில் அரிசி மற்றும் குருத்து மூங்கில் உணவாக பயன்படுகிறது. இன்றளவும் கூட அப்பகுதியில் உள்ள மலையாளிகள் /பழங்குடியினர் மூங்கில் அரிசியை சேகரித்து பயன்படுத்தி வருகின்றனர். [மூங்கில் குருத்துக்கள் யானைகளுக்கும் கூட உணவாகும். 200 ஆண்டுகளுக்கு முன்னர், பன்னர்கட்டா - ஒசூர்-தொப்பூர்_மஞ்சவாடி_கல்ராயன் மலை என விரிந்திருந்த யானை வழித் தடம், சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையால் தடுக்கப்பட்டு விட்டது, வேறு ஒரு செய்தியாகும்]…

செங்குட்டை ஏரியின் அழிவால்.....

இன்றும் கூட/கோடையிலும்  தண்ணீர் உள்ளது. சேர்வராயன் மலையின் மான்கள், கேழா மான்கள், காட்டு எருமைகள், காட்டு பன்றிகள், செந் நாய்கள், குள்ள நரிகள்,காட்டு முயல்கள், கீரிகள் என அனைத்து வன விலங்குகள் வந்து தாகம் தணிக்கும் ஏரி இந்த செங்குட்டை ஏரியாகும்.

அருகி வரக்கூடிய endangered  உயிரினங்களான எறும்புத் திண்ணிகள், மூங்கிலத்தான் @ மூங்கில் அணில்கள், உடும்புகள், தேவாங்குகள் போன்றவை உயிர் வாழும் பகுதியுமாகும். கூட்டம் கூட்டமாக மயில்களை இங்கு பார்க்க முடியும்; பலவகை குருவிகள், காடை கவுதாரிகள், காட்டுக் கோழிகள் ஆகியவன வாழும் பூமியாகும்.
 இயற்கையின்_ஒரு_சங்கிலி_அறுந்தால்_மற்றொரு_சங்கிலியும்_அழியும்! ஒரு நெடுஞ்சாலைக்காக வனங்கள் அழிக்கப்பட்டால்......

1)மஞ்சவாடி வனம் புற்கள் நிறைந்த பகுதியாகும். இந்த புற்தரைகள் மலைப் பகுதியின் ஈரத்தை தக்க வைத்துக் கொள்கின்றன; மற்றொரு வகையில் புல் தாவரங்களை, மருத்துவ குணம் மிக்க  பெரண்டைகளை உண்டு வாழும் விலங்குகள், இவை அழிக்கப்பட்ட உடனே இரை தேடி வனத்திற்கு வெளியே வந்து மனிதர்களிடம் இரையாகும். புற்கள் Grass இல்லாமல் பல விலங்குகள் உயிர் வாழ முடியாது.

 2)கரையான், எறும்பு புற்றுகள் அழிக்கப்பட்டால், அதை உணவாக கொள்ளும் பாம்புகள், பல்லிகள், ஓணான்கள் இரை தேடி வெளியே வந்து மனிதர்களிடம் சிக்கி அழியும் அல்லது உணவில்லாமல் மெல்லச் சாகும்.

 3)பறவைகளின் உணவகம், வாழ்விடம் மரங்கள் தான். அவைகள் அழிக்கப்பட்டால் பறவைகள் வெளியேறும்; உணவில்லாமல் தவிக்கும், அழியும்.

4)மற்றொரு புறம் மரங்கள் அழிக்கப்பட்டால் மனித குலத்துக்கு கேடு. சுற்றுச் சூழலில் ஆக்ஸிஜன் அளவு குறையும்; வெப்பம் அதிகரிக்கும்; நிலத்தடி நீர் மட்டம் சரியும்.
 #ஒரு_வனத்தின்_அழிப்புக்கு_ஈடு_செய்ய_
50ஆண்டுகள்_வேண்டும்!
 சுற்றுச்சூழல் சமநிலையை Eco system த்தை அவ்வளவு சீக்கிரமாக மீட்க முடியாது.  #ஒரு_சங்கிலி_அழிந்தால்_உயிர்_சங்கிலி_அறுந்து_போகும்!
மஞ்சவாடி கணவாயில் அமைக்கும் நெடுஞ்சாலைக்கு இத்தகைய தாக்கம்/அழிக்கும் ஆற்றல் இருக்கும்போது, ஜருகு மலையில், கவுத்தி மலை வனத்தில், ராவண்டவாடி, அலியாள மங்கலம், நம்பேடு, சிறுவாஞ்சூர் வனங்களில் ஆங்காங்கே உள்ள குறிப்பான வன_உயிரினங்கள் சமன்பாடுகளில் எத்தகைய அழிவு ஏற்படும்?

"இயற்கையை ஒருமுறை கெடுத்தால், அது பதிலுக்கு பலமுறை நம்மை கெடுத்துவிடும் " என்றார், #எங்கெல்ஸ்.
 #வனங்களை_காடுகளை_அழிப்பது_மற்றொரு_பேரழிவு! #பசுமை_வழி_சாலை_அழிவுப்பாதை!
#உடனே_நிறுத்து! #Stop_Greenway_Corridor! #Save_Environment #Save_Biodiversity #Save_Nature

சனி, 23 ஜூன், 2018

எட்டு வழிச்சாலை நிலப்பறிப்பு - நிலமற்றவர்களின் பிரச்சினையும் கூட : - சிறீதர் சுப்பிரமணியம் .

எட்டு வழிச் சாலை பற்றிய விவாதங்களை பார்க்கும் போது நான் இங்கிலாந்தில் இருந்த போது நடந்த இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

நாங்கள் தெற்கு விம்பிள்டனில் வசித்து வந்தோம். அது அமைதியான, ஆரவாரமில்லாத ஒரு பகுதி. அங்கே ரயில் நிலையமே வெறிச்சோடித்தான் இருக்கும். அதனருகில் ஒரு எட்டு அடுக்கு மால் ஒன்று கட்டும் திட்டத்தை விம்பிள்டன் கவுன்சில் கொண்டு வந்தது. விம்பிள்டன் மொத்தமுமே எடுத்தால் கூட மூன்று மாடிக்கு மேல் எந்தக் கட்டிடமும் பார்க்க முடியாது. அந்த மால் தெற்கு விம்பிள்டனின் அமைதியை, அழகை கெடுத்து விடும் என்றும் அந்தப் பகுதியில் டிராஃபிக்கை அதிகரித்து விடும் என்றும் சர்ச்சை எழுந்தது. அந்தப் பகுதி மக்கள் சேர்ந்து ஒரு வாக்கெடுப்பை நடத்தினார்கள். அதில் பெரும்பாலோர் மால் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் பாத் ஸ்பா எனும் ஊரில் வேலை செய்து வந்தேன். அங்கே என் அலுவலகம் போகும் தெருவில் இருந்த மரம் ஒன்று வேர் பரப்பியதில் அருகே இருந்த ஒரு மியூசியத்தில் அஸ்திவாரம் பாதிப்புக்குள்ளாக  ஆரம்பித்தது. ஆகவே அந்த மரத்தை வெட்டி விட லோக்கல் கவுன்சில் முடிவெடுத்தது. அதற்கு ஒரு மாதம் கழித்து ஒரு தேதி குறித்து அந்த செய்தியை ஒரு போர்டில் அச்சடித்து அந்த மரத்தில் மாட்டி விட்டார்கள். குறித்த தேதியில் அந்த மரம் வெட்டப்படும் என்றும், அதற்கு ஆட்சேபம் தெரிவிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு தொலைபேசி எண்ணும் குறிப்பிடப் பட்டிருந்தது. ஒருவர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு அந்த மரத்தை தன் இல்லத்து தோட்டத்தில் தன் செலவிலேயே நட்டுக் கொள்வதாக கூறி விடவே, வெட்டும் திட்டம் கைவிடப்பட்டது. மரத்தை பெயர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் ஒதுக்கப் பட்டது. அன்று பந்தல் போட்டு கேக், ஷாம்பேன் எல்லாம் போகிற வருகிறவர்களுக்கு கொடுத்தார்கள். (நானும் போயிருந்தேன்.) மரத்தை சுற்றி ஐந்து அடிக்கு வட்டமாக வெட்டி அதனை ஆக்டொபஸ் மாதிரி ஒரு இயந்திரத்தால் அப்படியே பெயர்த்து டிரக் ஒன்றில் படுக்க வைத்து விட்டார்கள். பொதுமக்களின் பலத்த கரவொலியோடு அந்த மரம் தன் புதிய வீட்டை நோக்கி பயணித்தது.

எட்டு வழிச்சாலை தேவையா, இல்லையா அல்லது அதற்கு ஆகும் பணவிலை, சமூக விலை, சுற்றுச்சூழல் விலை இவையெல்லாம் அதனால் வரும் பலனுக்கு ஈடாகுமா என்பதெல்லாம் தனிக் கேள்விகள். நான் படித்துப் பார்த்த வரை அந்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. அரசின் Project Feasibility Report எனப்படும் தகவல் அறிக்கையே கூட முழுமையாக, ஆழ்ந்த ஆராய்ச்சியில் தயாரிக்கப் பட்டதாக தெரியவில்லை. பழைய வேறு ரிப்போர்ட்களில் இருந்து நிறைய பகுதிகள் காபி பேஸ்ட் செய்தது மாதிரிதான் இருக்கிறது. காடுகள் அழிக்கப்படும், மலைகள் உடைக்கப்படும், விளைநிலங்கள் அழிபடும், ஏரிகள் மூடப்படும் ஒரு மாபெரும் ப்ராஜக்ட் பற்றிய முழுமையான தகவலை மக்களுக்கு அளிக்க வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் கடமை. அந்த ரிப்போர்ட்டில் உள்ள குழப்பங்கள் பற்றிய தெளிவுகளை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. நிலக்கையகப் படுத்தும் சட்டத்திலேயே இந்த மாதிரி திட்டங்களுக்கு Impact Assessment என்று ஒன்று நடத்த வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. அதாவது இந்தத்திட்டத்தால் நிகழும் சமூகத் தாக்கம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இது என்னவென்றால், நிலம் உள்ளவர்களுக்கு இழப்பீடு கிடைத்து விடும். ஆனால் நிலம் அற்ற, ஆனால் அந்தப் பகுதிகளை நம்பி இருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருப்பார்கள். அவர்கள்தான்  மெஜாரிட்டி. அவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசிடம் உள்ள தீர்வு என்ன? அங்கே இருக்கும் வரலாற்று சின்னங்கள், வழிபாட்டு தலங்கள், காடுகளை அண்டி வாழும் பழங்குடியினர் நிலை என்ன? அந்த Impact Assessment கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் இவை.

உதாரணத்துக்கு, அந்த எட்டு வழிச்சாலை அண்ணாமலையார் கோயில் வழி போக வேண்டும் என்றாலோ ரமணாசிரமம் வழி போக வேண்டும் என்றாலோ அந்தக் கோயில் தகர்க்கப் பட வேண்டி இருக்கும். அப்படி நடப்பதற்கு நம்மில் யாராவது ஒப்புக் கொள்வோமா? வளர்ச்சித் திட்டத்துக்குத்தானே கோயிலை தாரை வார்க்கிறோம் என்று நாம் யோசிப்போமா? அது நடக்கவே நடக்காது இல்லையா? அந்தக் கோயிலை சுற்றிக் கொண்டு போகும் படிதான் சாலையை கட்டமைப்போம். இதே மாதிரி அண்ணாமலை கோயிலை விட பழமையான அல்லது உணர்வுபூர்வமான ஒரு வழிபாட்டுத்தலம் திட்டப்பகுதியில் வாழும் ஒரு பழங்குடியினருக்கு இருக்கக் கூடும். அந்தத் தலம் மட்டுமே அவர்கள் மதத்தின் திருத்தலமாக இருக்கலாம். அப்போது அது தகர்க்கப்படும் பட்சத்தில் அவர்களின் வாழ்வியலே உடைபடலாம். (ஒடிசாவில் இப்படி நடந்திருக்கிறது).

அதே போல அந்த கிராமங்கள் அழிபடும் போது அங்கே உள்ள நிலமற்றோர் எங்கே குடிபெயருவார்கள்? அவர்கள் பல்லாயிரக்கணக்கில் அருகில் உள்ள நகரங்களுக்கு குடிபெயர்வார்கள். அப்போது அங்கே புதிய குப்பங்கள், பிளாட்பாரக் குடியிருப்புகள் உருவாகும். அவற்றின் பாதிப்பு அந்த நகரத்தில் எப்படி இருக்கும். அதனால் அந்த நகரத்தின் நிர்வாகத்துக்கு ஆகும் செலவுகள், பாதிப்புகள் என்னென்ன? (இந்த செலவும் ப்ராஜக்ட் திட்ட செலவில் சேர்க்கப் படவேண்டும்.)

இதையெல்லாம் இந்த Impact Assessment ஆய்வு வெளிக்கொணர வேண்டும். சுதந்திர இந்தியா துவங்கியதில் இருந்து அணைக்கட்டுகள், அரசுத் தொழிற்சாலைகள் போன்றவற்றுக்காக இடம்பெயர்க்கப் பட்டோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு கோடியைத் தாண்டும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இவர்கள் எங்கே உள்ளார்கள். என்ன செயகிறார்கள், அவர்கள் மறுகுடியிருப்புக்கு நம் அரசுகள் செய்தது என்ன என்பதற்கான எந்தத் தகவலும் தெளிவாக இல்லை. ஒரு தேசத்தில் இருந்து போர், கலவரம் காரணமாக வேறு தேசத்துக்கு புகலிடம் தேடுவோருக்கு அகதிகள் (refugees) என்று பெயர். நம் ஊரில் உள்தேசத்திலேயே இரண்டு கோடி அகதிகள் அட்ரஸ் இல்லாமல் உள்ளனர். வெளிதேசத்து அகதிகளுக்காக ஐநா சபை முதற்கொண்டு அம்னெஸ்டி இன்டர்நெஷனல் வரை வரிந்து கட்டிக் கொண்டு வரும் அமைப்புகள் உள்ளன. உள்நாட்டு அகதிகளுக்காக இந்த மாதிரி யாருமே இல்லை.

இந்தப் பிரச்சனைகளால்தான் முந்தைய மத்திய அரசு இந்த Impact Assessmentஐ முக்கிய தேவையாக வைத்து சட்டத்திருத்தம் செய்தது. புதிய பாஜக அரசு பதவி ஏற்றதும் முதல் வேலையாக இந்த பாதிப்பு ஆய்வு தேவையை நிலக்கையகப் படுத்தும் சட்டத்தில் இருந்து நீக்க முயன்றது. ஆனால் அதற்கு வந்த எதிர்ப்பாலும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததாலும் அந்த சட்டத்திருத்தம் கைவிடப்பட்டது. இது பற்றி நான் ஒரு பதிவு எழுதினேன். ++

இது தவிர இந்தத்திட்டத்துக்கு வரும் எதிர்ப்புகளை இந்த அரசு அணுகும் விதமும் கவலையளிக்கிறது. சீனாவில் கட்டமைப்பு திட்டங்களுக்கு வரும் எதிர்ப்புகளை அந்த அரசு எப்படி எதிர்கொள்கிறது என்பது பற்றி முன்னர் ஒரு முறை எழுதி இருந்தேன்.+++ அது சீன அரசு; அங்கே ஜனநாயகம் எல்லாம் கிடையாது. அனால் இது ஜனநாயக நாடு. இங்கே இந்த அரசு நடந்து கொள்ளும் விதம் திட்டம் பற்றிய விவாதம் என்று ஒன்று எழுவதையே இவர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. இத்திட்டம் நல்லதாக, பயனுள்ளதாகவே கூட இருக்கலாம். ஆனால் இது மக்கள் மேல் திணிக்கப்படக் கூடாது. ஒரு நல்ல ஜனநாயக அரசில் அரசே இதற்கு வரும் எதிர்வாதங்களுக்கு தளம் அமைத்து அந்த விவாதம் ஆரோக்கியமாக நடைபெற உதவ வேண்டும். இந்த திட்டம் மக்களுக்காகவே என்றால், இந்த திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகாது என்றால், இதனால் இடம் பெயர்க்கப் படும் மக்களுக்கு போதிய மறு வாழ்வாதாரம் அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளது என்றால் அதனை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த பிரச்சாரம் மிரட்டல், கைதுகள் எல்லாம் இல்லாத ஒரு அமைதியான சூழலில் இடம் பெற வேண்டும். போராட்டம் செய்பவர்கள் எல்லாருமே சமூக விரோதிகள் என்று பிம்பங்கள் கட்டமைக்கப்படும் சூழலில் இந்த விவாதம் நடைபெறுவது ஆபத்தானது. அது இந்த அரசின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

கடைசியாக, ‘இதுவரை போடப்பட்ட சாலைகள் எல்லாமே காடுகளை அழித்துப் போட்டதுதானே? சென்னையே காடுகளின் சமாதியில்தான் அமைக்கப் பட்டிருக்கிறது. அதெல்லாம் ஓகே, ஆனால் பசுமை வழிச் சாலை மட்டும் கூடாதா?’

என்கிற மாதிரி வாதங்கள் நிறைய வருகின்றன.

நாம் பரிணாம வளர்ச்சி அடைந்ததில் இருந்து மானுட நாகரிகமே காடுகளின் சமாதிகளில்தான் கட்டமைக்கப் பட்டிருந்தது. அதற்குக் காரணம் நமக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றியோ, காடுகளின் முக்கியத்துவம் பற்றியோ, உணவு- மற்றும் உயிரின-சங்கிலிகள் பற்றியோ எந்த விழிப்புணர்வும் அப்போது இருக்கவில்லை. இன்று நாம் புரிந்து வைத்திருக்கும் Environmentalism பற்றிய சிந்தனாவாதங்களே  எழுபதுகளில்தான் உருப்பெற ஆரம்பித்தன. அது புதிய நூற்றாண்டில் தீவிரமாக அரசுகளால் நடைமுறையில் பின்பற்ற ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. Climate Change எனப்படும் பூமி வெப்பமயமாவதின் ஆபத்து எல்லாருக்கும் இப்போது தெரிந்து விட்டது.

டிரம்ப் மாதிரி ஓரிரு அறிவிலி தலைவர்கள் தவிர மற்ற உலக அரசியல்வாதிகள் அனைவருமே இப்போது இதனைப் புரிந்து கொண்டு விட்டார்கள். இதனால்தான் உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தேசத்துக்கு தேசம் தனித்தனியாக இலக்கு வைத்து அமைந்த பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்து இட்டிருக்கிறது. அமெரிக்காவே இதில் இருந்து விலகிய பின்னரும் கூட ‘இந்தியா தன் இலக்கை நோக்கிப் பயணிக்கும்,’ என்று பிரதமர் மோடி உறுதி அளித்து அப்போதே உடனடியாக அறிக்கை வெளியிட்டார்.

எனவே அப்போது செய்தோமே, இப்போது செய்யக் கூடாதா என்பதே அர்த்தமற்ற கேள்வி. அப்போது மாறி மாறி போர்கள் தொடுத்துக் கொண்டிருந்தோம், பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தோம், சில சாதியினரை ஊரை விட்டு விலக்கி வைத்திருந்தோம், இவையெல்லாம் அசிங்கம் என்று புரிந்து கொண்டு மாற முயற்சி செய்வது மாதிரி இதையும் புரிந்து கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் பாதிப்பு இல்லாத வகையில் வளர்ச்சிகள் கொண்டு வரவேண்டும் என்பது புதிய உலகத்தின் புதிய விதிமுறைகள். அதிலும் இந்த Climate Change பெரிதும் பாதிப்பது இந்தியா மாதிரி வளரும் நாடுகளைத்தான். 2015ல் நடந்த சென்னை வெள்ளம் கூட சுற்றுச்சூழல் பாதிப்பின் விளைவுதான்.

சரி, அப்படி என்றால் எப்படித்தான் வளர்ச்சி, முன்னேற்றம் எல்லாம் காண்பது என்றால் இன்று சுற்றுச்சூழலை பாதிக்காமல், அல்லது மிகச்சிறிய அளவிலான பாதிப்புகளை மட்டுமே வைத்து வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. அவற்றை Sustainable Development என்று அழைக்கிறார்கள். அவை ஓரளவுக்கு அதிக செலவைக் கொடுத்தாலும் நீண்ட பலனை அளிக்கிறது. இந்தத் தொழில் நுட்பங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன. இதில் தொடர்ந்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. நாம் கொஞ்சம் முயன்றாலே இவற்றைப் பின்பற்றி கட்டமைப்புகளை செயலாக்க முடியும்.

ஆனால், இந்த மாதிரி எல்லாம் செய்வதற்கு சமூக அக்கறை, பன்னாட்டு வளர்ச்சி திட்டங்கள் பற்றிய அறிவு, ஜனநாயக முதிர்ச்சி இவையெல்லாம் தேவைப்படும். ‘இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்!’ என்கிற சிந்தனாவாதத்தில் தலைவர்கள் உழலும் நிலையில் இவையெல்லாம் சாத்தியப்படாது.