வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வெள்ளச் சேதம்: மழையினால் வந்ததல்ல; மனிதத் தவறுகளால் வந்திருப்பது - கேரளா நமக்குத் தரும் பாடங்கள் :- சுந்தரராசன், பூவுலகின் நண்பர்கள்



கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையை பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் 206.4 மி.மீ மழையும் காசர்கோட்டில் 67 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இந்த அளவிற்கு கடும்மழை பொழிவு இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கருத்தில் கொண்டு கேரளாவிலுள்ள 39அணைகளில் 35அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. கொச்சின் விமான நிலையம் இன்னும் ஒருவார காலத்திற்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உரியிழந்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டுகிறது, முகாம்களில் சில லட்சக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமை சரியாக எவ்வளவு மாதங்கள் என்பதை கணக்கிடமுடியாது என்றும் ஏற்பட்டுள்ள பொருட்ச்சேதம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதைம்  புரிந்துகொள்ள முடிகிறது.

கேரளா சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனையின் தீவிரம் முதல்முறையாக அந்த மாநிலம் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கலாம், ஆனால் இதற்கான எச்சரிக்கைகளை உலகம் வழங்கிக் கொண்டே வந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புவனேஸ்வர் நகரும், கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன. மும்பை நகரம் அடிக்கடி "திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாகிவிட்டது, 2017ஆம் ஆண்டு பெங்களூரு நகரமும், சென்னை 2015லும், ஸ்ரீநகர் 2014 ஆம் ஆண்டும் "திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வரக்கூடிய காலங்களில் "தீவிர காலநிலை நிகழ்வுகள்" (extreme climate events) இன்னும் அதிகமாகும் என்றும் 3 மணி நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் சர்வதேச காலநிலை விஞ்ஞானிகளும், பல்வேறு ஆய்வு அமைப்புகளும் தெரிவித்துவந்தன. மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கையும் இதனை உறுதிப்படுத்தியது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் காந்திநகரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT, Gandhinagar) முக்கியமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. புவியின் வெப்ப அளவு 1.5 முதல் 2 டிகிரி அளவிற்கு உயரும் போது இதைப்போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகமாகும் என்றும் அதுவும் குறிப்பாக "குறுகிய நேரத்தில் அதிகம் மழை பெய்யும்" (Short duration rainfall extremes) தீவிர நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும்  அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. காலநிலை மாதிரிகளை (Climate models) கொண்டு விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர், மூன்று மணி நேரத்தில் மிக அதிக மழை பெய்யக்கூடிய தீவிர நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் 25% அதிகரிக்கும் என்றும் இவற்றை தாங்கக்கூடிய வகையில் நம்முடைய நகர வடிவைமைப்புகள் இருக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறது ஆய்வு.

கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீற்றம் எதிர்பார்த்ததுதான் என்கிறார் புகழ்பெற்ற சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில். இவர்தான் மேற்குத்தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதற்கான அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர். காட்கில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்திருந்தால் இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

இப்போது கேரளாவிலுள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், இது முழுமையாக மழையினால் ஏற்பட்டது அல்ல என்றும் அதிகமானது மனித தவறுகளால்தான் என்கிறார் காட்கில். அறிவியல்பூர்வமற்ற முறையில் நிலமும் மண்வளமும் பயனப்டுத்தப்பட்டதும், நீர்நிலைகளையும் சதுப்புநிலங்களையும் ஆக்கிரமித்து அந் நிலங்களின் பயன்பாட்டை மாற்றியதுதான் முக்கிய காரணம் என்கிறார். 

தமிழகத்திற்கு என்ன பாடம்?

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு சென்னை சந்தித்த வெள்ளத்திற்கு பிறகும் நாம் பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை, இப்போது கேரளாவும் நமக்கு பாடங்கள் சொல்லித்தருகிறது. இனியும் தாமதிக்காமல் தமிழகத்திற்க்கென "காலநிலை குறித்த" கொள்கைகளை வகுத்து தீவிரமாக நடைமுறைப்படுத்தவேண்டும். 1076கி.மீ நீள கடற்கரை கொண்ட தமிழகம் காலநிலை மாற்றத்தால், அதிக தீவிரமான காலநிலை நிகழ்வுகளை சந்திக்கும்/சந்தித்துக்கொண்டுமிருக்கிறது. காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன்னால் நடக்கும் நிகழ்வு, அதன் தாக்கத்தை எப்படி நாம் குறைக்கமுடியும்(mitigation), மற்றும் காலநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்ள முடியும் (adaptability) என்பதை கணக்கில் கொண்டு நம்முடைய அனைத்து திட்டங்களும் தீட்டப்பட்ட வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட போவது நகரங்கள்தான், ஏனென்றால் குறைந்தநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நம் நகரங்கள் கட்டமைக்கப்படவில்லை, குறிப்பாக நகரத்திலுள்ள வடிகால்கள் தினம் பெய்யக்கூடிய மழையின் அளவைக்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. இனிமேல் குறைந்த நேரத்தில், குறிப்பாக மூன்று மணிநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நாம் தயாராக வேண்டும். மாதாந்திர அல்லது தினசரி சராசரிஅளவுகள் எல்லாம் பழங்கதை, இனிமேல் மூன்று மணி நேரத்தில் தீவிர மழைப்பொழிவு சராசரிகள்தான் நம்முடைய செயல்பாடுகளை தீர்மானிக்கும். "நகர்ப்புற வெப்ப தீவு விளைவுகளும்" (urban heat island effect) நகரங்களில் பெய்யும் மழையின் தன்மையை மாற்றக்கூடியது, தமிழகம் அதிகமாக நகர்மயமான மாநிலம் என்பதை இங்கே நாம் நினைவில்கொள்ளவேண்டும். காலநிலை நிகழ்வுகள் கொண்டுவரப்போகும் பொருளாதார இழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும், சில செ.மீ. கடல்மட்டம் உயர்வு நாட்டின் பொருளாதாரத்தை புரட்டிபோட்டுவிடும் என்கிறார் ஸ்டெபானி ஹல்லேகட்டே, இவர் உலகவங்கியின் "பேரழிவு குறைப்பு மற்றும் மீட்பு" அமைப்பின் பொருளாதார நிபுணர். சென்னை தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல, தமிழக பொருளாதாரத்தின் அச்சாணி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் முகம் (face of employment).  சென்னை கடற்கரை நகரம் என்பதை நாம் குறித்துக்கொண்டு அதற்கென தனிப்பட்ட முறையில் "காலநிலை மாற்றத்தை "எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப உதவிகளின் மூலம் இன்னும் துல்லியமாக கணிக்கக்கூடிய காலநிலை மாதிரிகளை உருவாக்கவேண்டும். பொதுவாக விஞ்ஞானிகள் "பொது சுழற்சி மாதிரிகளை" வைத்துதான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தோராயமான தரவுகளை மட்டுமே தரக்கூடியவை, வெப்பசலனங்களால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுப்பது கிடையாது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் புவியின் வெப்பம் உயர உயர இந்த வெப்பசலனங்கள் மேல் எழுந்து, குளிர்ந்து, மழைப்பொழிவு அதிக அளவில் நடைபெறும். இவற்றை கணக்கிலெடுக்கும் வகையில் நம்முடைய ஆய்வு மாதிரிகள் உருவாக்கப்படவேண்டும், மற்றொரு ஆய்வு "இரு தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கு" இடையே உள்ள இடைவெளியை பற்றியதாக இருக்கவேண்டும்.

சமீபத்தில் அமெரிக்காவின் "நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்" "காலநிலை மாற்றம்" குறித்து  வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மேலும் கவலைகொள்ளக்கூடிய விஷயங்களை கொண்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. தற்சமயம் ஐரோப்பிய நாடுகள் மிகக்கடுமையான வெப்பநிலையை சந்தித்துக்கொண்டிருப்பது இந்த ஆய்வுகளின் கூற்றுக்களை உண்மையாக்கிக்கொண்டிருக்கிறது.

"காலநிலை மாற்றம்" மிக முக்கியமான பிரச்சனையாகும், மானுடத்தின் இருத்தியல் (existence) குறித்ததாகும். அதன் தாக்கத்தை குறைப்பதும் எதிர்கொள்வதற்கான வழிகளை மேற்கொள்ளவது மட்டுமே நம்முடைய இருப்பை உறுதிப்படுத்தும். மேலும் இது நாளைய பிரச்சனை அல்ல இன்றைய பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வியாழன், 12 ஜூலை, 2018

யானைத் தடங்கள் : இரவி பேலட்

யானைத் தடங்கள் நிரம்பிய ஒரு மலை வனம் சிதைவுக்குள்ளாகிக் கொண்டிருப்பதைத் தமது பயணப் பாடுகளின் வழியே விவரிக்கிறார் ஓவியர் இரவி பேலட்.

சென்ற மே மாதம் மூனாா் சென்றிருந்தபோது காட்டு நடைக்கு என்னுடன் உள்ளுா் ஆள் எவரும் வரத் தயாாில்லை.  காட்டில் திாிவது இப்போது அச்சமூட்டும் விஷயமாகிவிட்டது.  எந்நேரத்திலும், எங்கும், எப்போதுவேண்டுமானாலும் யானைகள் தன்னிச்சையாய் கட்டற்று உலாவுகின்றன.

தனது வரையறுத்த பாதைகளும், பாரம்பாியமான வாழ்விடங்களும் பறிபோக யானைகள் மிரண்டு குழம்பிப் போய்விட்டன.  அங்குள்ளோாின் அடாவடி ஆக்கிரமிப்பில் யானைகள் பிரசவிக்கும் பிரத்தியேக இடங்கூடத் தப்பவில்லை.  கோபமுற்ற யானைகள் சில இடங்களைச் சிதைத்துப் போட்டிருக்கின்றன.  அப்படிச் சிதைத்துப் போட்ட இடங்கள் யாவும் யானைகளுக்கானது மட்டுமே. (இதில் யானைகள் பிரசவ இடமும் அடக்கம்)

வனச்சோலை அழிப்பு, தண்ணீா்ப் பிரச்சனை, வாழ்விட ஆக்கிரமிப்பு என இப்பகுதி யானைகள் மிகுந்த அல்லறுற்று அலைக்கழிகின்றன.  ஆனால், அங்குள்ளோா் அறமற்று அநியாயமாய் யானைகள் மீது ஆக்ரோஷமான கோபத்திலிருக்கிறாா்கள்.

சில யானைகள் மனிதா்களைக் கண்டதும் குறிப்பாய் ஒற்றை யானை, பசித்த புலி போல் எதிா்கொள்கின்றன.  மனிதா்களும் யானையினைப் பாிவற்று ஒரு மகா எதிாி போலப் பாவிக்கிறாா்கள்.

இதில் போதிய பாதுகாப்பற்று காட்டில் உலவுவது பயங்கரமான காாியம்போலானது.  வசீகரமான ரம்மியம்மிக்க இந்தக் காட்டுப் பகுதி இப்போது பயங்கரப் பகுதியாக மாறிப் போனதில் மிகுந்த வருத்தம்.
புத்துணா்வுமிக்க ஏகாந்தமான ஒரு காட்டுவெளி நடைப் பயணத்தை ஒரு சாகசப் பயணமாக மேற்கொள்ள எனக்குத் தைாியமில்லை.  இம்முறை காட்டுப் பயணத்தைக் கைவிட்டது மிகுந்த துயரமாகிவிட்டது.

இம் மலைப் பகுதியில் சுமாா் நான்கு வருடம் முன்பு நானாக காட்டுக்குள் வழிதவறி விட்டேன்.  மறுபடியும் வந்த வழியே பின்னோக்கி வந்து, வழிப்போக்கா் ஒருவாின் உதவியோடு சாியான பாதை கண்டு, இருப்பிடம் வந்து சோ்ந்தது ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது.  இப்போது அதை நினைத்தால் நடுக்கமாக இருக்கிறது.

செவ்வாய், 26 ஜூன், 2018

எட்டு வழிச் சாலை : அழியப் போகும் பல்லுயிர்ச் சூழல்.

5 மாவட்டங்களில் 8 மலைகளை அழிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன்மலை, தர்மபுரி மாவட்டத்தில் சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுத்திமலை, வேதிமலைகள் உடைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்காக இயற்கை வளங்களை அழித்ததால், நாம் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறோம். எனவே, இயற்கை கொடுத்த கொடையான மலை வளத்தை அழிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என இயற்கை ஆர்வலர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

வட தமிழகத்தின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க காத்திருக்கும் கார்ப்பரேட்டுகள்
மலைகளை அழிப்பதால், அங்கு வாழும் உயிரினங்கள் மடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மலைகளில் இருந்து வரும் நீர் வழித்தடங்கள் முற்றிலும் காணாமல் போகும் நிலையும் உருவாகியுள்ளது.

இச்சாலையை கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைக்க முடிவு செய்துள்ளனர். இந்த மலைத்தொடரில் ஜருகுமலையின் பகுதியான சேலம் நிலவாரப்பட்டியில் இருந்து அயோத்தியாப்பட்டணத்திற்கு இடைப்பட்ட இடங்களில் மூன்று இடங்களில் மலையை குடைந்து சுரங்கபாதை அமைக்கப்படுகிறது.

இதுதவிர அருநூற்றுமலை, சேர்வராயன்மலை, கல்வராயன் மலையையொட்டி சாலை அமைக்கப்படுகிறது. இதில், 16 வனப்பகுதிகள் உள்ளன. சுமார் ஆயிரம் ஏக்கர் வன நிலங்கள் பாதிக்கப்படும். இவ்வனப்பகுதிகளில் கரடி, மான், காட்டெருமை, நரி, காட்டுபன்றி உள்ள விலங்குகளும், பறவையினங்களும் உள்ளன. குறிப்பாக சேர்வராயன் மலைத்தொடரில், அரிய வகை பறவையினங்கள் வாழ்கின்றன. இந்த உயிரினங்கள் பெருமளவு அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் ராவண்டவாடி, அனந்தவாடி ஆகிய இடங்களும் பெரிய வனப்பகுதியாகும். அதேபோல், செங்கல்பட்டில் நம்பேடு, சிறுவாச்சூர் என்ற இடங்களும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. செய்யாறு பகுதியில் சிறு மலைகள் இருக்கின்றன. இங்கு வாழும் உயிரினங்களும் மடியும் நிலை உள்ளது. இம்மலைகளில் உற்பத்தியாகும் நீர்வழித்தடங்கள் கடுமையாக பாதிக்கும். வன நிலங்களை கையகப்படுத்தும்போது, வனத்தில் இருக்கும் விலங்குகள் ரோட்டுக்கு வந்து வாகனங்களில் அடிப்பட்டு இறக்கும் சம்பவம் நிகழும்.

மேலும், வாகனங்களின் இரைச்சல் சத்தம் அதிகரிக்கும்போது, பறவைகள் இடம் பெயர்ந்துவிடும். ஜருகுமலை, அருநூற்று மலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை, சித்தேரிமலை, கவுத்திமலை, வேதிமலையில் ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும்.

கடந்த 1990-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலையில் வனப்பகுதிகள் அழிப்பால் 50 சதவீத மழைப்பொழிவு குறைந்துள்ளது. தற்போது 8 வழிச்சாலை அமைத்தால், இயற்கை வளம் முழுமையாக பாதிக்கும். இதனால் மழைப்பொழிவு குறைந்து வறண்ட பூமியாக இந்த 5 மாவட்டங்களும் மாறும். வெயிலின் தாக்கம் அதிகரித்து தட்பவெட்ப நிலையும் நிரந்தரமாக மாற வாய்ப்புள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் சேர்வராயன்மலை அடிவாரத்தில் வாணியாறு அணை உள்ளது. இந்த அணையையொட்டி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதனால் சேர்வராயன்மலையில் இருந்து வழிந்தோடும் நீர், வாணியாறு அணைக்கு வந்து சேராது. இப்படி பல்வேறு வகையில் விவசாயிகள், மலைகளில் வாழும் பழங்குடியின மக்கள், விலங்கினங்கள் பாதிக்கும் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் எருமபாளையம், நிலவாரப்பட்டியில் விவசாயிகள், பொதுமக்கள் கடந்த சில நாட்களாக சாலை மறியல், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Raju imanuel அவர்களது பதிவிலிருந்து.

திங்கள், 25 ஜூன், 2018

எட்டு வழிச்சாலை : சுற்றுச்சூழல் மீது தொடுக்கப்படும் போர் ! :- சந்திரமோகன்.


 சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைக்கு அழிக்கப்பட உள்ள அடர்ந்த வன நிலங்களின் குறைந்த பட்ச அளவு 120 ஹெக்டேர் [300 ஏக்கர்], நீளம் 10 கி.மீ முதல் 13 கி.மீ வரை இருக்கும்" என NHAI திட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

 செங்கல்பட்டு அருகேயுள்ள சிறுவாஞ்சூர், ஆரணி அருகே நம்பேடு, போளூர் அருகே அலியாள மங்கலம், செங்கம் அருகே ராவண்டவாடி (கவுத்தி மலை பகுதி), மஞ்சவாடி (சேர்வராயன் மலை), சேலம் அருகேயுள்ள  ஜருகு மலை ஆகிய பகுதிகளில் அடர்ந்த வனங்கள், காட்டு மரங்கள், வன விலங்குகள், அரிய உயிரினங்கள் அழிக்கப்பட உள்ளன.  தமிழக வனத்துறை இதுவரை
தெளிவுபடுத்தவில்லை.

சேர்வராயன் மலைப்பகுதியில் ஏற்படவுள்ள அழிவு பற்றி மட்டும் பார்ப்போம்.
சேர்வராயன் மலையின் கிழக்கு புறத்தில் மஞ்சவாடி கணவாய் பகுதியில், சுமார் 1.78 கி.மீ நீளத்தில் மலைப் பகுதியில், சுமார் 100 ஏக்கர் வன நிலத்தை அழித்து இந்த பசுமை வழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த வனப் பகுதியில் மலைச் சரிவில் 18 ஏக்கர் பரப்பில் "வால்" போன்ற நீளமான செங்குட்டை ஏரி உள்ளது. இதைப் பிளந்து கொண்டு தான் பசுமைச் சாலை செல்கிறது.

 இதனால் சுற்றுச் சூழல் இயற்கைக்கு என்ன பாதிப்பு ??
கடல் மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயரமுள்ள இந்த வனப் பகுதி, காட்டு மரங்கள், புற்கள் (Grass), செடிகொடிகள், பிரண்டைகள் ஆகியவற்றை கொண்டுள்ள, காடுவாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வனமாகும். ஈட்டி, கருங்காலி, வேப்ப மரங்கள், நாக மரங்கள்  துவங்கி 5 ஆண்டுகள் வளர்ச்சியுள்ள தேக்கு, சந்தன மரங்கள் நிறைந்துள்ள பகுதியாகும். சாலை நெடுகிலும்  பல்லாயிரக்கணக்கான மூங்கில் மரங்கள் நிறைந்துள்ள பகுதியாகும். வனத்திலுள்ள  மரங்கள் தான் நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கின்றன ; சுற்றுச் சூழலில் உள்ள கார்பன் டை ஆக்சைடு & கார்பன் மோனோ ஆக்சைடு போன்றவற்றை உறிஞ்சிக் கொண்டு, ஆக்சிஜனை/ சுத்தமான காற்றை நமக்கு வழங்குகின்றன.

மூங்கில் தோப்புகள் அழிவதால் ....

 இத்தகைய உயரம் குறைந்த இடத்தில் தான் மூங்கில்கள் பெருமளவில்  விளைகிறது. மூங்கிலின் அடிப்பகுதி பெருமளவில் கார்பன்டையாக்சைடு உறிஞ்சும் ஆற்றல் மிக்கது; ஆழமான வேர்கள் இல்லாததால் குறைவான நீரையே எடுத்துக் கொள்ளும் ; அதே சமயம் சுற்றிலும் ஈரப் பதத்தை பாதுகாக்கும். மூங்கில் அரிசி மற்றும் குருத்து மூங்கில் உணவாக பயன்படுகிறது. இன்றளவும் கூட அப்பகுதியில் உள்ள மலையாளிகள் /பழங்குடியினர் மூங்கில் அரிசியை சேகரித்து பயன்படுத்தி வருகின்றனர். [மூங்கில் குருத்துக்கள் யானைகளுக்கும் கூட உணவாகும். 200 ஆண்டுகளுக்கு முன்னர், பன்னர்கட்டா - ஒசூர்-தொப்பூர்_மஞ்சவாடி_கல்ராயன் மலை என விரிந்திருந்த யானை வழித் தடம், சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையால் தடுக்கப்பட்டு விட்டது, வேறு ஒரு செய்தியாகும்]…

செங்குட்டை ஏரியின் அழிவால்.....

இன்றும் கூட/கோடையிலும்  தண்ணீர் உள்ளது. சேர்வராயன் மலையின் மான்கள், கேழா மான்கள், காட்டு எருமைகள், காட்டு பன்றிகள், செந் நாய்கள், குள்ள நரிகள்,காட்டு முயல்கள், கீரிகள் என அனைத்து வன விலங்குகள் வந்து தாகம் தணிக்கும் ஏரி இந்த செங்குட்டை ஏரியாகும்.

அருகி வரக்கூடிய endangered  உயிரினங்களான எறும்புத் திண்ணிகள், மூங்கிலத்தான் @ மூங்கில் அணில்கள், உடும்புகள், தேவாங்குகள் போன்றவை உயிர் வாழும் பகுதியுமாகும். கூட்டம் கூட்டமாக மயில்களை இங்கு பார்க்க முடியும்; பலவகை குருவிகள், காடை கவுதாரிகள், காட்டுக் கோழிகள் ஆகியவன வாழும் பூமியாகும்.
 இயற்கையின்_ஒரு_சங்கிலி_அறுந்தால்_மற்றொரு_சங்கிலியும்_அழியும்! ஒரு நெடுஞ்சாலைக்காக வனங்கள் அழிக்கப்பட்டால்......

1)மஞ்சவாடி வனம் புற்கள் நிறைந்த பகுதியாகும். இந்த புற்தரைகள் மலைப் பகுதியின் ஈரத்தை தக்க வைத்துக் கொள்கின்றன; மற்றொரு வகையில் புல் தாவரங்களை, மருத்துவ குணம் மிக்க  பெரண்டைகளை உண்டு வாழும் விலங்குகள், இவை அழிக்கப்பட்ட உடனே இரை தேடி வனத்திற்கு வெளியே வந்து மனிதர்களிடம் இரையாகும். புற்கள் Grass இல்லாமல் பல விலங்குகள் உயிர் வாழ முடியாது.

 2)கரையான், எறும்பு புற்றுகள் அழிக்கப்பட்டால், அதை உணவாக கொள்ளும் பாம்புகள், பல்லிகள், ஓணான்கள் இரை தேடி வெளியே வந்து மனிதர்களிடம் சிக்கி அழியும் அல்லது உணவில்லாமல் மெல்லச் சாகும்.

 3)பறவைகளின் உணவகம், வாழ்விடம் மரங்கள் தான். அவைகள் அழிக்கப்பட்டால் பறவைகள் வெளியேறும்; உணவில்லாமல் தவிக்கும், அழியும்.

4)மற்றொரு புறம் மரங்கள் அழிக்கப்பட்டால் மனித குலத்துக்கு கேடு. சுற்றுச் சூழலில் ஆக்ஸிஜன் அளவு குறையும்; வெப்பம் அதிகரிக்கும்; நிலத்தடி நீர் மட்டம் சரியும்.
 #ஒரு_வனத்தின்_அழிப்புக்கு_ஈடு_செய்ய_
50ஆண்டுகள்_வேண்டும்!
 சுற்றுச்சூழல் சமநிலையை Eco system த்தை அவ்வளவு சீக்கிரமாக மீட்க முடியாது.  #ஒரு_சங்கிலி_அழிந்தால்_உயிர்_சங்கிலி_அறுந்து_போகும்!
மஞ்சவாடி கணவாயில் அமைக்கும் நெடுஞ்சாலைக்கு இத்தகைய தாக்கம்/அழிக்கும் ஆற்றல் இருக்கும்போது, ஜருகு மலையில், கவுத்தி மலை வனத்தில், ராவண்டவாடி, அலியாள மங்கலம், நம்பேடு, சிறுவாஞ்சூர் வனங்களில் ஆங்காங்கே உள்ள குறிப்பான வன_உயிரினங்கள் சமன்பாடுகளில் எத்தகைய அழிவு ஏற்படும்?

"இயற்கையை ஒருமுறை கெடுத்தால், அது பதிலுக்கு பலமுறை நம்மை கெடுத்துவிடும் " என்றார், #எங்கெல்ஸ்.
 #வனங்களை_காடுகளை_அழிப்பது_மற்றொரு_பேரழிவு! #பசுமை_வழி_சாலை_அழிவுப்பாதை!
#உடனே_நிறுத்து! #Stop_Greenway_Corridor! #Save_Environment #Save_Biodiversity #Save_Nature

சனி, 23 ஜூன், 2018

எட்டு வழிச்சாலை நிலப்பறிப்பு - நிலமற்றவர்களின் பிரச்சினையும் கூட : - சிறீதர் சுப்பிரமணியம் .

எட்டு வழிச் சாலை பற்றிய விவாதங்களை பார்க்கும் போது நான் இங்கிலாந்தில் இருந்த போது நடந்த இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

நாங்கள் தெற்கு விம்பிள்டனில் வசித்து வந்தோம். அது அமைதியான, ஆரவாரமில்லாத ஒரு பகுதி. அங்கே ரயில் நிலையமே வெறிச்சோடித்தான் இருக்கும். அதனருகில் ஒரு எட்டு அடுக்கு மால் ஒன்று கட்டும் திட்டத்தை விம்பிள்டன் கவுன்சில் கொண்டு வந்தது. விம்பிள்டன் மொத்தமுமே எடுத்தால் கூட மூன்று மாடிக்கு மேல் எந்தக் கட்டிடமும் பார்க்க முடியாது. அந்த மால் தெற்கு விம்பிள்டனின் அமைதியை, அழகை கெடுத்து விடும் என்றும் அந்தப் பகுதியில் டிராஃபிக்கை அதிகரித்து விடும் என்றும் சர்ச்சை எழுந்தது. அந்தப் பகுதி மக்கள் சேர்ந்து ஒரு வாக்கெடுப்பை நடத்தினார்கள். அதில் பெரும்பாலோர் மால் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் பாத் ஸ்பா எனும் ஊரில் வேலை செய்து வந்தேன். அங்கே என் அலுவலகம் போகும் தெருவில் இருந்த மரம் ஒன்று வேர் பரப்பியதில் அருகே இருந்த ஒரு மியூசியத்தில் அஸ்திவாரம் பாதிப்புக்குள்ளாக  ஆரம்பித்தது. ஆகவே அந்த மரத்தை வெட்டி விட லோக்கல் கவுன்சில் முடிவெடுத்தது. அதற்கு ஒரு மாதம் கழித்து ஒரு தேதி குறித்து அந்த செய்தியை ஒரு போர்டில் அச்சடித்து அந்த மரத்தில் மாட்டி விட்டார்கள். குறித்த தேதியில் அந்த மரம் வெட்டப்படும் என்றும், அதற்கு ஆட்சேபம் தெரிவிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு தொலைபேசி எண்ணும் குறிப்பிடப் பட்டிருந்தது. ஒருவர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு அந்த மரத்தை தன் இல்லத்து தோட்டத்தில் தன் செலவிலேயே நட்டுக் கொள்வதாக கூறி விடவே, வெட்டும் திட்டம் கைவிடப்பட்டது. மரத்தை பெயர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் ஒதுக்கப் பட்டது. அன்று பந்தல் போட்டு கேக், ஷாம்பேன் எல்லாம் போகிற வருகிறவர்களுக்கு கொடுத்தார்கள். (நானும் போயிருந்தேன்.) மரத்தை சுற்றி ஐந்து அடிக்கு வட்டமாக வெட்டி அதனை ஆக்டொபஸ் மாதிரி ஒரு இயந்திரத்தால் அப்படியே பெயர்த்து டிரக் ஒன்றில் படுக்க வைத்து விட்டார்கள். பொதுமக்களின் பலத்த கரவொலியோடு அந்த மரம் தன் புதிய வீட்டை நோக்கி பயணித்தது.

எட்டு வழிச்சாலை தேவையா, இல்லையா அல்லது அதற்கு ஆகும் பணவிலை, சமூக விலை, சுற்றுச்சூழல் விலை இவையெல்லாம் அதனால் வரும் பலனுக்கு ஈடாகுமா என்பதெல்லாம் தனிக் கேள்விகள். நான் படித்துப் பார்த்த வரை அந்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. அரசின் Project Feasibility Report எனப்படும் தகவல் அறிக்கையே கூட முழுமையாக, ஆழ்ந்த ஆராய்ச்சியில் தயாரிக்கப் பட்டதாக தெரியவில்லை. பழைய வேறு ரிப்போர்ட்களில் இருந்து நிறைய பகுதிகள் காபி பேஸ்ட் செய்தது மாதிரிதான் இருக்கிறது. காடுகள் அழிக்கப்படும், மலைகள் உடைக்கப்படும், விளைநிலங்கள் அழிபடும், ஏரிகள் மூடப்படும் ஒரு மாபெரும் ப்ராஜக்ட் பற்றிய முழுமையான தகவலை மக்களுக்கு அளிக்க வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் கடமை. அந்த ரிப்போர்ட்டில் உள்ள குழப்பங்கள் பற்றிய தெளிவுகளை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. நிலக்கையகப் படுத்தும் சட்டத்திலேயே இந்த மாதிரி திட்டங்களுக்கு Impact Assessment என்று ஒன்று நடத்த வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. அதாவது இந்தத்திட்டத்தால் நிகழும் சமூகத் தாக்கம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இது என்னவென்றால், நிலம் உள்ளவர்களுக்கு இழப்பீடு கிடைத்து விடும். ஆனால் நிலம் அற்ற, ஆனால் அந்தப் பகுதிகளை நம்பி இருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருப்பார்கள். அவர்கள்தான்  மெஜாரிட்டி. அவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசிடம் உள்ள தீர்வு என்ன? அங்கே இருக்கும் வரலாற்று சின்னங்கள், வழிபாட்டு தலங்கள், காடுகளை அண்டி வாழும் பழங்குடியினர் நிலை என்ன? அந்த Impact Assessment கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் இவை.

உதாரணத்துக்கு, அந்த எட்டு வழிச்சாலை அண்ணாமலையார் கோயில் வழி போக வேண்டும் என்றாலோ ரமணாசிரமம் வழி போக வேண்டும் என்றாலோ அந்தக் கோயில் தகர்க்கப் பட வேண்டி இருக்கும். அப்படி நடப்பதற்கு நம்மில் யாராவது ஒப்புக் கொள்வோமா? வளர்ச்சித் திட்டத்துக்குத்தானே கோயிலை தாரை வார்க்கிறோம் என்று நாம் யோசிப்போமா? அது நடக்கவே நடக்காது இல்லையா? அந்தக் கோயிலை சுற்றிக் கொண்டு போகும் படிதான் சாலையை கட்டமைப்போம். இதே மாதிரி அண்ணாமலை கோயிலை விட பழமையான அல்லது உணர்வுபூர்வமான ஒரு வழிபாட்டுத்தலம் திட்டப்பகுதியில் வாழும் ஒரு பழங்குடியினருக்கு இருக்கக் கூடும். அந்தத் தலம் மட்டுமே அவர்கள் மதத்தின் திருத்தலமாக இருக்கலாம். அப்போது அது தகர்க்கப்படும் பட்சத்தில் அவர்களின் வாழ்வியலே உடைபடலாம். (ஒடிசாவில் இப்படி நடந்திருக்கிறது).

அதே போல அந்த கிராமங்கள் அழிபடும் போது அங்கே உள்ள நிலமற்றோர் எங்கே குடிபெயருவார்கள்? அவர்கள் பல்லாயிரக்கணக்கில் அருகில் உள்ள நகரங்களுக்கு குடிபெயர்வார்கள். அப்போது அங்கே புதிய குப்பங்கள், பிளாட்பாரக் குடியிருப்புகள் உருவாகும். அவற்றின் பாதிப்பு அந்த நகரத்தில் எப்படி இருக்கும். அதனால் அந்த நகரத்தின் நிர்வாகத்துக்கு ஆகும் செலவுகள், பாதிப்புகள் என்னென்ன? (இந்த செலவும் ப்ராஜக்ட் திட்ட செலவில் சேர்க்கப் படவேண்டும்.)

இதையெல்லாம் இந்த Impact Assessment ஆய்வு வெளிக்கொணர வேண்டும். சுதந்திர இந்தியா துவங்கியதில் இருந்து அணைக்கட்டுகள், அரசுத் தொழிற்சாலைகள் போன்றவற்றுக்காக இடம்பெயர்க்கப் பட்டோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு கோடியைத் தாண்டும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இவர்கள் எங்கே உள்ளார்கள். என்ன செயகிறார்கள், அவர்கள் மறுகுடியிருப்புக்கு நம் அரசுகள் செய்தது என்ன என்பதற்கான எந்தத் தகவலும் தெளிவாக இல்லை. ஒரு தேசத்தில் இருந்து போர், கலவரம் காரணமாக வேறு தேசத்துக்கு புகலிடம் தேடுவோருக்கு அகதிகள் (refugees) என்று பெயர். நம் ஊரில் உள்தேசத்திலேயே இரண்டு கோடி அகதிகள் அட்ரஸ் இல்லாமல் உள்ளனர். வெளிதேசத்து அகதிகளுக்காக ஐநா சபை முதற்கொண்டு அம்னெஸ்டி இன்டர்நெஷனல் வரை வரிந்து கட்டிக் கொண்டு வரும் அமைப்புகள் உள்ளன. உள்நாட்டு அகதிகளுக்காக இந்த மாதிரி யாருமே இல்லை.

இந்தப் பிரச்சனைகளால்தான் முந்தைய மத்திய அரசு இந்த Impact Assessmentஐ முக்கிய தேவையாக வைத்து சட்டத்திருத்தம் செய்தது. புதிய பாஜக அரசு பதவி ஏற்றதும் முதல் வேலையாக இந்த பாதிப்பு ஆய்வு தேவையை நிலக்கையகப் படுத்தும் சட்டத்தில் இருந்து நீக்க முயன்றது. ஆனால் அதற்கு வந்த எதிர்ப்பாலும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததாலும் அந்த சட்டத்திருத்தம் கைவிடப்பட்டது. இது பற்றி நான் ஒரு பதிவு எழுதினேன். ++

இது தவிர இந்தத்திட்டத்துக்கு வரும் எதிர்ப்புகளை இந்த அரசு அணுகும் விதமும் கவலையளிக்கிறது. சீனாவில் கட்டமைப்பு திட்டங்களுக்கு வரும் எதிர்ப்புகளை அந்த அரசு எப்படி எதிர்கொள்கிறது என்பது பற்றி முன்னர் ஒரு முறை எழுதி இருந்தேன்.+++ அது சீன அரசு; அங்கே ஜனநாயகம் எல்லாம் கிடையாது. அனால் இது ஜனநாயக நாடு. இங்கே இந்த அரசு நடந்து கொள்ளும் விதம் திட்டம் பற்றிய விவாதம் என்று ஒன்று எழுவதையே இவர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. இத்திட்டம் நல்லதாக, பயனுள்ளதாகவே கூட இருக்கலாம். ஆனால் இது மக்கள் மேல் திணிக்கப்படக் கூடாது. ஒரு நல்ல ஜனநாயக அரசில் அரசே இதற்கு வரும் எதிர்வாதங்களுக்கு தளம் அமைத்து அந்த விவாதம் ஆரோக்கியமாக நடைபெற உதவ வேண்டும். இந்த திட்டம் மக்களுக்காகவே என்றால், இந்த திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகாது என்றால், இதனால் இடம் பெயர்க்கப் படும் மக்களுக்கு போதிய மறு வாழ்வாதாரம் அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளது என்றால் அதனை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த பிரச்சாரம் மிரட்டல், கைதுகள் எல்லாம் இல்லாத ஒரு அமைதியான சூழலில் இடம் பெற வேண்டும். போராட்டம் செய்பவர்கள் எல்லாருமே சமூக விரோதிகள் என்று பிம்பங்கள் கட்டமைக்கப்படும் சூழலில் இந்த விவாதம் நடைபெறுவது ஆபத்தானது. அது இந்த அரசின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

கடைசியாக, ‘இதுவரை போடப்பட்ட சாலைகள் எல்லாமே காடுகளை அழித்துப் போட்டதுதானே? சென்னையே காடுகளின் சமாதியில்தான் அமைக்கப் பட்டிருக்கிறது. அதெல்லாம் ஓகே, ஆனால் பசுமை வழிச் சாலை மட்டும் கூடாதா?’

என்கிற மாதிரி வாதங்கள் நிறைய வருகின்றன.

நாம் பரிணாம வளர்ச்சி அடைந்ததில் இருந்து மானுட நாகரிகமே காடுகளின் சமாதிகளில்தான் கட்டமைக்கப் பட்டிருந்தது. அதற்குக் காரணம் நமக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றியோ, காடுகளின் முக்கியத்துவம் பற்றியோ, உணவு- மற்றும் உயிரின-சங்கிலிகள் பற்றியோ எந்த விழிப்புணர்வும் அப்போது இருக்கவில்லை. இன்று நாம் புரிந்து வைத்திருக்கும் Environmentalism பற்றிய சிந்தனாவாதங்களே  எழுபதுகளில்தான் உருப்பெற ஆரம்பித்தன. அது புதிய நூற்றாண்டில் தீவிரமாக அரசுகளால் நடைமுறையில் பின்பற்ற ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. Climate Change எனப்படும் பூமி வெப்பமயமாவதின் ஆபத்து எல்லாருக்கும் இப்போது தெரிந்து விட்டது.

டிரம்ப் மாதிரி ஓரிரு அறிவிலி தலைவர்கள் தவிர மற்ற உலக அரசியல்வாதிகள் அனைவருமே இப்போது இதனைப் புரிந்து கொண்டு விட்டார்கள். இதனால்தான் உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தேசத்துக்கு தேசம் தனித்தனியாக இலக்கு வைத்து அமைந்த பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்து இட்டிருக்கிறது. அமெரிக்காவே இதில் இருந்து விலகிய பின்னரும் கூட ‘இந்தியா தன் இலக்கை நோக்கிப் பயணிக்கும்,’ என்று பிரதமர் மோடி உறுதி அளித்து அப்போதே உடனடியாக அறிக்கை வெளியிட்டார்.

எனவே அப்போது செய்தோமே, இப்போது செய்யக் கூடாதா என்பதே அர்த்தமற்ற கேள்வி. அப்போது மாறி மாறி போர்கள் தொடுத்துக் கொண்டிருந்தோம், பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தோம், சில சாதியினரை ஊரை விட்டு விலக்கி வைத்திருந்தோம், இவையெல்லாம் அசிங்கம் என்று புரிந்து கொண்டு மாற முயற்சி செய்வது மாதிரி இதையும் புரிந்து கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் பாதிப்பு இல்லாத வகையில் வளர்ச்சிகள் கொண்டு வரவேண்டும் என்பது புதிய உலகத்தின் புதிய விதிமுறைகள். அதிலும் இந்த Climate Change பெரிதும் பாதிப்பது இந்தியா மாதிரி வளரும் நாடுகளைத்தான். 2015ல் நடந்த சென்னை வெள்ளம் கூட சுற்றுச்சூழல் பாதிப்பின் விளைவுதான்.

சரி, அப்படி என்றால் எப்படித்தான் வளர்ச்சி, முன்னேற்றம் எல்லாம் காண்பது என்றால் இன்று சுற்றுச்சூழலை பாதிக்காமல், அல்லது மிகச்சிறிய அளவிலான பாதிப்புகளை மட்டுமே வைத்து வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. அவற்றை Sustainable Development என்று அழைக்கிறார்கள். அவை ஓரளவுக்கு அதிக செலவைக் கொடுத்தாலும் நீண்ட பலனை அளிக்கிறது. இந்தத் தொழில் நுட்பங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன. இதில் தொடர்ந்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. நாம் கொஞ்சம் முயன்றாலே இவற்றைப் பின்பற்றி கட்டமைப்புகளை செயலாக்க முடியும்.

ஆனால், இந்த மாதிரி எல்லாம் செய்வதற்கு சமூக அக்கறை, பன்னாட்டு வளர்ச்சி திட்டங்கள் பற்றிய அறிவு, ஜனநாயக முதிர்ச்சி இவையெல்லாம் தேவைப்படும். ‘இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்!’ என்கிற சிந்தனாவாதத்தில் தலைவர்கள் உழலும் நிலையில் இவையெல்லாம் சாத்தியப்படாது.

வியாழன், 21 ஜூன், 2018

எட்டு வழிச் சாலை என்கிற ராணுவச் சாலை.

சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலைக்கான ஏற்பாடுகள் இதுவரை தமிழகத்தில் எந்த சாலைத் திட்டத்துக்கும் பயன்படுத்தப்படாத தொழில்நுட்பக் கருவிகளோடும், அதிகார கெடுபிடிகளோடும் நடத்தப்பட்டு வருகின்றன.

நிலத்தை அளக்க வரும்போதே அரசு அதிகாரிகளும், அவர்களுக்குப் பாதுகாப்பாக போலீஸாரும் குவிக்கப்படுகின்றனர். அங்கே எதிர்ப்புக்காக ஒரு சிறு குரல் எழுந்தால்கூட உடனடியாக அந்தக் குரலின் குரல்வளை நெரிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். பரம்பரை பரம்பரையாகத் தங்கள் விவசாய பூமியை அனுபவித்து வரும் மக்கள் ஒரே பகலில் தூக்கித் தூர வீசப்படுகிறார்கள். கேட்டால் கைது, போலீஸ் நிலையம் என்று துன்புறுத்தப்படுகிறார்கள்.

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இப்போது இந்தக் கொடுமைகள் ஆரம்பித்துள்ளன. அடுத்து இந்தப் பசுமை எட்டு வழிச் சாலை அமையும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் போராட்டங்களும் கடுமையான ஒடுக்குமுறைகளும் அரங்கேறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

ஏன் இந்த சாலைத் திட்டத்துக்கு மட்டும் இவ்வளவு கெடுபிடி?

ஜூன் 11 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசும்போது இந்தச் சாலை அமைக்கப்படுவதற்கான காரணங்களை விளக்கினார். முதல்வர் குறிப்பிட்ட காரணங்களைக் கவனமாக நோக்குங்கள்.
முதல்வர் சொன்ன காரணங்கள்!

“சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்வதற்கு தற்போதுள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வழியாக சுமார் 360 கிலோமீட்டர் அல்லது சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சுமார் 350 கிலோமீட்டர் பயணித்து சேலம் செல்ல வேண்டும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பயணித்தால் பயண நேரம் சுமார் 5 மணி நேரமாகும்.

தற்போது, இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் இதன் கொள்ளளவைவிட 130 சதவிகிதம் மற்றும் 160 சதவிகிதம் அதிகமாகப் போக்குவரத்து செறிவு உள்ள காரணத்தினால், இச்சாலையில் விபத்துகள் மிகவும் அதிகமாக நடைபெறுகின்றன. இன்னும் 10 வருடங்களில், இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும், போக்குவரத்தானது 1,50,000 (Passenger Car Unit - PCU) அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு சாலைகளையும் விரிவுபடுத்தினால், போக்குவரத்து செறிவு 60 ஆயிரம் PCU லிருந்து 1 லட்சம் PCU வரை மட்டுமே அதிகப்படுத்தலாம்.

ஆனால், இந்தப் புதிய எட்டு வழிச்சாலையின் போக்குவரத்து கொள்ளளவு 80,000 போக்குவரத்து செறிவு (PCU) ஆக இருந்தாலும், இச்சாலையானது பசுமை விரைவு நெடுஞ்சாலையாக உள்ளதால், இதன் போக்குவரத்து கொள்ளளவு 1,50,000 போக்குவரத்து செறிவு ஆகும். எனவே, தற்போதுள்ள இரண்டு நெடுஞ்சாலைகளின் 1 லட்சம் (PCU) உடன் சேர்த்து 2 லட்சத்து 50 ஆயிரம் (PCU) கொள்ளளவு பயன்பாட்டிற்கு வரும். மேலும், இந்தப் பசுமை வழி விரைவு சாலையுடன் நேரடியாகப் பிற குறுக்கு சாலையில் இணைவது முறைப்படுத்தப்பட்டு அணுகுசாலை மூலமாக, அல்லது கீழ்மட்ட பாலங்களின் வழியாகக் கடப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதால், விபத்துகள் பெருமளவு குறையும். அதே நேரத்தில், பெருகிவரும் போக்குவரத்து செறிவையும் தாங்கி பயன் அளிக்கும்” என்கிறார் முதல்வர். அதாவது முதல்வர் குறிப்பிடும் முதல் காரணம் போக்குவரத்து நெரிசல் குறையும்.தொழில் வளர்ச்சி ஏற்படுமாம்!

அடுத்து, “இந்தப் பசுமை வழி விரைவு சாலையினால், தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களின் பயண தூரம், சுமார் 60 கிலோமீட்டர் வரை குறையும். இதனால், சென்னை முதல் சேலம் வரையிலான பயண நேரம் சுமார் இரண்டு மணி நேரம், 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆக, இவ்விரைவுச் சாலையினால் பயண நேரம் பாதியாகக் குறையும். மேலும், இந்தக் குறைவான பயண தூரத்தினால், டீசல் சேமிப்பு ஒரு வருடத்திற்கு சுமார் 700 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும், தொழில் வளர்ச்சிக்கும் தரமான சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், இந்தப் பசுமை வழி விரைவுச் சாலையினால் தமிழ்நாட்டில் தொழில் முன்னேற்றம் அடைவது மட்டுமின்றி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உயரும். தொழில் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும் கனரக வாகன போக்குவரத்து குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்றடையும். மேலும், கனரக வாகன நடை எண்ணிக்கை அதிகரிக்கும். இது தொழில் வளர்ச்சிக்கு மிகப் பயனுள்ளதாக அமையும். காற்று மாசுபடுவது மற்றும் ஒலி மாசுபடுவது வெகுவாகக் குறையும்.

அது மட்டுமல்லாமல், இந்தப் பசுமை வழி விரைவுச் சாலையினால், தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, செங்கம், அரூர் மற்றும் பல வட்டங்களில், தொழில் வளர்ச்சி அடைய, நிறைய வாய்ப்புகள் ஏற்படும். ஆக மொத்தம், பசுமை வழி விரைவுச் சாலை திட்டத்தினால் பாதிப்புகள் மிகவும் குறைவாகவும், பயன்கள் அதிகமாகவும் இருப்பதால், இத்திட்டத்தினை செயல்படுத்துவது அவசியமாகும்’’ என்கிறார் முதல்வர்.

முதல்வர் சொல்லாத, பிரதமர் சொன்ன காரணம்!

பசுமைச் சாலைக்கு வக்காலத்து வாங்கி முதல்வர் சொன்ன இத்தனை காரணங்களையும் தாண்டி இந்தச் சாலை பற்றி பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சொன்ன காரணம் மிக முக்கியமானது.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடந்த ராணுவக் காட்சியில் கலந்துகொள்ளக் கறுப்புக் கொடி எதிர்ப்புக்கு இடையே தமிழக தரை மீது கால்படாமல் விமானத்திலேயே வந்தாரே பிரதமர் மோடி நினைவிருக்கிறதா? அந்த விழாவில் அவர் பேசிய பேச்சைக் கொஞ்சம் பார்ப்போம்.

“தற்போது தொடங்கி இருக்கும் ராணுவத் தளவாடக் காட்சி 10வது கண்காட்சியாகும். அது மட்டுமல்ல; தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது கண்காட்சியாகும். சோழர்கள் ஆண்ட இந்தப் பகுதியில் நடைபெறும் இந்தக் காட்சியில் நீங்கள் கூடியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதில் 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்களும், 125க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.

வாஜ்பாய் ஆட்சியின்போதுதான் ராணுவத் தளவாட உற்பத்தி துறையில் தனியார் பங்களிப்பு தொடங்கி வைக்கப்பட்டது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட தளவாட உற்பத்தி குறுகிய காலத்திலேயே இமாலய வளர்ச்சியை அடைந்துள்ளது. இது இந்தியாவின் பெருமையாகும்.

ராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் அளவுக்கு இந்தியா முன்னேறி உள்ளது. அது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிற அளவில் நாம் முன்னேறி உள்ளோம். ராணுவத் தளவாடங்களின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி நமது ராணுவம் நன்கு அறிந்துள்ளது. இன்று மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் உள்நாட்டில் ஆயுத உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் நாம் ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்வதைத் தாண்டி நம்மிடம் மற்ற நாடுகள் கொள்முதல் செய்ய வேண்டும். அந்த அளவுக்குச் சிறு குறு நிறுவனங்கள் ராணுவத் தளவாட உற்பத்தியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும்’’ என்ற மோடி அடுத்து முக்கியமான செய்தியை அந்த விழாவில் கூறினார்.

“உத்தரப் பிரதேசத்திலும் தமிழ்நாட்டிலும் இரு ராணுவத் தளவாட தொழில் காரிடார்களை நிறுவிட நாம் உறுதியாக இருக்கிறோம். இந்த காரிடார்கள் (வழிப்பாதை) ராணுவம் தொடர்பான தளவாட உற்பத்தியையும் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியையும் மேம்படுத்தும். இந்த வழிப் பாதைகள் ராணுவ ரீதியான தொழில் அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்’’ என்றார் பிரதமர் மோடி. அவர் குறிப்பிட்ட அந்த தமிழ்நாட்டு காரிடார்தான் இந்த எட்டு வழிச் சாலை.

உறுதி செய்த நிர்மலா சீதாராமன்

பிரதமரின் பேச்சைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உறுதிப்படுத்துகிறார்.

டெல்லியில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற, ’ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி: வாய்ப்புகளும், சவால்களும்' என்ற கருத்தரங்கில் பங்கேற்று நிர்மலா சீதாராமன் பேசியது முக்கியமானது.

“இந்திய ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்கள், பொதுத் துறை ராணுவத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகளில் இருந்தும், படைக்கலன் தொழிற்சாலைகளில் இருந்தும் பெறப்படுகின்றன. உள்நாட்டு தொழிற்சாலைகள் மூலமாக, பீரங்கி வண்டிகள், துப்பாக்கிகள் உள்பட எட்டு வகையான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்து வழங்குவதில், ராணுவத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தத் தொழிற்சாலைகளுக்குப் புத்துயிரூட்ட வேண்டியது அவசியமாகும். மேலும், ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் ராணுவத் தளவாட உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ஆக்ரா, அலிகர், ஜான்ஸி, சித்ரகூட் ஆகிய நகரங்களை இணைக்கும் நாற்கர வழித்தடம் அமைக்கப்படும். இதேபோல், தமிழ்நாட்டில் சென்னை, ஒசூர், கோவை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களை இணைக்கும் தனி வழித்தடம் அமைக்கப்படும்” என்றார் நிர்மலா சீதாராமன்.

எட்டு வழிச் சாலை என்கிற ராணுவச் சாலை!

ஏற்கெனவே தமிழகத்தின் கோவை, ஒசூர், சேலம் ஆகிய இடங்களில் ராணுவத் தளவாட உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க இந்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இங்கே ராணுவப் பயன்பாட்டுக்காகவும், ஏற்றுமதிக்காகவும் ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன. அந்த ராணுவத் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்காகத்தான் நிர்மலா சீதாராமன் சொன்னபடி தனி வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதுவே இந்த எட்டு வழிச் சாலை.இந்தப் பின்னணியில்தான் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்காக நிதியை மிக அதிகமாக ஒதுக்கியிருக்கிறது. தென்னிந்தியாவில் ராணுவத் தளவாட உற்பத்தியை அதிகரிக்கவும் குறிப்பாகத் தமிழகத்தை ராணுவத் தொழில் மையமாக்கவும் மத்திய பாஜக அரசு திட்டமிடுகிறது. அதன் அடிப்படையில்தான் ராணுவத் தளவாடங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான சாலையாக இந்த எட்டு வழிச் சாலை அமைய இருக்கிறது.

இந்தச் சாலையை அமைத்தே தீர வேண்டும் என்று மத்திய அரசு தமிழக அரசிடம் கடுமையாகச் சொல்லியிருப்பதால்தான் தமிழக அரசும் தாறுமாறாகக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இது இந்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான தொலைநோக்கு கொண்ட திட்டம் என்பதால் இதற்கு யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.

இந்தச் சாலைத் திட்டத்துக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு கருத்துச் சொல்ல யாரும் வரக் கூடாது, எதிர்க் கருத்து வந்தால் ஊடகங்கள் பெரிதுபடுத்தும் என்பதால் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்குச் சமூகச் செயற்பாட்டாளர்கள் யாரும் வரக் கூடாது என்று தேடித் தேடி போலீஸார் அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒரு சாலைத் திட்டத்தைத் தமிழகம் சந்திப்பது இதுதான் முதன்முறை. வயல்களையும், மலைகளையும் அழித்து உருவாகப்போகும் எட்டு வழிச் சாலையில் ராணுவத் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு டிரக்குகள் பறக்கப் போகின்றன.

வயல் அரசை ஒழித்துவிட்டு வல்லரசு ஆக வேண்டாமா நாம்?

நன்றி மின்னம்பலம்.
Anbe Selva அவர்களது பதிவிலிருந்து.

செவ்வாய், 19 ஜூன், 2018

சாகர் மாலா திட்டமும் 8 வழிப் பசுமைச் சாலையும்: மறைந்திருக்கும் மர்மங்கள்.

இந்த நிலத்தை நாம் காக்கவில்லை எனில், இந்த நிலத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட்டு அகதியாகத்தான் போகிறோம்.
சேலம்-சென்னை 8 வழிச் சாலைத் திட்டத்திற்குப் பின் மறைந்துள்ள மர்மங்கள்:
சாகர்மாலா திட்டமும் 8 வழி பசுமைச் சாலையும்.

பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை. காதினிலே பாயும் தேன் போன்ற செய்தி. சுற்றி வளைக்காமல் சொல்லவேண்டுமானால் இது மக்களுக்கான சாலை அல்ல. கார்ப்ரேட் பெருநிறுவனங்களுக்கான சாலை.

இந்த சாலையை அமைக்க நாம் என்னென்ன இழக்கவேண்டி வரும்.

8 மலைகள்

சேலம் மாவட்டத்தில் (ஜருகுமலை, அருநூற்று மலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை)
தருமபுரி மாவட்டத்தில் (சித்தேரி மலை)
திருவண்ணாமலை மாவட்டத்தில் (கவுத்தி மலை, வேதி மலை)

20-ற்கும் மேற்பட்ட பள்ளிகள், கோவில்கள்

100-றிற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள், குட்டைகள்

10 ஆயிரம் கிணறுகள்

500 ஏக்கர் வனப்பகுதி

10,000 ஏக்கர் விளைநிலம்

சரி இதோடு முடிந்துவிடுமா? இத்தனையையும் அழித்து 8 வழி பசுமை? சாலை அமைத்தபிறகு பிரச்சனை முடிந்துவிடுமா? என்றால் அதற்கு பிறகுதான் விசயமே உள்ளது.

அதற்கு முன் நாம் புவியியல் (Geology) மற்றும் கனிம மற்றும் மூலப்பொருள் வளத்துறையை (Mines & Minerals) பற்றி அறிந்துகொள்ளவேண்டும். இந்த துறையானது இந்திய அரசுக்கு மிக வளம் கொழிக்கும் துறை. பூமியில் புதைந்துள்ள கனிம வளங்களை பற்றி ஆய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும். சாதாரணமாக ஆழ்துளை கிணறு [மத்திய நிலத்தடி நீர் வாரியம் (Central Ground Water Board)] அமைப்பதில் தொடங்கி, செயற்கைக்கோள் வரை துணை கொண்டு வளங்களை கண்டறிவது இத்துறையின் பணி. ஆழ்துளை அமைக்கும்போது மண் மற்றும் பாறை துகள்களை சேகரிப்பார்கள். பின்பு அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்பி, எந்தெந்த பகுதிகளில் எந்த வகையான கனிம வளங்கள் இருக்கிறது என கண்டறிவார்கள். மற்றோரு முறையான செயற்கைகோள் துணைகொண்டு பூமியை படம் பிடித்து எங்கெங்கே கனிம வளங்கள் படிந்துள்ளது என்பதை அறிவார்கள். இதற்கெனவே பிரத்தேகமாக வானில் ஏவப்படும் செயற்கைகோள்கள் ஏராளம்.

சரி பத்தாயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்படவுள்ள சேலம்-சென்னை சாலை விரிவாக்கத்திற்கு பின் உள்ள நோக்கம் என்ன.

1) சேலம் மாவட்டத்திலுள்ள சேர்வராயன் மலை 4,05,000 சதுர மீட்டர் தளம் கொண்டது. இந்த மலைத்தொடரில் 6 மலை உச்சி இடங்களில், ஒவ்வொரு இடத்திலும் 22,000 சதுர மீட்டர் அளவிலிருந்து 1,55,000 சதுர மீட்டர் வரை ""பாக்சைட் (Bauxite - அலுமினியம் அகப்படும் இடத்தில் உள்ள மண் வகை)"" இருப்பை கொண்டுள்ளது. அந்த பாக்சைட் மண்டலத்தின் தடிமன் 5 மீட்டரிலிருந்து 15 மீட்டர் வரை இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. அதன் மொத்த கொள்ளளவு 5.3 மில்லியன் டன் (53 இலட்சம் டன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

2) திருவண்ணாமலைக்கு 12 கிலோமீட்டர் வடமேற்கே அமைந்துள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலை மற்றும் தெற்கு போனக்காடு பகுதியில் ஹெமடேட்டுடன் கூடிய மேக்னடைட்-குவார்ட்சைட் (Magnetite-Quartzite with Hematite Band) [[Magnetite - இரும்புக் கனிமம், Quartzite - பளிங்குக்கல் பாறை, Hematite - சிவந்த அல்லது ஒருவாறு கறுத்த இரும்பு உயிரகைக் கனிப்பொருள்]] இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மூன்று பகுதிகளாக, திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் 65" - 80" அமைந்துள்ள இப்படுகை, ஒரு புள்ளியில் சாய்வுதளத்தில் கூடுகிறது. மூன்று படுக்கைகளும், 2.5 கி.மீ. லிருந்து 4.5 கி.மீ. நீளத்திற்கு மாறுபடுகிறது.

இம்மூன்று மலைகளிலுள்ள கனிமங்களின் இருப்பின் அளவு

வேடியப்பன் மலை - 60 மில்லியன் டன் (6 கோடி இலட்சம் டன்)
கவுத்திமலை - 56 மில்லியன் டன் (5.6 கோடி இலட்சம் டன்)
உச்சிமலை - 20 மில்லியன் டன் (2 கோடி இலட்சம் டன்)

3) சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கஞ்சமலை, கொடுமலையில் மேக்னடைட்-குவார்ட்சைட் (Magnetite-Quartzite) [[Magnetite - இரும்புக் கனிமம், Quartzite - பளிங்குக்கல் பாறை]] இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கஞ்சமலையில் மூன்று தடத்தில் உள்ளது.

கீழ் தளம் (Lower most Band)

18.3 மீட்டர் தடிமண்ணில் 17.7 கி.மீ. தூரத்திற்கு - 35.6 மில்லியன் டன்

மைய தளம் (Middle Band)

7.6 மீட்டர் தடிமண்ணில் 9.6 கி.மீ. தூரத்திற்கு - 8.1 மில்லியன் டன்

மேல் தளம் (Upper Band)

7.6 மீட்டர் தடிமண்ணில் 9.6 கி.மீ. தூரத்திற்கு - 8.1 மில்லியன் டன்

Subsidiary Band - 22.9 மீட்டர் தடிமண்ணில் 1.6 கி.மீ. தூரத்திற்கு - 7.1 மில்லியன் டன்

கஞ்சமலையில் 22.9 மீட்டர் ஆழத்தில் 55.52 மில்லியன்( 5.5 கோடி இலட்சம் டன்) இரும்பு மூலப்பொருள் இருப்பை கொண்டுள்ளது.

மேலும் 120 மீட்டல் ஆழத்தில், இரண்டு மேல் தளத்தில் தலா 100 மில்லியன் டன்னும், 75 மில்லியன் டன்னும் இருப்பை கொண்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

4) நாமக்கல் மாவட்டத்தில் பிளாட்டினம்: புவியியல் துறை ஆய்வில் உறுதி

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே, 'அனார்த்தசைட் கேப்ரோ, எக்லோகைட்' போன்ற பிளம்பி பாறைகள் உள்ளன. இவை, திருச்செங்கோடு அருகே, பட்லூரில் இருந்து நாமக்கல் அருகில் உள்ள சூரியாப்பட்டி வரை, 32 கி.மீ., தூரத்திற்கு அமைந்துள்ளது.சித்தம்பூண்டியில், நல்லமுறையில் பாறைகள் தெரிவதால், இதை, 'சித்தம்பூண்டி அனார்த்தசைட் காம்ளெக்ஸ்' என, புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். அனார்த்தசைட் பாறையில், 'குரோமைட்' மற்றும் 'கொரண்டம்' போன்ற கனிமங்கள் உள்ளன.இரண்டாம் உலக போரின்போது, இங்கிருந்து, கொரண்டம் தாதுவை வெட்டி எடுத்து, அதில் இருந்து அலுமினியம் தயாரித்து, துப்பாக்கிக்கு வேண்டிய அலுமினிய ரவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.தாது எடுக்க தோண்டியப் பள்ளங்கள், இன்னும் சித்தம்பூண்டியில் உள்ளது. பாறையின் வயது, 2,500 மில்லியன் ஆண்டு. அதில், பிளாட்டினம், தோரியம், யுரேனியம், டைட்டேனியம் போன்ற அரிதான கனிமங்கள், மிகக்குறைந்த அளவில் இருப்பதாக, சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:ப.வேலூர் அடுத்த சித்தம்பூண்டியில், மத்திய அரசின் புவியியல் ஆய்வு துறை மூலம் பிளாட்டினம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, 'டிரில்லிங்' சர்வே செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, கருங்கல்பட்டியில் துவங்கி வாணக்காரன் பாளையம், சமத்துவபுரம், பாமா கவுண்டம்பாளையம், சித்தம்பூண்டி, குன்னமலை, கோலாரம், சோழசிராமணி வரை, 25 கி.மீ., தூரத்துக்கு மேற்கொள்ளப்பட்டது.இங்கு, அதிகபட்சமாக, 300 அடி ஆழம் வரை, பூமியில் டிரில்லிங் மூலம் துளைபோட்டு பாறைகள் ஆய்வு செய்யப்படுகிறது. தற்போது, இரண்டாம் கட்டமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வுகள், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும். ஆய்வு முடிவில், இத்திட்டத்தை தனியார் வசம் ஒப்படைத்து, பிளாட்டினம் வெட்டி எடுக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால், அரசிடம் அவ்வளவு பணம் இல்லை

http://www.dinamalar.com/news_detail.asp?id=1031975

Platinum (Sithampoondi - Namakkal)

Namakkal village may be rich in platinum

https://www.deccanchronicle.com/…/namakkal-village-may-be-r…

Evidence of huge deposits of platinum in State

http://www.thehindu.com/…/Evidence-of-h…/article15503846.ece

இந்த தரவுகள் 8 வழி சென்னை-சேலம் பசுமை சாலை தொடர்புடைய மாவட்டங்கள்

பிற மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ள கனிம வளங்களை பார்ப்போம்

இந்தியாவின் வளங்களின் தேவையை (Vermiculite, Molybdenum, Dunite, Rutile, Garnet and Ilemenite) பூர்த்தி செய்வதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. 79% Vermiculite, 65% Dunite, 52% Molybdenum, 48% Garnet, 30% Titanium mineral, 25% each Sillimanite & Magnesite, 16% Fire Clay resources விழுக்காடு தமிழ்நாடு நிறைவு செய்கிறது.

Bauxite - Dindigul, Namakkal, Nilgris & Salem Dist.

Dunite/Pyroxenite - Salem Dist.

Felspar - Coimbatore, Dindigul, Erode, Kanchipuram, Karur, Namakkal, Salem and Trichy Dist.

Fireclay - Cuddalore, Kanchipuram, Perambalur, Pudukottai, Sivagangai, Thiruvallur, Trichy, Vellore and Vilupuram Dist.

Garnet - Ramnad, Trichy, Tiruvarur, Kanyakumari, Thanjavur and Tirunelveli Dist.

Granite - Dharmapuri, Erode, Kanchi, Madurai, Salem, Thiruvannamalai, Trichy, Tirunelveli, Vellore and Vilupuram Dist.

Graphite - Madurai, Ramnad, Sivagangai and Vellore Dist.

Gypsum - Kovai, Perambalur, Ramnad, Trichy, Nellai, Thoothukudi, Virudhunagar Dist.

Lignite - Cuddalore, Ariyalur, Thanjavur, Thiruvarur, Nagai, Ramnad and Sivagangai Dist.

Limestone - Kovai, Cuddalore, Dindigul, Kanchi, Karur, Madurai, Nagai, Namakkal, Perambalur, Ramnad, Salem, Thiruvallur, Trichy, Nellai, Vellore, Vilupuram and Virudhunagar Dist.

Magnesite - Kovai, Dharmapuri, Karur, Namakkal, Nilgiri, Salem, Trichy, Nellai and Vellore Dist.

Quartz/Silica - Chennai, Kovai, Cuddalore, Dharmapuri, Dindigul, Erode, Kanchi, Karur, Madurai, Namakkal, Perambalur, Salem, Thiruvallur, Thiruvarur, Nagai, Trichy, Villupuram, Virudhunagar and Vellore Dist.

Tale/Steatite/Soapstone - Kovai, Salem, Trichy and Vellore Dist.

Titanium Minerals - Kanyakumari, Nagapattinam, Ramnad, Thiruvallur, Nellai and Thoothukudi Dist.

Vermiculite - Dharmapuri, Trichy and Vellore Dist.

Apatite - Dharmapuri and Vellore Dist.

Barytes - Erode, Madurai, Perambalur, Nellai and Vellore Dist.

Bentonite - Chengalpat Dist.

Calcite - Salem Dist.

China Clay - Cuddalore, Dharmapuri, Kanchi, Nilgris, Sivagangai, Thiruvallur, Thirvannamalai, Trichy and Villupuram Dist.

Chromite - Kovai and Salem Dist.

Copper, Lead-Zinc, Silver - Vilupuram Dist.

Corundum, Gold - Dharmapuri Dist.

Dolomite - Salem and Nellai Dist.

Emerald - Kovai Dist.

Magnetite (Iron Ore) - Dharmapuri, Erode, Nilgiris, Salem, Thiruvannamalai, Trichy and Vilupuram Dist.

Kyanite - Kanyakumari and Nellai Dist.

Molybdenum - Dharmapuri, Dindigul and Vellore Dist.

Pyrite - Vellore Dist.

Sillimanite - Kanyakumari, Karur and Nellai Dist.

Tungsten - Madurai and Dindigul Dist.

Wollastonite - Dharmapuri and Nellai Dist.

Petroleum & Natural Gas - Cauvery Delta & Mannar Basin

Platinum - Namakkal & Surrounding Dist.

Mineral Resources of Tamil Nadu

http://www.tnenvis.nic.in/…/MineralResourcesofTamilNadu_120…

Mineral Map of Tamil Nadu

http://www.tnmine.tn.nic.in/Mineral%20Map%20of%20Tamilnadu.…

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கனிம வளங்களை, மூலப்பொருட்களை புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆய்ந்து பட்டியலிட்டுள்ளது.

எதிர்வரும் காலத்தில் பெருநிறுவனங்கள், இவ்வளங்களை கொள்ளையடிக்கும். அதற்கு அரசும், அதிகார வர்க்கமும் துணை நிற்கும்.

மலைகள் அழிக்கப்படும்போது மரங்கள் அழிக்கப்படும்.

மரங்கள் அழிக்கப்படும்போது மழை வளம் அழிக்கப்படும்.

கடைசி படம்

வெயில் காலங்களில் வெப்பசலனத்தால் பொழியும் மழையானது கிழக்கு மலைத்தொடராக உள்ள ஜவ்வாது, கல்வராயன் மழைகளினாலேயே மேகக்கூட்டங்கள் உருவாகிறது. தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சி, கடலூர், விழுப்புரம், திருச்சி, அரியலூர்,, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் இதனால் மழை பெறுகிறது. இந்த மலைகளை அழித்தால் ஏற்படப்போகும் சூழலியல் சீர்கேடு நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.

இத்துணை இயற்கை வளங்கள் சிதைக்கப்படுவதற்கு அரசும், அதிகாரவர்க்கமும், பெருநிறுவனங்களும் மட்டும் காரணமல்ல. பேராசை பிடித்த, சொகுசு வாழ்க்கை வாழ நினைக்கும் மக்களாகிய நாமும் ஒரு காரணம்.

நாம் வாழ்வதற்கு ஆதாரமே இந்த இயற்கைதான். வளர்ச்சி என்ற பெயரில், இந்த இயற்கையை சிதைத்துவிட்டு, அழித்துவிட்டு தண்ணீரும், உணவும் வேற்று கிரகத்திலிருந்தா கொண்டு வரப்போகிறோம்?

தோழர் கி.வே. பொன்னையன் அவர்களது பதிவிலிருந்து..

ஓவியம்: Palani Nithiyan