புதன், 7 நவம்பர், 2018

சங்க காலத்தில் சாதியும் உடன்போக்கும்:- கணியன் பாலன்

அகமணமுறைதான் சாதிக்கான அடிப்படையைப் பாதுகாத்து அது தொடர்ந்து இருந்து வருவதை உறுதி செய்கிறது. இனக்குழு காலத்தில் அகமணமுறை இருந்தது. அன்று இரத்த உறவு என்பது உயிரினும் மேலானதாக மதிக்கப்பட்டது. இந்த அகமணமுறைதான் அந்த இனக்குழுவின் இரத்த உறவையும் அதன் அடிப்படையிலான கண அமைப்பு முறையையும் கட்டிக்காத்து வந்தது. ஆகவே இனக்குழு காலத்தில் அகமணமுறை உலகம் முழுவதும் இருந்தது. ஆனால் இனக்குழுவின் கண அமைப்பு முறையை அதன் அகமணமுறையை அழித்து அதன் மீது கட்டப்பட்டதுதான் இந்த ஒருதார மணமும், குடும்பமும், அரசும் ஆகும்.

ஆதலால் ஒருதார மணமும், குடும்பமும், அரசும் உருவானபோது இந்த அகமணமுறையும் இல்லாது போனது. தமிழகத்திலும் இக்காலகட்டத்தில் அகமணமுறை இல்லாது போனது. அதன் அடையாளம் தான் ‘உடன்போக்கு’ திருமணமுறை ஆகும். சங்ககாலத்தில் உடன்போக்கு என்பது திருமணத்திற்கான ஒரு முறையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தது. ஆனால் பிற்காலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகிய பொழுது இம்முறைக்கு எதிர்ப்புகள் இருந்ததையும் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. ஆனால் பொதுவாக உடன்போக்கு என்பதைச் சங்ககாலச் சமூகம் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருந்தது என்பதைச் சங்ககால அகப்பாடல்கள் உறுதி செய்கின்றன.

இந்த உடன்போக்கில் தலைவி தன் குடிக்குரிய தலைவனோடு மட்டுமே போனதாகச் சங்க இலக்கியம் குறிப்பிடவில்லை. முல்லைத்தலைவி குறிஞ்சித்தலைவனோடும், நெய்தல் தலைவி மருதத்தலைவனோடும் என  ஐவகைத்திணைத் தலைவனோடும், அனைத்துக் குடித்தலைவனோடும், அனைத்துத் தொழில் செய்யும் தலைவனோடும் ஐந்திணைத்தலைவிகளும் உடன்போக்கு மேற்கொண்டாள் என்பதைச் சங்க இலக்கிய அகப்பாடல்கள் உறுதி படத் தெரிவிக்கின்றன. ஆகவே சங்ககாலத்தில் அகமணமுறை இருக்கவில்லை. அதன் காரணமாகச் சங்ககாலத்தில் சாதியும் இருக்கவில்லை எனலாம்.

ஆனால் பொருளாதார உயர்வு தாழ்வுகளும், வர்க்கவேறுபாடுகளும் இந்த உடன்போக்குத் திருமண உறவுக்கு ஆங்காங்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன என்பதையும் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. அதுபோன்றே அரச குடும்பங்களிலும், உயர்வேளிர் குடும்பங்களிலும் உடன்போக்குத் திருமணமுறைக்கு எதிர்ப்புகள் இருந்திருக்கும். சான்றாக நற்றிணையின் 45ஆம் பாடலில் தலைவி யின் காதலை வேண்டும் தலைவனிடம் தோழி, இவள் சிறுகுடிசையில் வாழும் மீனவப்பெண் எனவும் நீயோ தேருடைய செல்வந்தன் மகன் எனவும் கூறி இருவருக்கும் பொருத்தம் இல்லை என அவனது காதலை மறுக்கிறாள். நற்றிணையின் 328ஆம் பாடலில் மணம் செய்யாது காலம் கடத்தும் தலைவனை எண்ணி தலைவி வருந்தும்போது தோழி தலைவனின் பிறப்பு உயர்ந்தது என்பதால் அவர் என்றும் சொற்பிறழார், விரைவில் வருவார் என ஆறுதல் கூறுகிறாள்.

ஆகவே வர்க்க, வகுப்பு வேறுபாடுகள் உடன்போக்குத் திருமணமுறைக்கு எதிர்ப்பும் ஆதரவும் தந்து வந்துள்ளன என்ற போதிலும் உடன்போக்கைச் சங்ககாலச் சமூகம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருந்தது என்பதில் மாற்றம் இல்லை. அதன் காரணமாகவே அனைத்துக்குடிப் பெண்களும் அனைத்துக்குடி ஆண்களோடும் வேறுபாடு இன்றி உடன்போக்கு மேற்கொண்டனர் என்பதைச் சங்க இலக்கிய அகப்பாடல்கள் உறுதிபடக் கூறுகின்றன. அதுபோன்றே செல்வக்குடியில் பிறந்த இளம்பெண் ஏழை இளைஞனோடும், தேருடைய செல்வ மகன் ஏழை இளம் பெண்ணுடனும் உடன்போக்கு மேற்கொண்டதை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.

சங்ககாலத்தில் திணை வேறுபாடுகளும், தொழில் வேறுபாடுகளும், பொருளா தார அடிப்படையிலான வகுப்பு, வர்க்க வேறுபாடுகளும்தான் இருந்துள்ளன. ஆனால் சாதிகள் இருக்கவில்லை. இவைபோகச் சங்ககாலத்தில் இழிசனன், சண்டாளன், புலையன் போன்ற கீழ்மக்களாகக் கருதப்பட்டவர்களும் இருந்தனர் என்பதை அறிய முடிகிறது. இவர்களும் கூட சாதிய அடிப்படையில் அப்படி அழைக்கப்படவில்லை. இழிவான தொழில் செய்கிறவர்கள் என்கிற அடிப் படையில்தான் அவர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டார்கள்.

குறுந்தொகையின் 40ஆம் பாடல்
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயர்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” 
என்கிறது. உடன்போக்கில் ஈடுபட்டத் தலைவனும் தலைவியும் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாதவர்களாக இருந்தனர் என்பதையும் அனைத்துப்பெண்களும் அனைத்து ஆண்களோடும் உடன்போக்கு மேற்கொண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பதையும் இப்பாடல் தெளிவுபடுத்துகிறது. ஆகவே அன்றையச் சங்ககாலம் அங்கீகரித்த உடன்போக்குத் திருமண முறையில் சாதிகள் இல்லை என்பதை இப்பாடல் உறுதி செய்கிறது எனலாம்.

சங்கம் மருவிய காலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், தொழில் வேறுபாடுகளும், வர்க்க வேறுபாடுகளும் மிக அதிக அளவில் அதிகரித்ததின் விளைவாகவும் வைதீக ஆதிக்கமும், பிராமணிய ஆதிக்கமும் மிக அதிகச் செல்வாக்கு பெற்றதாலும் சாதீயத்துக்கானக் கூறுகள் தமிழ்ச் சமுதாயத்தில் உருவாகத்துவங்கி இடைக்காலத்திலும் சோழ பாண்டியப் பேரரசுகள் காலத்திலும் அது படிப்படியாக வளர்ந்து வலுவடைந்து, 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும் ஆங்கிலேய ஆட்சியிலும் அது மேலும் வளர்ந்து பிரிவுகள் அதிகரித்துக், கெட்டித்தன்மை கொண்டதாக இறுகி இன்றைய நிலையை அடைந்தது எனலாம்.

அரசு தோன்றும்பொழுதும் அதன் பின்னரும் உலகம் முழுவதும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், தொழில் வேறுபாடுகளும், வர்க்க வேறுபாடுகளும் உருவாகி வளர்ந்து வந்துள்ளன. ஆனால் உலகில் எங்கும் சாதிகள் உருவாகவில்லை. சங்ககாலத்திலும் சாதிகள் இருக்கவில்லை. ஆதலால் சாதீயத்தின் ஆரம்பகால ஊற்றுக்கண்ணாக இருந்தது வைதீகச்சிந்தனையும், பிராமணியமும்தான் என உறுதிபடக் கூறலாம். எனினும் இவை குறித்து மேலும் ஆய்வுகள் தேவை.

பார்வை: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 855 - 857.

ஓவியம்:
கவியோவியத் தமிழன்

3 கருத்துகள்: