சனி, 25 ஆகஸ்ட், 2018

வரலாற்றுவழி தமிழ்த் தேசியமும் கற்பனையான இந்திய தேசியமும் :- த.செயராமன்




 தமிழினத்திற்கு ஒரு பெருமை உண்டு. உலகின் மிகப் பழமையானதும், இன்று வரைப் பயன்பாட்டில் உள்ளதும், செறிவான சொல்வளமும், இலக்கிய வளமும் கொண்ட ஒரு செவ்வியல் மொழிக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். மற்றவர்களுக்கெல்லாம் தான் பிறந்தது முதல் நாவில் தவழ்வது தாய்மொழி. தமிழைப் பொறுத்தவரை, 24 மொழிகளைப் பெற்றெடுத்ததுடன், 82 உலக மொழிகளுக்கு மூலமாக விளங்குவதால் மற்ற பல மொழிகளுக்குத் தாய்மொழி. மாந்த இனம் தோன்றிய பகுதியாகக் கருதப்படும் ஆப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியிலிருந்து மடகாஸ்கர் மற்றும் இன்றையத் தென்னிந்தியப் பகுதியைத் தழுவி தெற்கில் கடலில் இருந்த பெருநிலப்பரப்பு கடலில் படிப்படியாக மூழ்கி மறைந்ததாலும், எஞ்சியுள்ள தொல்மாந்தர் தோன்றிய நிலப்பரப்பில் தொடர்ந்து வாழும் பேற்றினைக் கொண்டவர்கள் தமிழர்கள். உணவு சேகரிக்கும் நிலை, வேட்டையாடும் நிலை ஆகியவற்றைக் கடந்து, ஆற்றங்கரைகளில் நிலை கொண்டு, வேளாண் சமூகமாக மாறி, உபரி உற்பத்தியைப் பெருக்கி, உலக அளவில் வணிகம் செய்து, செல்வத்தைக் குவித்தவர்கள் தமிழர்கள்.
தமிழ்த் தேசத்தின் வரலாற்றுவழி இருப்பு

 தமிழர்களுக்குக் கூடுதலாகவும் ஒரு பெருமை உண்டு. ஐரோப்பாவில் முதலாளிய உற்பத்திமுறை தோன்றிய பிறகே மொழி அடிப்படையிலான தேசங்கள் தோன்றின. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் ஒன்றன்பின் ஒன்றாகத் தேசங்கள் எழுந்தன. 1789-இல் வெடித்த பிறகு ஜனநாயகக் குடியரசுகளாகத் தேசங்கள் மாறின.

 கிரேக்கத்தில் 'பொலிஸ்' என்று அழைக்கப்பட்ட ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, தீப்ஸ், கொரிந்து போன்ற ‘நகர நாடுகள்’ (City States) இருந்தன. தமிழர்களைப் போலவே கிரேக்கர்களும் பழம் பெருமை வாய்ந்தவர்கள். ஆனால், சங்க காலத்திலேயே, மூவேந்தர்களின் தமிழ் அரசுகள் ஒற்றை தேசமாக அறியப்பட்டது. ‘தேசம்’ என்ற சொல்லாலேயே பண்டைத் தமிழகம் அழைக்கப்பட்டது என்பது பலருக்கும் வியப்பளிக்கும். இதற்குக் கல்வெட்டுச் சான்றும் உள்ளது.

 வடஇந்தியாவில், இன்று பாட்னா எனப்படுகிற பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மௌரிய வம்சத்தின் மூன்றாவது பேரரசராகிய அசோகரின் (கி.மு.268-232) பேரரசில்  இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி அடங்கியிருந்தாலும், தெற்கே தமிழர்களின் நிலப்பரப்பு அதில் அடங்கவில்லை. சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர மற்றும் தம்பபண்ணி (இலங்கை) ஆகியவை தம் எல்லைப் பகுதியில் சுதந்திர நாடுகளாகவும் நட்புறவோடும் உள்ளன என்று அசோகர் தம் 2 மற்றும் 13-வது பாறைச் சாசனங்களில் தெரிவிக்கிறார்.

ஹத்திக்கும்பா கல்வெட்டில் தமிழ்த்தேசம்!
 அசோகருடைய சமகாலத்திய கலிங்க (ஒடிசா) அரசராகக் கருதப்படும் காரவேலர் மிக முக்கியத் தகவலைத் தம் ஹத்திக்கும்பா கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார். கடந்த காலத்தில், தனது நாட்டுக்கே (கலிங்கம்) அச்சுறுத்தலாக, 113 ஆண்டுகளாக நிலவி வந்த, தமிழர் அரசுகளின் கூட்டமைப்பான ‘திரமிரதேச சங்கதா’ வை(தமிழ்த் தேச சங்கம் -Tramiradesa Sanghata) தான் தோற்கடித்துவிட்டதாகக்  காரவேலர் பெருமை பேசுகிறார்.  கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்களை ஒரு தேசமாகக் கருதியமைக்கு இது ஒரு கல்வெட்டுச் சான்றாகும். தமிழ்த்தேசியம் என்பது இயல்பான வரலாற்றுவழித் தேசியம் ஆகும்.

தமிழ்த் தேசத்துக்கு மொழியே முகம்
 உலக வரையறுப்புகள் மற்றும் பிரகடனங்களின்படி, ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான இறையாண்மையுள்ள தேசத்தை நிறுவிக் கொள்ளலாம். அது அந்தத் தேசிய இனத்தின் பிறப்புரிமை. இத்தேசிய இனங்கள் அதன் பொதுமொழி மூலம் அடையாளம் காணப்படுகின்றன. மொழிதான் ஒரு தேசிய இனத்தின் முகம். மொழியின் அடிப்படையில்தான் நாடு -என்பது தொல்காப்பியர் காலத்திலேயே உணரப்பட்டது. மூவேந்தர்கள் ஆண்டாலும், தமிழ்மொழி எதுவரைப் பேசப்படுகிறதோ அதுவே தமிழ்த்தேசம் என்ற பார்வை சங்க காலத்திலேயே இருந்தது.
'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்'
என்று தொல்காப்பிப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார்.
 ‘தமிழ் கெழு மூவர் காக்கும்,
 மொழி பெயர் தே எம்’- என்று தமிழ் வழங்காப் பகுதியை அகநானூறு குறிப்பிடுகிறது.

 தமிழ்த் தேசத்தை ‘தமிழ்நாடு’ என்று பதிவு செய்யும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம். தமிழ்வழக்கும் பகுதியை 'தமிழ்நாடு' (சிலப்.25-165) என்றும், 'தென் தமிழ்நாடு' (சிலப்.10-58) என்றும் அது குறிப்பிடுகிறது.

 அதுபோன்றே, ‘தமிழ்நாடு’ என்று தமிழகத்தைக் கம்பர் (கி.பி. 13-ம் நூற்றாண்டு) குறிப்பிடுகிறார். ‘அகன் தமிழ்நாடு’ (கிட்கிந்.749) ‘தென் தமிழ்நாடு’ (கிட்கிந். 750, 918), ‘செந்தமிழ்நாடு’ என்று கூறும் கம்பர், வட மொழி பரவிவிட்ட வடஇந்தியப் பகுதியையும், தமிழ் வழங்கும் பகுதியையும் வெவ்வேறாகப் பிரித்துக் காட்டுகிறார். ‘வடசொற்கும், தென் சொற்கும் வரம்பாகி நின்ற வேங்கடம் (கிட் கிந். 745) என்று வேங்கடமலையை தமிழகத்தின் எல்லை ஆக்குகிறார். மொழியின் அடிப்படையிலேயே தேசங்கள் என்பது தமிழ்ப் புலவர்களின் தெளிவான பார்வையாகும். பக்தி இலக்கியமாகிய பெரியபுராணம், 'அருந்தமிழ்நாடு', 'தண்டமிழ்நாடு', 'தென்றமிழ்நாடு', 'வண்டமிழ்நாடு', 'கன்னித்தமிழ்நாடு', 'தமிழ் வழங்குநாடு', 'தமிழ்த்திருநாடு', 'செந்தமிழ்நாடு' என்று மொழியையும், நாட்டையும் இணைத்துத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

 தமிழர்களுக்கான தேசம் எது? என்பதைத் தெளிவாக இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உயைாசிரியர் இளம் பூரணார், தொல்காப்பியம் நூற்பா-496 -க்கு பொருள் கூறும்போது,  ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பதைக் கூறும்போது,
 ‘நும் நாடு யாது என்றால்,
 தமிழ்நாடு என்றல்’ என்று கூறுகிறார்.
ஐரோப்பாவில் தேசம் அல்லது மொழிவழி நாடு பற்றிய பார்வை கி.பி. 15-ம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது. ஆனால் தமிழர்கள் சங்ககாலம் முதலே தங்கள் தாயகம், மொழி அடிப்படையில் தேசம் பற்றியப் பார்வையில் தெளிவாக இருந்தார்கள்.

 சங்க காலத்தில், தமிழகத்தை
‘இமிழ் கடல் வேலித் தமிழகம்’
என்று பதிற்றுப்பத்தும்,
‘வையக வரைப்பில் தமிழகம்’ என்று புறநானூறும், இக்காலத்திற்குப் பின் எழுதப்பட்ட பரிபாடல் திரட்டு ‘தமிழ் நாட்டகம்’ என்றும் குறிப்பிடுகின்றன.

மொழியின் அடிப்படையில் தமிழர் என்ற இன அடையாளம்
 பக்தி இலக்கியக் காலத்தில் தமிழர்கள் தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்தினர். பூதத்தாழ்வார் ‘இருந்தமிழ் நன் மாலை இணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது’ (நாலாயிர திவ்விய பிரபந்தம்) என்று தம்மை தமிழன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார். தமிழர்கள் தங்களையும், ஆரியர்களையும் வெவ்வேறாகப் பிரித்து அறிந்தனர். சிலப்பதிகாரம், வடமொழியாளர்களை 'வடவாரியர்' என்று குறிப்பிடுகிறது. அப்பர் திருமறைக்காட்டில் சிவபெருமானுக்கு சமஸ்கிருதத்திலும் தமிழிலும் வழிபாடு நடப்பதை ஆரியம் வேறு, தமிழ் வேறு என்று வேறுபடுத்திக் காட்டும் வகையில்
"ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்"
என்று குறிப்பிடுகிறார். தமிழர்களுடைய பண்பாடும், வடஇந்தியப் பண்பாடும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை.
 ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’,
‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’
என்ற ஆன்றோர் வாக்குகள், தமிழனத்தின் அறம் சார்ந்த விழுமியத்தின் வெளிப்பாடுகள். ஆரியரின் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்தே இவ்விழுமியங்கள் (Values) முன்நிறுத்தப்பட்டன.

 தமிழ், தமிழகம், தமிழ்நாடு என்று தமிழ் இலக்கியங்கள் பேசினாலும் திருக்குறள் மாந்த இனம் முழுமைக்கும் நன்னெறி புகட்டும் பொதுமறையாக எழுதப்பட்டமையால், அதில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்த்தேசம் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. அதனால்தான் பாரதியார்
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என்று பாடினார்.

புராதன இந்தியா என்பது உண்டா?
 இந்தியா என்ற நாடு ஆங்கிலேயரின் வாளின் வலிமையால் உருவாக்கப்பட்டு, பிரிட்டிஷ் காலனியாதிக்கப் பகுதியாகிறது. அதற்கொரு நிர்வாகக் கட்டமைப்பையும் ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். வெற்றிகொள்ளப்பட்ட பகுதிகள் சிறிதாயிருந்தபோதும், பின்னர் காலனியப் பேரரசாக உருவெடுத்தபோதும் 'இந்தியா' என்றே ஆங்கிலேயர் அழைத்தனர். இந்தியாவுக்கென ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு ஆங்கிலேயர்களால் 1773-இல் உருவாக்கப்பட்டு, வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு அதன் முதல் கவர்னர் ஜெனரல் ஆக்கப்பட்டார்.

 ஆங்கிலேயர் வரும்வரை இந்தியத்துணைக் கண்டம் ஒற்றை நிர்வாகத்தின் கீழ், ஒரு நாடாக இருந்ததே இல்லை. இன்று பலரும் கருதிக்கொள்வதுபோல இந்திய தேசம் அல்லது பாரத தேசம் என்ற ஒன்று வரலாற்றில் இருந்ததே இல்லை. புராணிகர்கள் குறிப்பிடுகிற 56 தேசங்களிலும் கூட இந்திய தேசம், பாரத தேசம் என்ற ஒன்று கிடையாது. ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’ என்ற நூலை 1918-இல் பி.வி.ஜகதீச ஐயர் எழுதினார். இதில் சொல்லப்படும் 56 தேசங்களில் சீனம், பாரசீகம், காந்தாரம், காம்போஜம், நேபாளம் கூட இருக்கின்றன. ஆனால் பாரத தேசம் அதில் இல்லை. சோழ தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம், திராவிட தேசம் அதில் இருக்கின்றன.
பாரத தேசம் என்ற கருத்தியல் உருவாக்கம்

 அமாவாசை தர்ப்பணத்தின்போது சொல்லப்படும் மந்திரத்தில்
‘மன்வந்த்ரே அஷ்டா விம்ஸதி தாமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மோரோ’
என்று வருகிறது. 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் விரிவாக நடத்தப்பட்ட  சமஸ்கிருதம் தொடர்பான மொழி ஆய்வுகளால் உயிரூட்டப்பட்ட ஆரிய இன உணர்வால் உந்தப்பட்டவர்கள் தங்களுக்கான தேசத்தை ‘பாரதம்’ என்று அழைக்கத் தொடங்கினர். இந்தியத் துணைக் கண்டத்தை பரதகண்டம் என்றும் பல அறிவாளர்கள் குறிப்பிடத் தொடங்கினர். இந்திய அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்படும் 22 மொழிகளில் சிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்குத் தாயகம் கிடையாது. சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்தவர்கள் இந்திய விடுதலைக்குப்பின் தாயகம் இல்லாத சமஸ்கிருதத்திற்கு தாயகம் வழங்கும் வகையில், இந்தியாவுக்குப் 'பாரதம்' என்று பெயர் சூட்ட விரும்பினார்கள். இந்திய அரசியல் சட்டம் 1946 முதல் 1949 வரை எழுதப்பட்டது. 1948 செப்டம்பர்  வரையிலும் இந்தியா என்ற பெயரே ஏற்கப்பட்டது. இந்தியா என்பது வரலாற்றில் அறியப்பட்ட பெயர் என்பதால்,  இந்தியாவுக்கு ‘பாரதவர்ஷம்’ என்று பெயர் வைக்க எழுப்பப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால், சேத் கோவிந்ததாஸ் போன்ற இந்து மதவாதிகள் அரசியல் சட்ட அவைக்குள்ளும் வெளியிலும் பாரதம் என்று பெயரிட வற்புறுத்தி வந்தனர். 1949 செப்டம்பர் 17-ஆம் தேதியன்று கொண்டுவரப்பட்ட திருத்தம் இந்தியாவின் பெயராக ‘இந்தியா அதாவது பாரத்’ என்று அறிவித்தது. அதன் பிறகு, தொடர் பிரச்சாரத்தின் மூலம் ‘பாரத தேசம்’ என்ற சொல்லாடல் புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

 இவ்வாறு புராதன இந்தியாவில் இல்லாத, உலகறிந்த வரலாற்றிலும் இல்லாத பாரததேசம் என்ற சொல்லாடல் முன்னிலைப்படுத்தப்படுவதன் நோக்கமே இந்துத்துவத் திட்டமான இந்து இந்தியாவைப் படைப்பதே. தமிழ்மொழியில், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என எந்த நூலிலும், பாரததேசம் என்றோ, இந்திய தேசம் என்றோ எந்தக் குறிப்பும் கிடையாது. அதைப் போன்றே இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எந்த மொழியிலும் இந்தியா பாரதம் போன்றவை குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால் இந்தக் கருத்தியல்களும் சொல்லாடல்களும் சமீபத்தியவை.

இந்து தேசியம் சாத்தியமா?
 இந்தியத் தேசியத்தை உருவாக்கி அதை மெல்ல இந்து தேசியமாக அமைத்துவிடும் முயற்சிகள் தொடர்கின்றன. இந்த நோக்கத்தைக் கொண்ட அரசியலாளர்கள், தேசம், தேசியம், தேசியஇனம் போன்றவை குறித்த அரசியல் அறிவியல் அடிப்படையில் எவ்விதப் புரிதலுமின்றி குழப்பமான கருத்துகளை வெள்ளோட்டம் விடுகிறார்கள். இந்து தேசியம் என்ற ஒன்று உருவாகவே வாய்ப்பில்லை. இந்தியத்துணைக் கண்டத்தில் பல்வேறு சமயங்கள் காலாகாலமாக இருந்து வருகின்றன. இதில் பெரும்பான்மையினருடையதாகக் கருதப்படும் இந்து மதம் என்பது ஆங்கிலேயர்கள் வரும்வரை இருந்ததேயில்லை. ஆங்கிலேயர்கள்தாம் முன்பிருந்த பல மதங்களையும், வழிபாடுகளையும் ஒருங்கிணைத்து செயற்கையாக உருவாக்கி இந்து மதம் என்று பெயரிட்டார்கள். இந்தியாவில் அரசு நிர்வாகத்தை கைக்கொண்ட ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிர்வாகத்தை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில் 1794-ஆம் ஆண்டு மானவ தர்மசாஸ்திரத்தை சர் வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ‘இந்து சட்டம்’ (Hindu Law) என்று பெயரிட்டார். இந்த மொழிபெயர்ப்பு நூலின் அடிப்படையில், எச்.டி.கோல்புரூக் ‘தி இந்து லா’ என்ற இந்து சட்டத் தொகுப்பை உருவாக்கினார்.

 இவ்வாறு பல்வேறு மதங்களை இணைத்துச் செயற்கையாக இந்து மதம் உருவாக்கப்பட்டதைக் காஞ்சி சங்கராச்சாரியார் தம் நூலில் குறிப்பிடுகிறார் :

 "நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும், வெள்ளைக்காரன் நமக்கு இந்து என்று பொதுப்பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம்.... வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப்பெயர் தந்து, இன்று இந்திய தேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்! "
 (தெய்வத்தின்குரல், பாகம் 1, ஏழாம் பதிப்பு, வானதி பதிப்பகம், சென்னை, 1988, பக்.305-306)

 இந்து என்பது ஒரு இனமோ, ஒரு மதமோ அல்லது நாடோ அல்ல. அது குறிப்பிட்ட புவியியல் பகுதியைக் குறித்தது. அக்கேமீனட் பேரரசுக்கால கிரேக்க கல்வெட்டு சிந்துநதிக் கரையோரப் பகுதிகளை ‘ஹிந்துஷ்’ என்று குறிப்பிடுகிறது. பிற்கால அராபியர் சிந்துநதிக்கு அப்பால் இருந்த இந்திய துனைக்கண்ட மக்களை ‘அல்ஹிந்த்’ என்று குறிப்பிட்டனர். 19-ம் நூற்றாண்டில் அதிகாரத்திலும், பதிவியிலும் அதிக பங்கு கேட்க அவரவர் சமுகத்தினர் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட வேண்டிய தேவை எழுந்தது. ஆகவே, அதிகாரத்தை துய்க்க துடித்த மேல் தட்டு மக்களால் இந்து என்ற சமய உருவாக்கம்  வரவேற்கப்பட்டது. செயற்கையாக அனைத்து மதங்களையும் இனைத்து இந்த வரையறுக்குள் பௌத்தர், சமணர், பழங்குடிகள் கொண்டுவரப்பட்டனர். 1955-ஆம் ஆண்டு இந்து சட்டம் தொகுக்கப்பட்டபோதும், இந்து என்பது இலக்கணப்படுத்தப்படவில்லை ‘எவன் ஒருவன் மதத்தால், இஸ்லாமியனோ, கிறித்துவனோ, பார்ச்சியோ, யூதனோ அவனுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று அது குறிப்பிடுகிறது.

இந்தியா என்ற கட்டமைப்பு
 ஆங்கிலேயரின் வாளின் நுனியால் இணைக்கப்பட்ட இந்தியா; செயற்கையாக இணைக்கப்பட்ட இந்து மதம்; 200 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எழுந்த விடுதலைப் போராட்டம்; ஆங்கிலேயரே உருவாக்கிய மையப்படுத்தப்பட்ட ஓர் அரசதிகாரம்; ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னும் ஒரு நாடாகத் தொடரும் நிலை; அதைக் கட்டிக்காக்க ஓர் இறுக்கமான அரசியலமைப்பு இதுதான் இந்திய தேசியத்தின் இரகசியம். 1980-களில் தான் அனைத்து இந்திய தேசியம் உருவாகப் தொடங்கியது. ஆங்கிலம் அறிந்த மத்திய தர வர்க்க அறிவாளிகள், பிராமணர்கள் இந்திய அளவில் கைகோர்த்தனர். இந்திய உருவாக்கத்தில் பலன் இருப்பதாக உணர்ந்தனர். இவர்களே இந்திய தேசியம் என்ற செயற்கை தேசியத்தை உருவாக்கப் பங்களித்தவர்கள்.

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்தவர்கள் விபரம் அறிந்தவர்களாக இருந்தபடியால், இந்தியாவை ஒரு ‘தேசம்’ (Nation) என்று இந்திய அசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அதைப் போலவே, பல்தேசிய இன மக்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தங்கள் மரபு வழித் தாயகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்குக் குறைந்த பட்சம் உண்மையான கூட்டாட்சி முறையாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி வழங்க வேண்டும் என்றுதான் அரசியல் அமைப்பு அவையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அன்றைய இந்து-முஸ்லிம் கலவரச் சூழலில் அனைத்து அதிகாரங்களும் மைய அரசில் குவிக்கப்பட்டன. அரசியல் அறிவியலாளர் கே.சி.வியர் கூறுவதுபோல, இன்று நிலவுவது 'அரை-குறைக் கூட்டாட்சி’ (Quasi Federal) இந்திய அரசியல் சட்டத்தில் அதை எழுதியவர்கள் 'கூட்டாட்சி’ (Federal) என்ற சொல்லைத் தவிர்த்தார்கள்.

 இந்தியா என்ற நாடு எப்போதாவது ஒரு தேசமாகக் கருதப்படுமா? என்ற சந்தேகம் இந்தியத் தலைவர்களுக்கே இருந்தது.  இந்திய விடுதலை வீரரும், பிரம்மசமாஜ் உறுப்பினருமான பிபின் சந்திரபால், 1881-ஆம் ஆண்டில் ‘ஓர் இந்தியா’ என்பது கற்பனையான நிறைவேறாக் கனவு (Chimera), சாத்தியமில்லாதது, ஆனால் உருவாக்கப்பட்டால் நலம் தரும், என்று கருத்தறிவித்தார். பலகோடி செலவில் முன்னெடுக்கப்பட்ட தொடர் பிரச்சாரமும், கற்பிதமும், எதிர்க்கருத்துகள் தண்டனைக்குரிய குற்றமாக நடைமுறைப்படுத்தப்பட்டமையும் இந்தியாவை ஒரு தேசமாகக் காட்டுகின்றன.

 இரஷ்யாவைச் சேர்ந்த ஆய்வாளர் ஏ.எம். டயகாவ் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
 "இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியா இங்கிலாந்தின் காலனியாக இருந்த உண்மை காரணமாக வெளி உலகத்திற்கு இந்தியா ஏதோ ஒன்றிப்போன தன்மை கொண்டது போலவும், அதில் வசிக்கும் மக்கள் கூட்டம் அத்தனையும் ஒரே வகையைச் சேர்ந்தது போலவும் ஒரு தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது... சக்திவாய்ந்த தேச விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவில் வசிக்கிற அத்தனை மக்களும் ஓரளவு அதிகமாக அல்லது குறைவாகப் பங்கு பெற்றது இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிப்போய் இருக்கிறார்கள் என்ற பிரமையை மேலும் படைத்திருக்கிறது... இந்தியாவில் இங்லீஷ்காரர்களைப்போல, பிரெஞ்சு, இத்தாலிக்காரர்களைப்போல தொகையில் குறைவில்லாத மக்கள் வாழ்கிறார்கள் என்பதும், அவர்கள் தங்கள் தனிப்பட்ட கலாச்சாரத்தாலும், மொழியாலும், இலக்கியத்தாலும், பழக்கவழக்கங்களாலும், தங்களது தனித் தேசிய குணாதிசயங்களாலும் பிரத்யேகத் தன்மை பெற்றிருப்பவர்கள் என்பதும், தங்களது வரலாற்று முறையான வளர்ச்சியில் ஒரு நீண்ட பாதையைக் கடந்து வந்திருப்பவர்கள் என்பதும் ஒரு சிலருக்குத்தான் தெரியும்."

இந்தியா நாடா? தேசமா?
 இந்தியா ஒரு நாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அது ஒரு தேசமல்ல. ‘நேஷன்’ (Nation) என்னும் ஆங்கிலச்சொல் ‘தேசம்’ ‘தேசிய இனம்’ இரண்டையும் குறிக்கும். இதற்கு அடிப்படையானவை நான்கு கூறுகள். அவை,
1. ஒரு பொதுமொழி,
2. ஒரு தொடர்ச்சியான வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு.
3. ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு.
4. பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் ‘தாம் ஓரினம்’ என்ற உளவியல்   -இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் போக்கில் உருவான மக்கள் சமுதாயமே ஒரு தேசம் ஆகும்.

 இந்த அடிப்படைக் கூறுகளை இந்தியா நிறைவு செய்யவில்லை. ஆகவே, அது ஒரு நாடு, தேசமல்ல (a State and not a Nation). மார்க்சியரான பிரகாஷ் காரத் ‘சோஷியல் சைன்டிஸ்ட்’ (எண் 37)-இல் இவ்வாறு கூறுகிறார். அதுதான் உண்மை.

 "இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்பது முழுக்க முழுக்க வரலாற்றறிவியலற்ற வார்த்தையாகும். மொழியால், எல்லையால், பண்பாட்டால் தெளிவாகப் பிரிந்துள்ள பெரிய தேசியஇனங்கள் குறைந்தபட்சம் 12 இருக்கின்றன. தெலுங்கு, அஸ்ஸாமி, வங்காளி, ஒரியா, தமிழ், மலையாளி, கன்னடிகா, மகாராஷ்டிரியன், குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி (ஹிந்துஸ்தானி) மற்றும் காஷ்மீரி, இவைகளுக்கப்பால் மணிப்புரி, திரிபுரி, நாகர்கள், கரோ மற்றும் சந்தால் போன்ற ஏராளமான சிறு தேசிய இனங்களும் இருக்கின்றன.

 உலகம் முழுவதும் ஒவ்வொரு தேசிய இனமும், அதன் மொழியாலேயே அறியப்படுகிறது. ஆங்கிலேய தேசிய இனம் ஆங்கில மொழியாலும், பிரெஞ்சு தேசிய இனம் பிரெஞ்சு மொழியாலும், ஜெர்மானிய தேசிய இனம் ஜெர்மன் மொழியால் அறியப்படுவதுபோலவே, தமிழ்த் தேசிய இனம் தமிழ்மொழியாலும், மராட்டிய தேசிய இனம் மராட்டிய மொழியாலும், வங்காள தேசிய இனம் வங்காள மொழியாலும் அறியப்படுகின்றன. இத்தகைய தேசிய இனங்கள் தனித்தனி சுதந்திர தேசங்களையும் அமைக்க உலக  சாசனங்களால் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன.

 இந்திய தேசியம் என்பது ஒரு தேசியம் என்பதற்கான அடிப்படைத் தகுதிகளை நிறைவு செய்யவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் தேசிய இனங்களின் தனி அடையாளங்களை அழித்து ஓர் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துகிறது. இது நிலப்பரப்பு தேசியம் (Territorial Nationalism) ஆகும்.  இந்தியத் தேசியரான ம.பொ.சிவஞானம் ‘இந்திய தேசியத்தின் வயது 100’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் வயது அவ்வளவே.
ஒரு மதம் ஒரு தேசத்தை உருவாக்காது

 65 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவில் இறையாண்மையுள்ள 50 தேசங்கள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளின் பண்பாடுகள் வேறுபாடு காணமுடியாத அளவிற்கு ஒற்றுமை உடையன. கிறித்துவ மதம் ஐரோப்பா முழுவதையும் ஒரே உலகமாக இனைத்து இருந்தது. இடைக்காலத்தில், போப்பாண்டவருக்கு அத்தனை அரசுகளும் அடங்கிக் கிடந்தன. ஆனாலும் இந்தக் கிறித்தவ பண்பாட்டு ஓர்மை அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்திவிடவில்லை. மொழியையே அடையாளமாக கொண்டு தனித்தனி தேசங்கள் எழுந்தன. இஸ்லாமிய நாடுகள் 23 உள்ளன. அவற்றுள் பெரும்பாலனவை மேற்கு ஆசியாவில் இருக்கின்றன. ஒரே இறைவன் பற்றிய நம்பிக்கை, புனித குரான் ஆகியவை இஸ்லாமியர்களை ஒரு தேசமாக இணைத்துவிடவில்லை. பண்பாடு மற்றும் சமயம் என்பது வேறு. அரசியல் என்பது வேறு. அரசியல் தேசியஇனஅடிப்படையிலேயே அமையும்.

 ஏசு கிறித்துவின் புகழ்பாடுவதாலேயே ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒரே தேசம் என்று கூறுவது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறானது, இராமன் உள்ளிட்ட கடவுளர்களை இந்தியாவில் பல இலக்கியங்கள் குறிப்பிடுவதால் இந்தியா ஒரு தேசம் என்று வாதிடுவது. காப்பிய நாயகர்களை இந்திய எல்லை தாண்டியும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இயல்பான மொழிவழித் தெசியத்தை மறுக்கலாமா?

 இயல்பான மொழிவழி தேசிய இனங்களின் இருப்பையும், அடையாளத்தையும் முற்றிலுமாக அழித்து, இந்திய தேசியம் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடக்கி விடவும், அதை மெல்ல மெல்ல இந்து தேசியமாக மாற்றியமைக்கவும், சமயச்சார்பற்ற இந்தியா என்ற கருத்தியலைக் கைவிட்டு, ஆரிய, வேத, சமஸ்கிருத, இந்திச் சார்புடைய ‘பாரததேசம்’ என்பதை நிலைநிறுத்திவிடவும், விடாது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி' - ஆகிய தமிழ்க்குடி போன்றே, பல தேசிய இனங்கள் விட்டுக் கொடுத்துத்தான், இந்தியா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் மரபுவழி தேசியங்களையும், தேசங்களையும் அழித்து ஒரு மொழி, ஓர் இனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தும் மதவாத தேசியத்தை முன்னிறுத்தினால், அது இந்தியாவின் இருப்புக்கே ஆபத்தாய் முடியும்.
 பேராசிரியர் த.செயராமன்.
 மேனாள் வரலாற்றுத்துறைத் தலைவர்,
     தமிழ்த் தேசிய ஆய்வாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக