செவ்வாய், 25 ஜனவரி, 2022

உழவுப் பாடுகளும் தமிழ்ப் படைப்பாக்கமும் : கதிர்நம்பி


உழவு குறித்து இதுவரை கிடைத்த இலக்கியங்கள் அனைத்தும் உழவின் மேன்மையை விளக்குவனவாக அமைந்துள்ளன. செவ்வியல் மரபான சங்க இலக்கியத் தரவுகள் எல்லாம் உழவர்களையும் உழவினையும் விதந் தோதுகின்றன. உழைக்கின்ற சேற்றில் உழல்கின்ற உழவனை பாடுபொருளாக வைத்து பார்ப்பதால் அவனுடைய உழைப்பின் வீரியத்தை, அவனுடைய இன்னல்களை பேசுபொருளாக்கவில்லை. இன்னும் பகுத்து பார்ப்போமேயானால் இலக்கியங்கள், அவற்றைப் படைத்த கவிஞர்கள் எல்லாம் அரச இயந்திரத்தின் ஒரு பாகமாக விளங்கி வருவது கண்கூடு . எனவே கவிஞர்களிடமிருந்து கலகக் குரல்களை எதிர்பார்க்க இயலாது தான். விதிவிலக்காக அரசனை கேள்விக்குட்படுத்தும் கவிஞர்களை சங்க இலக்கியப் பரப்பில் காணமுடிகிறது. எனினும் விதிவிலக்குகள் எல்லாம் விதிகள் ஆகாது.

"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் 

அலகுடை நீழ லவர்" என்கிறார் வள்ளுவர். 

உழுதலால் நெல் உடையவரான கருணையாளர் பல வேந்தர் குடை நிழலது ஆகிய உலகம் முழுவதையும், தம் அரசன் குடைக்கீழ் வந்து சேரக் காணும் சக்தி உடையவர் ஆவர் என்பது இக்குறளிற்கான புலியூர் கேசிகனின் உரையாகும்.

முடியரசுகளின் எல்லை விவரிப்பிற்கும் உழவர்களினுடைய உழைப்பிற்கும் உள்ள தொடர்பை வள்ளுவர் இக்குறளில் விளக்கிக் காட்டியிருக்கின்றார். திருக்குறளில் வருகின்ற உழவு அதிகாரத்தில் அமைந்துள்ள பத்து குறள்களில் உழவனுடைய இன்னல்களையும் துயரங்களையும் எடுத்துரைப்பதாக அமையவில்லை என்பது கெடுவாய்ப்பாகும். உழவு குறித்து மேன்மையான கூறியிருந்தாலும் அரசு உருவாக்கத்திற்கு அது எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதையும் கூறியிருக்கின்றது.

வேட்டைக் குமுகமாக அலைந்து திரிந்து வாழ்ந்த மாந்தனை ஓரிடத்தில் நிலையாக அமரச் செய்தது வேளாண்மை எனும் தொழில்நுட்பம். "பெண்கள் தான் நிலத்தை முறையாக உழுது பயன்படுத்தும் வழியைக் கண்டுபிடித்தனர். அது கடினமான தொழிலாக இருந்தாலும் இதனை நடைமுறைப் படுத்தினர். தொல்பழங்கால சமுதாயத்தில் மாறாத் தன்மை வலுவாக இருந்த போதிலும் அதனால் வேளாண்மைக்கு முந்திய குழுக்களின் வட்டத்தில் இதன் எச்சங்கள் இன்றும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. முதலாவதாகத் தோன்றிய தாய்வழி உரிமை முறைக் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் வேளாண்மையை மேற்கொண்டதன் காரணமாக காடுகளில் அலைவதை விட்டுவிட்டு முதல் குடி அமைப்புகளை உருவாக்கினர்." என்கிறார் எஹ்ரென் பெல்ஸ். கலப்பையும் மாடுகளும் வேளாண்மையில் பங்குபெற வேளாண் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையடைய மிகை உற்பத்தி உருவானது. இதன் பொருட்டு தந்தை வழி குமுகம் தோன்றி அரசுகளை தோற்றுவித்தது. தோன்றிய அரசுகளை நிலைபெறச் செய்து செல்வத்தை பெருக்க செய்யவும் உழவர்கள் தொடர்ச்சியாக உற்பத்தியில் ஈடுபட வைக்கப்பட்டனர். உழுது உண்போர், உழுதுவித்து உண்போர் என பிரிவுகள் உருப்பெறலாயின.

"மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும்கை 

ஆழி தரித்தே அருளும் கை சூழ்வினையை 

 நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி காக்கும்கை காராளர் கை" என்று கம்பர் உழவர்களை நோக்கி வேந்தர்கள் இருப்பதாக பாடியதும் உழவர்களை மேன்மைபடுத்துவதாக அமைந்துள்ளது. 

"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னர் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால் 

யான் உயிர் என்பது அறிகை 

வேன்மிகு தானை வேந்தர்க் கடனே" என்று மோசிகீரனார் புறநானூற்றில் நெல்லையும் நீரையும் விட வேந்தனின் உயிரே முதன்மையானது என்கிறார். வேந்தன் தன் நாட்டு மக்களை காத்து நிற்பான் என்று பொருள் கூறுகிறார். இந்த பாடலிலும் கூட உழவர்களுடைய முதன்மைத்துவம் அல்லது அவர்களுடைய உழைப்பு பெரிதாக கருதப்படவில்லை. 

உழவர்களுடைய வாழ்வியல், அவர்களின் இன்னல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள், வழக்காறுகள் குறித்து 16- 17ஆம் நூற்றாண்டில் மத்தியில் வந்த முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியம் வெகுவாக படம்பிடித்து காட்டியுள்ளது. குறிப்பாக வேளாண் குடிகளான "மள்ளர்கள்" சாதி விலக்கத்திற்கு உள்ளானதை ஆவணப்படுத்தி இருக்கிறது. 

"பக்கமே தூரப் போயும் 

தக்க சோறு என் வேளாண்மை

 பள்ளா பள்ளா என்பார் 

மெய் கொள்ளாதவர்."

நிலம் கோயிலுக்குச் சொந்தம். கோயிலில் உறைகின்ற இறைவனின் பெயரால் நிலங்கள் அனைத்தும் மடங்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் உடைமையாக உருவாகியிருந்தது. நிலத்தில் உழைக்கின்ற உழுகுடிகளுக்கும் அந்த உழவை சார்ந்த நிற்கக்கூடிய இன்னபிற உழைக்கும் குடிகளுக்கும் விடிவு காலம் என்பது இல்லாது இருந்தது.

பல்லவர்,சேர,சோழ மற்றும் பாண்டியர் ஆகிய முடியரசுகள் பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கி இருக்கின்றது. பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள், தேவதானம், கிராமங்கள் (கிராமம் என்பது வடமொழிச் சொல். கிரமம் என்றால் ஒழுங்கு என்று பொருள். ஒழுங்குடன் வேதத்தை கற்கின்ற இடமே கிராமம்) என நிலங்கள் தானமாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. மறுதலையாக உழவர்களிடம் உழவடை வரி, பாசன வரி, நில வரி, போன்ற வரிகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இந்த கடுமையான வரி விதிப்புகளின் காரணமாக உழுகுடிகளும் இன்னபிற உழைக்கும் குடிகளும் தத்தம் நிலங்களை விட்டு புலம்பெயர்ந்து அலைகுடிகளாக மாறி அலைந்து திரிந்து இருக்கின்றனர். விஜயநகர பேரரசு காலத்தில் உழவர்களிடமிருந்து நன்செய் நிலங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. அம்மாதிரியான செயல்பாடுகளுக்கு எதிராக அணிதிரண்ட உழவர்களெல்லாம் குல நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழகம் வெப்ப மண்டல பகுதி என்பதால் 

ஆண்டு முழுவதும் உழவர்கள் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான இயற்கை சூழல் அமையப் பெற்றிருக்கிறது. இன்றைக்கும் கூட பெரும்பாலான விளைநிலங்கள் கோயில்களுக்கும் அதனுடைய மடங்களுக்குமே சொந்தமாக இருந்து வருகின்றது. இந்த சூழலில் நாம் முடியரசு காலமும் அதற்குப் பின்னான விஜயநகரப் பேரரசு காலமும் அதற்குப் பின்னான காலனியாதிக்க காலத்தையும் கணக்கெடுத்து பார்த்தோமானால் உழவர்கள் ஆண்டு முழுவதும் உழைத்து உழைத்து வரியை மட்டுமே செலுத்தி வந்திருக்கின்றனர் என்பது நமக்குப் புலப்படும்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சங்க இலக்கியம் தொட்டு கல்வெட்டு ஆதாரங்கள், இலக்கியச் சான்றுகள் நாட்டார் வழக்காறுகள் என அனைத்திலும் உழவருக்கு ஒரு நாள் அதாவது உழவர் திருநாள் அல்லது தமிழர் புத்தாண்டு என்று ஒரு நாளை நம்மால் இனம் காட்ட முடியவில்லை. முடியரசு காலத்தில் காவிரிப்படுகைக்கு ஆடிப்பெருக்கு சிறப்பான நாளாக கருதப்பட்டது. இன்னும் சில இடங்களில் சித்திரை பொன்னேர் பூட்டுதல் என்கின்ற சடங்கின் மூலமாக உழவுத்தொழில் தொடங்கப்பட்டது. பெரும்பான்மையான இடங்களில் தை அறுவடை என்பது உழவடை வரி வசூலிப்பு நாளாகவும் கருதப்படுகிறது. ஆக புத்தாண்டு, முதல் நாள் என்பதெல்லாம் ஆட்சியாளர்களின் வரி வசூலிப்பு போன்றவைகளை மையப்படுத்தி அமைந்தனவே ஒழிய அவை உழைக்கும் உழுகுடி மக்களின் பண்பாடாக கருத முடியாது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்தில் வேளாண்மை நிலங்கள் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் வேளாண்மைக்கு ஆதாரமான நீர் நிலைகளான கண்மாய்கள் ஏரிகள் குளங்கள் ஆற்றுப்படுகைகள் ஆகியவற்றின் புனரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தன. உணவுப் பயிர்களை விடுத்து பணப் பயிர்களான அவுரி, சணல், பருத்தி, புகையிலை, தேயிலை,அபின் போன்றவற்றை அதிகம் சாகுபடி செய்ய பணித்த பிரிட்டிஷ் அரசு உழவர்களை மேலும் ரயத்துவாரி என்ற வரி விதிப்பின் மூலமாக கொடுமைக்கு உள்ளாக்கியது. இதனால் பிரிட்டிஷ் அரசு காலகட்டத்தில் இந்திய துணைக் கண்டம் நிறைய பஞ்சங்களை எதிர்கொண்டது.

ஏற்கனவே நிலை பெற்றிருக்கின்ற ஆண்டான் அடிமை நிலவுடமை குமுகம் மற்றும் பிரிட்டிஷ் அரசின் எதேச்சதிகார உழவர் எதிர்ப்பு கொள்கைகள் இவற்றின் காரணமாக நிலத்தில் உழைத்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் உழைப்பிலிருந்து அதாவது உழவில் இருந்து வெளியேறி தேயிலைத் தோட்டங்களுக்கும் ஏலக்காய் தோட்டங்களுக்கும் கரும்புத் தோட்டங்களுக்கு ரப்பர் தோட்டங்களுக்கு கிழக்காசிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.

சங்க காலத்திலிருந்து சமகாலம் வரைக்கும் உழவர்களுடைய இன்னல்களையும் வாழ்க்கை பாடுகளையும் துன்பங்களையும் நாட்டார் இலக்கியங்களே பதிவு செய்து வந்திருக்கின்றன. நாட்டார் இலக்கியம் என்பது ஓர் கலகச் செயல்பாடு. உழைக்கும் மக்களின் உணர்ச்சிகளில் இருந்து, உணர்வுகளில் இருந்து வெளிவருகின்ற பாடல்கள் அன்றைய ஆண்டான் அடிமைக் குமுகத்தையும் அரச தோற்றங்களையும் சாடி இருக்கின்றது. 

"எட்டேரு கட்டி உழுது 

இடை தரிசு போட்டுழுது

வட்டங்க சேர்த்துழுது 

மகாராஜன் பண்ணையிலேயே

களையெடுக்கும் கம்மா புன்செய் கணக்குப் பார்க்கும் வேப்பமரம் கொத்தளக்கும் பொன்னுசாமி

 கூட நாழி போடுங்களேன்" என இப்பாடல் உழவன் கூலி உயர்வு கேட்டதை பதிவு செய்கிறது. 

"முக்காப்படி கேப்பைக்காக 

முந்தருந்து வாடுறனே

ஐயா முதலாளி- நீங்க 

அளக்குறது பொட்ட நாழி" 

நாழி என்றால் உழவர்கள் தங்களின் உழைப்பிற்கு கூலியாக பெறுகின்ற தவசத்தின் அளவு. கீழ்வெண்மணியில் ஆறு லிட்டர் நெல் கூலி உயர்வாக கேட்டதற்கு தீயில் கொளுத்தப்பட்ட உழவர்களின் பாடு சொல்லி மாளாது.கீழைத் தஞ்சையில் மக்கள் மனங்களில் வாழும் வெண்மணி தியாகிகள் பற்றிய நாட்டார் பாடல்கள் அனைத்தையும் சேகரிக்க வேண்டும். 

1947-இல் வெள்ளையர்கள் இந்திய துணைக் கண்டத்தை விட்டு வெளியேறிய பின்னர் 1952 ல் ஐக்கிய அமெரிக்க அரசின் பெருநிறுவனங்கள் இந்திய துணைக் கண்டத்திற்கு வணிக நோக்கத்தோடு பசுமைப்புரட்சி என்ற பெயரில் உள்நுழைந்தன. இதன் விளைவாக பெரு நிலம் கொண்ட பண்ணையார்கள் பலன் அனுபவித்தனர். குறு நில உழவர்கள் வேளாண்மையை விட்டு வெளியேறினர். 

பசுமை புரட்சி, நிலம் கையகப்படுத்தும் சட்டம், மீத்தேன் எரிவாயு திட்டம், அண்மையில் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் இவையெல்லாம் உழவர்களை விட வேளாண்மையில் நிற்கிற பெரு நிறுவனங்களுக்கு வலு சேர்ப்பவை ஆகும். மூன்றாம் உலக நாடுகளில் இருக்கிற வளங்களை முதலாளியம் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக சுரண்டி வருகிறது. 

சீக்கிய உழவர்கள் போராட்டத்தில் இருந்த பொழுது வட இந்திய செய்தி ஊடகங்கள் போராட்டத்தை மலினப்படுத்தி செய்திகளை பரப்பியது. குமுக ஊடகங்களில் இவர்களின் போராட்டத்தை தீவிரவாதிகளின் போராட்டம், பிரிவினைவாதிகளின் போராட்டம் என பலவாறு திசை திருப்ப தொடர் பிரச்சாரங்கள் நடந்து வந்தன. சில முற்போக்குவாதிகள் கூட உழவர்களை புனிதப்படுத்த வேண்டாம் என்று அண்மைக் காலங்களில் எழுதி வருகின்றனர். 

"லத்தின் அமெரிக்காவில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், தனிநபர் வருமானங்கள் குறைவதற்கும் மக்கள் போராட்டங்கள் பின் அடைவதற்கும் இடையே நேரடி தொடர்பு இருக்கிறது" என்று ஜேம்ஸ் மெட்ராஸ் கூறுகிறார். இவருடைய கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் அண்மைக்காலங்களாக இந்திய துணைக்கண்டத்தில், தமிழகத்தில் நடந்து வருகின்ற போராட்டங்களும் அந்தப் போராட்டங்களுக்கு எதிராக திசை திருப்பப்படும் செய்திகளை உருவாக்குகிற ஊடகங்களும் திகழ்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

நிலத்தின் மீதான உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பது "நிலத்தோடு உழவுக்குடிகள் உறவாடிக் கிடந்தாலும், நிலத்தின் மீதான உரிமைகளை அதிகார அமைப்புகளும் அதிகார சேவகர்களும் கோயில்களின் பேராலும், வரிகளின் பேராலும், மடங்களின் பேராலும் மெல்ல மெல்ல தன் வயப்படுத்தி கொண்டதை வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன" என்று ஏர் மகாராசன் கூறுவதிலிருந்து தெரிகிறது. 

*உழுபவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும்.

*உழவனின் விளை பொருளுக்கு அவனே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

*உழவர்கள் கடனில்லா வாழ்வு வாழ வேண்டும்.

*உழவர்களின் பங்களிப்போடு வேளாண் பெருமதி ஒதுக்கீடு (budget) நடக்க வேண்டும்.

மேற்சொன்ன விடயங்கள் நடக்கிற நாளே உழவர்களின் திருநாள் ஆகும். அது பொதுவுடமையின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் கை கூடும். ஒரு தேசமானது தன் சொந்த மக்களையே ஒடுக்கும் பொழுது, பாட்டாளி வர்க்கம் அந்த மக்களுக்கான சுய நிர்ணய தேசத்தை வென்றெடுக்க முனைய வேண்டும் என்பார் லெனின். லெனினின் கூற்றை பஞ்சாப் உழவர் வகுப்பினர் நினைவு படுத்தி உள்ளனர். உழவர் புரட்சி நீடிக்கட்டும் !

உதவிய நூல்கள் : 

நா.வா பள்ளு பாட்டு ஆராய்ச்சி, ஏர் மகாராசன்

ஏகாதிபத்திய பண்பாடு, ஜேம்ஸ் பெட்ராஸ்

தமிழ் நாட்டு பாமரர் பாடல்கள், நா.வானமாமலை 

உலகாயுதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாய

x

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக