புதன், 16 நவம்பர், 2022

மாவீரர் நினைவேந்தும் நடுகல் :அ.ம.அங்கவை யாழிசை


என்னுடைய மனதுக்கு மிக நெருக்கமான புத்தகங்கள் உண்டென்றால், அதில் முதலாவதாக இடம்பெற்றிருப்பது தீபச்செல்வன் எழுதிய 'நடுகல்' என்னும் புத்தகம்தான். இது எம் தமிழ் மண்ணைப் பற்றியது; எம் மண்ணின் மைந்தர்களான தமிழர்களைப் பற்றியது என்பதால்கூட அப்படி இருக்கலாம்.

தமிழ் இனத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் இளமைக்கால வாழ்க்கைப் பதிவாக, கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்பு வெளிவந்த திரைப்படம் மேதகு 1. மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்து பார்த்த படம் அது. ஏனெனில், எம் தலைவரைப் பற்றிய படம். ஒரு போராளி உருவான கதையைப் பேசியிருந்தது அப்படம். 

அந்தப் படத்தைப் பார்த்து முடித்த உடனே, 'ஈழத்தைப் பற்றியும் - ஈழப் போராட்டங்கள் பற்றியும் நம்மிடம் புத்தகங்கள் இருக்கிறதா?' என, அப்பாவிடம் கேட்டேன். 'ஈழம் குறித்து நிறையப் புத்தகங்கள் நம்மிடம் இருக்கின்றன. அதையெல்லாம் நீயும் தம்பியும் படிக்க வேண்டும்' எனக் கூறினார். 

எங்களது 'செம்பச்சை' நூலகத்தில் ஈழத்தைப் பற்றிய நிறைய நூல்கள் இருந்தாலும், ஈழத்தைப் பற்றியான வரலாற்றைக் காட்டிலும், ஈழத்து மக்களின் துயர்மிகுந்த வாழ்க்கைக் கதைகளை முதலில் படிக்க வேண்டும் எனக் கூறிய அப்பா, அடுத்த நாளே நான் படிப்பதற்காகப் பத்துப் புத்தகங்களைக் கொடுத்தார். அந்தப் பத்து நூல்களுள் இந்த 'நடுகல்' புத்தகமும் கைக்கு வந்தது. 'நடுகல்' எனும் தலைப்பைப் பார்த்தவுடனே, அதைப் படிக்க வேண்டும் எனும் தூண்டல் வந்துவிட்டது. 

ஓராண்டிற்கு முன்பு படித்த புத்தகம்தான் என்றாலும், இன்றும் அதன் கதைகளையும் வரிகளையும் அசைபோடும் போது ஈழத்தமிழர் மனத்தின் ஓலம் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

ஈழத்தைப் பற்றியும், எம் தலைவரைப் பற்றியும், அவர் முன்னெடுத்த போராட்டம் பற்றியும் சிறு வயதில் இருந்தே என் தந்தையாரின் வழியாக நிறைய அறிந்திருக்கிறேன். ஈழத் தமிழ் மக்களின் இன்னல்கள் பற்றியும் நிறையக் கேட்டிருக்கிறேன். ஆனாலும், இப்புதினம்தான் கண்கூடாகக் காண்பதைப் போல் காட்சிப்படுத்தியதை உணர்ந்தேன். 

இந்த நூலைப் படிக்கும்போது கதை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திப் பார்ப்பேன். நிகழ்வுகளை விவரிக்கும் வரிகளைக் காட்சிப்படுத்திப் பார்க்கும்போது, ஈழத் தமிழ் மக்களின் துயர்மிகு வாழ்வை வாசிக்க முடியாமல் புத்தகத்தை மூடி வைத்து விடுவேன். 

பல நேரம் நூலின் வரிகளை உதடுகள் உச்சரித்துக் கொண்டிருந்தாலும், கண்கள் கசிந்து கொண்டே இருந்தன. வாசிப்பதற்கே இத்தனை துயரம் ஏற்படுகிறது என்றால், அந்தத் துயரங்களையெல்லாம் நேரில் அனுபவித்த தமிழர்களின் வலிகள் மிகக் கொடூரமானதாக இருந்திருக்கும் என்பதை நினைத்து மிகவும் வேதனை அடைந்தேன்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் மரணத்தோடு போரிட்ட தமிழ் மக்களின் போராட்டத்தையும், அவர்களின் போராட்ட வாழ்வியலையும் கதை சொல்லல் வழியாகக் கட்டமைத்திருந்தது நடுகல். 

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது, தந்தையின் ஆதரவு ஏதும் இல்லாமல் ஒரு குடும்பம் படும் பாட்டை விவரிக்கிறது நடுகல்.

போரில் வீர மரணம் அடைந்தவர்களின் நினைவாக நடுகல் நடப்படும் வழக்கம் தமிழர்களின் தொன்மைப் பண்பாடுகளுள் ஒன்று. தீபச்செல்வனின் நடுகல்லானது, ஒரு போராளியைப் பற்றிய நினைவுகளைச் சுமந்திருக்கும் புதினமாய் வந்திருக்கிறது. 

அதாவது, ஈழப்போராட்டத்தில் தன் முதல் மகன் களப்போராளியாகி வீரச் சாவடைய, வீர மரணம் அடைந்த அவனை நினைவு கூற ஒரு புகைப்படம்கூட கைவசம் இல்லாத நிலையில், அவனைப் பற்றிய நினைவுகளையே நடு கல்லாய்ச் சுமந்து வருகிறாள் ஒரு தாய். மகனைப் பறிகொடுத்தவள், தன் மகனின் முகம் பார்க்க வைத்திருந்த புகைப்படங்களையும் தொலைத்த வலியோடு கதை முழுதும் பயணிக்கிறார் அந்தத் தாய்.

நேசித்தவனை இழப்பது துயரம் என்றால், அவனுடைய நிழற்படத்தையும்கூட இழப்பது மிகப்பெரும் துயரம்.

இதில், கதை சொல்லியாக வரும் இரண்டாவது மகன் வினோதன், தன் அப்பா வருவார் என்ற நம்பிக்கையில் இருந்து இருந்து ஏமாந்து விடுகிறான். அவன் அண்ணன் இல்லாமலும்,போரின் போது தங்கை மற்றும் அம்மாவுடன் சேர்ந்து ஒவ்வொரு இடமாக இடம்பெயரும் போதும் வழிநெடுகப் போரின்போது கொல்லப்பட்ட மனித உடல்களே எங்கும் கிடந்ததைப் பற்றி வினோதன் கூறும் பகுதிகள் இரத்த சாட்சிகளாய் இருக்கின்றன. வீதிகள் முழுக்க சருகுகள் கிடக்கும் காட்சிகள் போல சனங்கள் செத்துக் கிடக்கும் காட்சிகளை நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது.

போரின் போது தமிழ் மக்கள் அடைந்த வேதனைகள் அனைத்தையும் மிக வேதனையோடு விவரித்திருக்கும் அந்தப் பகுதிகள் கண்ணீரும் வலியும் நிரம்பியவை.

பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் பதுங்கு குழியிலும், சாதிக்க வேண்டிய வயதில் சவப்பெட்டியிலும் இருந்த நிலைமைகள் இனி வேறு எந்த இனத்திற்கும் வரக்கூடாது.

சொந்த நாட்டில் அடிமையாகவும் அகதியாகவும் வாழும் அவல நிலையில் எம் உறவுகள் பட்ட சித்திரவதைகள்தான் என்னென்ன? அந்த மனிதமற்ற சிங்கள இராணுவ மிருகங்களின் அத்துமீறல்கள் மரணத்தைக்கூட பயமற்றதாக்கி விட்டிருந்த நிலையை என்னவென்பது?

போரில் வீரச் சாவடைந்தவர்களுக்கு மரியாதை செய்யவோ விளக்கேற்றவோ கூடாது என்று சிங்கள இராணுவம் தடை போட்டிருப்பதோடு, மாவீரர் துயிலும் இல்லங்களைச் சேதப்படுத்தியிருக்கும் சிங்கள இராணுவம் செய்த பயங்கரவாதங்களை விவரிக்கும் போது நெஞ்சம் பதை பதைக்கின்றது. மனம் குமுறுகிறது. ஓர் ஆற்றாமை உணர்வு மனதில் இருந்து கொண்டேயிருக்கிறது.

இயக்கத்தில் சேர்ந்திருந்த தனது மகன் வீரச் சாவடைந்த பிறகு, அவனது நினைவாக ஒரு கல்லை நட்டு, அந்தக் கல்லையே மகனாகப் பாவித்துக் கொண்டிருப்பார் அந்தத் தாய். மகனாகப் பாவித்துக் கொண்டிருந்த அந்தக் கல்லை சிங்கள இராணுவ வீரன் உடைத்து விடுவான். அப்போது அந்தத் தாய் கூறும்போது "எங்கட பிள்ளயளின்ரை நினைவுகளுக்கு நீங்கள் பயப்படுற வரைக்கும் உங்களாலை அவங்களை அழிக்கேலாது". அந்தத் தாயின் உணர்வுதான் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் உணர்வாக இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. அந்த உணர்வின் வெளிப்பாடுதான் மாவீரர் நினைவேந்தல் வழிபாடாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நூலின் கதையை நகர்த்திப் போவது பிரசன்னா என்ற போராளி வெள்ளையனைப் பற்றிய நினைவுகள்தான். சொல்லப்போனால், இந்த நூல் முழுக்க போராளி பற்றிய நினைவுகளே நிரம்பிக் கிடக்கின்றன. மகனை இழந்த தாயின் தவிப்பு, அண்ணனை இழந்த தம்பி மற்றும் தங்கையின் சோகம் என, உறவுகளை இழந்தவர்களின் வலியை மிகுந்த வலியோடு படைத்திருக்கிறார் ஆசிரியர் தீபச்செல்வன்.

போராளி வெள்ளையனின் தம்பியாக வரும் வினோதன், தன் அண்ணன் படத்தைத் தேடி கதை முழுக்கத் தேடுவான். ஆனாலும் அது கிடைக்காத போது அவன் கலங்குவது வேதனை அளிக்கும்.

வீரச்சாவடைந்த போராளி அண்ணனின் ஒளிப்படத்தைத் தேடியலையும் தம்பியின் தவிப்பும் நடுகல்லில் பரவிக் கிடக்கிறது.

நடுகல் என்றாலே, போரில் பங்கேற்ற போராளிகளின் கதைகளே பெரும்பாலும் சொல்லப்படும். ஆனால், தீபச்செல்வனின் நடுகல் நூலானது, வீரச்சாவடைந்த போராளிகள் என்பதையும் தாண்டி, அந்தப் போராளிகளைப் பெற்றெடுத்த தாய்மார்களின் நினைவுகளையும் தவிப்பையும் பேசியிருக்கிறது. மேலும், வீரச் சாவடைந்த போராளிகள் - போரில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட உறவுகளையும் கனவுகளையும் தொலைத்த குடும்பங்களின் கண்ணோட்டத்தில் நடுகல் எழுப்பியிருக்கிறது. அதோடு, போரினால் நிராயுதபாணியான மக்களின் துயரப் பக்கங்களையும் நடுகல்லாய்ப் பேசுகிறது. 

இன்றும் கூட உலகில் பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு, நடுகல் புத்தகமானது அவர்களின் கடந்த கால இன்னல்களைப் பேசும் புத்தகமாகத்தான் இருக்கும். காலங்கள் எத்தனை கடந்தாலும் அவர்களுக்கு அது என்றும் மாறாத காயங்களாகத்தான் இருக்கும்.

நினைவுகள் வலிமையானவை. ஏனெனில், அந்நினைவுகள் ஒரு காலத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்பவை. அதே நினைவுகள்தான் கசப்பான காலத்தையும் இரத்தம் படிந்த வரலாற்றையும் மாற்றி எழுதுவதற்கான உந்துதல்களைத் திரும்பத் திரும்பத் தந்து கொண்டிருக்கும். அந்தவகையில், ஈழ விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள் பற்றிய நினைவேந்தல்கள் வழிபாடு மட்டுமல்ல; தமிழீழத் தாயக வேட்கையை அணையாமல் காந்து நிற்கும் பேருணர்வாகும். 

மாவீரர்களை நினைக்கும்போதெல்லாம், "எவன் ஒருவனைக் கண்டு உன் எதிரி அஞ்சுகிறானோ, அவனே உன் இனத்தின் உண்மையான தலைவன். என்றேனும் ஒரு நாள் பழி தீர்ப்போம்; துரோகம் களைவோம்" என்ற வாசகங்கள்தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

அன்று என் தலைவரின் படையைக் கண்டு அஞ்சினார்கள். இன்று அவர் வாழ்ந்த நிலத்தின் செங்காந்தள் பூவும் மாவீரர் கல்லறைகள்கூட அவர்களை அஞ்ச வைக்கிறது எனில், மாவீரர்களைப் பற்றிய நினைவுகள் எவ்வளவு வலிமையானவை என்பதை அறியமுடியும். அந்த நினைவுகளும் இன்னொரு வகையில் நடுகற்கள்தான்.

நினைவுகளில் உறைந்து கிடக்கும் உணர்வுகளைச் சொற்களால் ஆன நடுகல்லாய் மிக நேர்த்தியான கதைசொல்லல்வழி கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர் தீபச்செல்வன். இப்படைப்புக்காக, தீபச்செல்வன் அவர்களுக்கு மிக்க நன்றி.

மாவீரர்களின் கனவும் ஈகமும் ஒருபோதும் வீண்போகாது. மாவீரர்களுக்கு எம் வீரவணக்கம்.

அ.ம.அங்கவை யாழிசை

15.11.2022


3 கருத்துகள்:

  1. முனைவர் மு.ரமேஷ் பாபு.27 நவம்பர், 2023 அன்று 12:45 PM

    தீபச்செல்வனின் நடுகல் குறித்த நூலினை அருமையாக
    திறனாய்வு செய்துள்ள இளவல் யாழிசைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.வாழிய !வாழியவே !

    பதிலளிநீக்கு
  2. அருமையான திறனாய்வு சகோதரி

    தலைவர் குறித்து இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள துண்டும் விதமாக அமைந்துள்ளது உங்களது திறனாய்வு

    வாழ்த்துகளும் பேரன்பும் சகோ🤝

    பதிலளிநீக்கு