கத்தரி என்றால் தற்போதைக்கு இந்த வார்த்தை காயை குறிப்பிடக்கூடிய வார்த்தையாக தான் உள்ளது. இன்னொரு இடத்தில் கத்தரி என்ற வார்த்தை பயன்படுவதை காணலாம். இரண்டு சாணம் பிடிக்கப்பட்ட இரும்பு பட்டையை ஒரு முனையில் வைத்து அதை அளவு கோலாக ஒரு பொருளை துண்டிக்க பயன்படுத்தியிருக்கிறார்கள் அந்த பொருளின் பெயர் கத்தரிகோல்.
இதே போல தான் கத்தரி வெயிலின் முக்கியத்துவம் நிலப்பகுதிக்கு முக்கியம்.
கத்தரி இந்த வார்த்தையை மறந்து நம்மையறியமால் அக்னிநட்சத்திரம் என்ற பெயரை பெருமளவு உச்சரிக்க ஆரம்பித்து விட்டோம்.
இல்லை அந்த வார்த்தையை மறக்கடிக்க பட்டோமோ என தெரியவில்லை.
அக்னி நட்சத்திரம் இந்த பெயரை நான் தொடக்க பள்ளி காலத்தில் கேள்வி பட்ட பெயர் ஏனென்றால் அப்போது தான் மணிரத்னம் அவர்கள் படத்திற்கு அந்த பெயரை சூட்டியிருந்த தருணம்.
படம் பார்த்த போது கண் கூசுவது போல சற்றும் குறையாத விளக்கொளி தான் அந்த படத்தின் சிறப்பு.
அதே போல தான் இந்த கத்தரி மீனும் சற்றும் குறையாத ஔியுடன் வானத்தில் இருக்கும்.
கத்தரி வெயில் என்பது குறிப்பிட்ட கால நேரத்தில் சூரியன் தனது பயணத்தை தொடங்கி முடிக்கும் காலம்.
வழக்கில் சித்திரை பின்னேழு வைகாசி முன்னேழு கத்தரியின் உச்ச நாட்களாகும். ஆனால் அதற்கு முன் முன்கத்தரி பின்கத்தரி என நாட்களை சேர்த்து மொத்தம் இருபத்தி ஒரு நாட்கள் கணக்கிடப்படுகிறது.
சூரியன் தனது பயணத்தை பரணி நட்சத்திரத்தில் தொடங்கி கார்த்திகை ஊடே பயணிக்கும் காலமே கத்தரி வெயில் காலம் என்று பஞ்சாங்க கணியம் கூறுகின்றது.
இந்த காலகட்டத்தில் அதிக வெய்யில் இருக்கும் எனவும் புதிதாக செயல்களை மேற்கொள்ள கூடாது எனவும் விவசாய பணிகள் அதாவது விதைத்தல் போன்றவற்றை செய்ய கூடாது எனவும் கூறப்படுகிறது.
நமது வானிலை ஆய்வு மையம் கத்தரி குறித்து கேள்வி எழுப்பினால் கத்தரி வெயிலுக்கும் வானியலுக்கும் சம்பந்தமில்லை என்று கூறுகிறார்கள்.
சரி வேதங்களில் இது குறித்து என்ன கூறியிருக்கிறார்கள் உற்று நோக்கினால்.
அக்னி பகவனான் நோயுற்றிருந்தாராம். அவர் மிகவும் நலிவுற்றிருந்தால் இந்திரன் யமுனை ஆற்றங்கரையில் உருவாக்கிய வனத்தில் உள்ள ரிசிகள் மூலிகைளிடையே அரிய தவத்தினில் ஈடுபட்டிருந்தனராம். அந்த வனத்திற்குள் சென்று மூலிகையை பறித்து உண்ணலாம் என்று நினைத்தால் வருண பகவான் மழையை பொழிந்து விடுகிறாராம். அதனால் அக்னி பகவான் கவலையுற்றிருக்க அந்த வழியே உலா வந்த கிருஷ்ணன் அர்ஜினினடம் முறையிட எங்களிடம் பொருள் இல்லை என கூற அம்பையும் துணியையும் வழங்கி அதை கொண்டு அம்பை விட மழை வருவது நின்றது.
அக்னி பகவானும் முதல் வாரம் இலை புற்கள் இரண்டாம்வாரம் செடிகளையும் மூன்றாவது வாரம் மரங்களையும் உண்டாராம்.உடனே அவர் நோய் நீங்கியதாம்.அதற்கு பின் அம்பு விடுவதை அர்ஜினன் நிறுத்த வருண பகவான் மழை பொழிந்தாராம்.
கிருஷ்ணன் ரிசிகளிடம் மீண்டும் வனத்தை புதுப்பிக்க கூறினாராம்.
இது வேதம் கூறும் அக்னிநட்சத்திர காலம்.
இதற்குள் இருக்கும் தொல்வானியலையும் அறிவியலையும் தேட வேண்டியது நமது பொறுப்பு என கருதி கொண்டேன்.
இன்னொரு முக்கியமான நம்பிக்கையும் விவசாயிகளிடம் உள்ளது.
அதாவது இந்த கத்தரி வெயில் காலக்கட்டத்தில் புவியானது சூரியனுக்கு மிக அருகில் வரக்கூடிய காலக்கட்டம்.
அப்போது புவிக்குள் ஏற்படும் சூட்டினால் ஏற்படும் அழுத்ததினால் புவியின் மேற்பரப்பில் வெடிப்புகள் தோன்றும் இந்த வெடிப்புகளிடையே ஏற்கனவே இலையுதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் மண்ணின் ஊடே புதையும் கத்தரி வெயிலின் காலத்திற்கு பின் பெய்யும் மழையினால் மண்ணின் வளம் மேம்படுபடும். பொதுவான நிலப்பரப்பிற்கும் மட்டுமல்லாமல் கானகத்திற்கும் பொருந்தும். இதனை மண்ணின் கர்ப்போட்டம் என குறிப்பிடுகின்றனர்.
சரி தொல்வானியல் கணியத்தில் என்னவெல்லாம் குறிப்புகள் அடங்கியிருக்கிறது என காணலாம்.
கத்தரிமீன் வானியலில் பெருநாய் என அழைக்கப்படும் நட்சத்திர கூட்டத்தில் சிரயஸ் நட்சத்திரத்தை கத்தரிமீன் அல்லது அழல்மீன் என குறிப்பிடுகின்றனர். இதை வானத்தின் ராணி என ஜப்பான் நாட்டவர் கூறுகின்றனர்.
மிக ஔிர்வுடைய நட்சத்திரமாக வெறும் கண்ணுக்கு புலப்படும் நட்சத்திரமாக குறிப்பிடப்படுகிறது.
இது மிகப்பெரிய நட்சத்திரமா அல்லது செம்மை நிற நட்சத்திர கூட்டமா என்றால் இல்லை என்று தான் தொல்கணியம் கூறுகிறது. இருப்பினும் புவியில் இருந்து மிகக்குறைந்த ஔியாண்டில் பயணிப்பதால் பார்த்ததும் மிகவும் ஔிர்வாக தெரிகிறது.
இதை விட செம்மை நிற நட்சத்திரங்கள் நிறைய இருக்க இதை ஏன முக்கியமாக கருத வேண்டும்.
கிரேக்கத்தில் உள்ள குறிப்புகளில் இந்த நட்சத்திரம் கிழக்கில் தெரிந்தால் அவர்களின் அறுவடைக்காலம் என்றும் மேற்கில் தெரிந்தால் வயதானவர்களும் நோயுற்றவர்களும் மரணிப்பார்கள் என குறிப்பிடுகின்றனர்.
பண்டைய எகிப்தியர் இந்த நட்சத்திரம் வானில் தோன்றும் நாழியிலிருந்து ஆண்டை கணக்கிட்டதாக குறிப்பிடுகின்றனர்.
நம் தொல் கணியத்தில் கூட கத்தரி வெய்யிலில் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் வெறி பிடிக்கும் என கூறப்படுகிறது.
இதனை ஆங்கிலத்தில் Dog days என அழைக்கின்றனர்.
கத்தரி என்ற அழல் மீன் பெருநாய் என்னும் கேனஸ் மேஜர் என்ற நட்சத்திரத்தின் கூட்டத்தின் ஒரு ஔிர்வுடைய நட்சத்திரம்.
ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் மேற்கில் மாலை ஏழு மணிக்கு மேல் எட்டரை மணி வரை அதிக ஔிர்வுடன் வெறும் கண்ணுக்கே புலனாகும்.
மேற்கில் ஓரையன் நட்சத்திர கூட்டத்தின் கால் பகுதியில் இருக்க கூடிய நட்சத்திரம் என ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தனது கட்டுரையான பாறைகளில் விண்வெளி குறித்த ஓவியங்கள் என்ற தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
மனிதர்கள் தான் கண்டதை கேட்டதை பார்த்தவற்றை எல்லாம் ஓவியங்களாக கற்களில் வரைந்தும் பின்னாளில் பாறைகளில் செதுக்கியும் வைத்திருந்திருக்கின்றனர். அதை பற்றிய தன்னோட கள ஆய்வில புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்ட ஓவியத்தின் அடிப்படையில் ஓரையனின் என குறிப்பிடும் நட்சத்திரத்தின் இடுப்பு பகுதியான மூன்று புள்ளிகளின் கால் பகுதியில் பெருநாய் உருவத்தை வரைந்த ஒவியத்தை கண்டதாக குறிப்பிடுகிறார்.
ஓரையன் பொதுவாக சிவனை குறிக்கும் நட்சத்திரம் வேடன் என்றும் குறிப்படுவர்.
ஓரையன் என்ற வார்த்தை தமிழ் வார்த்தையே இதிலிருந்து தான் ஓரை என்றும் சமஸ்கிருதத்தில் ஹோரை என்றும் வழக்கில் வந்திருக்கிறது.
இந்த வேடன் என்ற சிவனின் கால்பகுதியில் பெருநாய் உருவ வடிவம் சிவனின் காலபைரவரின் தோற்றத்தின் அடிப்படையாகும்.
சமஸ்கிருதத்தில் இந்த பெருநாய் நட்சத்திர கூட்டத்தை மிருககவ்வியதன் என குறிப்பிடுகின்றனர்.
சூரியனுக்கு மிக அருகில் இந்த பெருநாய் என்ற நட்சத்திரகூட்டத்தின் ஔிமிக்க சிரியஸ் என்ற கத்தரி வரும் நாட்களில் கத்தரி வெயில் தொடங்குகிறது.
பண்டைய தமிழனின் தொல்கணியம் இதற்கு சரியான விளக்கத்தையும் தருகிறது.
இதனை பரிபாடல் மூலம் அறியலாம்.
பரிபாடலில் ஒரு பாடற்குறிப்பில்
சூரியனின் பயணத்தை வீதியாக பகுத்து அதனை எரி அல்லது வேழம் அல்லது மேழம் பின் சடை பின் ஆடவை என மூன்று வீதியாக பிரிக்கின்றர்.
"எரி "என்பது மேச ராசியில் சூரியன் தொடங்கும் பாதையாகும்.
அடுத்து "சடை" என்பது ஆவணி மாதத்தில் சூரியன் தனது பயணத்தை மகம் நட்சத்திரத்தில் தொடங்கும் பாதையாகும்.
"ஆடவை "என்பது மார்கழியில் சூரியன் தொடங்கும் பாதையாகும்.
முதல் பாதையான சூரியன் மேசத்தில் தொடங்கும் எரி என்ற பாதை சித்திரை, வைகாசி, ஆனி ,ஆடி ,இந்த நான்கு பாதையில் சூரியன் பயணிக்கும் காலம் முழுமையுமே புவி வெப்ப மயமாக தான் காணப்படும் என தொல் கணியம் கூறுகிறது. எனவே தான் இந்த பாதையை எரி என வைத்திருக்கின்றனர்.
இந்த பாதையை சமஸ்கிருதத்தில் ஐராவதம் என குறிப்பிடுகின்றனர்.
இந்த எரி என்ற பாதையின் தொடக்க கட்ட மாதத்தில் 'சித்திரை பின்னேழு ,
'வைகாசி முன்னேழு ,என குறிப்பிடுகின்ற கிட்டதட்ட இருபத்தி ஒரு நாட்கள் எந்த வித பருவமழை காற்றிற்கும் உட்படாத நாட்கள் எனவும் குறிப்பிடலாம்.
மாசிக்கு மேலயே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தொல்கணியம் கூறுகிறது.
அதனை வாரணரும் கணியமும் தலைப்பில் காணலாம்.
ஆனால் சித்திரைக்கு மேல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல கூடாத நாட்கள் என தொல்கணிய குறிப்புகளும் உள்ளது.
இதனை "ஆறாமீன்றவோட்ட காலம் "என்ற குறிப்பும் உள்ளது.
மீன்களின் இனப்பெருக்க காலம் என மீனவர்கள் தங்களுக்குள் கட்டுப்படாக இருந்தாலும் இந்த நாட்களில் கடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது எனவும் கூறுகின்றனர்.
சித்திரையின் ஊடே சூரியன் பயணிக்கும் காலம் "சித்திரை குழப்பம்" எனவும் அதற்கடுத்த வைகாசி மாதமும் கடல் பயணத்திற்கு இடையூறு தரும் கொந்தளிப்பு மாதங்களாக குறிப்புகள் உள்ளன.
இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்கள் மழை இன்மையால் ஆற்று நீர் கடலில் கலக்க வாய்ப்பின்மையால் கடல் நீர் அதிக உப்பு தன்மையுடன் காணப்படும்.
இதனை ஐயன் வள்ளுவர்
'நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும்' என தனது குறளில் கூறுகிறார்.
இந்த நீர்மை குன்றும் காலகட்டத்தை அகத்தியர் நட்சத்திரத்தோடு தொடர்பு படுத்தி அகத்தியர் கடல் நீரை குடித்தார் என புராண கதை கூறுகிறது.
கத்தரி நட்சத்திரமே கொடிய வெப்பநிலையை தருவதில்லை. ஓராண்டில் உச்ச அளவை எய்தும் ஒரு பருவத்தையே கத்தரி வெயில் காலம் குறிக்கும்.
அந்த காலகட்டத்தில் புவிக்கு அருகில் கத்தரி மீனை காணலாம்.
இந்த காலகட்டத்தில் புவியின் தரைப்பகுதியிலும் கடல் பகுதியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு தென்மேற்கு பருவக்காற்றாக மாற இந்த கத்தரி வெயிலின் காலகட்டம் உதவுகிறது.
இந்த காற்று தான் பின்னாளில் ரிவர்ஸ் என்ற முறைக்கு உட்பட்டு வடகிழக்கு பருவமழையாக கடலில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு மழையாக, வடகிழக்கு பருவமழை பெரும்பான்மையாக தமிழகத்திற்கு பயன்தருகிறது.
இதனை தான் வழக்கில் "தெற்க அடிச்ச காற்று திருப்பி அடிக்க எவ்வளவு காலமாகிவிட போகிறது" என கூறுவார்கள்.
இதனை பழமொழியாக கருதாமல் இதில் உள்ள அறிவியலையும் சிந்திக்க வேண்டும்.
இந்த கத்தரி காலகட்டத்தில் முடிந்த அளவு வெளியில் வராமல் இருப்பது.
நன்றாக தண்ணீர் குடிப்பது.
உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருள்களை எடுத்துக்கொள்வது.
மேலும் முறையான எண்ணெய்குளியல்களை மேற்கொள்வது கத்தரியை கடினமில்லாமல் கடக்க ஏதுவாகும்.
கத்தரி வெயிலை கடினமின்றி கடக்கும் அதே நேரத்தில் கத்திரி வெயில் என்ற வார்த்தையையும் உச்சரித்து வழக்கத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.
மொழி என்பது நமது அடையாளம் மற்றும் உணர்வு மட்டுமல்ல நமது வளம்.
நில வளம் ,நீர்வளம் ,என்பது போல மொழி வளம் மட்டுமே மரபை ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்த ஏதுவான காரணிகள்.
ஆங்கிலம் கற்க மறந்தாலும் அகராதிகள் கற்று கொடுத்து விடும்.
ஆனால் நம் தமிழின் மொழி வளத்தை அதன் செம்மையை அதன் செழுமையை உச்சரித்தால் மட்டுமே கடத்த முடியும்.
மரு.கீதா மோகன்,
சித்த மருத்துவர் மற்றும் வானியல் கணிய ஆராய்ச்சியாளர்.
20.04.2020.
/ ஏர் இதழ் வெளியீடு / 20.04.2020 /