செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

வாழையடி... எழுத்தாளர் சோ.தர்மன் சிறுகதை

ஐப்பசி மாசக் குளிர் உடம்பில் ஊசியாய் இறங்கியது. அந்தத் தெருவின் வீட்டுத் திண்ணைகளில் நாயைக்கூடக் காணவில்லை. ஒரு வேளை வைக்கோல் படப்பின் ஓரஞ்சாரம் முடங்கிக் கிடக்கலாம். வைக்கோலின் கதகதப்பு சொகமாயிருக்கும். தெருவெல்லாம் நசநசவென்று சகதிகள் படிந்து தடத்தின் மேல் தடம் வைத்து நடக்கும் பாதை, விடிந்தும்கூட ஆள் நடமாட்டமில்லை. புகையாய்ப் பெய்த வெம்பாவில் எதிரே வரும் ஆள்கூடத் தெரியவில்லை. கிளீனர் மெதுவாய்த் தெருவில் நடந்தார். கூரை வீடுகளின் முகட்டிலிருந்தும் படப்புக்களின் மேலிருந்தும் புகையைப் போன்று வெம்பாப் புகை வந்துகொண்டிருந்தது.

கிளீனர் சட்டைக்குமேல் ஸ்வெட்டர் பனியன் போட்டு மப்ளர் துண்டால் தலப்பாக் கட்டியிருந்தான். அப்படியிருந்தும்கூட அவன் குளிரில் வெடவெடத்தான். தண்ணீர்பட்ட செருப்பில்லாத கால்கள் சில்லிட்டன. பின்னால் திரும்பிப் பார்த்தபோது லாரியின் முன்னால் நின்றுகொண்டு பீடிகுடித்துக் கொண்டிருந்த டிரைவர் மங்கலாகவும் பீடி கங்குத் துணிப்பாகவும் தெரிந்தது. அவன் நேராகப் போய் நடுக்கடை தாண்டி கடவுக்குள் நுழைந்தான். இன்னும் நாலெட்டு வைத்துவிட்டால் கொத்தன் வீடுதான். வீடு திறந்திருந்தது. இருட்டில் ஆள்கூடத் தெரியவில்லை. பக்கவாட்டில் போய்த் தாழ்வாரத்தை எட்டிப் பார்த்தான். கொத்தன் குருசாமி நிறைய மூடிக்கொண்டு சுடுதண்ணி குடித்துக்கொண்டிருந்தான். எதிரே இருந்த ஈயச்சட்டியிலிருந்து காபிப்புகை மேலெழும்பியது.

'அண்ணேய்... குருசாமியண்ணே...'

'ஆரு, கிளீனர் தம்பியா, என்ன தம்பி நேத்து வாரமின்ட்டு ஒங்க பாட்ல இருந்துக்கீட்டீக, பயக பூராவும் என்னைய சடைக்காங்க, நேத்து ஓங்களால எங்க வேல மெனக்கெட்டதுதான் மிச்சம்.'

'ராத்திரித்தான் குருசாமியண்ண வண்டி வந்துச்சு, நேரா இங்கதான் வாரன். இன்னிக்கு விக்கக்கூட மார்க்கெட்ல பழம் கெடையாது. பெரிய மொதலாளி ரொம்பக் கடுப்பா இருக்காரு. எப்பிடியும் இன்னக்கி லோடு போயாகணும்.'

'டைவர் யாரு?'

'நம்ம பெரியசாமியண்ணன்தான்.'

'அனுசரிச்சு போவாருல்ல.'

‘நானிருக்கும் போது ஒனக்கென்ன கவல.’

'ரேட்டு பழைய ரேட்டுனா ஒருபய வரமாட்டான். ஒரு தாருக்கு ஒரு ரூபா ஐம்பது பைசா, எனக்குத் தாருக்கு சம்பளம் போக நாலணா தனியா தரணும்.’

'மொதல்ல பெறப்பிடுண்ண, அங்க போயி பேசிக்கிருவம்.’

‘அங்க போயி, இங்க போயிங்கிற பேச்செல்லாம் விடுங்க. நாஞ்சொன்ன ரேட்னா வாரன். இல்லன்னா வரல, பெறகு வந்துக்கிட்டு வழவழன்னு பேசிக்கிட்டு அது அசிங்கம்.’

குருசாமிக் கொத்தன் பனியனையும், சாரத்தையும், துண்டையும் முடிச்சாய்த் தூக்கிவந்தான். இரத்தக் கறைகளைப் போல் வாழைக் கறைகள் படிந்திருந்த அந்தத் துணிகளில் ஒருவித கவுச்சி நெடி வீசியது. கிளீனர் முகஞ்சுளித்தான். ஒரு துணிப்பைக் கூட்டுக்குள் திணித்துக் கொண்டு அரிவாளைத் தேடினான். செங்கால் நாரையின் கழுத்தைப் போன்ற நீண்ட கைப்பிடி, உச்சியில் நல்லபாம்பின் படத்தைப் போன்ற அகன்ற பளபளக்கும் சிறு அரிவாள். அவன் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு கிளீனருக்கு முன்னால் நடந்தான். ஒரு சில ஆட்கள் நிறைய்ய மூடிக்கொண்டு தெருவில் நடமாடுவதைக் கண்டான். லாரியில் போய் அரிவாளையும் பைக்கூட்டையும் வைத்துவிட்டு டிரைவரைத் தேடினான். டிரைவர் பக்கத்துப் பெருவாய்க்காலில் 'கால்' கழுவிவிட்டு புகையை ஊதிவிட்டு மெல்ல வந்தான்.

'என்ன குருசாமி, ஆட்கள் ரெடியாப்பா?'

‘ஆமா, நல்ல நொட்டு நொட்டுனீக, நேத்து பூராவும் ரோட்டுல காத்துக்கெடந்து கண்ணும் பூத்துப்போச்சு, குண்டியும் தேஞ்சு போச்சு.'

 'சரி, ரேட்டச் சொல்லு, பயகள தெரட்டு சுருக்காப் போவம்.’

'ரேட்டு பழைய ரேட்டல்லாம் கட்டாது. தாருக்கு ஒன்னம்பது,எனக்குத் தாருக்கு நாலணா தனியா, தருவனா சொல்லுங்க, இல்ல ஆள விடுங்க, பயக வேற எங்க எங்க ஆப்பர் வாங்கியிருக்கானோ’.

‘சரி காலங்காத்தால கசறாத, இந்தா அட்வான்சு பிடி. போயி சுருக்கா கூட்டியா.’ 

டிரைவர் கொடுத்த நூறு ரூபாய் நோட்டு குருசாமியின் அண்டர்வேர் பைக்குள் போய்ச் சுருண்டு கொண்டது. அவன் கிழக்காமல் வேகமாக நடந்து தெருவுக்குள் போனான். சடையாண்டி திண்ணையில் உட்கார்ந்து பீடி சுண்டிக்கொண்டிருந்தான். காத்தோடு சேர்த்து இறுக்கி தலப்பா கட்டியிருந்தான்.

‘ஆரு குருசாமி சின்னையாவா?’

‘யேலேய், யேய் ஆக்கங் கெட்டப் பயல, வண்டி வந்து எம்புட்டு நேரமாகுது, இனியும் உக்காந்திட்டுக் கௌம்புல, மத்த பயகளையும் சத்தங்காட்டு.’

'ரேட்டு பேசிட்டயா சின்னியா?'

'ரேட்டு என்னல மயித்தப் புடுங்கன பொல்லாத ரேட்டு, பழையரேட்டுதான், தாருக்கு ஒத்த ரூபா, அதுக்கு கொறையாவா போவாக’.

குருசாமியும் சடையாண்டியும் முன்னால் வர பத்து பதினைந்து சிறுவர்களும் சிறுமிகளும் பின்னாலயே வந்தார்கள். அவர்கள் மூடியிருந்த அழுக்குத் துணிகளில் மூத்திரவாடை கொச்சென்று மூக்கைத் துளைத்தது. கடவாயில் வாநீர் வடிந்து வெள்ளைக் கோடுகள் இருபக்கமும் நீண்டிருந்தன. அகன்ற பெரிய வட்ட வட்ட தட்டுக்களைப் போன்ற கூடைகளைத் தலையில் கவுத்தியிருந்தார்கள். அதன் வாய் விளிம்புகளில் சைக்கிளின் பழைய டயர்களை வட்டமாய் வைத்துத் தைத்திருந்தார்கள். ஒவ்வொருவர் கைகளிலும் வலைக் கொண்டையைப் போன்ற வட்ட வட்ட சும்மாட்டுத் துணியை வைத்திருந்தார்கள். கூடைகளை லாரிக்குள் வீசிவிட்டு முண்டியடித்து ஏறினார்கள். வண்டியின் வேகத்தில் வேகமாய் வீசிய ஊளைக் காற்றில் வெடவெடத்து நடுங்கினார்கள். சேட்டன் கடையின் முன்னால் வண்டியை நிறுத்தினார் டிரைவர். பல்லோடு பல் அடித்துக்கொள்ள அவர்கள் நடுங்கிக் கொண்டே டீ குடித்தார்கள். குருசாமி ஆட்களை எண்ணி மத்தியானச் சாப்பாட்டுக்குப் பதினெட்டுப் புளியோதரைப் பொட்டலத்திற்கு ஆர்டர் கொடுத்தான்.

மெயின் ரோட்டிலிருந்து இறங்கி மண் ரோட்டில் வேகமெடுத்ததுலாரி. தூக்கித் தூக்கியடிக்க அவர்கள் சாமியாடுபவர்களைப் போல எவ்வி எவ்விக் குதித்து லம்பினார்கள். ரோட்டின் இரு பக்கமும் கண்ணுக்கு எட்டும் மட்டும் வாழைகள் கையேந்தி நிற்பதைப் போல் அதன் இலைகள் விரிந்து அசைந்தன. சிறு சிறு கன்றுகளாய், பூவைச் சுமந்துகொண்டு, பிஞ்சுத்தார் நீட்டிக்கொண்டு, முற்றிக் கவிழ்ந்த குலைகளைத் தாங்கிக்கொண்டு, குலைகள் வெட்டிய வெற்று வாழைகள் காற்றுக்கு நார் உரித்து இலை பழுத்துப் பழுப்பேறிய வித விதமாய் இரு பக்கமும் கண் எட்டும்வரை பச்சை. பச்சை பசேல்...

ரொம்பத் தூரம் போய் லாரியை ஓரங்கட்டி நிறுத்தினார் டிரைவர். அவர்கள் குரங்குகளாய்க் கீழே குதித்தார்கள். ஒவ்வொருவர் ஆடைகளிலும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியதைப் போன்ற திட்டுத் திட்டாய் வாழைக்கறைகள். சாயம் போன துணிகளில் எது சாயம் எது கறை என்றுகூடத் தெரியவில்லை. குருசாமியும் சடையாண்டியும் முன்னால் நடக்க அவர்கள் ஒருவர் பின்னால் ஒருவராக வரிசையாய் வரப்பில் நடந்தார்கள். வாய்க்காலில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. பிடுங்கிப் போட்ட நீர்க்கொரண்டி முட்கள் காய்ந்து கிடந்தன. அவர்கள் அதைப்பார்த்து ஒதுக்கி நடந்தார்கள். கால்கள் உணர்ச்சியற்றுப் போய்க் குளிர்ந்துவிட்டன. இருபக்கமும் நீட்டிக்கொண்டிருக்கும் வாழை இலைகள் மேலெல்லாம் உரசி உரசி நனைத்துவிட, நனைந்த ஈரத்துணிகளுடன் நடுங்கிக்கொண்டே நடந்தார்கள்.

அவர்கள் அங்கிருந்து பார்த்தபோது லாரி கண்ணுக்குத் தெரியவில்லை. வாழைகளின் வரிசை வரிசையான இடுக்குகள் ரோட்டைப் போல நீண்டு சென்றன. நாட்டு வாழைகளின் வளர்த்தியில் பெரிய பெரிய குலைகள் முற்றித் தலை கவிழ்ந்திருந்தன. தரையில் பாதங்கள் முங்க சகதியாய் கிடந்தன. அவர்கள் சும்மாட்டுத் துணிகளைத் தலையில் இறுக்கி நாடியோடு சேர்த்துக் கயிற்றை இறுக்கிக் கட்டினார்கள். குருசாமியும் சடையாண்டியும் அரிவாளைப் பதம் பார்த்தார்கள். முதல் குலையை வள்ளியம்மாள் வாங்கட்டும் என்று அவளைக் கூப்பிட்டார்கள். அப்போதுதான் நன்றாக வேலை சாயும் என்று பேசிக்கொண்டார்கள்.

இரைகளைத் தூக்கிக்கொண்டு வரிசையாய் ஊர்ந்து செல்லும் சிற்றெறும்புகளைப் போலத் தலையில் வாழைத்தார்களுடன் வரப்பில் வரிசையாய் நடந்துசென்றார்கள். ஓணானின் முதுகைப் போல் ஒடுங்கிய வரப்பில் தள்ளாடித் தள்ளாடி நடந்தார்கள். வாழைக் குலைகளிலிருந்து வடிந்து ஒழுகும் தண்ணீர் போன்ற திரவம் முகத்தில்வடிய அவர்கள் எட்டுமேல் எட்டுவைத்து நடந்தார்கள். சிலுவைப் பாதையாய் நீண்ட வரப்பு.

'என்ன, சின்ன மாடத்தி நட பிந்துது, முன்னாடி போறயா? இல்ல பின்னாடி வாரயா"

கிட்ணன் பயல் வாய்க்கால் தண்ணீருக்குள் இறங்கி அவளை முந்தினான். அவன் போட்டிருந்த அழுக்குப் பனியனில் ரஜினி ஸ்டைலாக நின்று போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். பயல் வாழைத்தார் சுமந்து சுமந்தே முதுகு வளைந்து இப்போது இலேசாகக் கூன் விழுந்துவிட்டது. ஊடு பழங்களை உரித்துத் தின்றுவிட்டுத் தொலிகளை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து விளையாடினார்கள். உதிரிக் காய்களையும் பிஞ்சுக் காய்களையும் கொண்டு வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் எறிந்து சட்டை நனைய விளையாண்டார்கள். வெற்றுக் கூடையுடன் வரும்போது வாய்க்கால் தண்ணீரில் கூடையை விட்டு மிதந்து வருவதை ஓடிப்பிடித்துப் படகு விளையாட்டு விளையாடினார்கள். வாழைப் பூக்களை உரித்துச் சின்னக் குழந்தைகளின் பிஞ்சு விரல்களைப் போல் இருக்கும் குழாய்களில் தேன் உறிஞ்சினார்கள்.

லாரியின் ஓரத்தில் மோட்டார் சைக்கிளின்மேல் சிகரெட்டை ஊதியபடி காண்ட்ராக்ட்காரர் உட்கார்ந்திருந்தார். லோடுமேன் ஒவ்வொரு தாராக எண்ணி எண்ணி லாரிக்குள் அடுக்கிக் கொண்டிருந்தான். காண்ட்ராக்ட்காரரின் பட்டன் திறந்த வெள்ளைச் சட்டைக்குள் தொங்கும் மைனர் செயின் டாலர் மின்னி உச்சி மத்தியானத்தைக் காட்டியது. ஒவ்வொரு தாரையும் சுமந்து வந்து கொடுத்தவுடன் லோடுமேன் கொடுத்த அடையாள வில்லையை மறக்காமல் வாங்கிக் கொண்டார்கள்.

'யேய், கழுதகளா, வில்லய தொலைச்சிராதிக, தொலச்சிட்டா துட்டுக் கெடையாது.’

பெரிய பையன்கள் ஒவ்வொரு நடைக்கும் கூடையில் இரண்டு இரண்டு தார்களாய்க் கொண்டு வந்தார்கள். சிறு பையன்கள்,பொம்பிளைகள் ஒவ்வொன்றாய்க் கொண்டு வந்தார்கள். அடிக்கடி புளியோதரைப் பொட்டலம் வருகிறதா என்று ரோட்டைப் பார்த்துக் கொண்டார்கள்.

ஒவ்வொரு வாழைத் தூருக்கு ஒருவராய் உட்கார்ந்திருந்தார்கள். கால்கள் சகதியைத் தொட்டுக்கொண்டிருக்க ஆளுக்கொரு பொட்டலத்தைப் பிரித்துத் தின்றார்கள். 

‘ஏலேய், மணிவேலு இன்னிக்கி சாயங்காலம் வாரயா?"

'எங்கண்ண, எதுக்கு ?

'வாரமின்னு சொல்லு இல்ல வரலன்னு சொல்லு. எங்க எதுக்கு அப்பிடின்னெல்லாம் கேக்கக் கூடாது.’

'ஏனேய், போன வாரம் போனமே அங்கதான.’

'சீ நிய் சும்மா கெட நாயி.’

'எதுக்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு, அம்மணக்குண்டிப் படம் பார்க்கத்தான்.’

செயராஜ் பயலின் உதிரிக்காய் எறிக்குத் தப்பி மணிவேல் வாழையைக் கெட்டியாய் பிடித்துக்கொண்டு எட்டிப் பார்த்தான். போன வாரம் தாங்கள் போனதையும் டிக்கெட்டுக்குப் பத்து ரூபாய் கொடுத்தும் கிடைக்காமல் கடேசியாய்ப் போனதையும் பயல் கதை கதையாய் சொன்னான். இன்னக்கி சாயங்காலம் அவன் கூட வருவதற்கு ஏழெட்டுப் பேர் ரிசர்வேசன் செய்துகொண்டார்கள். லட்சுமியும் வள்ளியும் முறைத்துக்கொண்டு சொன்னார்கள்.

'இன்னக்கி போங்க நான் எல்லார் வீட்லயும் சொல்லி பூச வாங்கிக் குடுக்கன்.’

'எப்பிடி போயி சொல்லுவீக.'

‘ ……..’

அவள் உம்மென்று முறைத்தாள்.

எல்லோரும் கெக்கொலி போட்டுக்கொண்டு சிரித்துக் குனுகினார்கள். வள்ளிக்கும் லட்சுமிக்கும் வெட்கம் பிடுங்கித் தின்றது. அவர்கள் தலையைக் கவிழ்த்துக்கொண்டார்கள். நீள வாழைக்காய் ஒன்றை எடுத்து ஒண்ணுக்கிருப்பது போல் வைத்துக்கொண்டு அவர்களை சிரிப்புக் காட்டினான் மணிவேல்.

'சீ, நாயி ஒங்க ஆத்தாட்டப் போயி காமி'

அவர்கள் முகத்தைத் திருப்பத் திருப்ப அவர்களின் முகத்திற்கு எதிரிலேயே போய் ஆட்டம் போட்டான் மணிவேல். 

குருசாமியின் அதட்டலில் ஓடிப் போய்ச் சும்மாடு கட்டினார்கள்.

'என்னல, ஒரு மாசமா உப்பளத்துக்கு அட்டுச் சுமக்க போனிய, இன்னக்கி இங்க வந்திட்ட.'

'பெரிய்ய பெட்டிக்கு ஒரு பெட்டி அள்ளி நிறைய்ய ரெண்டு பேரு தூக்கித் தலைமேல் வைக்கான். அங்கிருந்து களத்துக்குப் போகுமுன்ன கண்ணு முழி நெல குத்துது. கால் நரம்பு விண்ணு விண்ணுன்னு தெறிக்கி, ரெண்டு நாளா மூச்சுக் குத்துப் புடிச்சுக் குனியவும் முடியாம நிமிரவும் முடியாம, ரொம்ப சங்கடப்பட்டுப் போச்சு, அதான் அளத்துக்குப் போக வேண்டாமின்னு நின்னுக்கிட்டன், சம்பளமும் தெனச் சம்பளம் லைட் போட்ட பெறவுதான் விடுறான்.'

இரண்டு பெரிய தார்களைக் கூடையில் வைத்துக்கொண்டு வள்ளி வரப்பில் தள்ளாடித் தள்ளாடி வந்துகொண்டிருந்தாள். அவளின் கழுத்து நரம்புகள் விடைத்துப் போய் நின்றன. கண்முழி நிலைக்குத்த வரப்பின் மேல் நடை பழகினாள். வரிசையாய் மற்றவர்கள். அம்மா என்று அலறியபடி வாய்க்காலுக்குள் விழுந்தாள். இரு கால் விரல் இடுக்குகளிலும் கொத கொதவென்று குழைந்து போயிருந்த சேற்றுப் புண்ணில் நீர்க்கொரண்டி முள் குத்தி இரத்தம் வந்துகொண்டிருந்தது. வரப்பில் கூடையோடு தக்கென்று உட்கார்ந்தவள் ஓ வென்று கூப்பாடு போட்டாள். தார்கள் தண்ணீருக்குள் கிடக்க கூடை மட்டும் மிதந்து சென்றது. 

கூடையை ஓடிப்போய் செயராஜ் பிடித்துக்கொண்டு வந்தான். தனைந்த ஈரப்பாவடையுடன் வரப்பில் உட்கார்ந்திருந்த வள்ளி இடுப்பைத் தொட்டுப் பார்த்தாள். துணியில் பொட்டலமாய்க் கட்டி முடிந்து வைத்திருந்த வில்லைகளைக் காணவில்லை. அவள் கண்களில் கண்ணீர் திரண்டது.

'அய்யய்யோ... அம்மா... எம் வில்லயக் காணும், சம்பளம் கொண்ட்டு போகலன்னா எங்கம்மா என்னைய அடிப்பாள...'

அவர்கள் எவ்வளவு தேடியும் வில்லைப் பொட்டலத்தைக் காணவில்லை. வள்ளி கையையும் காலையும் தண்ணீரில் உதைத்துக் கொண்டு கூப்பாடு போட்டாள். ஒருவரையும் காணாததால் குருசாமியும் சடையாண்டியும் அங்கே வந்தார்கள்.

‘யேலேய், யே... சின்ன சிறுக்கிப்பிள்ளைகளா அங்க கூடிட்டு என்னல செய்றங்க.'

‘வள்ளி எல்லா வில்லையவும் தொலைச்சிட்டா.'

‘வில்லயத் தொலைச்சிட்டா அவுக ஆத்தாட்டப் போயி சம்பளம் வாங்கிக்கிரச் சொல்லு.’

"போங்கல, போயி, சொமங்கல நாப்பயகளா.'

அவர்கள் வெள்ளாடுகளாய் ஓடினார்கள். அப்படியும் கூட உதிரிக்காய்களின் எறிக்குத் தப்ப முடியவில்லை. முதுகைத் தடவிக்கொண்டு வாய்க்காலிலும், வரப்பிலும் சிதறி ஓடினார்கள். வள்ளியின் அழுகை ஓயவில்லை. அவள் கன்னங்கள் வழியே வழிந்த கண்ணீர் வாய்க்கால் தண்ணீருடன் கலந்துபோனது. அவள் எழுந்து நிற்க முயன்றாள். முடியவில்லை. நடு முதுகில் குறுக்கெலும்பு விண்ணு விண்னென்று தெறித்தது. இடுப்புக்கு கீழே உணர்ச்சிகள் குறைந்து வருவதைப் போல உணர்ந்தாள். காற்றில் ஆடிய வாழை இலைகள் அவளைப் பார்த்துக் கைக்கொட்டிச் சிரிக்க அவள் குத்துக்கல்லாய் வரப்பில் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். கண்கள் மட்டும் கண்ணீரைச் சிந்திக்கொண்டிருந்தன.

சடையாண்டி சொன்னான்.

‘இப்ப, மரியாதையா வரப்பவிட்டு எந்திருச்சு வழி விடப் போறயா? இல்ல வாழைக்கா பூச வேணுமா?' அவள் அவனைப் பரிதாபமாய்ப் பார்த்தாள்.

எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய ‘நீர்ப்பழி’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து.


நீர்ப்பழி, சோ.தர்மன், அடையாளம் பதிப்பகம், முதல் பதிப்பு 2020.