சனி, 11 ஏப்ரல், 2020

சித்த மருத்துவத்தின் தத்துவம்: கவிஞர் குட்டி ரேவதி


எடுத்த எடுப்பிலேயே சித்தமருத்துவத்தைப் பொதுமக்களும், மற்ற மருத்துவர்களும் நிராகரிக்க முதன்மையான காரணம், தமிழ் மருத்துவத்தின் அடிப்படையான தத்துவத்தை, அது இயங்கும் சித்தாந்தத்தைப் புரிந்துகொள்ளாமலும் தெரிந்து கொள்ளாமலும் இருப்பதுதான்.
இயன்றவரை எளிமையாகவும் நேரடியாகவும் இங்கே விளக்க விரும்புகிறேன்.

ஐம்பூதத் தத்துவம் என்பதுதான் தமிழ் மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவம்.
அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம், அண்டமும் பிண்டமும் ஒன்றே, அறிந்துதான் பார்க்கும்போதே என்கிறது சட்டமுனி ஞானம் நூல். இப்பாடலிலிருந்து இத்தத்துவத்தை நேரடியாக உள்வாங்கிக் கொள்ளலாம். என்றாலும், நுணுகி நுணுகி அறியப்போகையில் தமிழ் மருத்துவம் என்பது  ஓர் அகண்ட துறையாகவும் நுண்ணிய அறிவையும் சிந்தனையையும் கோரும் துறையாகவும் இருக்கிறது.

மருத்துவர் என்போர் மட்டுமே மனித உடலைப்பற்றி அறிந்திருந்தால் போதுமானதில்லை என்று சொல்வேன். அவரவர் உடலை அறியும் திறனையும் அறிவையும் பெற்றிருந்தால்தான் பிணி இன்றி நீண்ட நெடுங்காலம் வாழ முடியும்.

இந்தச் சிந்தனை நம் மண்ணில் ஐயாயிரம் ஆண்டிற்கும் முற்பட்ட காலத்திலிருந்து தொடங்கி வருகிறது என்கின்றனர் தமிழ்ச் சான்றோர்கள்.

 'நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
 கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
 இருதிணை ஐம்பால் இயல்நெறி     வழாஅமைத்
 திரிவுஇல் சொல்லோடு தழாஅல் வேண்டும்'
 நிலம், தீ, நீர், வளி எனும் காற்று, விசும்பு ஐந்தும் சேர்ந்து உருவான கலவையால் ஆனது இவ்வுலகம் எனச்சொல்லும் தொல்காப்பியம் தொன்மையான பதிவாகிறது.

எப்படி இந்த உலகம் ஐம்பூதங்களால் ஆனதோ, அதேபோல் இந்த உலகின் உயிர்களும் மனித உயிருடலும் ஐம்பூதக் கூட்டுச்சேர்க்கையால் உருவானவை. ஆக, இந்த உடலுக்கு ஐம்பூதச் சேர்க்கையினால் உருவான மருந்துகளே நோயைத் தீர்க்கவல்லன என்று கண்டறிந்தனர் தமிழ் மருத்துவர். இயற்கைக்கு அப்பாற்பட்ட, ஐம்பூதச் சேர்க்கையற்ற மருந்துகள் உடல் நோயைத் தீர்க்க உதவா.

உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்டால், மண் என்று ஐம்பூதக்கூறிலிருந்து எலும்பு, தோல், இறைச்சி, நரம்பு, மயிர் உண்டாகிறது. நீரிலிருந்து உதிரம், மஞ்ஞை, உமிழ் நீர், நிணம், விந்தும்; தீயிலிருந்து பயம், கோபம், அகங்காரம், சோம்பல், உறக்கமும்; காற்றிலிருந்து போதல், வருதல், நோய்ப்படுதல், ஒடுங்குதல், தொடுதலும்; ஆகாயத்திலிருந்து ஆசை, உட்பகை, மோகம், மதம், வஞ்சனையும் உண்டாகின்றன.

மருந்துப் பொருட்களில், இந்தப் பஞ்சபூதக்குணங்கள் சுவையாக இடம்பெற்றிருக்கின்றன. இவை வெறுமனே நாக்கினால் உணரப்படும் சுவை மட்டுமன்று. ஒவ்வொரு மூலிகையின் வீர்யமாகவும் அறியப்படுபவை. அதாவது, இனிப்பு என்பது மண் + நீர் என்ற இரண்டு பஞ்சபூதக்கூறும் சேர்ந்து உருவாவது. புளிப்பு, மண்ணும் தீயும். உவர்ப்பு நீரும் தீயும். கைப்பு, காற்றும் ஆகாயமும். கார்ப்பு தீயும் காற்றும். துவர்ப்பு மண்ணும் காற்றும்.

மனிதனின் நோய்களுக்கு வருவோம். நோய்க்கூறுகளைப் பற்றி அறியும்போதும் ஒவ்வொரு நோயும் ஐம்பூதச்சேர்க்கையில் நிகழும் எத்தகைய கோளாறுகளால் வருகின்றன என்ற ஆழமான ஆய்வும் விளக்கமும் கிடைக்கிறது.

நோயைக் கண்டறியும் தமிழ் மருத்துவர்களின் யுத்திகள் எண்வகைத் தேர்வு எனப்படுகின்றன. நாடி ஸ்பரிசம் நா நிறம் மொழி விழி மலம் மூத்திரம் இவை. இதில் நாடி சிறப்பான முதன்மையான உத்தியாக இருக்கிறது.

வாதம், பித்தம், கப நாடிகள் கொண்டு உடம்பில் உருவாகியிருக்கும் நோய்கள் அறியப்பட்டு அதைச் சரி செய்யும் பஞ்சபூதச் சேர்க்கை கொண்ட மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மருந்துப் பொருள்களில் இவ்வாறு வெவ்வேறு பஞ்சபூதத்தன்மை கொண்டவையாக மருந்துப் பொருட்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

மூலிகைப் பயன்பாடுகள் காலங்காலமான மரபினாலும் தொடர் நுண்ணறிவுச் செயல்பாட்டினாலும் வருவது. எதை எந்நோய்க்கு எவர்க்குக் கொடுப்பது என்பதில் மிகவும் விரிவான ஆளுகை இருக்கிறது. மரபார்ந்த அறிவையும் இலக்கியங்களையும் தொகுத்தே  ஐந்தரை ஆண்டு கல்வித்திட்டமெனத் தமிழ் மருத்துவத்திற்கு வகுத்திருக்கிறார்கள்.

தமிழ் இலக்கியத்துறைக்கு இருக்கும் சமூக, அரசு ஆதரவுகூட தமிழ் மருத்துத்துறைக்குக் கிடையாது. இலக்கியத்துறையே மெலிந்து மொழித்துறை ஆன கதை வேறு. தமிழ் இலக்கியமும் இலக்கணமும் தமிழ் மருத்துவமும் ஒன்றுக்கொன்று பிணைந்திருப்பதை உணர்ந்தால் தான் தமிழ் மருத்துவத்தைப் போற்ற முடியும்; பயன்பெறமுடியும்.

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை போல என்று புறநானூறு சொல்கிறதே.

திருக்குறள் மருந்து என்னும் தனித்த அதிகாரத்தைக் கொண்டு மருத்துவத்தை விளக்குகிறது.
சங்ககாலம் யூகி என்னும் மருத்துவச் சித்தரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.  மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனார், ‘ஆருயிர் மருத்துவி’, என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். பெண்பாலார் மருத்துவராக இருந்திருக்கின்றனர். சங்க இலக்கியத்தைத் தொடர்பவர்களால் தமிழ் மருத்துவத் தத்துவத்தைப் புரிந்துகொள்வது எளிது.

எப்படி சங்க இலக்கியங்கள் நூற்றுக்கணக்கில் தொகுதிகளாக இருக்கின்றனவோ, நவீன இலக்கியங்கள் எப்படி தொகுதிகளாக இருக்கின்றனவோ, அவ்வாறே தமிழ் மருத்துவ இலக்கியங்கள் பெரிய தொகுதி. தமிழ் மொழி வரலாற்றில் பெருங்கால ஓட்டத்தைச் சொல்லும் அருங்கலைச் சொற்களைக் கொண்டவை; தனித்தவை.

மருத்துவம் குறித்த எல்லாமும் வழி வழியாகப் பாதுகாக்கப்படும் வண்ணம் பாடல்களாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு பரம்பரை பரம்பரையாகப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.
மூலிகை என்னும் ஐம்பூதச் செல்வங்களை, ஐம்பூதக் கலவையால் ஆன மனித உடலின் பிணி தீர்க்கும் ஐம்பூதச் சமன்பாடுகளை வகுத்தவர்கள் தமிழ் மருத்துவர்கள் என்று சொல்ல வேண்டும். இதில் பொழுதுகளும் சேரும், ஐந்திணைகளும் சேரும். தாது, சீவப்பொருட்களும் சேரும். இப்படி மனிதனை இந்த அண்டத்துடன் இணைத்துப் புரிந்து கொண்டதுடன், அதை ஒரு கருத்தியலாக நீண்ட நீண்ட காலம் இலக்கியங்களாலும் வாழ்வு நெறிகளாலும் போற்றியவர்களே தமிழ் மருத்துவர்கள்.

சங்க இலக்கிய அறிவும் மொழிபால் பற்றும் தமிழ் மருத்துவத்தைப் புரிந்து கொள்வதை இன்னும் எளிதாக்கிவிடும். தமிழ் இலக்கிய நுகர்வே தமிழர் வாழ்நெறியை நிலைப்படுத்துகிறது.

தமிழர்கள் எங்கெங்கு சென்றாரோ, அங்கெல்லாம் இலக்கியத்தின் வாழ்நெறியினைப் போலவே, தமிழர் தம் மருத்துவப் பண்பாடும் வேரூன்றியிருக்கிறது.

‘உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து’
என்று ஆகியிருக்கிறது.

கவிஞர் குட்டி ரேவதி
11.04.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக