வியாழன், 11 மே, 2023

கல்விக்குள் நாசிசம்-பாசிசம்-காவியிசம் : மரு.தமிழ் சிலம்பரசன்


தேசியவாதக் கல்விக்கொள்கை 2019இன் அடிப்படையே இனத்தூய்மைவாதம் (racism purity) கொண்டதுதான். 

ஹிட்லர் நாசிசத்தைப் பரப்புவதற்குக் கையில் எடுத்தது, பாடத்திட்டத்தின் (curriculum) வழியாகத் தங்களின் கொள்கைக்குத் தகுந்தாற்போல் குடிமகனை (citizenry) உருவாக்குவதற்கு எடுத்துக்கொண்டது, பாடத்திட்டத்தின் வழியாக நாசிசத்தைப் பரப்புவதுதான். 

முசோலினியும் தனது பாசிசக் கொள்கைகளைப் பரப்புவதற்கு - பாசிசத்தை விரும்புகிற குடிமகன்களை உருவாக்குவதற்கு - அதன் வழியாகப் பாசிச வேர்களைப் பரப்புவதற்கு நம்பியது பாடத்திட்டத்தில் மாற்றம்தான்..

காவியிசமும் அதைத்தான் செய்கிறது. பாடத்திட்டத்தின் வழியாகவே தங்களது இந்துத்துவா கொள்கையைப் பரப்புவதற்கு அல்லது இந்துத்துவா கொள்கை கொண்ட குடிமகன்களை உருவாக்குவதற்கு, தேசியவாதக் கல்விக்கொள்கை -2019 உருவாக்கியது. அதில் மும்மொழிக்கொள்கை, கலை, தாராளமான கல்விக்கொள்கை என்று எல்லாம் வரையறுக்கப்பட்டதற்கான அடிப்படையே இந்துத்துவாதான். 

இந்தக் காவியிசம் கல்விக்கொள்கையின் வரைவுத் திட்டத்தின் தலைவராக இருந்தவர் கஸ்தூரி ரங்கன். ரங்கன் ஓர் விஞ்ஞானி, விஞ்ஞானிக்கும் கல்விக்கொள்கைக்கும் என்ன தொடர்பு? என்கிற அடிப்படையான கேள்வியே நாம் இக்கல்விக்கொள்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

தேசியவாதக் கல்விக்கொள்கை பற்றி தமிழ்நாட்டில் சரியான விவாதம் நடத்தப்படவில்லை என்பதே என்னுடைய வருத்தம். 

கல்விச் செயல்பாட்டாளர்கள் மற்றும் கல்வியியல் சார்ந்த அறிஞர்கள் (Education policy makers) பேசவேண்டியவற்றை, அதற்குச் சற்றும் தொடர்பு இல்லாத நபர்களை வைத்து இன்றையளவும் தமிழ்நாட்டு ஊடகங்கள் விவாதம் செய்தது அல்லது செய்துகொண்டு இருக்கிறது என்பது ஒருபுறம் வருத்தமாக இருக்கிறது. 

அப்போது, இதுவரையில் இருந்த அடிப்படைக் கல்விக்கொள்கை என்ன என்று நீங்கள் கேட்கலாம். அதை வகுத்தவரே சொன்ன வார்த்தைகள் இவை. 

“நாம் கொடுக்கும் கல்வியின் மூலம் இவர்கள் ரத்தத்தாலும், நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள். சிந்தனை, ரசனை மற்றும் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள் “ - மெக்காலே.

இந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்டமே இதன் அடிப்படையிலானதுதான். 

மெக்காலேவின் கல்விமுறைதான் அனைவருக்குமான கல்வியைக்கொடுத்தது என்று வாதடுபவர்களும் உண்டு.

இந்தியாவின் குறுக்கே நெடுக்கே கல்வியின் அடிப்படையிலேயே பயணம் செய்து இருக்கிறேன். ஓர் சிறியகிராமத்தில்கூட சமஸ்கிருத மொழி பேசுபவர்களை நான் கண்டதில்லை. இந்தியா இப்படி இருக்கையில், பாமர மக்களினால் பேசப்படாத ஒரு மொழியைக் கற்கச் சொல்வதை மும்மொழிக் கொள்கையாக வரையறுத்து இருக்கிறார் கஸ்தூரிரங்கன். 

சரி, தேசியவாதக் கொள்கைக்கு (nationalistic education) மாற்றுதான் என்ன? அதுதான் சமூகவாதக் கல்விக்கொள்கை(society driven education).

இந்தியாவின் கல்வியில் மேம்பட்டவராகக் கருதப்படும் அறிவாசன் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், கல்வியியலில் தனது ஆசானாக அறிவித்தது ஜான் துவே (john dewey) அவர்களைத்தான் . 

ஜான், சமூகவாதக் கல்வியைப் பெரிதும் நேசித்தவர். 

“education is a social process; education is growth, education is not preparation for life, education is itself life”

 - jhone Dewey 

உலக அறிவியல் மையத்தின் வளர்ச்சியைக் கையில் வைத்திருக்கும் அமெரிக்கா, தனது மாவட்டங்களைக் கல்வியில் உயர்ந்த மாவட்டங்களாகப் ( education district) பிரிக்கிறது. ஆனால், இந்தியாவில் மாவட்டமாகப் பிரிப்பது வருவாய் மாவட்ட முறையில் (Revenue district ) பிரிக்கிறார்கள்.

அமெரிக்காவில் higher society education draft committee என்று எதுவுமே கிடையாது. அதற்குக் காரணம் சமூகவாதக் கல்விக்கொள்கையை வித்திட்ட ஜான் துவேன் கல்விப் புரட்சி எனலாம். 

பின்லாந்து, உலகக் கல்வியில் முதலிடம். காரணம், அங்கே கல்விக்கொள்கையை நிர்ணயிப்பது அந்தமாவட்டத்தைச் சார்ந்த மக்கள்தான், அதுதான் சமூகவாதக் கல்விக்கொள்கை.

தேசியவாதக் கல்விக்கொள்கை 2019, குலக்கல்வி வாழ்வியலையும் அதன் பண்பாட்டு மீட்டெடுப்புகளையும், அதன் மொழியுயையும் மக்களிடம் புகுத்துவதே இக்கல்விக்கொள்கையின் நோக்கம்.  

உலகத்தில் எந்தவொரு கல்வி நிறுவனங்களிலும் இல்லாத ஒரு வார்த்தை, இந்திய கல்வி நிறுவனங்களில் விளம்பரங்களில் உண்டு “100% placements”. உலகத்தின் முதன்மையான பல்கலைக்கழங்களில்கூட இப்படியொரு விளம்பரம் இருக்காது. காரணம், கல்வியை அவர்கள் விற்பனைப் பொருளாகப் பார்ப்பதன் விளைவுதான் 100% placements. கல்வி வேலைக்கானது இல்லை, கல்வி சமூகத்திற்கானதுதான்.

ஆனால், இந்தியாவில் அது வியாபாரமாக மாறியது. அதற்குக் காரணம் உலகச் சந்தை. மனிதர்களாலும் கல்வி வணிகர்களாலும் இந்தக்கொடுமை நடந்தேறியது. இவர்களின் கல்விக்கொள்கை அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும்.

மனிதனை ஒரு விற்பனையாளராக மாற்றும் முறை தேசியவாதக் கல்விமுறை. ஆனால், சமூகவாதக் கல்விக்கொள்கை அறிவையும், அதனை வைத்துப் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்வது, அறிவுப்புரட்சியை உருவாக்குவது. 

பரதநாட்டியத்தைக் கலையாக மாற்றியதும், ஆனால் கரகாட்டத்தை இன்னும் கலையாக மாற்றாமல் போனதற்குக் காரணம், சமூகவாதக் கல்வியை பின்பற்ற மறந்ததுதான்.

தேசியவாதக் கல்விக்கொள்கை அல்ல; காவியிசத்திற்கான கல்விக்கொள்கை. National education policy - 2019 

தேசியவாதக் கல்விக்கொள்கை என்ன செய்ய நினைக்கிறதோ, அதைத்தான் தமிழ்நாட்டு கல்விக்கொள்கையும் செய்ய நினைக்கிறதோ என்கிற அச்சம் முனைவர் ஐயா ஜவகர்நேசன் ஐயா விலகலிருந்து தெரிகிறது.. 

மிகுந்த கவனத்தோடு கையாளுவோம் நமது மாணவர்களின் எதிர்காலம் ! 

குறிப்பு: சமூகவாதக்கல்வி கொள்கைப்பற்றி முனைவர் ஜவகர் நேசன் எழுதிய “A response to draft education policy 2019 “ In search of education nationalistic education vs social driven education எனகிற புத்தகம் உண்மையில் கல்வியைப்பற்றிய மாற்றுச் சிந்தனை நமக்குத் தரக்கூடியது.

இந்தியா முழுவதும் ஒற்றைச் சிந்தனையோடு இருந்தபோது, மாற்றாக இதுதான் இந்தியாவின் கல்விமுறையாக இருக்கவேண்டுமென்று எழுதிய முனைவர் ஜவகர் நேசன் அவர்களை வசைப்பாடியுள்ளது மனது ஏற்க மறுக்கிறது..  

     மருத்துவர் தமிழ் சிலம்பரசன் அவர்களது பதிவிலிருந்து...

புதன், 8 பிப்ரவரி, 2023

கடலுக்குள் கட்டுமானங்கள்: சூழலியல் - சமூகவியல் பார்வை! : வறீதையா கான்ஸ்தந்தின்.


சென்னைத் துறைமுகம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடல் கட்டுமானங்கள் கடலியல் சூழலிலும், கடற்கரை பரப்புகளிலும், மீனவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய  விளைவுகள் என்ன..என்பதையெல்லாம் ஆராயும் போது, அதிர்ச்சிகரமான சில உண்மைகள் தெரிகின்றன” என்கிறார் கடல் சூழலியல் ஆய்வாளர் வறீதையா கான்ஸ்தந்தின்!

உலகக் கடல்கள் ஒரு பேரியக்கம். நகர்ந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டம். காற்று, அலை, ஓதம், நீரோட்டம், மேல்நோக்கிய பெயர்வு (upwelling) என்பதாக விரியும் இவ்வியக்கமே கடலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதன் பல்லுயிர்த் திரட்சிக்கும், அங்கிருந்து பெறுகிற மீன்வளத்துக்கும் இதுவே ஆதாரம். கரையில் நாம் பார்க்கிற கடல், பெருங்கடலல்ல, கடலின் குளம். குடா, வளைகுடா, கரைக்கடல் எனப் பலவாறாக நாம் அழைக்கும் இப்பகுதியில் அலையும் ஓதமும் தவிர, கரைக்கடல் நீரோட்டம் முக்கியமான பங்கு வகிக்கிறது.

பெருங்கடல் நீரோட்டங்களால் கொண்டு வரப்படும் மீன்கள் உள்ளிட்ட பல உயிரினங்கள் பருவம் தவறாமல் கரைக்கு வந்து சேர கரைக்கடல் / நெடுங்கரை நீரோட்டம் (Longshore current) அடிப்படையானது. அதன் ஒரு பகுதியாக மணல் நகர்வு நிகழ்கிறது. உலகின் 3,12,000 கிலோமீட்டர் கடற்கரைகளைத் தழுவிக்கிடக்கும் கரைக்கடலிலும் இந் நகர்வு ஊடறுப்பற்றும், சுழற்சியாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பருவம் தோறும் கரையில் நிகழும் மணல் குவிப்பும் மணல் அரிமானமும்  இந் நகர்வின் விளைவுகள்.

இப்படிக் கரையில் குவிகிற மணலின் ஒரு பகுதி, காற்றினால் நகர்த்தப்பட்டு, மணல் குன்றுகளாக மாறுகின்றன. அடிப்படையில், கரையோர மணல் பகிர்மான இயக்கத்தின் (coastal sand sharing system) அடிப்படைக் காரணி இந்த நெடுங்கரை நீரோட்டமே. மனிதக் குறுக்கீடு எழாத வரை கடற்கரை தன்னைப் பராமரித்துக் கொள்ளும். ஆனால், நெடுங்கரை நீரோட்டத்துக்குக் குறுக்காக ஒரு கட்டுமானத்தை அமைத்தால், அதன் இருபுறமும் உள்ள கடற்கரைப் பகுதிகள் சிதையத் தொடங்கும்.

தமிழ்நாட்டில் துறைமுகக் கட்டுமானங்களால் கடற்கரை விளிம்புகள் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதைக் காலவாரியான செயற்கைக்கோள் தொலையுணரி வரைபடங்களில் தெளிவாய்ப் பார்க்கலாம். முக்கியமாக, கரைக்கடல் மணல் நகர்வில் நேர்ந்துள்ள பாரிய மாற்றங்கள்.

1908இல் சென்னைத் துறைமுகத்துக்காக அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர், மெரினா என்னும் செயற்கை மணல்வெளி உருவாகக் காரணமானது. ஆனால், துறைமுகத்துக்கு விலையாக வடக்கில் நிறையக் கடற்கரைகளைக் காவு கொடுக்க வேண்டியிருக்கிறது. மெரீனாவின் ஒரு பகுதி சமாதிகளால் நிரம்பிக் கொண்டிருப்பது கடல் சூழலியலுக்கு ஆரோக்கியமானதல்ல. தலைவர்கள் நம் மதிப்புக்குரியவர்கள் தான், சந்தேகமேயில்லை. அவர்கள் பெயரைச் சொல்லிக் கடற்கரைகளையும் கடலையும் காயப்படுத்த நமக்கு உரிமை இருக்கிறதா என்பது தான் கேள்வி. ஒரு காலத்தில் சூழலியல் புரிதல் இல்லாதிருந்தோம். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. கருணாநிதியின் சமாதிக்கு நேராக கடலுக்குள்ளே ஏறத்தாழ 360மீட்டர் தொலைவில் ஒரு பாதை உட்பட 8,452சதுரமீட்டர் பரப்பளவில் திட்டமிடப்படுவதாய்ச் சொல்கிறார்கள். நினைவுச் சின்னத்தின் அடித்தளம் கரைக் கடல் நீரோட்டத்தை மறித்து நிற்கும் கட்டுமானமாகும்.

சென்னை துறைமுகத்தால் உருவானதே மிகப் பெரிய மெரீனா கடற்கரை!

சென்னைத் துறைமுகம் தென்புறம் மெரினாக் கடற்கரையை உருவாக்கிவிட்டு, வடபுறத்துக் கடற்கரைகளை விழுங்கத் தொடங்கியது. எண்ணூர் காமராசர் துறைமுகமும் நிறுவப்பட்ட பிறகு, அதன் வடக்காக அமைந்துள்ள கிராமங்களை காணாமலாக்கிவிட்டுள்ளது.

மெரினா உருவாகுமுன், அக்கடற்கரைகள் எப்படியிருந்தன? மீனவர்களுக்கே உரிய தொழில்தள, வாழிடமாகவும் இருந்தவை அப்பகுதிகள். துறைமுகமும் மெரீனாவும் அக் குப்பங்களுக்குப் புதிய சிக்கல்களைக் கொணர்ந்தன.

எம்ஜிஆர் ஆட்சியில், 1985- ல் மெரீனாவை அழகுபடுத்துவதற்காக நொச்சிக்குப்பம் பகுதியில் இரவோடு இரவாக மீனவர்களின் படகுகள் அப்புறப்படுத்தப்பட்டபோது மீனவர்கள் போராடினர். சில உயிர்கள் பலியாயின. பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டது. 2003இல் மலேஷியத் தூதரகம் அமைக்க அப்பகுதியைக் கையகப்படுத்தும் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியும் மீனவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டன. பிறகொரு கெடுவிதியின் நாளில் விசாலமான அவர்களின் வாழிடங்கள் அடுக்ககங்களாய்ச் சுருக்கப்பட்டன. தையெழுச்சியின்போது நடுக்குப்பம் மீனவர்கள் காவல்துறையினரால் காரணமின்றித் தாக்கப்பட்டனர். பரம்பரைக் குற்றவாளிகள்போல் சித்திரிக்கப்பட்டனர்.

பட்டினப்பாக்கம் பகுதியில் ஏற்படும் கடுமையான கடலரிமானத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட மெரீனா லூப் ரோடு என்னும் அதிவிரைவுச் சாலை, நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கும் கடலுக்கும் இடையே கண்ணுக்குப் புலப்படாத மதில்சுவராய் நிற்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் அச் சாலை பொதுப் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டுவிட்டது.

எழில்மிகு சென்னைக்கு கடற்குடிகளின் வாழ்நிலம் தேவைப்படுகிறது. விளைவாக கடற்குடிகள் சிறுத்து, காணாமலாகிக் கொண்டிருக்கிறார்கள். குரலெழுப்பத் திறனற்றுப்போன அவர்களுக்கான சமநீதி விலகியே நிற்கிறது.

பட்டினப்பாக்கமும் அதற்குத் தெற்கிலுள்ள கடற்கரைகளிலும் நேர்ந்துவரும் கடலரிமானமும் துறைமுகத்தின் தாக்கமே. கருணாநிதி நினைவுச்சின்னம் அமையும் தளத்துக்கு இருபுறமாகவும் கரைக்கடல் நீரோட்டம் திசைதிரும்பி மணல்நகர்வைத் தீவிரமாக்கும் அபாயமும் உண்டு

கடந்த 50 ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைகள் கடுமையான அரிமானத்துக்கு உள்ளானதற்குப் பல காரணங்கள் உண்டு: 1978இல் விழிஞம் மீன்பிடி துறைமுகம் நிறுவப்பட்ட போது நீரோடி முதல் குறும்பனை வரையுள்ள கடற்கரைகள் அழிவுக்குள்ளாயின. ஏறத்தாழ அதே காலத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் குமரிமுனையில் நிறுவிய போக்குவரத்துப் படகுத் துறையினால் கன்னியாகுமரி- சின்னமுட்டம் கடற்கரை பாதிக்கப்பட்டது. நீரோட்டத்துக்குச் செங்குத்தாக ஏராளமான தடுப்புச் சுவர்களை (vertical groynes) அமைத்தார்கள். 2010களில் அமைக்கப்பட்ட தேங்காய்ப் பட்டணம் துறைமுகத்தின் மேற்கு அலைத் தடுப்புச் சுவர் பூத்துறை, இரயுமன்துறை, முள்ளூர்துறை, இராமன்துறை உள்ளிட்ட கடற்கரைகளில் பெரும் கடலரிமானத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. முட்டம் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு அலைத் தடுப்புச் சுவரின் மிகையான நீட்சியால் அழிக்கால் கிராமத்தை மணல் மூடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதக் கடல் சீற்றத்தின் போது அக் கடற்கரைக்குச் சென்றிருந்தேன்.

குமரி முனையில் திருவள்ளுவர், விவேகானந்தர் நினைவிடங்கள் பாறைகளின் மீது அமைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் காலம் தொட்டு கடல் தரையின் தன்மையைத் தழுவி கரைக் கடல் நீரோட்டங்கள் அவற்றின் வழியைத் தீர்மானித்து விட்டிருக்கின்றன என்பதால் இக் கட்டுமானங்களால் சிக்கலில்லை. இருப்பினும், 2004 சுனாமியலை திருவள்ளுவர் சிலைக்கு மேலாக உயர்ந்ததை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஒரு கடற்கோளை எதிர்கொள்ள என்றுமே நாம் தயாராயில்லை.

குமரி முனையில் பூம்புகார்க் கப்பல்துறையின் படகுத்துறை சூழலியல் சிக்கலை ஏற்படுத்தியது. சிறு கடல்பாலங்கள் கூட பாதிப்பை ஏற்படுத்துபவைதான். குளச்சலில் அவ்வாறான ஒரு கடல் பாலம் இருக்கிறது. அது ஓர் இயற்கைத் துறைமுகம் என்றாலும் கூட கடலரிமானத்தில் அதன் தாக்கத்தைப் பார்க்க முடியும். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு அலைத்தடுப்புச் சுவரின் கிழக்கு நோக்கிய நீட்சியினால் அரிமானம் மேலும் கடுமையாகியுள்ளது. அதானியின் 10,000 ஏக்கர் காட்டுப்பள்ளி துறைமுகக் கட்டுமானத்தின் பின்னால் குரலற்ற மக்களின் துயரக்கதை உள்ளது. விழிஞம் அதானி துறைமுகம் கேரள அரசியலைக் கொதிநிலைக்குக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை கடலரிமானத்திலிருந்து பாதுகாப்பதற்கெனப் போடப்பட்டுள்ள தடுப்புச்சுவர், வடக்குப் பகுதியில் அரிமானத்தை வேகப்படுத்துகிறது. வட சென்னைக் கடற்கரை நெடுக எழும்பிவரும் தொழில் கட்டுமானங்களால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு நேர்ந்து போன சிதைவை சமவெளிச் சமூகம் கவனிக்கவேயில்லை. எண்ணூர் விரைவுச் சாலை, துறைமுகம் அமைப்பதற்காக இருப்பிடம் பறிக்கப்பட்ட மீனவர்கள் அலைகுடிகள் ஆகியிருக்கிறார்கள்.

வடசென்னை நிகழ்காலத்தின் துயர காவியம்.

சென்னையின் ஒட்டுமொத்தத் தொழில் வளர்ச்சியின் கழிவுச் சுமையை அக் குரலற்ற எளிய மனிதர்களின் தலையில் ஏற்றி வைத்துவிட்டோம். 2014-2018இல் தாழங்குப்பம், முகத்துவாரக் குப்பம் தொடங்கி கூனன்குப்பம் வரையுள்ள கடற்கரைகளில் மீனவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது வறண்டுபோன முகங்கள் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை முற்றாக இழந்திருப்பதைப் பார்த்தேன்.

“வளர்ச்சியைச் சொல்லி அவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும், வாழ்வாதாரமான கடலையும், கழிமுகங்களையும் பறித்துக்கொண்டு, அங்கு அனல் மின் நிலையச் சாம்பல் கழிவுகளையும் கொதி நீரையும் கொட்டிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கான சமூக நீதியை மறுத்து வந்திருக்கிறோம். அதைக் குறித்து எந்த குற்ற உணர்ச்சியும் நமக்கு இல்லை.” என்கிறார் சூழலியல் செயல்பாட்டாளார் நித்தியானந்த் ஜெயராமன். சென்னை, திருவள்ளூர்க் கடற்கரைகள் ‘வளர்ச்சியின் காயங்களை’ச் சுமந்துகொண்டிருக்கின்றன.

‘காசிமேட்டுக்கும் எண்ணூருக்கும் இடையில் நல்ல தண்ணீர் ஓடைக் குப்பம் என்றொரு மீனவர்களின் பெரிய குப்பம் 2017 வரை இருந்தது’ என்கிறார் ஊடகர் தயாளன்:

“இன்று அந்த ஊர் நடைமுறையில் இல்லை. ஆவணங்களிலும் இல்லை. அந்த மக்கள் தூக்கி வீசப்பட்டு விட்டார்கள். காசிமேட்டிலிருந்து தொடர்ச்சியாக ஏராளமான ஊர்களின் பட்டா நிலங்கள் கடலுக்குள் இருக்கின்றன. ஒரு பெரிய கோவில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்குள் இருக்கிறது. இவை எல்லாம் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் நிகழ்ந்து போன மாற்றங்கள். மெரினா கடற்கரையும், பெசண்ட் நகர் கடற்கரையும் செயற்கையாக உருவானவை. இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் திருவான்மியூர் கடற்கரையும் செயற்கையானதே. ஏன்? என்ற கேள்விக்கு பதில் தேடினால் கடலுக்குள் கட்டுமானங்களை அனுமதிக்கக் கூடாது என்று புரியும்.”

சென்னை துறைமுகம்

இராணுவம், துறைமுகம் போன்ற சில கட்டுமானங்களை அனுமதிப்பதால் கூட கடற்கரையோர வாழிடங்களுக்கும், வாழ்வாதாரத்துக்கும் பாதிப்புகள் எழவே செய்கின்றன. அவை நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத் தேவைகள் என்கிற அளவில் சூழலியல், சமூகவியல் தாக்கங்களைக் காய்தல், உவத்தலின்றி ஆய்ந்து, பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்வதும், அங்கு வாழும் பாரம்பரியத் திணைக் குடிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை நிறுவுவதை உறுதி செய்து கொள்வதும் பொறுப்பார்ந்த அரசின் கடமை.

‘‘நகராட்சி எல்லைக்குள் கடற்கரையில் ஒரு பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு, ஒரு வணிக மையம் அமைப்பதற்கு, கடற்கரை மக்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு பெரும் கெடுபிடி செய்யும் கடற்கரை ஒழுங்காற்று / சுற்றுச்சூழல் ஒழுங்காற்று விதிகள் பெரும் கட்டுமானங்களை அனுமதிக்கும் என்றால் சட்டம் யாருக்கானது?’’

2013- ல் நேர்காணல் செய்தபோது மேனாள் குளச்சல் நகராட்சித் தலைவர் ஜேசையா எழுப்பிய கேள்வி இது!

கடலுக்குள் நினைவுச் சின்னம் எழுப்பும் இப்போதைய முயற்சியின் அரசியல் நீட்சி என்னவாக இருக்கும்? அது ஒரு கொடுங்கனவு. இன்று அரசியலில் செல்வாக்குப் பெற்றிருக்கிற பல புள்ளிகளுக்கும் இம்மாதிரி ஆசை முளைத்து, அவர்களின் வாரிசுகளும், ஆதரவாளர்களும் தமிழ்நாட்டுக் கடல் நெடுக இது போன்ற பலப்பல கட்டுமானங்களைக் கொண்டு வரலாம். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைச் சிலாகித்து வேறொரு தரப்பினர் கடலுக்குள் ஒரு ஸ்க்ரூ டிரைவரை நிறுவலாம்; சமய நினைவிடங்களை நிறுவலாம். அந் நாளுக்காக வாய்பிளந்து காத்திருக்கின்ற தரப்புக்கு இது பழம் நழுவிப் பாலில் விழுகிற வாய்ப்பு. அரசின் கருவூலம் கரையும்; அல்லது, தகுதியுள்ள மக்களுக்கு வந்துசேர வேண்டிய நிதிச் சேகரங்கள் விதிமீறலாக மடைமாற்றம் ஆகும். பட்டேல் சிலை நிறுவுவதற்கு 2,880 கோடி பணம் அவ்வழியில் திரட்டப்பட்டதே. கெடுவிதியாக, அந்த நிதி ஓக்கி (2017) கேரளப் பெருவெள்ளம் (2018) போன்ற பேரிடர்களின் போது நிவாரணத்துக்குக் கையேந்தி நின்ற மக்களுக்கு உதவவில்லை.

உள்ளூர்ச் சிக்கல்களின் கதை ஒரு புறம் இருக்க, கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.  அபத்தமாக, வளர்ந்த நாடுகள் கீழை நாடுகளின் மீது பழி போடுகின்றன. பருவநிலை நடவடிக்கைக் குழு என்னும் ஓர் அமைப்பு, அதன் அண்மைக்கால ஆய்வுகளில் அச்சமூட்டும் பல உண்மைகளை வெளியிட்டுள்ளது. கடல் மட்டம் 25 சென்டிமீட்டர் உயர்ந்தால் கடல்தொட்டுக் கிடக்கும் சென்னைப் பெருநகரத்தின் பல கிலோமீட்டர் தொலைவு வரை கடலுக்குள் மூழ்கிப் போகும் என்கிறது ஒரு குறிப்பு. எம்.ஜி.ஆர், கருணாநிதி சமாதி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளை 2050 இல் கடல் மூழ்கடித்து விடும் என்கிறது இன்னொரு குறிப்பு. கடல் மட்டம் உயர்தலின் முதல் பாதிப்புகளில் ஒன்று நிலத்தடிநீர் உவர்ப்பாகும் நிலைமை. கழிமுகங்களின் சிதைவும் உவர்நீர் இறால் பண்ணைகளின் பெருக்கமும் நிலைமையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகக் கடற்கரை இயல்பிலேயே செழிப்பானது, வனங்களும், நன்னீர் நிலைகளும் நிறைந்தது. இன்று ஏறத்தாழ எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். கிண்டி,  திருமறைக்காடு வனங்கள் மட்டுமே இன்று மீந்திருக்கின்றன.

2015 சென்னை, கடலூர் பெருவெள்ள நிகழ்வு வெறும் இயற்கைச் சீற்றமல்ல, கடலையும் கடற்கரையையும் இனிமேல் கவனமாய் அணுக வேண்டும் என்னும் இறுதி எச்சரிக்கை மணி.

சேது சமுத்திரம் என்கிற பெயரில் திமுக பங்கேற்ற மைய அரசு 2005 ஏப்ரலில் தொடக்கிவைத்து சற்றொப்ப 2000 கோடி பணத்தைக் கடலில் கொட்டி கோப்பை மூடிவிட்டது. அந்தத் திட்டம் நிற்காது, பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று, இன்று போல அன்றைக்கும் சூழலியலாளர்கள் சொன்னார்கள். தொழில்நுட்ப- வணிக அளவிலும், சூழலியல் – வாழ்வாதார அளவிலும் அது பெருந்தோல்வியைச் சந்தித்ததைத் தமிழ்நாடு அறியும்.

இன்றைக்கு அத் திட்டத்தை மீண்டும் துவங்க மாநில, மைய அரசுகள் முனைப்பு காட்டுகின்றன. மன்னார்க் குடாவில் 10,500 சதுர கிலோமீட்டர்ப் பரப்பைக் கடலுயிர்க்கோளம் என ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில் மாநில அரசு கடந்த செப்டம்பரில் பாக் நீரிணை பகுதியில் 458ச.கி.மீ பரப்பை கடற்பசு சேமப் பகுதியாக அறிவித்து, கடலைப் பாதுகாப்பது குறித்து மீனவர்களுக்கு நிறைய அறிவுறுத்தல்களை வழங்கியது. அதே அரசு இன்று கரைக்கடலில் ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னத்தை நிறுவ முயல்கிறது. இயற்கைச் சீற்றம் பேரிடர்களாய் மாறுவது மனிதர்களால் தான். சில பேரிடர்கள் மனிதர்களால் நிகழ்த்தப்படுகின்றன. சேதுக் கால்வாய்த் திட்டம் அண்மைக்கால சான்று.

மாநில அரசு சென்னை நகரைப் பெருவெள்ளத்திலிருந்து பாதுகாப்பது எப்படி என்று அறிஞர் குழுவை அமர்த்தி ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. சென்னையின் பெருவெள்ள மேலாண்மையில் பக்கிங்ஹாம் கால்வாய், கொற்றலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு ஆகியவற்றுக்கும் மாமுனி ஏரி, புழல், செம்பரம்பாக்கம், பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம் போன்ற நன்னீர் நிலைகளுக்கும் பங்குண்டு. 2004 சுனாமியிலிருந்து சென்னை நகரத்தைக் காத்தது பக்கிங்ஹாம் கால்வாய். நிலமோ, கடலோ- நீரின் வழமையான தடங்களை இடைமறிப்பது, பேரிடரை நம் வரவேற்பறைக்குள் கொண்டு வரும் மடமையே.

மெரீனா என்னும் உலகின் இரண்டாவது நீளமான மணல்வெளியை உருவாக்கிய கடலின் ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. மெரீனாவைப் பார்க்கிற ஒவ்வொரு முறையும் அப் பெருமணல்வெளியின் அழகியலைத் தாண்டி கடலின் பேராற்றல் குறித்த அச்சமே விஞ்சி நிற்கிறது. சென்னை மீனவர்களைத் துயர்  மேகம் சூழ்ந்திருப்பதாக உள்ளுணர்வு எச்சரிக்கிறது. பேனா திட்டமிடப்படும் இடத்துக்கு வடக்காக சிறு தொலைவிலேயே கூவம் கழிமுகம் கடலில் இணைகிறது. நினைவுச் சின்னத்தின் முதற்பலி கூவம் கழிமுகம் ஆகும் அபாயமுண்டு. சிக்கல் நினைவுச் சின்னம் அல்ல, அதைக் கடலுக்குள் அமைப்பதுதான்.

பேரிடர்கள் அரசியல் நில எல்லைகளைப் பொருட்படுத்துவதில்லை. அமெரிக்காவோ, ஆரியமோ, கிழக்கோ- எதையும் அவை சட்டை செய்யாது. பருவநிலை மாற்றமும் கடல்மட்ட உயர்வும் உடனடியாய் முகம் கொடுத்தாக வேண்டிய நிகழ் பேரிடர். ஒரு பொறுப்பான அரசு தன் நிலத்தையும் மக்களையும் பேரிடர்களிலிருந்து பாதுகாக்கும் வழிகளை ஆய்ந்து, முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடற்கரை நம் நிலத்துக்கு அரணாய் நிற்பது. நிலத்தைப் பாதுகாப்பதன் தொடக்கம் கடற்கரையையும் கரைக்கடலையும் பாதுகாப்பது.

மரம் இல்லையேல் மானுடம் இல்லை!

சூழலியலாளர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்கிற ஒரு தோற்ற மாயை கார்ப்பொரேட்டுகளால் உருவாக்கப்படுகிறது. அவர்களால் பொய்களை எளிதாக மக்களிடம் விற்க முடிகிறது. ஊடகம் அவர்கள் கையில் இருக்கிறது. மக்கள் பகுத்துப்பார்க்கவும் விவாதிக்கவும் நேரமற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடித் தீர்வுகள் தேவைப்படுகின்றன. கண்களை விற்று ஓவியம் வாங்குவானேன் என்பதுதான் காந்தியப் பொருளாதார வல்லுநர் ஜே.சி.குமரப்பாவைப் போன்றவர்கள் முன்வைக்கும் பார்வை. உடனடி நன்மைகளின் பகட்டு வெளிச்சம் நம்மைச் சூழ்ந்திருக்கும் பேரிருளை மறைத்து விடுகிறது. தனிமங்களின் மீதான பேராசையால் வடகிழக்கில் வனங்களை அழித்தபோது எழுந்த அதே எச்சரிக்கைக் குரல் இன்று கடலின் அழிவு குறித்து எச்சரிக்கிறது. நாட்டுப் பற்றையும் வளர்ச்சியையும் அம்பானிகளின், அதானிகளின் கண்கள் வழியாய்ப் பார்ப்பவர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை.

‘கடல் மட்டம் உயர்தல்’ உலகளாவிய சிக்கல். அதிலிருந்து மீள போர்க்கால அடிப்படையில் முயற்சியெடுக்க வேண்டிய நேரத்தில் உள்ளூரில் புதிய சிக்கல்களை ஏற்படுத்துவது நன்றன்று. கடலை நோண்டினால் அது நம்மைத் தோண்டி வீசி விடும். அதன் இயல்பான இடத்தையும் இயக்கத்தை நாம் மதிக்கவேண்டும். தவறினால், லூதர் பியுரோங்க் சொன்னது போல, ‘நமக்கு நாமே கொடுந்தீர்ப்பு எழுதிக் கொள்கிறவர்கள் ஆவோம்’.

கட்டுரையாளர்:

வறீதையா கான்ஸ்தந்தின்,

பேராசிரியர், கடல் சூழலியல் ஆய்வாளர்,

தொடர்புக்கு: vareeth2021@gmail.com


நன்றி: அறம் இணைய இதழ்.

வெள்ளி, 9 டிசம்பர், 2022

தமிழகத்தில் வடவர் குடியேற்றமும் உள்நுழைவு அனுமதிச் சீட்டின் தேவையும்


வட இந்தியத் தொழிலாளர்களால் தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி வருவதாக நீண்ட காலமாகவே ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில்தான் இது உச்சத்தை எட்டியுள்ளது. மிகப் பெரிய சட்டம் ஒழுங்கு, வாழ்வாதார பிரச்சினையாக இது எதிர்காலத்தில் மாறக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்தும் வருகின்றன. இந்த நிலையில்தான் உள் நுழைவு அனுமதிச் சீட்டு முறையை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் தென் இந்தியா முழுவதிலும் வட இந்திய மற்றும் வட கிழக்கு இந்தியத் தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை பார்த்து வருகின்றனர். பெரும்பாலும் கூலி வேலைதான் பார்க்கின்றனர். இதில் வட கிழக்கு இந்தியர்கள் ஹோட்டல் துறையில் அதிகம் உள்ளனர். அதேசமயம், வட இந்தியத் தொழிலாளர்கள் கட்டுமானத் துறையிலும், பிற தனியார் தொழில் நிறுவனங்களிலும் அதிக அளவில் உள்ளனர்.

வட கிழக்கு இந்தியத் தொழிலாளர்கள் பெரும்பாலும் பிரச்சினை இல்லாதவர்கள். இவர்களால் பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் வட இந்தியத் தொழிலாளர்களால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக மக்களிடையே குமுறல் வெடித்து வருகிறது. பல இடங்களில் திருட்டுக்களில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். கொலை, கொள்ளைப் போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். பலர் இதுதொடர்பாக கைதாகியும் உள்ளனர். சென்னை வேளச்சேரியில் கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின்போது வட இந்தியக் கொள்ளையர்களை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற சம்பவத்தையும் தமிழ்நாடு பார்த்தது.

இந்த நிலையில் பல ஊர்களில் இந்த வட இந்தியத் தொழிலாளர்களால் பிரச்னைகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இப்படித்தான் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டு வரும் எஸ் கே எம் எண்ணெய் ஆலையில் நேற்று முன்தினம் இரவு லாரி மோதி வடமாநில தொழிலாளி ஒருவர் பலியானார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொடக்குறிச்சி போலீஸார் அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தைக் கைவிட மறுத்த வட இந்திய தொழிலாளர்கள் திடீரென போலீஸார் மீது தாக்குதலில் குதித்தனர். பெருமளவில் வன்முறையில் குதித்தனர். போலீஸாரை கட்டையால் அடித்தும், கற்களை வீசித் தாக்கியும், கண்ணாடிகளை உடைத்து குத்தியும் வெறித்தனமாக நடக்க ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து அதிரடிப்படை போலீஸார் வரவழைக்கப்பட்டு வட இந்தியத் தொழிலாளர்கள் மீது சரமாரியான தடியடி நடந்தது. அதில் 40க்கும் மேற்பட்டோரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். கால்நடையாகவே தங்களது மாநிலங்களுக்கு நடந்து சென்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாநில மக்களும் தாயுள்ளத்தோடு உணவு உள்ளிட்டவற்றைக் கொடுத்து உதவி செய்து பரிவுடன் கவனித்தனர். ஆனால் அப்படிப்பட்ட மாநிலமக்கள் மீதே தாக்குதல் நடத்தும் அளவுக்கு இந்த வட மாநிலத் தொழிலாளர்கள் சென்றிருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியத் தொழிலாளர்களால் பெரும் பிரச்சினை ஏற்படும் என்று ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அரசை வலியுறுத்தி வந்த நிலையில் அதேபோல நடந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த நிலையில்தான் வட இந்தியத் தொழிலாளர்களால் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில், உள் நுழைவு அனுமதிச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழக வாழ்வுரிமை இயக்கத் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அது என்ன உள் நுழைவு அனுமதிச் சீட்டு?

Inner liner permit என்பதைத்தான் தமிழில் உள் நுழைவு அனுமதிச் சீட்டு என்று சொல்கிறார்கள். அதாவது வெளி மாநிலத்தைச் சேர்ந்த நமது மாநிலத்திற்குள் வரும்போது அவர்கள் இந்த அனுமதிச் சீட்டை வாங்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அவர்கள் தமிழ்நாட்டுக்குள் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். அந்தக் காலம் முடிவடைந்ததும் சொந்த மாநிலத்திற்கு திரும்பிப் போய் விட வேண்டும்.

இந்த அனுமதிச் சீட்டு முறை தற்போது வட கிழக்கு மாநிலங்களான மிஸோரம், அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் லட்சத்தீவில் மட்டும் அமலில் உள்ளது. இங்கு இந்த முறை கொண்டு வரப்படக் காரணம், பாதுகாக்கப்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள் அந்தப் பகுதியின் தனித் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில்தான். இந்த அனுமதிச் சீட்டானது 15 நாட்களுக்கு மட்டுமே செல்லும். 15 நாட்களுக்குப் பிறகு அவர்கள் ஒன்று அனுமதிச் சீட்டை புதுப்பிக்க வேண்டும் அல்லது இடத்தைக் காலி செய்து விட வேண்டும். மீறி தங்கினால் கைது செய்யப்படுவார்கள்.

இப்படிப்பட்ட அனுமதிச் சீட்டு முறையைத்தான் தமிழ்நாட்டுக்கு வந்து வேலை பார்க்கும் பிற மாநிலத் தொழிலாளர்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஒரு வேளை இந்த அனுமதிச் சீட்டு முறையைக் கொண்டு வர முடியாவிட்டாலும் கூட, வட இந்தியத் தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் கட்டாயம் தேவை. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ்நாடு மக்களுக்கு பாதுகாப்பு தேவை என்கிறார்கள்.

நன்றி: Tamil.samayam.com


தமிழக வேலை தமிழருக்கே

#தமிழ்நாட்டுவேலை_தமிழருக்கே 

#tamilnadujobsfortamils 

உள் நுழைவு அனுமதி சீட்டு 

தமிழத்திற்கு வேண்டும்.

#TN_Needs_lLP

வடஇந்தியத் தொழிலாளர்களை வெளியேறச் சொல்வது நியாயமா? - காளிங்கன்


பிழைப்பதற்காக வந்திறங்கும் வட இந்திய ஏழைத் தொழிலாளர்கள் வெளியேறச் சொல்வது நியாயமாகுமா? பாவம் இல்லையா அவர்கள்?

தமிழகம் போன்ற அந்நிய மண்ணுக்குச் செல்லாமல் தங்களது சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற்று கண்ணியம்மிக்க - கெளரவமான வாழ்வை உறுதிப்படுத்த மத்திய - மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும் என்ற எந்தக் கோரிக்கையும் போராட்டமும் வட இந்திய மாநிலங்களில் நடப்பதாகத் தெரியவில்லை. 

தொழிலாளர்கள் நலன் பற்றி ஓயாமல் பேசும் வட இந்திய - தமிழக இடதுசாரிகள் கூட அந்தந்த மாநில அரசுகள் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும் எனக்கோரிக்கை வைப்பதற்குப் பதிலாக தாய் மண்ணை விட்டு வெளியேறி தமிழகத்தில் குறைந்த கூலிக்கு சுரண்டப்படுவதை ஆதரித்து பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறார்கள். 

வட இந்தியத் தொழிலாளர்கள் பற்றிய செய்திகளைப் பேசினால் குழந்தை குட்டிகளுடனும் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்தபடி கண்களில் ஏக்கம் நிறைந்த முகங்களுடன் நிற்கும் அவர்களை நம் முன்னே நிறுத்தி நாம் ஏதும் சொல்ல முடியாதபடி இரக்கத்தை வரவழைத்து விடுகிறார்கள்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் திரைகடலோடியும் திரவியம் தேடு என்றும் உலகுக்குச் சொன்ன தமிழகம் இதை எப்படி எதிர்கொள்வது?

எங்கு சென்றும் உழைத்து உயிரை உடம்பில் தேக்கி வைப்பதற்கு உள்ள உரிமையை யாரும் மறுத்துவிட முடியாது.

வட இந்தியத் தொழிலாளர்கள் வரட்டும். ஆனால் அரசமைப்பு சிறப்புச் சட்டம் 371 - ஐப் பெற்றுள்ள வட இந்திய, வட கிழக்கிந்திய மாநிலங்களில் அமலில் உள்ளதைப் போன்ற 'உள்ளக அனுமதி முறையினைப்' (Inner Line permit) பெற்று வரட்டும். ஒப்பந்தப் பணிக்காலம் முடிந்ததும் தம் மாநிலங்களுக்குத் திரும்பட்டும்.  

இந்திய அளவில் தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களைத் தவிர பிற அனைத்து மாநிலங்களும் கல்வி - வேலைவாய்ப்பில் மண்ணின் மக்களுக்கே (80%-90% வரை) முன்னுரிமை எனச் சட்டம் இயற்றியுள்ளன. பல மாநிலங்கள் 371 சிறப்புச் சட்டமும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதையே நாமும் கோருவதே நியாயம் !

புதன், 7 டிசம்பர், 2022

இந்திய அரசின் சித்த மருத்துவப் புறக்கணிப்பை, தமிழ்நாடு அரசு ஆதரிக்கலாமா? - வான்முகில்


கடந்த 25.11.2022 அன்று, திருச்சி வந்திருந்த தமிழ்நாடு நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரசு ஆயுர்வேதக் கல்லூரி ஒன்று திருச்சியில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஓர் அரசு ஆயுர்வேதக் கல்லூரி கன்னியாகுமரி மாவட்டம் - நாகர்கோவிலில் செயல்பட்டு வருகிறது. இப்போது அமைச்சர் அறிவித்துள்ளது இரண்டாவது ஆயுர்வேதக் கல்லூரி ஆகும்.

இப்போது திருச்சியில் இரண்டாவது அரசு ஆயுர் வேதக் கல்லூரி அமைக்கவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? யார் கோரிக்கை வைத்தார்கள் என்றும் தெரியவில்லை!

இந்திய ஒன்றிய பா.ச.க. அரசு, "ஒரே இந்தியா - ஒரே பாரம்பரிய மருத்துவம் - அது சமற்கிருத ஆயுர்வேதம் மட்டுமே" என்கிறது. அந்தச் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு அரசின் ஆயுர்வேதக் கல்லூரி அறிவிப்பைப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், இந்திய முறை பாரம்பரிய மருத்துவம் என்பது சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி ஆகிய 3 மட்டுமே என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைக்குப் பின் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்த அனைத்து வடக்கத்திய அரசுகளும் இந்தியா முழுவதும் ஆயுர்வேதத்திற்கு மட்டுமே பல ஆய்வு நிறுவனங்களையும், ஒன்றிய உயர் மருத்துவ மனைகளையும் நிறுவி வளர்த்தெடுத்தன.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் போராடி, கடந்த 2005இல் தான், அப்போது ஒன்றிய நலவாழ்வுத்துறை அமைச்சகப் பொறுப்பிலிருந்த தலித் எழில்மலை, அன்புமணி இராமதாசு மற்றும் மருத்துவர் தெய்வநாயகம் ஆகியோரின் பெருமுயற்சியால் சென்னை தாம்பரத்தில் "தேசிய சித்த மருத்துவ ஆய்வு நிறுவனம்" (National Institute of Siddha - NIS) அமைக்கப்பட்டது. இன்றைக்கும் நாள்தோறும் சற்றொப்ப இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் புறநோயாளிகள் பகுதியில் (OP) மட்டும் சிகிச்சை பெறும் அளவுக்கு அது வளர்ந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆளும் ஆரியத்துவ பா.ச.க. அரசானது எல்லாத் துறைகளிலும் சனாதனத்தையும், சமற்கிருதமயமாக்கலையும் வெறி கொண்டு செயல்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, இந்திய முறை மருத்துவத்துறை (Department of Indian Medicine) என்றிருந்த பெயரை மாற்றி "ஆயுஷ்" என்ற (Department of AYUSH) சமற்கிருதப் பெயரைச் சூட்டியது.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சமற்கிருத ஆயுர்வேதத்திற்கும், வடக்கத்திய சனாதன யோகத்திற்கும் பல கார்ப்பரேட் சாமியார்களுடன் கூட்டு சேர்ந்து பல ஆயிரம் கோடிகளைச் செலவு செய்துள்ளது ஆரியத்துவ பா.ச.க. அரசு!

இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், இதுவரை சற்றொப்ப இரண்டாயிரம் கோடிக்கு மேல் அதற்கு நிதி ஒதுக்கி உள்ளது. இதில் சித்த மருத்துவத்திற்கென்று வெறும் எட்டு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது!

இந்நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திருச்சியில் அமைய இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை அக்கட்சியின் உட்கட்சிச் சண்டையால் மதுரைக்கு மாற்றப்பட்டது.

சித்த மருத்துவ ஆர்வலர்கள், கடந்த 2017ஆம் ஆண்டு புதுதில்லியில நிறுவப்பட்டுள்ள பெரிய 'எய்ம்ஸ் - ஆயுர்வேதா' மருத்துவமனையைப் போல், தமிழ்நாட்டில் 'எய்ம்ஸ் - சித்தா' மருத்துவமனையைத் திருச்சியில் அமைக்க வேண்டும் எனக் கோரி, அதற்குப் போராடி வருகின்றனர். அதன் பயனாக, தமிழ்நாடு அரசு பெரிய அளவில் நிலம் ஒதுக்கித் தரும்போது, அதனைச் செயல்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் பதில் தெரிவித்தது.

அதனைச் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அடையாளம் காணப்பட்ட இடத்தில் 'எய்ம்ஸ் - சித்தா' மருத்துவமனை அமைக்க வேண்டும் எனச் சித்த மருத்துவகள் தொடர்ந்து அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசிற்கு எந்தவகை நிதிச் சுமையும் ஏற்படுத்தாத - ஒன்றிய அரசின் நிதியின் மூலமே இத்திட்டம் செயல்படுத்தப்படும். நிலத்தை ஒதுக்கித் தருவது மட்டுமே தமிழ்நாடு அரசின் பொறுப்பாகும்!

ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளை ஆயுஷ் துறைக்கு ஒதுக்கும் இந்திய ஒன்றிய அரசின் நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கான பங்கினை கேட்டுப் பெற முடியாததற்கு, 'எய்ம்ஸ் - சித்தா' போன்ற திட்டங்களும் நிறுவனங்களும் நம்மிடம் இல்லாதது ஒரு காரணமாகும்.

கடந்த 2022 செப்டம்பர் மாதம் புதுதில்லி சென்றிருந்த தமிழ்நாடு நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் இந்திய ஒன்றிய நலவாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் ஆயுஷ் அமைச்சர்களைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கு 'எய்ம்ஸ்' போன்ற சித்த மருத்துவமனை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அது ஊடகங்களிலும், மக்களிடமும் போதுமான கவனம் பெறவில்லை.

'எய்ம்ஸ் - சித்தா' மருத்துவமனை என்பது, All India Institute of Medical Science - AIIMS, All India Institute of Ayurveda - AllA போன்றது. அதாவது, All India Institute of Siddha - AlIS என்ற நிறுவனத்தைக் குறிப்பதாகும்.

இந்தியாவின் முதல் தலைமையமைச்சர் நேரு அவர்களால் 1952இல் தில்லியில் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் மருத்துவக் கல்வியிலும், உயராய்வு மருத்துவப் படிப்புகளிலும், மருத்துவ ஆராய்ச்சிகளிலும் இந்தியா தன்னிறைவு அடைவதே! அதன்பின் இந்தியா முழுமைக்கும் 8 எய்ம்ஸ் மருத்துவமனைகள் பெரிய அளவில் நிதி ஒதுக்கி அமைக்கப்பட்டன. மதுரையில் ஒன்று விரைவில் அமைய உள்ளது என இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்தால் எய்ம்ஸ் மருத்துவ நிறுவனம் போல, ஆயுர்வேதத்திற்கு All India Institute of Ayurveda (AIIA) புதுதில்லியில் அமைய, மோடி அரசு 500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி 2017இல் அது தொடங்கப்பட்டது. அதன்படி பல பணிகள் நடந்துள்ளன. அப்போது அனைத்து இந்திய முறை மருத்துவத்திற்கும் இதேபோல் மருத்துவமனை நிறுவப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

எய்ம்ஸ்-ஆயுர்வேதா (AllA) மருத்துவமனையானது ஆயுர்வேதத்தில் 22 துறைகளைக் கொண்ட PG\ Ph.d.\M.S. போன்ற உயர் படிப்புகளையும், மருத்துவ ஆய்வுகளையும் மிகச் சிறப்பாக முன்னெடுப்பதற்காக ஆண்டுக்கு சுமார் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, இதன் மூலம் அரியானா, உத்தரப்பிரதேச மக்களுக்கும் சிறப்பான ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவா போன்ற சிறிய மாநிலம் தொடர்ந்து ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்து அதில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, தற்பொழுது இரண்டாவது AIIA ஆயுர்வேத மருத்துவமனை கோவாவில் விரைவில் அமைய உள்ளது.

இதேபோன்று சித்த மருத்துவத்திற்கும் எய்ம்ஸ்-சித்தா எனும் வகையில் "அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனம்" (AIIS - All India Institute of Siddha) நிறுவனத்தை அமைப்பதற்கு ஒன்றிய ஆயுஸ் அமைச்சகத்திடம் திட்டம் உள்ளது. 

"அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனம் (எய்ம்ஸ்-சித்தா)" தமிழ்நாட்டில் அமையும் போது, மிகச் சிறப்பான சித்த மருத்துவச் சேவையைத் தமிழ்நாட்டு மக்கள் பெற முடியும். அது மட்டுமன்றி, சித்த மருத்துவ உயர் படிப்புகள், சித்த மருத்துவ ஆராய்ச்சிகளும் உலகத்தரத்துடன் மேற்கொள்ளப்படும்.

புற்றுநோய்க்கான சித்த மருத்துவ ஆய்வு, தோல் நோய்க்கான சித்த மருத்துவ ஆய்வு, சர்க்கரை நோய்க்கான சித்த மருத்துவ ஆய்வு, பல புதிய வைரஸ் காய்ச்சலுக்கான சித்த மருத்துவ ஆய்வு, பெண்கள் மற்றும் குழந்தைப் பேரின்மைக்கான சித்த மருத்துவ ஆய்வு, வர்ம மருத்துவம் மற்றும் ஒடிவு முறிவுக்கான சித்த மருத்துவ ஆய்வு, சிறுநீரக நோய்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு, வளரிளம் குழந்தைகளுக்கான சித்த மருத்துவ ஆய்வு, முதியோர் நோய்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு போன்ற பல சித்த மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றிற்கு உலகத் தரத்திலான சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் இந்த (எய்ம்ஸ்-சித்தா) AllS மருந்துவமனையால் முடியும்.

இதன் வழியே, உலகத் தமிழர்கள் தீராத பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவம் வேண்டி தமிழ்நாடு வருவார்கள். அதன்மூலம் தமிழ்நாட்டின் மருத்துவச் சுற்றுலா அதிகரிக்கும்.

தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் எய்ம்ஸ்-சித்தா - AIIS அமையும்போது, அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் சிறப்பாகப் பயன்படும். ஏற்கெனவே, திருச்சி - தஞ்சை இடையே அமைய வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனையானது மதுரைக்கு மாற்றப்பட்டது. அப்போது AIIMS மருத்துவமனை கட்ட திருச்சியில் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசின் வசம் உள்ளது. அதனை AIIS சித்த மருத்துவமனை கட்ட தமிழ்நாடு அரசு ஒதுக்கினாலே போதுமானது. மற்ற அனைத்துச் செலவுகளையும் இந்திய ஒன்றிய அரசே ஏற்றுக் கொள்கிறது.

தில்லியில் உள்ள AIIA ஆயுர்வேத மருத்துவமனைக்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் இந்திய ஒன்றிய அரசு ஒதுக்கி மருத்துவச் செலவு செய்கிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில், இந்த முன்னெடுப்புகளைச் சீர் குலைக்கும் வகையில், சில செயல்கள் சனாதனக் கும்பல்களால் செயல்படுத்தப்படுகிறது. வரும் திசம்பர் மாதம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத மருத்துவத்தின் அனைத்திந்திய மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டை ஒட்டி, தமிழ்நட்டிலுள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் குழு, இம்காப்ஸ் இயக்குனராக உள்ள பெண் மருத்துவர் மீரா சுதிர் தலைமையில், கடந்த 14.11.22 அன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவியை சந்தித்து, தமிழ்நாட்டில் ஆயுர்வேதம் ஒடுக்கப்படுவதாகவும் ஓரங்கட்டப்படுவதாகவும், தமிழ்நாடு அரசு இரண்டாவது ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்றும் முறையிட்டது.

ஆரியத்துவ சனாதனக் காப்பாளரான ஆளுநர் இரவி அக்கோரிக்கையை அவசரமாக தமிழ்நாடு நலவாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். இதே குழு கடந்த 25.11.22 அன்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்து அதே கோரிக்கையை நேரில் முன்வைக்கிறது. உடனடியாக அக்கோரிக்கையை ஏற்ற அமைச்சர், 'திருச்சியில் ஆயுர்வேத மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கிறார்.

இந்தக் குழுவில் இருந்த பெண் மருத்துவர் மீரா சுதீர அவர்கள், கடந்த 12.11.22 அன்று "துக்ளக்" இணைய இதழுக்கு "தமிழ்நாட்டில் இந்தியை எப்படிப் பரப்பலாம் என்பது குறித்து விரிவாக விவாதித்தவர்! தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரைச் சந்திக்காமல், ஆரியத்துவ சேவகராக உள்ள ஆளுநரை ஆயுர்வேத மருத்துவக் குழு சந்திப்பதிலிருந்தே அவர்களது உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா முழுவதிலும் 273 ஆயுர்வேதக் கல்லூரிகள் உள்ளன. இதில் 53 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகள்! இக்கல்லூரிகளில் ஆண்டுதோறும் சற்றொப்ப 27300 மாணவர்கள் சேர்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் ஒன்பது சித்த மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இதில் இரண்டு மட்டும்தான் அரசுக் கல்லூரிகள். இதில் சேர்க்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் வெறும் 650 மட்டுமே!

தமிழ்நாட்டில் சித்த மருத்துவத்தின் நிலைமை இப்படி இருக்க, தமிழ்நாடு அரசால் ஆயுர்வேதம் புறக்கணிக்கப்படுகிறது என்று கூறுவது அப்பட்டமான பொய்க் கூற்றாகும்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை முடக்கி வைத்துள்ள ஆளுநரைக் கண்டிக்காமல், அவர் மனம் குளிர வேண்டி இரண்டாவது ஆயுர்வேதக் கல்லூரியை அமைச்சர் அறிவிப்பது வேதனையானது.

பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தும், அதனைப் பல ஆண்டுகளாகியும் செயல்படுத்தவில்லை. சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட, அதனை முடக்கி வைத்துள்ள ஆளுநரிடம் இருந்து, ஒப்புதலைப் போராடிப் பெற தமிழ்நாடு நல்வாழ்வுத் துறை அமைச்சர் எவ்வகை முயற்சியும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் சித்த மருத்துவக் கல்லூரியைத் தொடங்க அந்தந்த மாநில அரசுகளை தமிழ்நாடு அரசு நிர்பந்திக்க முடியுமா? முடியாது! இன்று வரை தமிழ்நாடு தவிர்த்த வெளி மாநிலங்களில் ஒரு அரசு சித்த மருத்துவக் கல்லூரி கூட இல்லை என்பதே உண்மை!

அண்டை மாநிலமான கேரளாவில் ஒரே ஒரு தனியார் சித்த மருத்துவக் கல்லூரி உள்ளது. இதைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஒரு தனியார் சித்த மருத்துவக் கல்லூரி கூட இல்லை!

அருகிலுள்ள கர்நாடக மாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் முன்பு வரை சித்த மருத்துவம் பயின்ற எவரும் மருத்துவமனை வைத்து மருத்துவம் பார்க்க முடியாது. அங்கு சித்த மருத்துவம் பார்ப்பது சட்டத்திற்கு புறம்பானது. சித்த மருத்துவர் அருளமுதனின் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்பே அங்கு தகுதி வாய்ந்த சித்த மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பது சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது.

தமிழர் மருத்துவ முறை என்ற ஒரே காரணத்திற்காக வெளி மாநிலங்களில் சித்த மருத்துவத்தை, ஆயுர்வேத மருத்துவர்கள் அனுமதிப்பதில்லை என்பதே உண்மை! 

உண்மையில், சித்த மருத்துவத்திற்கு தமிழ்நாட்டிற்கு வெளியேயும் இடமில்லை - தமிழ்நாட்டிற்கு உள்ளும் இடமில்லை என்பதே வேதனையான நிலை!

ஆயுர்வேதா- யுனானி - ஓமியோபதி ஆகியவற்றின் தலைமையகம் தில்லியில் அமைத்து, அவற்றை அங்கீகரிக்கும் இந்திய ஒன்றிய அரசு, சித்த மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் தலைமையகத்தை மட்டும் சென்னையில் வைத்தது. இதன் மூலம் தில்லியில் சித்த மருத்துவத்திற்கான அங்கீகாரம் முற்றிலும் மறுக்கப்பட்டது. இதனால் கொள்கை ரீதியாகப் பல முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சித்த மருத்துவம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது!

உலக நலவாழ்வு நிறுவனத்தின் (WHO) பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவனத்தை குசராத்தில் கடந்த ஆண்டு நிறுவியபோது, சித்த மருத்துவம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது.

தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி சித்த மருத்துவம் வளர விடக்கூடாது; தெரிந்து விடக்கூடாது என்பதில் ஆரியத்துவ ஆட்சியாளர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, இந்திய அரசால் - ஆரியத்துவ ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்படும் தமிழர் மருத்துவமான சித்த மருத்துவத்திற்காகத் தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தேவையுள்ளது.

நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் :

1.உலகத் தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மருத்துவ அறிவாக தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தைப் பேரறிவிப்பு செய்ய வேண்டும்.

2. திருச்சியில் ஒன்றிய எய்ம்ஸ் சித்த மருத்துவமனை அமைக்க வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நிலத்தை ஒதுக்கித் தர வேண்டும்.

3. ஒன்றியத்தில் ஆயுஷ் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் பெரும் பங்கை நாம் சித்த மருத்துவத்திற்காகக் கேட்டுப் பெற வேண்டும்.

4. தமிழ்நாடு ஆளுநரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். ஆளுநரை அதை முடக்கினால் வெளியேற்ற மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

5. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவக் கல்லூரிகளைப் புதிதாக தொடங்க வேண்டும்.

6. ஏற்கெனவே நாகர்கோயிலில் திறக்கப்பட்ட ஒரு ஆயுர்வேதக் கல்லூரியே தமிழ்நாட்டிற்குப் போதுமானதாகும். புதிதாக திறந்தால் அதற்கு எதிராகப் போராட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆரியத்துவ சனாதனமும், சமற்கிருத மேலாதிக்கமும் எந்த வகையில் வந்தாலும் நாம் அதனை ஒருங்கிணைந்து சமரசமின்றிப் போராடி தடுத்து நிறுத்த வேண்டும்!

கட்டுரையாளர்: திரு வான்முகில்

நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ், டிசம்பர் 2022.

செவ்வாய், 6 டிசம்பர், 2022

தமிழ் என்னும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே திராவிடம் என்பதாகும்: பி.ஆர்.அம்பேத்கர்


இதுவரை நமக்குக் கிடைத்துள்ள சான்றுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, தென்னிந்தியாவின் திராவிடர்களும் வட இந்தியாவின் அசுரர்களும் அல்லது நாகர்களும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள்தான் என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. 

நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், ‘திராவிடர்’ என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். ‘தமிழ்’ என்னும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல். 

‘தமிழ்’ என்னும் மூலச் சொல் முதன் முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்றபோது ‘தமிதா’ என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர், ‘தமில்லா’ ஆகி, முடிவில் ‘திராவிடா’ என்று உருத்திரிந்தது. ‘திராவிடா’ என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி, அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை. 

நாம் ஞாபகத்திற்குக் கொள்ள வேண்டிய மூன்றாவது விஷயம், ‘தமிழ் அல்லது திராவிடம்’ என்பது, தென்னிந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக, அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது; காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும். உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழியாகவும் திகழ்ந்தது. 

ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வட இந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு, தென்னிந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவில் இருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். 

வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டு விட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால், தென்னிந்தியாவில் இருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை. தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக் காத்து வந்தனர். 

ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக் கொள்ளவில்லை. இந்த வேறுபாட்டை மனதில் கொண்டால், திராவிடர் என்ற பெயர் தென்னிந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

திராவிடர் என்ற சொல்லை வட இந்தியர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனென்றால், திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டு விட்டனர். ஆனால், தென்னிந்தியாவின் நாகர்களைப் பொறுத்தவரையில், திராவிட மொழியைத் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு இருந்ததால், தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர். 

அதுமட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு விட்டதன் காரணமாக, திராவிட மொழி பேசும் ஒரே மக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக் கொள்வது மிக மிக அவசியம் ஆயிற்று. தென்னிந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.

பார்வை நூல்:

தீண்டப்படாதவர்கள், பி.ஆர்.அம்பேத்கார், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி 14, எஸ்.பெருமாள் (ப.ஆ), மறு பதிப்பு, 2008, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் நல அமைச்சகம், புது டில்லி.


புதன், 16 நவம்பர், 2022

மாவீரர் நினைவேந்தும் நடுகல் :அ.ம.அங்கவை யாழிசை


என்னுடைய மனதுக்கு மிக நெருக்கமான புத்தகங்கள் உண்டென்றால், அதில் முதலாவதாக இடம்பெற்றிருப்பது தீபச்செல்வன் எழுதிய 'நடுகல்' என்னும் புத்தகம்தான். இது எம் தமிழ் மண்ணைப் பற்றியது; எம் மண்ணின் மைந்தர்களான தமிழர்களைப் பற்றியது என்பதால்கூட அப்படி இருக்கலாம்.

தமிழ் இனத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் இளமைக்கால வாழ்க்கைப் பதிவாக, கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்பு வெளிவந்த திரைப்படம் மேதகு 1. மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்து பார்த்த படம் அது. ஏனெனில், எம் தலைவரைப் பற்றிய படம். ஒரு போராளி உருவான கதையைப் பேசியிருந்தது அப்படம். 

அந்தப் படத்தைப் பார்த்து முடித்த உடனே, 'ஈழத்தைப் பற்றியும் - ஈழப் போராட்டங்கள் பற்றியும் நம்மிடம் புத்தகங்கள் இருக்கிறதா?' என, அப்பாவிடம் கேட்டேன். 'ஈழம் குறித்து நிறையப் புத்தகங்கள் நம்மிடம் இருக்கின்றன. அதையெல்லாம் நீயும் தம்பியும் படிக்க வேண்டும்' எனக் கூறினார். 

எங்களது 'செம்பச்சை' நூலகத்தில் ஈழத்தைப் பற்றிய நிறைய நூல்கள் இருந்தாலும், ஈழத்தைப் பற்றியான வரலாற்றைக் காட்டிலும், ஈழத்து மக்களின் துயர்மிகுந்த வாழ்க்கைக் கதைகளை முதலில் படிக்க வேண்டும் எனக் கூறிய அப்பா, அடுத்த நாளே நான் படிப்பதற்காகப் பத்துப் புத்தகங்களைக் கொடுத்தார். அந்தப் பத்து நூல்களுள் இந்த 'நடுகல்' புத்தகமும் கைக்கு வந்தது. 'நடுகல்' எனும் தலைப்பைப் பார்த்தவுடனே, அதைப் படிக்க வேண்டும் எனும் தூண்டல் வந்துவிட்டது. 

ஓராண்டிற்கு முன்பு படித்த புத்தகம்தான் என்றாலும், இன்றும் அதன் கதைகளையும் வரிகளையும் அசைபோடும் போது ஈழத்தமிழர் மனத்தின் ஓலம் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

ஈழத்தைப் பற்றியும், எம் தலைவரைப் பற்றியும், அவர் முன்னெடுத்த போராட்டம் பற்றியும் சிறு வயதில் இருந்தே என் தந்தையாரின் வழியாக நிறைய அறிந்திருக்கிறேன். ஈழத் தமிழ் மக்களின் இன்னல்கள் பற்றியும் நிறையக் கேட்டிருக்கிறேன். ஆனாலும், இப்புதினம்தான் கண்கூடாகக் காண்பதைப் போல் காட்சிப்படுத்தியதை உணர்ந்தேன். 

இந்த நூலைப் படிக்கும்போது கதை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திப் பார்ப்பேன். நிகழ்வுகளை விவரிக்கும் வரிகளைக் காட்சிப்படுத்திப் பார்க்கும்போது, ஈழத் தமிழ் மக்களின் துயர்மிகு வாழ்வை வாசிக்க முடியாமல் புத்தகத்தை மூடி வைத்து விடுவேன். 

பல நேரம் நூலின் வரிகளை உதடுகள் உச்சரித்துக் கொண்டிருந்தாலும், கண்கள் கசிந்து கொண்டே இருந்தன. வாசிப்பதற்கே இத்தனை துயரம் ஏற்படுகிறது என்றால், அந்தத் துயரங்களையெல்லாம் நேரில் அனுபவித்த தமிழர்களின் வலிகள் மிகக் கொடூரமானதாக இருந்திருக்கும் என்பதை நினைத்து மிகவும் வேதனை அடைந்தேன்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் மரணத்தோடு போரிட்ட தமிழ் மக்களின் போராட்டத்தையும், அவர்களின் போராட்ட வாழ்வியலையும் கதை சொல்லல் வழியாகக் கட்டமைத்திருந்தது நடுகல். 

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது, தந்தையின் ஆதரவு ஏதும் இல்லாமல் ஒரு குடும்பம் படும் பாட்டை விவரிக்கிறது நடுகல்.

போரில் வீர மரணம் அடைந்தவர்களின் நினைவாக நடுகல் நடப்படும் வழக்கம் தமிழர்களின் தொன்மைப் பண்பாடுகளுள் ஒன்று. தீபச்செல்வனின் நடுகல்லானது, ஒரு போராளியைப் பற்றிய நினைவுகளைச் சுமந்திருக்கும் புதினமாய் வந்திருக்கிறது. 

அதாவது, ஈழப்போராட்டத்தில் தன் முதல் மகன் களப்போராளியாகி வீரச் சாவடைய, வீர மரணம் அடைந்த அவனை நினைவு கூற ஒரு புகைப்படம்கூட கைவசம் இல்லாத நிலையில், அவனைப் பற்றிய நினைவுகளையே நடு கல்லாய்ச் சுமந்து வருகிறாள் ஒரு தாய். மகனைப் பறிகொடுத்தவள், தன் மகனின் முகம் பார்க்க வைத்திருந்த புகைப்படங்களையும் தொலைத்த வலியோடு கதை முழுதும் பயணிக்கிறார் அந்தத் தாய்.

நேசித்தவனை இழப்பது துயரம் என்றால், அவனுடைய நிழற்படத்தையும்கூட இழப்பது மிகப்பெரும் துயரம்.

இதில், கதை சொல்லியாக வரும் இரண்டாவது மகன் வினோதன், தன் அப்பா வருவார் என்ற நம்பிக்கையில் இருந்து இருந்து ஏமாந்து விடுகிறான். அவன் அண்ணன் இல்லாமலும்,போரின் போது தங்கை மற்றும் அம்மாவுடன் சேர்ந்து ஒவ்வொரு இடமாக இடம்பெயரும் போதும் வழிநெடுகப் போரின்போது கொல்லப்பட்ட மனித உடல்களே எங்கும் கிடந்ததைப் பற்றி வினோதன் கூறும் பகுதிகள் இரத்த சாட்சிகளாய் இருக்கின்றன. வீதிகள் முழுக்க சருகுகள் கிடக்கும் காட்சிகள் போல சனங்கள் செத்துக் கிடக்கும் காட்சிகளை நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது.

போரின் போது தமிழ் மக்கள் அடைந்த வேதனைகள் அனைத்தையும் மிக வேதனையோடு விவரித்திருக்கும் அந்தப் பகுதிகள் கண்ணீரும் வலியும் நிரம்பியவை.

பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் பதுங்கு குழியிலும், சாதிக்க வேண்டிய வயதில் சவப்பெட்டியிலும் இருந்த நிலைமைகள் இனி வேறு எந்த இனத்திற்கும் வரக்கூடாது.

சொந்த நாட்டில் அடிமையாகவும் அகதியாகவும் வாழும் அவல நிலையில் எம் உறவுகள் பட்ட சித்திரவதைகள்தான் என்னென்ன? அந்த மனிதமற்ற சிங்கள இராணுவ மிருகங்களின் அத்துமீறல்கள் மரணத்தைக்கூட பயமற்றதாக்கி விட்டிருந்த நிலையை என்னவென்பது?

போரில் வீரச் சாவடைந்தவர்களுக்கு மரியாதை செய்யவோ விளக்கேற்றவோ கூடாது என்று சிங்கள இராணுவம் தடை போட்டிருப்பதோடு, மாவீரர் துயிலும் இல்லங்களைச் சேதப்படுத்தியிருக்கும் சிங்கள இராணுவம் செய்த பயங்கரவாதங்களை விவரிக்கும் போது நெஞ்சம் பதை பதைக்கின்றது. மனம் குமுறுகிறது. ஓர் ஆற்றாமை உணர்வு மனதில் இருந்து கொண்டேயிருக்கிறது.

இயக்கத்தில் சேர்ந்திருந்த தனது மகன் வீரச் சாவடைந்த பிறகு, அவனது நினைவாக ஒரு கல்லை நட்டு, அந்தக் கல்லையே மகனாகப் பாவித்துக் கொண்டிருப்பார் அந்தத் தாய். மகனாகப் பாவித்துக் கொண்டிருந்த அந்தக் கல்லை சிங்கள இராணுவ வீரன் உடைத்து விடுவான். அப்போது அந்தத் தாய் கூறும்போது "எங்கட பிள்ளயளின்ரை நினைவுகளுக்கு நீங்கள் பயப்படுற வரைக்கும் உங்களாலை அவங்களை அழிக்கேலாது". அந்தத் தாயின் உணர்வுதான் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் உணர்வாக இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. அந்த உணர்வின் வெளிப்பாடுதான் மாவீரர் நினைவேந்தல் வழிபாடாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நூலின் கதையை நகர்த்திப் போவது பிரசன்னா என்ற போராளி வெள்ளையனைப் பற்றிய நினைவுகள்தான். சொல்லப்போனால், இந்த நூல் முழுக்க போராளி பற்றிய நினைவுகளே நிரம்பிக் கிடக்கின்றன. மகனை இழந்த தாயின் தவிப்பு, அண்ணனை இழந்த தம்பி மற்றும் தங்கையின் சோகம் என, உறவுகளை இழந்தவர்களின் வலியை மிகுந்த வலியோடு படைத்திருக்கிறார் ஆசிரியர் தீபச்செல்வன்.

போராளி வெள்ளையனின் தம்பியாக வரும் வினோதன், தன் அண்ணன் படத்தைத் தேடி கதை முழுக்கத் தேடுவான். ஆனாலும் அது கிடைக்காத போது அவன் கலங்குவது வேதனை அளிக்கும்.

வீரச்சாவடைந்த போராளி அண்ணனின் ஒளிப்படத்தைத் தேடியலையும் தம்பியின் தவிப்பும் நடுகல்லில் பரவிக் கிடக்கிறது.

நடுகல் என்றாலே, போரில் பங்கேற்ற போராளிகளின் கதைகளே பெரும்பாலும் சொல்லப்படும். ஆனால், தீபச்செல்வனின் நடுகல் நூலானது, வீரச்சாவடைந்த போராளிகள் என்பதையும் தாண்டி, அந்தப் போராளிகளைப் பெற்றெடுத்த தாய்மார்களின் நினைவுகளையும் தவிப்பையும் பேசியிருக்கிறது. மேலும், வீரச் சாவடைந்த போராளிகள் - போரில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட உறவுகளையும் கனவுகளையும் தொலைத்த குடும்பங்களின் கண்ணோட்டத்தில் நடுகல் எழுப்பியிருக்கிறது. அதோடு, போரினால் நிராயுதபாணியான மக்களின் துயரப் பக்கங்களையும் நடுகல்லாய்ப் பேசுகிறது. 

இன்றும் கூட உலகில் பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு, நடுகல் புத்தகமானது அவர்களின் கடந்த கால இன்னல்களைப் பேசும் புத்தகமாகத்தான் இருக்கும். காலங்கள் எத்தனை கடந்தாலும் அவர்களுக்கு அது என்றும் மாறாத காயங்களாகத்தான் இருக்கும்.

நினைவுகள் வலிமையானவை. ஏனெனில், அந்நினைவுகள் ஒரு காலத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்பவை. அதே நினைவுகள்தான் கசப்பான காலத்தையும் இரத்தம் படிந்த வரலாற்றையும் மாற்றி எழுதுவதற்கான உந்துதல்களைத் திரும்பத் திரும்பத் தந்து கொண்டிருக்கும். அந்தவகையில், ஈழ விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள் பற்றிய நினைவேந்தல்கள் வழிபாடு மட்டுமல்ல; தமிழீழத் தாயக வேட்கையை அணையாமல் காந்து நிற்கும் பேருணர்வாகும். 

மாவீரர்களை நினைக்கும்போதெல்லாம், "எவன் ஒருவனைக் கண்டு உன் எதிரி அஞ்சுகிறானோ, அவனே உன் இனத்தின் உண்மையான தலைவன். என்றேனும் ஒரு நாள் பழி தீர்ப்போம்; துரோகம் களைவோம்" என்ற வாசகங்கள்தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

அன்று என் தலைவரின் படையைக் கண்டு அஞ்சினார்கள். இன்று அவர் வாழ்ந்த நிலத்தின் செங்காந்தள் பூவும் மாவீரர் கல்லறைகள்கூட அவர்களை அஞ்ச வைக்கிறது எனில், மாவீரர்களைப் பற்றிய நினைவுகள் எவ்வளவு வலிமையானவை என்பதை அறியமுடியும். அந்த நினைவுகளும் இன்னொரு வகையில் நடுகற்கள்தான்.

நினைவுகளில் உறைந்து கிடக்கும் உணர்வுகளைச் சொற்களால் ஆன நடுகல்லாய் மிக நேர்த்தியான கதைசொல்லல்வழி கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர் தீபச்செல்வன். இப்படைப்புக்காக, தீபச்செல்வன் அவர்களுக்கு மிக்க நன்றி.

மாவீரர்களின் கனவும் ஈகமும் ஒருபோதும் வீண்போகாது. மாவீரர்களுக்கு எம் வீரவணக்கம்.

அ.ம.அங்கவை யாழிசை

15.11.2022