ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

சித்தம்: வெறும் மருத்துவம் மட்டுமல்ல; வாழ்வின் சித்தாந்தக் களஞ்சியம் :- எழுத்தாளர் மேக்னா சுரேசு


நான், ஒரு முக்கியமான தகவலை உங்களோடு பகிர வந்துள்ளேன்.
என் நட்பின் இணைப்பில் இருக்கும் அனைவரும் அறிவர் நான் யார் என்று.
ஆனாலும், என்னை முறையாக அறிமுகப்படுத்தி விட்டே இந்த குறுங்கட்டுரைக்குள் நுழைகிறேன்.

நான் ஒரு செவிலி. அலோபதி என்று அழைக்கப்படுகின்ற ஆங்கிலவழி மருத்துவத் துறையில் நானும் ஓர் அங்கம்.

என் பயிற்சிக் காலத்தின்போதே அலோபதி குறித்த அடங்கா பெருமை எனக்குண்டு.
என்ன இருந்தாலும் ரோட்ல விழுந்து கை, கால் தனியாப் போனாலும் அதை ஒன்னு சேர்க்குற திறமையும் வசதியும் எங்ககிட்டதானே இருக்கு என அறுவை சிகிச்சைத்துறை குறித்துக் கர்வம் கொள்வேன்.
அதோடு மாற்று மருத்துவத் துறைகள் (அலோபதி, சித்தா,யுனானி, மற்றும் இயற்கை மருத்துவம்) குறித்து அவ்வளவாக உயர்ந்த சிந்தனைகளும் இருந்ததில்லை.

இதெல்லாம் எப்போது என்றால், நான் என் கல்வி முடித்துப் பணியில் இணையும் வரை மட்டுமே.

அதன் பிறகான என் உலகம் புத்தக வாசிப்பின் மூலம் எல்லைகள் உடைத்து, என் குறுகிய சிந்தையையும் மாற்றியது.

அதோடு என் மூத்த மகளுக்குப் பல அலோபதி மருத்துவமனைகளில் வைத்தியம் பார்த்துச் சோர்ந்து, அடிக்கடி சாதாரண சளித் தொற்றுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆண்டிப்பாயாடிக் மருந்துகள் கண்டு மிரண்டு, இறுதியில் என் கணவரின் தோழர் வழிகாட்டுதலின் பெயரில் ஹோமியோபதி மருத்துவத்தைச் சரண் அடைந்தேன்.

நோய் குணம் கண்டதோடு, அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்றின் கால இடைவெளியும் குறைந்தது.

ஆனால், என் பணி நிமித்தம் நாங்கள் ஊர் மாற வேண்டி இருந்ததால், எங்கள் வீட்டின் அருகில் இருந்த மற்றொரு அலோபதி குழந்தை மருத்துவரிடம் அவளுக்குத் தற்சமயம் நல ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்கிறேன்.

இந்த நிலை வரையிலும் மாற்று மருத்துவம் குறித்துப் பெரிதாய் எந்தத் தாக்கமும் எனக்கு ஏற்படவில்லை.
சித்த மருத்துவர்களின் நலன் பயக்கும் நூல்கள், மற்றும் கட்டுரைத் தொகுப்புகள் வாசிப்பவள் ஆயினும், அந்த மருத்துவம் குறித்த உள்ளொளி எனக்குப் பெரிதாய் ஏதுமில்லை.

இந்த நிலையில், எங்கள் கல்லூரியின் சார்பில் சேலத்தில் இயங்கும் சித்த மருத்துவக் கல்லூரி ஒன்றின் (observational visit ) செயல்பாடு குறித்து விளக்க, பார்வையிட அழைத்துச் சென்றார்கள்.

அன்றுதான், முதன்முறையாக நான் ஏன் இந்த அபூர்வ வகை மருத்துவத் துறையின் ஒரு அங்கமாக இல்லாமல் போய் விட்டோம் எனப் பெருங்கவலை கொண்டேன்.'யப்பா....என்ன வைத்திய முறையடா..!' இது என்று வியந்த நாள்.

முதலில் சித்த மருத்துவம் என்பது வெறும் மருத்துவத் துறை மட்டுமல்ல, வாழ்வின் பரிபூரணச் சித்தாந்தக் கொள்கைகளை உள்ளடக்கியது.

நாம் என்னதான் ஆயிரக்கணக்கில் ஆங்கில வழி மருத்துவப் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தாலும், அதன் தோற்றகாலம் மிஞ்சி மிஞ்சிப் போனால் சில பல நூற்றாண்டுகளைத் தொடுமா.?

சித்த மருத்துவத்தின் மூல நூலின் வயது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தது.
அன்று நாங்கள் பார்வையிட்ட போது, அங்கிருந்த துறை மருத்துவர்கள் சித்த மருத்துவம் பற்றி ஆற்றிய உரை சித்த மருத்துவம் குறித்த என் உள்ளொளியை முற்றிலும் மாற்றி அமைத்து.

அதில் முதலில் தன் உரையைத் துவக்கிய சித்த மருத்துவர் ஒருவர், பிரபஞ்சப் பெருவெளி வெடிப்பை உடல் சமநிலையோடு தொடர்புபடுத்திப் பேசினார். அதாவது, நோயற்ற நிலை அமைதி, அங்கு ஏற்படும் சலனம் நோய்.

இந்தப் பிரஞ்சமே முதலில் சலனமற்றுதான் இருந்தது. பிறகு ஒரு சலனம் ( பெரு வெடிப்பு) புவி தோன்றிற்று.

அதாவது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பெற்ற நூல் பிரபஞ்ச பெரு வெடிப்பைப் பேசி இருக்கிறது. நாம் இங்கு முக்கியமாக அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது வெறும் தொடக்கம் மட்டுமே. மீதம் இருந்த அத்தனை மருத்துவர்களும் உரை ஆற்றி முடித்தபோது நாங்கள் உணர்ந்தது ஒன்றுதான். சித்த மருத்துவம் நாம் கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாத வகையில் அத்தனை மருத்துவ முறைகளைக் காட்டிலும் தலை சிறந்தது.

அங்கிருந்த அத்தனை மருத்துவர்களும் தூய தமிழில் சொற்பொழிவாற்றினார்கள். நீங்கள் செவிலியர்தானே உங்களுக்கு இதெல்லாம் தேவைப்படாது என்றோ, அன்றி புரியாது என்றோ எந்த இடத்திலும் சுணக்கம் காட்டவில்லை.

அடுத்து, அவர்களின் குணபாடம் வழி மருந்து தயாரிக்கும் மருந்தாளர்களும் அவர்களே. ஆக அதிக விஷத்தன்மை வாய்ந்ததாக ஒரு இணையம் நமக்குக் காட்டும் மூலிகையை அவர்கள் process சமன் செய்து நமக்கு மருந்தாக்கித் தருவார்கள்.

நாம் டோஸ் என்று சொல்கின்ற அளவீடு அங்கும் உண்டு. ஒரு சித்த மருத்துவர் ஒரு மூலிகையைப் பறித்தவுடன் அதை சுமார் பத்து முறை ஓடும் நீரில் கழுவ வேண்டும்.

அதன் பிறகே அதில் என்ன கூட்ட வேண்டும்? என்ன குறைக்க வேண்டும்? அதை மருந்தாக்க அந்த மூலிகையின் எப்பகுதியைக் கையாள வேண்டும்? அதோடு வேறு என்ன பொருள் சேர்க்க வேண்டும்? என்ன வெப்பநிலை பயன்படுத்த வேண்டும்? எந்த வடிவச் கல்லில் அரைக்க வேண்டும்? இப்படி இந்தப் பட்டியல் இன்னும் மிக நீளமாய் நீண்டு கொண்டே போகும். அத்தனையும் என்னால் இங்கே பதிய முடியவில்லை . மன்னிக்கவும்.

அலோபதி முறையில் நாம் நோயாளிகளின் உடலியல், நோய்க்குறியியல், அதற்கான மருத்துவம் அவைகளை மட்டுமே வாசிப்போம்.
ஆனால், இவர்கள் அதோடு தாவரவியல் பற்றிய முழுத் தொகுப்புகளையும் படிக்க வேண்டும். மருந்துகளை அவர்களே தயார் செய்யப் பழக வேண்டும். மூலிகைகளை இனம் காணப் பழக வேண்டும்.

இப்படி பல கலைகளை உள் அடக்கியது சித்தா. அதற்காக நான் அலோபதித் துறையைக் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை.

அசலூர்க்காரி எத்தனை வசீகரம் கொண்டவளாக இருப்பினும், அம்மாவின் அழுக்கு முந்தானைக்கு ஈடாகுமா.?

சித்த வழி மருத்துவம் நம் தாய். அங்கே குறை இருப்பின் அதனை நிறை செய்ய வேண்டியதும், நம் மருத்துவக் கலையை உலகறியச் செய்ய வேண்டியதும் நம் கடமை.

ஒருங்கிணைந்த மருத்துவம் நமக்குக் கிடைத்திருக்கும் வரம்.
சரியான முறையில் அதனைப் பயன்படுத்திப் பல இன்னுயிர்களைக் காப்போம்.

அலோபதி மருத்துவர் துறையினருக்குச் சித்த மருத்துவம் குறித்த கருத்தரங்கம், விளக்கக் கூட்டம் இப்படி சிலவற்றை அரசு முனைந்து நடத்தினால், இரு துறைகளும் மற்ற துறையின் மேன்மையைப் புரிந்து கொள்ள வழிகோலும் என்று எண்ணுகிறேன்.

சித்தம் வெறும் மருத்துவம் அல்ல.... வாழ்வின் சித்தாந்த பொக்கிஷம். 'சித்தம்' தமிழின் , தமிழனின் அரிச்சுவடி. முடிந்தால் வாசித்துப் பிரபஞ்சம் அறிவோம். இல்லையேல் அமைதியாயிருப்போம்.

தாயைப் பழித்தல் நம் மரபிற்கே அழகன்று அல்லவா.

மேக்னா சுரேசு.
எழுத்தாளர்/செவிலியர்.
17.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 19.04.2020 /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக