செவ்வாய், 1 நவம்பர், 2022

தமிழ் மகனின் படைவீடு: தமிழர் ஆட்சி வீழ்த்தப்பட்ட வரலாறு பேசும் நூல் :- அ.ம.அங்கவை யாழிசை



கி.பி14ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் தமிழகத்தின் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த ஒரே தமிழ்ப் பேரரசு, சம்புவராயர்களின் படை வீடு அரசாகும். தமிழகத்தின் மாபெரும் பேரரசுகளான சேர, சோழ, பாண்டிய அரசுகள் வீழ்த்தப்பட்ட பிறகு எஞ்சியிருந்த ஒரே தமிழ்ப் பேரரசும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது. 

இந்தச் சிறப்புமிக்க சம்புவராயப் பேரரசின் தோற்றம், அதன் வளர்ச்சி, தமிழ் மண்ணை அந்நியப் படையெடுப்பிலிருந்து காப்பாற்றுவதற்காகப் பொறுப்புடன் போராடியதன் பின்புலம், அந்தப் பொறுப்புணர்வை அவர்கள் எப்படிச் சிறப்புறச் செய்தார்கள், அந்நியப் படையெடுப்பாளர்களால் அவர்கள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதைப் பற்றிய வரலாற்று நிகழ்வுகளை விரிவாகப் பேசியிருக்கும் புதினம்தான் தமிழ் மகன் எழுதிய 'படைவீடு' நூலாகும்.

சம்புவராயப் பேரரசு வீழ்த்தப்பட்ட பிறகு, சாதிப் பிரிவினையின் விபரீத விளைவுகள், தமிழ் மண்ணில் அரங்கேறிய அயலவர் பண்பாட்டுத் திணிப்பு, தமிழ்ப் பண்பாட்டுத் திரிபு, தமிழ்ப் பண்பாட்டு அழிப்பு பற்றிய நிறைய தரவுகள் இந்நூலில் உள்ளன. மேலும், தமிழ் மண்ணில் - தமிழர் ஆட்சியில் தமிழ் தழைத்திருந்த பொற்காலத்தைப் பற்றி விவரிக்கும் ஆகச் சிறந்த படைப்பாகப் படைவீடு உருவாகி இருக்கிறது.

தொண்டை மண்டலத்தில் தமிழ்ப் பேரரசு ஆட்சி புரிந்து வந்த வீர சம்புவராயரின் மகன் ஏகாம்பரநாதன். தந்தைக்குப் பிறகு ஆட்சி செய்த ஏகாம்பரநாதன், தனது ஆட்சிக் காலத்தில் காஞ்சியை மீட்டு வென்று மண் கொண்டார் என்ற பட்டம் பெற்றவர். அவரது ஆட்சிக் காலத்தில்தான் தமிழ் மண்ணின் மீது தெலுங்கின விஜயநகரப் பேரரசின் முதல் படையெடுப்புத் தாக்குதல் புக்கர் தலைமையில் நடந்தது. ஆனால், தொண்டை மண்டல எல்லையைக் கூட அவர்களால் நெருங்க இயலாமல் திரும்பி விட்டனர். 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புக்கரின் மகனான குமாரகம்பணன் ஒரு லட்சம் வீரர்களுடன் தமிழ் மண்ணின் மீது படையெடுத்து வருகிறான். விரிஞ்சிபுரத்தையும் காஞ்சியையும் ஒரே சமயத்தில் தாக்கி, காஞ்சியைக் கைப்பற்றி, பிறகு அங்குள்ள பிராமணர்களின் ஆலோசனைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு படைவீடு மீது தாக்கினான். அப்போது சம்புவராயப் பேரரசின் ஆட்சியாளராக இருந்தவர் ஏகாம்பரநாதனின் மூத்த மகனான மல்லிநாதர் ராசநாராயணர் ஆவார். விஜயநகரப் பேரரசின் அந்தப் படையெடுப்பை ஓர் அன்னியப் படையெடுப்பாகவே அவர் கருதினார். அதற்குக் காரணம் மொழி மட்டுமல்லாது, அவர்களது சமயநெறிகளும் மிக முக்கிய காரணமாக இருந்தது. அதாவது, விஜயநகரப் பேரரசின் சமயநெறிகள் தமிழ் மரபிற்கு விரோதமாக இருப்பதைச் சம்புவராயர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர்.

சம்புவராயத் தமிழ் மன்னர் மல்லிநாதர், விஜயநகரப் படைகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்திற்கு முதல்நாளில் தமது படை வீரர்களுக்கு ஒரு கட்டளை இடுகிறார். அதன்படி, போரில் வீழ்ந்து போகும் தருணம் வருமாயின், எதிரியின் கைகளில் ஒருபோதும் சிக்கக் கூடாது என்றும், அவர்களிடம் சிக்கி அவமானப்படுத்தப்படும் நிலை நம் வீரர்களுக்கு வரக்கூடாது என்றும், ஆகையால், அவர்களைப் பள்ளத்தாக்கில் பாய்ந்து வீர மரணம் எய்தக் கட்டளை இடுவார். அதோடு, தானும் படை வீரர்களுடன் சேர்ந்து பள்ளத்தாக்கில் பாய்ந்து மறைந்து விடுவார். தமிழ் மண்ணை ஆண்ட கடைசித் தமிழ்ப் பேரரசு மறைந்ததாகப் படைவீடு முடிகிறது.

இப்புதினத்தில் குறிப்பிடப்படும் காலகட்டத்தில் போர்க் குடிகளான சம்புவராயர்கள் போரை விரும்பாதவர்கள். ஏனெனில், மக்களின் அமைதியைக் காக்க விரும்பியவர்கள். அந்த நூற்றாண்டில் நடந்தது மூன்றே போர்கள். காஞ்சியை மீட்டது, முதல் தெலுங்குப் படையெடுப்பில் புக்கரை விரட்டி அடித்தது, பிறகு அவருடைய மகனிடம் தமிழ் மண்ணை இழந்தது. இப்படியாகத் தமிழ் மண்ணில் நிறுவப்பட்ட தெலுங்கு ஆட்சி, இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆட்சிக்கு வழிகோலியிருக்கிறது.

தெலுங்கு ஆட்சி, அதாவது விஜயநகரப் பேரரசு ஆட்சி தமிழ்மண்ணில் நிலைபெற்றதற்கு ஒரு முக்கியப் பங்கு வைப்பது 'சாதிக்கொரு புராணம்' என்னும் கோட்பாடு ஆகும். இது சாதி அல்லது மதத்திற்குள்ளும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது. காஞ்சியைக் கைப்பற்றிய விஜயநகர அரசர்களுக்கு அங்குள்ள பிராமணர்கள் போதித்த கோட்பாடு இது. இந்தக் கோட்பாடுதான் சாதியை மட்டுமல்லாது, சாதி ஏற்றத்தாழ்வையும் நிலைபெறச் செய்ததும், இன்னும் செய்து கொண்டிருப்பதற்குமான பின்புலமாகும்.

இப்படைப்பை உள்வாங்கும் வாய்ப்பு, பெரும் பேறு என்றுதான் கருத வேண்டும். ஏனெனில், கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற சம்புவராயர்கள், படைவீட்டில் இவ்வளவு பெரிய வரலாற்றுப் பின்புலத்தோடும் அறிமுகத்தோடும் என் மனக்கண் முன் வருவார்கள் என்று எண்ணியதில்லை. இந்தப் படைப்பை முழுமையாக வாசித்த போதுதான் சம்புவராயர்கள் பற்றிய முழுமையான படைப்பாக வியக்க வைத்தது. 

சம்புவராயர்கள் மாபெரும் பேரரசாக உருவெடுத்திருந்தது பெருமையாக இருந்தது. அதேசமயம், அவர்கள்தான் எம் தமிழ் மண்ணின் கடைசித் தமிழ் ஆட்சியாளர்கள் - அரசர்கள் என்பதறியும்போது மனது இறுக்கமாகிப் போனது.

தமிழக மன்னராட்சி வரலாற்றில் இதுவரை அறியப்படாத - மறைக்கப்பட்ட - மறுக்கப்பட்ட தரவுகள் இந்தப் புதினம் முழுவதும் நிறைந்திருக்கின்றன. ஆட்சியாளர்களின் வாழ்வியல் மட்டுமல்லாது, மக்களின் வாழ்வியலையும் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பு இந்நூலில் நிறையவே கிடைத்தது.

சம்புவராயர்கள், தங்கள் ஆட்சியின் இறுதிவரை தமிழையும், தமிழர் பண்பாட்டையும், தமிழர் நெறிகளையும் காப்பதற்காகப் பெரும்பாடுபட்டுள்ளனர். அதுவும் பெரும் போராட்டம்தான். அது, இக்காலத் தமிழ்த் தேசியக் கொள்கை அரசியலை நினைவூட்டுகிறது. 

சாதிப் பிரிவுகளையும், சாதி வன்மங்களையும் இப்போது பிறந்த சிக்கல் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், இதுதான் தமிழர் ஆட்சியை - தமிழரை - தமிழை வீழ்த்த வல்லதாக இருந்திருக்கிறது. பிராமணர்கள் வகுத்த அந்தச் சாதி ஏற்றத்தாழ்வுக் கோட்பாடு எவ்வளவு பயங்கரமானது என்பதற்கு முழு சாட்சியாக இருக்கிறது இந்தப் படைப்பு. பிற்காலத்தில், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கைக்கும் இதுவே அடிப்படையாக இருந்திருக்கும் அல்லது இதே பிராமணர்கள்தான் அதைப் பரிந்துரை செய்திருப்பார்கள் என்ற எண்ணத்தை மறுக்க முடியவில்லை.

தமிழ் மண்ணில் விஜயநகர ஆட்சி அமைத்தால், கன்னிகாதானம் செய்யும் முறையைக் கட்டாயமாக்குவேன் எனப் பிராமணர்களிடம் சபதம் செய்கிறான் தெலுங்கு மன்னன். வரதட்சணை எனும் பெண்ணடிமைத்தனமும் இந்த ஆட்சியில்தான் தொடங்கியிருக்கிறது. 

கன்னியாதானம் என்பது, பெண் வீட்டார் செல்வத்தை ஆண் வீட்டாருக்குக் கொடுத்துத் திருமணம் செய்வது ஆகும். இது தமிழர் முறை அன்று. தமிழர்கள் முறைப்படி, ஆண் வீட்டார் தான் பெண்ணுக்குச் செல்வம் கொடுத்துத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை இந்நூல் வழியேதான் அறிந்துகொண்டேன்.

'தமிழர்கள் வீழ்ந்தார்கள், வீரம் குறைந்ததால் அல்ல; துரோகம் நிறைந்ததால்' என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தியது இந்நூல். 

"எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. தோல்வி ஒரு சம்புவராயனுக்கு அல்ல… தமிழ் மண்ணுக்கு என்பதை நினைவில் வையுங்கள்! தமிழ் மண்ணின் கடைசிச் தமிழரசாக நம்முடைய ஆட்சியே இருந்தது என்பதை உணரும்போது வருந்தப்போகும் தமிழர்களை எண்ணியே வருந்துகிறேன்…" இவை, கடைசித் தமிழ் மன்னனாக வரும் மல்லிநாத ராசநாராயணனார் பேசியதாக வரும் வரிகளாகும்.

இந்தப் புதினத்தின் கடைசி அத்தியாயத்தைப் படிக்க மட்டும் எனக்கு ஒரு நாள் முழுவதும் தேவைப்பட்டது. அந்தளவுக்குப் பதைபதைப்பை அது தந்தது. அவர்கள் வெல்லவில்லை, தமிழர்கள் தோற்றுப் போவார்கள் என்று தெரிந்தும் மனம் அதை ஏற்கவில்லை. சேரர் ஆயினும், சோழராயினும், பாண்டியராயினும் சம்புவராயர் ஆயினும், இறுதியில் தோற்றது யார்? எனும்பொழுது, தமிழர்கள்தான் எனும்போது மனக்கவலை மறைய மறுக்கின்றது. அது, சம்புவராயர்களின் வீழ்ச்சி மட்டுமல்ல, தமிழர் பண்பாட்டின் பெரும் வீழ்ச்சியும் ஆகும்.

இப்புதினத்தில் காட்சிப்படுத்தப்படும் அரசியலுக்கும், தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கும், காலத்தைத் தவிர வேறு ஒன்றும் வேறுபடவில்லை. அதே நிலைதான் இப்போதும். அது, தமிழை எப்பாடுபட்டாவது காக்க வேண்டிய நிலை.

படைவீடு புதினத்தின் மூலம் தமிழுக்குப் பெரும் பண்பாட்டுத் தரவு கிடைத்துள்ளதாக எண்ணுகிறேன். வேறு எவரும் செய்யாத பெரும் தொண்டை இப்புதினத்தின் ஆசிரியர் மேற்கொண்டுள்ளார். 

தமிழர் வரலாற்றில் கடைசித் தமிழராட்சியின் தோல்வியான பக்கங்கள் மிகுந்த வலியைத் தந்திருக்கிறது; கவலை அளிக்கிறது என்றாலும், அக்காலக் கட்டத்தை இருட்டிலிருந்து மீட்டுத்தந்த ஆசிரியர் தமிழ் மகன் அவர்களுக்கு எனது மரியாதைக்குரிய நன்றி. 

அ.ம.அங்கவை யாழிசை

01.11.2022



1 கருத்து: