புதன், 27 ஏப்ரல், 2022

நம்மாழ்வாரும் சித்த மருத்துவமும்: கதிர்நம்பி



இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார், சித்த மருத்துவம் குறித்துப் பேசவில்லையா ? சித்த மருத்துவத்தை முன்னெடுக்கவில்லையா ?

*

தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை/சூழலியல் செயல்பாடுகள் அரும்பிய காலத்தில் இருந்து செயல்பட்டு வந்தவர் நம்மாழ்வார். புழுதியில் உழல்கின்ற உழவர்களை ஒரு படி மேல் ஏற்றுவது தன் வாழ்நாள் இலட்சியம் என்று ஓடித் திரிந்தவர். 

வேளாண்மையை முழுமையாகக் (wholistic approach) காண வேண்டும் என்பார். மொத்தம் /எண்ணிக்கை (Total/count) என்பதை விட முழுமை (wholesome) என்பதனைக் கணக்கிட வேண்டும் என்பார். அந்த முழுமை என்பதற்குள் நுண்ணுயிர் முதல் பேருயிர் வரை அடங்குகிறது.  

உழவர்கள் கடனில்லாத வாழ்வு வாழ வேண்டும். நுகர்வோர் நஞ்சில்லாத உணவு உண்ண வேண்டும். மாசில்லா சூழல் அமைய வேண்டும். இவை அனைத்தும் இந்த முழுமைக்குள் அடக்கமாகும். இவ்வாறு முழுமையாக நோக்குகின்ற பார்வை பெற்றதனாலேயே உழவு, உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த சிந்தனையை மக்களிடம் எடுத்துச் சென்றார். 

"சுவரில்லா கல்வி, மருந்தில்லா வாழ்வு, நஞ்சில்லா உணவு" - இது தான் அவருடைய பிரச்சார முழக்கங்கள். மரபு வழி மருத்துவர் ஈரோடு வெள்ளிமலை அவர்களின் பணிகளை மக்களிடம் பேசியிருக்கிறார். திருக்குறள் கூறும் உடலியல் நெறிமுறைகளைப் பேசியிருக்கிறார். உடல் இயங்கியலை எளிய மக்கள் மொழியில் மேடைகளில் பேசியிருக்கிறார். நவீன மருத்துவத்தில் விரவி இருக்கும் வணிகத்தைச் சாடியிருக்கிறார். நவீன மருத்துவரான கொடுமுடி நடராசன் சித்த மருத்துவத்தில் பயன்படுத்திய "பஞ்ச கவிய"த்தைப் பயிர்களுக்குத் தெளிக்கின்ற போது நல்ல விளைச்சல் கிடைப்பதைக் கண்டறிந்தார். இது நம்மாழ்வாருக்குத் தெரியவர அது முதல் பஞ்ச கவியம் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தார். பஞ்ச கவியத்தை மக்களிடம் எடுத்துச் சொன்னதற்காகவே அண்மைக் காலத்தில் இணைய உலகில் திராவிட முற்போக்காளர்களால்(!) கேலி செய்யப்பட்டார். 

சித்த மருத்துவர் கு.சிவராமன் மரபு வழி அரிசிகளின் அருமையைப் பேசுவது நம்மாழ்வார் அவர்களினுடைய தாக்கத்தில் எனச் சொன்னால் மிகையாகாது.

நம்மாழ்வார் சித்த மருத்துவத்தை முன்னெடுத்ததை விட, இயற்கை வழி மருத்துவ முறைகளையே அதிகம் பேசினார். உண்மை தான். 

"ஒரு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, களக்காடு 'அமைதித் தீவில்' பணிபுரிந்த நேரம். இரண்டு பெரிய மனிதர்களை எதிர்கொண்டேன். அவர்கள் இயற்கை வாழ்வியலின் எல்லையைத் தொட்டவர்கள். ஒருவர் புலவர் இராமகிருட்டினன்; மற்றவர் அவரது குரு பாண்டுரங்கன்.

அன்றைக்கே இயற்கை மருத்துவம் என்ற தத்துவம் என் தலையில் விதிக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு மருத்துவர் வெள்ளிமலையைச் சந்தித்தபோது இயற்கை மருத்துவம் தலையில் வேரூன்றியது" என்று இயற்கை மருத்துவத்திற்குள் தான் வந்த பாதையைக் கூறுகிறார்.

மேலும், அவருடன் இருந்தவர்கள் மூலமும் அல்லது அவருக்குக் கிடைத்த அனுபவங்களில் இருந்தும் அது வெளிப்பட்டது. அதற்காக அவர் சித்த மருத்துவத்தை இன்றைக்கு முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களைப் போல கேலியோ/எள்ளலோ செய்யவில்லை. 

இந்த நிலத்தின் மீது அமையப்பெற்ற எது ஒன்றையும் ஊதாசீனப்படுத்தியவர் அல்ல நம்மாழ்வார். அவரின் சிந்தனை தற்சார்பானது. தற்சார்பே அவர் சிந்தனை வடிவம். உலகமயமாக்கலுக்கு எதிராக உள்ளூர்மயமாக்கலை முன்னிறுத்தினார். பண்பாட்டு விழுமியங்களில் அறிஞர் தொ.ப உலகமயமாக்கலை எதிர்த்து போல.

நம்மாழ்வார் தொண்டு நிறுவனங்களில் வேலை செய்தார். மறுப்பில்லை. ஆனால், சாகின்ற பொழுது ஓலைக் குடிசையில் தான் கிடந்தார். மீத்தேன் எரிவாயுப் போராட்டங்களில் தன் உடலை வருத்திக் கொண்டுதான் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 

பாமயன் ஐயா சொல்வதைப் போல, நம்மாழ்வார் ஓர் இயக்கம் கட்டி இருக்க வேண்டும். ஆனால், நம்மாழ்வார் எல்லா இயக்கப் போக்குகளோடும் இணைந்து வேலை செய்தார். ஓரிடத்தில் கூட அவர் நீர்த்துப் போகவில்லை. அவர் தனித்துவம் இழந்து நின்றுவிடவில்லை என்றே சொல்லலாம். 

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நம்மாழ்வார் முன்னெடுத்த இயற்கை வழி வேளாண்மை/ வாழ்வியலில் இருக்கும் ஏராளமானோர் சித்த மருத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள். அதன் வளர்ச்சியிலும் விருப்பமாக இருக்கிறார்கள். மக்கள் நலன் விரும்பும் எந்த ஒரு சித்த மருத்துவருக்கும், பரம்பரைப் பண்டிதருக்கும் நம்மாழ்வாரின் இதயத்தில் இடம் உண்டு.

இன்னும் சொல்லப் போனால், நம்மாழ்வாரின் விருப்பத்தை இவர்கள்தான் முன்னெடுக்க வேண்டும். இயங்களும் இசங்களும் அதற்கு ஒரு போதும் தடையாக இருக்காது.

சமூகப் பண்பாட்டு ஆய்வாளர் கதிர்நம்பி அவர்களது கட்டுரையிலிருந்து...

*

இயற்கை வேளாண்மை என்பது, நிலத்தையும், நிலத்துவாழ் உயிரினங்களையும், உயிரினங்களுக்குத் தேவையான உணவையும் நஞ்சாக்குவதிலிருந்து மீட்டெடுத்துக் காக்கும் மருத்துவமுறைதான். 

சித்த மருத்துவம் காக்கப்படுவதும் இயற்கை வேளாண் அறங்களுள் ஒன்று. இயற்கை வேளாண்மையை முன்னிறுத்திய நம்மாழ்வாரே சித்த மருத்துவத்தையும் முன்னிறுத்திச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பது, மற்றவர்களின் எதிர்பார்ப்பாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், குற்றச்சாட்டாக முன்வைக்கக் கூடாது. அவரால் எதைச் செய்ய முடிந்ததோ அதைச் செய்திருக்கிறார். அதைச் செய்தவர் இதை ஏன் செய்யவில்லை என்று கேட்பதும் பகடி செய்வதும் அறமும் அல்ல; அறிவுப்பூர்வமானதும் அல்ல.

ஏர் மகாராசன் 

27.04.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக