வெள்ளி, 17 ஏப்ரல், 2020

சித்த மருத்துவத்தில் மருந்துகள் செய்முறை: கவிஞர் குட்டி ரேவதி

சித்தமருத்துவத்தில் என்னை மிகவும் ஈர்த்தவை, அதன் மருந்துச் செய்முறைகள் தாம். இரசவாதம் என்று சொன்னால் எவ்வளவு உங்களுக்கு வசீகரமானதொரு கற்பனை தோன்றுகிறதே அதற்குச் சற்றும் குறைவில்லாதவை, சித்தமருத்துவத்தின் மருந்துச் செய்முறைகள். தமிழகத்தின் முக்கியமான இரு மருத்துவர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். இருவருக்குமே அவர்களின் மருந்துத் தொழிற்சாலையில் பெரிய அளவில் லேகியம், தைலம், பற்பம் செய்யும் மருத்துவராகவே பணியாற்றினேன். கல்லூரியில் மருந்துச்செய்முறையில் அதிக வல்லமையுடைய பெண் மருத்துவப்பேராசிரியர் ஒருவருடனேயே எப்பொழுதும் சுற்றித்திரிந்து மருந்துகள் செய்யக் கற்றுக்கொண்டேன்.

மூலப்பொருட்களிலிருந்து நிறைய கவனமான செய்முறைகள் வழியாக அவை மருந்தாக மாறும் தன்மையை இரவும் பகலும் உடனிருந்து கவனிப்பது என்பது சொல்லொணா இன்பமும் அருமையும் கூட்டும் அனுபவம்.  சமைக்கவே தெரியாத நான், பிற்காலங்களில் மருந்துகள் எல்லாம் செய்யக் கற்றுக்கொண்ட பின்பு, ஒரு தக்காளி ரசத்தைக் கூட மருந்தென எண்ணிச் சமைக்கத்தொடங்கினேன்.

சித்த மருந்தின் செய்முறைக்கு வருவோம். சித்தமருந்துகளின் செய்முறைகள் மிகப்பெரிய வேதியியலாகவே அமைந்துள்ளது. தமிழ் மருத்துவர்கள், தாவரங்கள், தாதுப்பொருட்கள்(Mineral Origin), உலோகங்கள் (Metal Origin), நடமாடும் உயிர்கள் ஆகிய நான்குவகை மூலப்பொருட்களிலிருந்து மருந்துகளைத் தயாரித்துள்ளனர்.

உப்புகள் - 15, உபரசங்கள் - 20, பாடாணங்கள் (இயற்கை 32 + செயற்கை 32) - 64, உலோகங்கள் 12, மூலிகைகள் 1008  இவையே சித்தமருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள். இவை தமிழ் மருத்துவத்தின் அறிவியல் திறனை உறுதிப்படுத்துகின்றன. இந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, 32 அகமருந்துகளும், 32 புறமருந்துகளும் செய்யக் கற்றுக்கொண்டிருக்கின்றனர் தமிழ் மருத்துவர்கள்.

அகமருந்து, உள்ளுக்குக் கொடுக்கப்படுவது. புற அருந்து, வெளிப்பிரயோகத்திற்கானது.  அடை, இலேகியம், உட்களி, உருக்கு, எண்ணெய், கட்டு, கடுகு, களங்கு, கற்கம், கற்பம், குடிநீர், குருகுளிகை,குழம்பு, சத்து, சாறு, சுண்ணம், சுரசம், சுவைப்பு, சூரணம், செந்தூரம், தீநீர், தேனூறல், பற்பம், நெய், பக்குவம், பதங்கம், பிட்டு, மணப்பாகு, மாத்திரை, மெழுகு, வடகம், வெண்ணெய் ஆகியவை அகமருந்துகள். இதில் ஒவ்வொன்றிலும் பல வகைகள் உண்டு. உதாரணத்திற்கு நெய்யை எடுத்துக்கொள்வோம். பிறப்புவகையில், 12 வகை. கொதி நெய், உருக்கு நெய், புடநெய், தீநீர் நெய், சூரியப்புட நெய், மண் நெய், மர நெய், சிலை நெய், நீர் நெய், ஆவி நெய், சுடர் நெய், பொறி நெய் என்பன.
இந்தப்பன்னிரண்டு வகையையும் முடி நெய், குடி நெய், பிடி நெய், தொளை நெய், சிலை நெய் என்ற ஐந்து வகைக்குள் அடக்கலாம். இப்படியாக ஒவ்வொரு மருந்து வகையும் அவற்றின் செய்முறைக்கு ஏற்பவும், பயன்படுத்துமுறைக்கு ஏற்பவும் வகைப்பட்டுக்கொண்டே போகும்.

புற மருந்துகளாவன: அட்டை விடல், அறுவை, உறிஞ்சல், ஊதல், ஒற்றடம், கட்டுதல், கலிக்கம், களி, களிம்பு, காரம், கீறல், குருதி வாங்கல், கொம்பு கட்டல், சலாகை, சீலை, சுட்டிகை, தொக்கணம், நசியம், நாசிகாபுராணம், நீர், பசை, பற்று, பீச்சு, புகை, பூச்சு, பொட்டணம், பொடி, பொடி திமிர்தல், முறிச்சல், மை, வர்த்தி, வேது.

இன்று தற்கால மருத்துவத்தில் இருப்பது போலவே தமிழ் மருத்துவத்தின் அடிப்படை நெறிகளும் இருந்திருக்கின்றன. மருந்துப்பொருட்களின் குணமறிதல் (Pharmacognosy), ம்ருந்துகளைக் கையாளுதல் (Pharmacy), நோய்க்கேற்ற மருந்துகளைத் தரும் மருந்தியல் (Pharmacology).

புடமிட்டுத் தயாரிக்கப்படும் உப்பு, சுண்ணம், செந்தூரம், பற்பம் போன்றவற்றைச் செய்து நம் சில தலைமுறைகள் வரை அதன் மருத்துவ வீரியம், ஆற்றல் குறையாமல் பயன்படுத்தலாம். அதாவது, நான் இன்று செய்து வைக்கும் ஒரு மருந்து, என் பேத்தி, கொள்ளுப்பேத்தி தலைமுறை  வரை நோய்தீர்க்கப் பயன்படும் சொத்து. உயில் போலவே, இம்மருந்துகளையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு எழுதி வைத்துவிட்டுச் செல்லலாம்.

மணிக்கணக்கில் மூலிகைச்சாறு இட்டு அரைப்பது, கவனமாகப் புடமிடுவது, தைலத்தின் பக்குவம் தவறாமல் காய்ச்சி எடுப்பது, ஒவ்வொரு மூலிகையிலும் இருக்கும் அகநஞ்சை, புறநஞ்சை நீக்க எப்படி சுத்திகரிப்பது என்பது போன்ற நூற்றுக்கணக்கான, தனித்த செய்முறைகள் எல்லாம் இவற்றில் அடங்கும். மருந்தின் காலக்கணக்கு மிக மிக முக்கியம். மருந்தைச்செய்வதிலும் எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவிலும், மருந்தை எடுத்துக்கொள்ளும் காலத்திலும்.

மருந்துகள் சரியான பயனைத்தர, மருந்துகளைச் சரியாகச் செய்வது முக்கியம் என்பது தமிழ் மருத்துவக் கல்வியில் கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும்.

வேறு எந்த மருத்துவத்திலும் இப்படி மருத்துவரே மருந்துகள் செய்யக் கற்றுக்கொள்வதில்லை. குறிப்புச்சீட்டு எழுதிக்கொடுத்தால் போதுமானது. ஆயுர்வேதம் கூட, பிற்காலத்தில் தான் அதுவும் சித்தமருத்துவத்தின் பகுதியைத் தான் அந்த மருத்துவத்தால் பின்பற்றமுடிந்தது.

கவிஞர் குட்டி ரேவதி,
14.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 17.04.2020 /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக