சனி, 27 நவம்பர், 2021

சோசலிச தமிழீழம் : விடுதலைப் புலிகளின் வேலைத்திட்ட அறிக்கை.


சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்த, ஒடுக்கல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கிறோம். 


தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. அதே சமயம், எமது சமூகத்தை பிரபுத்துவ சமூக வடிவமாகவும் சித்தரிக்க முடி யாது. தமிழீழ சமுதாய அமைப்பானது தனக்கேயுரிய ஒரு தனித்துவமான பொருளுற்பத்தி வடிவமாகத் திகழ்கிறது. வளரும் முதலாளித்துவ அம்சங்களும். பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்றுகலந்த ஒரு சிக்கலான பொருளாதார அத்திவாரத்தில் எமது சமுதாயம் கட்டப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் எமது சமுதாயத்திற்கு அத்திவாரமாக விளங்கும் பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. 


எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும். இவ்விதம் ஒரு சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதாயின் பொருளாதார அமைப்பில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்; பொருளாதார உற்பத்தி உறவு புனரமைக்கப்படவேண்டும்; சமூக அதர்மத்தையும், மனிதனை மனிதன் சுரண்டும் அநீதியையும் கொண்ட உற்பத்தி உறவுகள் ஒழிக்கப்படவேண்டும். இப்படியான புரட்சிகர சமூக மாற்றத்தை ஏற்படுத்த எமது விடுதலை இயக்கம் உறுதிபூண்டுள்ளது. 


எமது சமுதாய மேம்பாட்டிற்கு ஒரு சாபக்கேடாகவும் சமூக சமத்துவத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாகவும் இருந்துவருவது சாதியக் கொடுமையாகும். சாதிய அமைப்பு எமது கிராமியப் பொருளாதார வாழ்வுடன் ஒன்றுகலந்திருக்கிறது. வர்க்க அமைப்புடன் இணையப்பெற்றிருக்கிறது. தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருள் உற்பத்தி உறவுகளுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. மத சித்தாந்த உலகிலிருந்து வேரூன்றி வளர்ந்திருக்கிறது. தொழிலின் மகத்துவத்தை இழிவுபடுத்தி, மனிதனை மனிதன் வேறுபடுத்தும் இந்த மூட வழக்குமுறையை முற்றாக ஒழித்துக்கட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் திடசங்கற்பம் பூண்டிருக்கிறது. சாதியத்தின்பெயரால் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து நசுக்கப்பட்டுவரும் தமிழீழப் பாட்டாளி வர்க்கத்தின் விடிவிற்காக எமது இயக்கம் அயராது உழைக்கும். உழைப்பின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச பொருளாதாரத் திட்டத்தை அமுலாக்குவதன் மூலமும், புரட்சிக ரமான கல்விமுறை வாயிலாகவும் இந்த சமூக தீமையை எமது இயக்கம் ஒழித்துக் கட்டும். 


தேசிய விடுதலைப் போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் ஒன்று சேர்த்ததாக, தேச சுதந்திரத்தையும் சமூகப் புரட்சியையும் ஒன்றிணைத்ததாக அமையப்பெற்றிருக்கும் எமது புரட்சிகர அரசியல் இலட்சியங்கள் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்பதோடு அல்லாமல் எமது சமூகத்தில் நிலவும் ஒடுக்கு முறைகளிலிருந்தும் எமது மக்களுக்கு சுபீட்சமளிப்பதை குறிக்கோளாகக் கொண்டி ருக்கின்றன. இந்த அரசியல் இலட்சியங்களை அடைவதற்காக எமது இயக்கம் கீழ்க் கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருக்கிறது. 


* தேசீய, சமூக விடுதலை என்ற பொது இலட்சியத்தில் தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, அவர்களை ஒருங்கிணைந்த தேசிய மக்கள் சக்தியாக அணி திரட்டுவது. 


* தேசிய-சமூக விடுதலை என்ற இலட்சியத்தை முனைப்புறச்செய்து துரிதப்படுத்தும் நோக்குடன் மக்கள் மத்தியில் தேசியப் பற்றுணர்வையும் பாட்டாளி வர்க்கப் பிரக்ஞையையும் தட்டி எழுப்பிக் கட்டி வளர்ப்பது. 


* வெகுசன அரசியல் போராட்டத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் வலுப்படுத்தி தீவிரப்படுத்துவதுடன் பரந்துபட்ட பொது மக்களை தேசிய விடுதலைப் போராட்டத்தில் நேரடிப் பங்குதாரர்களாக மாற்றுவது. 


சோசலிச தமிழீழம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்ட நூலின் இரண்டாம் பகுதி.

*

நூலின் முழுமையான பகுதியை மின் நூல் வடிவில் வாசித்திட

https://online.anyflip.com/shrf/lbll/mobile/index.html#p=2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக