இரண்டரையாண்டுகள் அங்கே கழித்தார்.தமிழ்ப் பல்கலைக் கழக வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு வேலை செய்துவிட்டுத் தஞ்சையிலும் திருச்சியிலும் தங்கியிருந்தவரைக் கர்நாடகாவில் இருந்து, வேறு சிலருடன் சேர்ந்து சதி செய்ததாகப் பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது அரசு.தக்க ஆவணங்களைக் காட்டி வாதாடியும்கூட, கண்ணில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டிருக்கும் நீதித்துறைக்கு அச் சான்றுகளைப் பார்க்க முடியவில்லை.
ஒரு மகனும் இரண்டு மகள்களும் பெற்ற அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காகப் போர் புரியப் பொறியியல் பட்டம் பெற்ற தன் மகனை அனுப்பினார்கள். அவர் அங்கே ஈகியானார்.
விடுதலைப் புலிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் மற்ற தலைவர்களுடன் சேர்ந்து செயல்பட்டார்.தமிழகத்துக்கு வந்து பேராசிரியர் உதவியோடு பொருட்களை வாங்கிக்கொண்டு ஈழம் திரும்பிய பதினேழு புலிகள் இந்தியக் கடற்படையின் இரண்டகத்தால் நடுக்கடலில் சயனைடு அருந்தித் தற்கொலை செய்துகொண்டதை அறிவோம். அவர்கள் தோழர் வீட்டுக்கு வந்து திரும்பியபோது நடந்த துன்பியல் நிகழ்வு அது.அஞ்சா நெஞ்சர் அவர்.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்
கழகத்தில் கெடுவாய்ப்பாக அவர் எங்களுக்கு எதிரான அணியில் இருந்தார். ஆனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரால் பதவி அடைந்தவர்கள் அவருக்குக் குரல் கொடுக்கவில்லை.மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் முனைவர்.சுரேஷ் வாயிலாக எங்கள் தலைவர் கே.ஜி.கண்ணபிரான் அவருக்காக வாதாட கண.குறிஞ்சி உள்ளிட்ட நாஙகள் முயன்றோம். அப்போது சேலத்தில் மாநிலச் செய்குழுக் கூட்டம் நடந்தது.புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் தோழர் சங்கரசுப்பிரமணியன்ஆசிரியர் கழகப் பொதுச்செயலர். நாங்கள் செயற் குழுவில் பேசித் தீர்மானம் நிறைவேற்றித் தமிழ் நாடெங்கும் அவரை விடுதலை செய்யக் கோரிக் கையெழுத்து இயக்கம் நடத்தினோம்.
ம.கோ.இரா.அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த பொன்னையன் ஆசிரியர்களுக்கு எதிரான போக்குள்ளவர்.திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் ஈழப் போராளிகளுக்கு ஆதரவாக மறியல் செய்ததற்காகப் பேராசிரியர் நெடுஞ்செழியனையும், நக்சலைட் என்று என்னையும் பொன்னையன் பழி வாங்கும் இடமாற்றம் செய்தார்.சேலம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு 1987இல் மாற்றப்பட்ட நாங்கள் அங்கே ஒரு பண்ணையின் மாட்டுக் கொட்டகையை வாடகைக்குப் பிடித்துச் சமைத்து உண்டு, கல்லூரியில் இரவுக் காவலர்களுடன் படுத்து எழுந்தோம். வெள்ளிக் கிழமை மாலையில் ஊருக்கு வந்துவிட்டுத் திங்கட்கிழமை காலை ஆத்தூருக்கு வருவோம்.நான் காரைக்குடியில் இருந்து பேருந்து ஏறித் திருச்சியில் அவருடன் காலை ஆறரை மணிப் பேருந்தைப் பிடித்துச் செல்வோம்.எளிமையானவர்.
அப்போது ஆத்தூர் கல்லூரியில் உள்ளூர் ஆசிரியர்கள் ஆதிக்கம் செய்தனர்.மாணவர் நலனில் அக்கறை இல்லை.ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுக்காததால் எழுத்துத் தேர்விலும் செய்முறைத் தேர்விலும் பணம் விளையாடியது.நாங்கள் ஆசிரியர் கழகத்தில் பேசித் தீர்மானம் போட்டுக் கல்லூரிப் பாடங்களை ஆசிரியர்கள் ஒழுங்காக நடத்த வைத்தோம்.அவர் சிறைச்சாலையை அறச்சாலை ஆக்கிய மணிமேகலையைக் கற்பிப்பவர் அல்லவா?
பல்கலைக் கழகத் தேர்வுகளில் நடக்கும் நேரத்தில் நாங்கள் ஊருக்கு வந்துவிட்டோம்.அப்போது முதன்மைத் தேர்வுக் கண்காணிப்பாளராக இருந்தவர் இவருடைய துறைத் தலைவர்.பகலில் தேர்வு நடந்த பிறகு நன்றாகத் தேர்வு எழுதாதவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு,அவர்களை இரவில் வரச் சொல்லி,பழைய தாள்களை உருவி எடுத்துவிட்டுப் புதிய தாள்களைக் கொடுத்துப் பார்த்து எழுதவைத்துச் சேர்த்திருக்கிறார்.இது கல்லூரி இருக்கும் வட சென்னிமலையில் பலருக்குத் தெரிந்திருந்தது.நாங்கள் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தைக் கூட்டிப் பேசிச் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு முறையீடு விடுத்தோம்.எங்கள் ஆசிரியர் தலைவர்கள் வாயிலாக விசாரணை ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. எங்களுடன் வேறு சில ஆசிரியர்களும் சென்னைக்கு வந்து சான்றளித்தனர் .1987 முதல்1989 வரை நாங்கள் அங்கே பணியாற்றிய இரண்டு ஆண்டுகளும் நல்ல தேர்ச்சி.
அங்கே நாங்கள் இருந்தபோது பரிபாடலில் பெருவெடிப்புக் கொள்கைக்கான முற்கோள் (hypothesis).இருந்ததைக் கண்டார்.நான் இயற்பியலுடன் தமிழும் படித்தவன் என்பதால் அந்தப் பகுதியை நான் விளக்கினேன். அப்புறம் அதில் பரிணாம வளர்ச்சி பற்றியும் சொல்லப்பட்டுள்ளது என்று விளக்கியிருர்தார்.என் பங்கு இதில் சிறிதெனினும் என் பெயரையும் சேர்த்தே அக் கட்டுரையை வெளியிட்டார் .
பேராசிரியரின் ஆராய்ச்சி எழுத்துப் பணி மிகவும் சிறப்பானது.ஆசீவகம் என்ற தமிழர் மெய்யியலை இலக்கியச் சான்றுகளுடன் களப்பணி ஆய்வும் செய்து நிலைநாட்டினார்.அதில் குறை காண்பார்கள் உண்டு.ஆனால் அவரது ஆய்வு புது வெள்ளம் போன்றது.நுங்கும் நுரையும் குப்பையும் கூளமுமாகத்தான் ஆறு தொடங்கும்.ஓட்டத்தில்தான் நீர் தெளியும். பேராசியரது முன்னெடுப்பை மேலும் பலர் தொடரும் நிலையில் கால ஓட்டத்தில் தமிழர் மெய்யியல் முழுமையாக நிறுவப்படும்.அவருக்கு
வீர வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக