சனி, 17 நவம்பர், 2018

சாதிய ஆணவப் படுகொலையின் கோர முகம் :- இரா.வினோத்

திருமணமான மூன்றே மாதங்களில் புதுமண தம்பதியை பெண்ணின் குடும்பத்தினரே கொடூரமாக கொலை செய்து, சடலங்களை க‌ர்நாடக ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காதல் கைக்கூடிய அந்த இளம் ஜோடியின் கனவு, சாதி வெறியினால் சின்னாபின்னமாக்கப்பட்டு இருக்கிறது. கிருஷ்ணகிரி போலீஸ் எஸ்.பி.மகேஷ்குமார் அனுப்பிய கொலை படங்களும், மண்டியா போலீஸார் பகிர்ந்து கொண்ட தகவல்களும் ஏற்படுத்திய அதிர்வலையில் இருந்து மீள முடியவில்லை.

ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நந்தீஷ் (25). பட்டியல் வகுப்பை சேர்ந்த இவரும் அதே ஊரை சேர்ந்த மகள் சுவாதியும் (21) 4 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். நந்தீஷின் சாதியை காரணம் காட்டி, சுவாதியின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெற்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர். மிரட்டலுக்கு பயப்படாமல் சுவாதி நந்தீஷை காதலித்து வந்துள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுவாதி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நந்தீஷை வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்காத நந்தீஷின் தந்தை நாராயணப்பா, 'சாதி பிரச்சினை வரும்' எனக்கூறி சுவாதியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். உடனடியாக சுவாதியின் தந்தை சீனிவாசனை சந்தித்து, தன் மகனுக்கு சுவாதியை திருமணம் செய்து தருமாறு 'பெண் கேட்டு'ள்ளார்.

அதற்கு சுவாதியின் தந்தை சீனிவாசன் சாதி பெயரைச் சொல்லி திட்டி, பெண் தர மறுத்துவிட்டார்.மேலும் சுவாதியை அடித்து, வெளியே செல்ல விடாமல் வீட்டில் அடைத்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டில் சுவாதி வீட்டை விட்டு வெளியேறி, நந்தீஷை திருமணம் செய்துள்ளார். திரும்பவும் ஊருக்குப் போனால் பெரிய பிரச்சினையாகும் என்பதால் இருவரும் 'தலைமறைவு' வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

ஓசூர் பேருந்து நிலையம் அருகே 'ரகசியமாக'  வாடகை வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சட்டப்படி நந்தீஷூம் - சுவாதியும் தங்களது திருமணத்தை சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி ஓசூருக்கு வந்த‌ நடிகர் கமல்ஹாசனை சுவாதி பார்க்க விரும்பியுள்ளார். காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, நந்தீஷ் அவரை கமல் ஹாசன் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சுவாதியின் உறவினர்கள் கிருஷ்ணன் (26), வெங்கட் ராஜ்(25) ஆகியோர் புதுமண தம்பதியை பார்த்து, அவர்களிடம் பேச்சுக்கொடுத்து கொண்டே சுவாதியின் தந்தைக்கு தகவல் கொடுத்தன‌ர். அதற்காகவே காத்திருந்த சுவாதியின் தந்தை சீனிவாசன் (40), பெரியப்பாக்கள் அஸ்வதப்பா(45), வெங்கடேஷ் (43) சாமிநாதனின் (30) வாடகை காரை எடுத்துக்கொண்டு வந்தனர்.

முதலில் கோபமாக சண்டை போட்ட சுவாதியின் தந்தை சீனிவாசன், ''காரில் ஏறுங்கள். போலீஸ் ஸ்டேசனுக்கு போகலாம்''என குண்டுகட்டாக நந்தீஷையும் சுவாதியையும் காரில் ஏற்றியுள்ளனர். ஒரு கட்டத்தில் கோபம் முற்றி  கண்ணீர் விட்டு அழுவதைப் போல நடித்த சீனிவாசன், இருவரையும் ஏற்றுக்கொள்கிறேன். வீட்டுக்கு வந்துடுங்க எனவும் கெஞ்சியுள்ளார். இதனை நம்பி நந்தீஷூம் - சுவாதியும் பயணித்த நிலையில், கார் நைஸ் ரோடு வழியாக கர்நாடகாவுக்குள் நுழைந்தது.

இதனால் சந்தேகமடைந்த நந்தீஷ், 'எதுக்கு இந்த பக்கம்?' என கேட்டிகிறார். அதற்கு சீனிவாசன், ''ராம்நகர் பக்கத்துல பெரிய அனுமான் கோயில் இருக்கு. அங்கு போய் பூஜை பண்ணிட்டு, முறைப்படி கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்''என ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். இதனை நந்தீஷூம், சுவாதியும் நம்பாத நிலையில் மீண்டும் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. அப்போது காரில் இருந்த சீனிவாசன், வெங்கடேஷ், அஸ்வதப்பா, கிருஷ்ணன், வெங்கட் ராஜ் உள்ளிட்டோர்  கூர்மையான ஆயுதங்களால் நந்தீஷ் - சுவாதியை அடித்துள்ளனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு கொண்டு சென்று, 'பிரிந்து போய்விடுமாறு' மீண்டும் நந்தீஷையும், சுவாதியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதற்கு மறுத்த நிலையில் இருவரையும் ஆயுதங்களால் தலை பகுதியில் வெட்டி, கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரையும் அடையாளம் காண முடியாதவாறு, அவர்களின் முகங்களை தீயிட்டு பொசுக்கியுள்ளனர். அதிலும் சுவாதியை மொட்டை அடித்து, அவரது அடிவயிறு பகுதியை சிதைத்துள்ளனர். இருவரின் கை, கால் லுங்கி துணியால் கட்டி சிம்சா ஆற்றில் வீசிவிட்டு, ஊர் திரும்பியுள்ள‌னர்.

அம்பேத்கர் டி -ஷர்ட்

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி நந்தீஷின் தம்பி சங்கர், தனது அண்ணனையும் அண்ணியையும் காணவில்லை.  சுவாதியின் தந்தை சீனிவாசன் மீது சந்தேகம் இருப்பதாக ஓசூர் போலீஸில் புகார் அளித்தார். இதனை வழக்கம்போல போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை. கட‌ந்த 13-ம் தேதி நந்தீஷின் உடல் அழுகிய நிலையில் கர்நாடக‌ ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பிறகு, 14-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

நந்தீஷின் முகம் அடையாளம் காண முடியாத நிலையில், அவர் அணிந்திருந்த நீல நிற டி - ஷர்ட்  துப்பு துலக்க உதவியது. அதில் டாக்டர் அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்டு,  'சூடகொண்டப்பள்ளி, ஜெய்பீம்' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து பெலகாவாடி போலீஸ் கிருஷ்ணகிரி போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில், மறுநாள் (15-ம் தேதி) நந்தீஷின் சடலம் மிதந்த அதே இடத்தில் சுவாதியின் சடலமும் மிதந்தது.

இதை உறுதி செய்த போலீஸார் நந்தீஷ் - சுவாதியை கடத்தி கொலை செய்ததாக சுவாதியின் தந்தை சீனிவாசன்(40), பெரியப்பா வெங்கடேஷ் (43), மற்றொரு பெரியப்பா அஸ்வதப்பா (45) உறவினர் கிருஷ்ணன் (26), உறவினர் வெங்கட் ராஜ் (25), கார் உரிமையாளர் சாமி நாதன் (30) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சீனிவாசன்,வெங்கடேஷ், கிருஷ்ணா ஆகிய 3 பேரை பிடித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அத்தனை பேரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புரிந்துகொள்ள முடியவில்லை

இந்த சம்பவத்தை தொடர்ந்து எழும் வழக்கமான கண்டன முழக்கங்களை பார்க்க சலிப்பாக இருக்கிறது. அறிக்கைகள், கள ஆய்வுகள், விசாரணைகள், சட்ட நடவடிக்கைகள் எல்லாம் அலுப்பூட்டுகின்றன. சாதி ரீதியான தாக்குதல்கள் அன்றாட நடவடிக்கைகளாக மாறிவிட்ட சூழலில் அதை தினமும் எழுதுவதும், பேசுவதும் விரக்தியை தருகிறது. கழிவிரக்கம், ஆதரவு குரல், தொலைக்காட்சி விவாதம், கண்டன ஆர்ப்பாட்டம்,  நீதிமன்ற முறையிடல், புதிய சட்டத்துக்கான கோரிக்கை என எல்லாமே அந்த நேரத்துக்கான கண் துடைப்போ என எண்ண வைக்கிறது.

சாதி ரீதியாக மனித தன்மையற்ற முறையில் எளிய மனிதன் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், 'ஒற்றுமை அவசியம்' என முழங்கும் குரல்களை ஏற்கும் மனநிலை இல்லாமல் போகிறது. களத்தின் எதார்த்தத்தை உணராமல், கனவு தேசத்தை கட்டியெழுப்பவதில் மும்முரமாக இருக்கும் தலித் கட்சிகளை நேசிக்க முடியாமல் போகிறது. எதனோடும் ஒப்பிடவே முடியாத வலியை சந்திக்கும் பாதிக்கப்பட்டவனையும், நிதம்நிதம் வதம் செய்யும் பாதிப்பை ஏற்படுத்துவனையும் ஒன்றாக அமர்த்தி, உரையாட அழைக்கும் புதிய குரல்களை ஆதரிக்க முடியாமல் போகிறது.

என்ன செய்தால் இந்த கொலைகள் எல்லாம் நிற்கும்? எப்படி கொல்லப்படுபவர்களை காப்பது? எப்படி சொன்னால் கொலையாளிகளுக்கு புரியும்? புரியாதவர்களுக்கு எப்படி புரிய வைப்பது? பலியிடப் படுவதற்காகவே நேர்ந்து விட்டவர்களா ஒடுக்கப்பட்டவர்கள்? மனசாட்சி உள்ள மனிதர்களால்  தினந்தினம் கொலைகளை கண்டும், எப்படி மிக‌  சாதாரணமாக கடந்து போக முடிகிறது?

இத்தனைகளை கொலைகள், வீடு எரிப்புகள், பலாத்காரங்கள், வன்முறை சம்பவங்கள் என தினந்தினம் பார்த்துக்கொண்டு இருக்கும், 'தலித் தலைவர்களால்' ஏன் இந்த சம்பவங்களுக்கு எதிராக  கிளர்ந்தெழ முடியவில்லை. எதிர் தாக்குதல் குறித்து முழக்கம் எழுப்பியவர்கள், ஏன் மவுனமாக இருக்கிறார்கள்? எதையுமே புரிந்துக்கொள்ள முடியவில்லை.

எதுவுமே சாத்தியப்படாத நிலையில், எல்லாவற்றையும் மீண்டும் தொடக்கத்தில் இருந்தே தொடங்கி பார்க்க வேண்டும். எவரும் கைக்கொடுக்காத நிலையில், மக்கள் தமக்கு தாமே கைக்கொடுத்துக்கொள்ள வேண்டும். முக தாட்சண்யம் கடந்த நீண்ட விவாதத்தை, நிறுத்திவிட்ட செயல்பாட்டை, மரபான குணாம்சத்தை, கற்க வேண்டிய பாடத்தை தயக்கமின்றி கற்க வேண்டும். சரியோ, தவறோ எதையும், எதற்கும் நிகர் செய்ய வேண்டும். தீர்வு வரும்வரை நிறுத்தக்கூடாது.

எங்கிருந்து வருகிறது வெறி?

சாதி வெறியில், பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த சீனிவாசனின் முகத்தை பார்த்தேன். கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால், ஒட்டிப்போன முகம், நோஞ்சான் போன்ற உடல்வாகு பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கடும் வறுமையும், அறியாமையும், இறுக்கமும் நிறைந்திருக்கிறார்.  'பொசுக்'னு இருக்கும் இந்த மனிதருக்கு எங்கிருந்து சாதி வெறி வந்தது? சாதி எப்படி இந்த சாதாரண மனிதரிடம் இவ்வளவு மூர்க்கமாக இயங்குகிறது? அறிவியல் வளர்ந்த இந்த 21-ம் நூற்றாண்டிலும் எப்படி இன்னும் முட்டாளாகவே இருக்கிறார்? பெற்ற மகளை,சக மனிதரை, துள்ள துடிக்க கொல்லும் மன நிலையை எங்கிருந்து பெற்றார் என யோசிக்கவே முடியவில்லை.

ஏராளமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும், பார்வையில் பலம் வாய்ந்ததாக பட்டவற்றை எல்லாம் புயல்  போட்டுவிடுகிறது. பார்வையில் படாத, மக்களின் மனங்களில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதியை எந்த புயலாலும் புரட்டி போட முடிவதே இல்லை.

புயலை விட சாதி கோரமானது!

-இரா.வினோத்
16.11.2018.

நன்றி
Gogul Nath R அவர்களது பதிவிலிருந்து..

எழுத்தோவியம்:
Palani Nithiyan

வெள்ளி, 16 நவம்பர், 2018

கலைச்சொல்லாக்கம் தூய தமிழில் முடியுமா? :- தோழர் தியாகு

மூலமுதல் தூய தமிழாக்கம் குறித்துத் தோழர்கள் சிலர் தேவையற்ற அச்சம் கொண்டுள்ளனர். தூய தமிழில் கலைச் சொல்லாக்கம் இயலாத ஒன்று அல்லது கடினமானது என்று இவர்கள் அஞ்சுகின்றனர். அறிவியல் பழகாதவர்களுக்கு அறிவியலே கடினம்தான். இயற்கை அறிவியல் என்றாலும் சரி, குமுக அறிவியல் என்றாலும் சரி, அதனை ஒரு கவளம் சோறு போல் விழுங்கி விட்டுப் போக முடியது, அல்லது ஒரு மிடக்குத் தண்ணீர் போல் குடித்து விட்டுக் கிளம்ப முடியாது. குமுக அறிவியலின் ஒரு கூறுதான் மார்க்சியப் பொருளியல். அந்தப் பொருளியலின் முதற்பெரும் படைப்புதான் மூலமுதல். இப்படி ஒரு நூலை மார்க்ஸ் தமது தாய்மொழி ஆகிய ஜெர்மனில் எழுதினார். அது ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்க்கப்பட்டு, ஆங்கிலத்திலிருந்துதான் தமிழுக்கு வந்தது, வருகிறது.

மூலமுதலைப் படிக்க விரும்புகிற வாசகர் அறிவியல் ஆர்வமுள்ளவராக, குறிப்பாகக் குமுக அறிவியல் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும். இது வரை இல்லையென்றால் இனியாவது அந்த ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். மூலமுதலின் உள்ளடக்கத்தை கார்ல் மார்க்சே இயன்ற வரை எளிமைப்படுத்திக் கொடுத்துள்ளார் என்பதுதான் என் கருத்து. ஆனால் அறிவியலை ஓர் எல்லைக்கு மேல் எளிமைப்படுத்த இயலாது, கூடாது.

மூலமுதலைத் தமிழாக்கம் செய்கிற பொறுப்பு என்பது அதற்கு உரையெழுதும் வேலையன்று. வேண்டுமானால் அதைத் தனியாகச் செய்யலாம். எந்த மொழிபெயர்ப்பும் மூலத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதே போது இலக்கு மொழியின் தன்மையை உள்வாங்கி அழகாகவும் இருக்க வேண்டும். மூலத்தின் ஆசிரியரே இலக்குமொழியும் அறிந்து எழுதியிருந்தால் கிட்டக் கூடிய அழகை மொழிபெயர்ப்பில் காட்ட முயல வேண்டும். சிறந்த மொழிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்பாகவே தெரியக் கூடாது என்பதுதான் மொழிபெயர்ப்பாளனின் உச்சக் குறிக்கோள். நெருங்க நெருங்க விலகி விலகிப் போகும்படியான குறிக்கோள். உண்மைக்கும் அழகுக்குமான தீராத முரண்பாட்டைத் தீர்க்கும் முயற்சிதான் மொழிபெயர்ப்புக் கலை என்பேன்.

கலைச் சொற்களைத் தூய தமிழில் வடிக்க முடியாது என்ற அச்சம் ஒரு காலத்தில் அறிஞர்களிடையே நிலவியது. ஒருசிலருக்கு இப்போதும் அந்த அச்சம் மிச்சமுள்ளது. இந்த அச்சம் இவர்களிடமிருந்து பாமரர்களுக்கும் (அறிவியலர் அல்லாதார்) பரவியுள்ளது. தமிழில் சொல்ல வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்பவர்களும் கூட தூய தமிழ் வேண்டாம் என்கிறார்கள்.

அறிவியல் அக்கறை கொண்ட எவரும் தூய்மையைக் கண்டு மிரள்வது பொருத்தமில்லை. தூய உணவு உண்ண வேண்டும், தூய உடை உடுத்த வேண்டும். வீடு தூய்மையாக இருக்க வேண்டும். நீர் தூய்மையாக இருக்க வேண்டும். காற்று தூய்மையாக இருக்க வேண்டும், எல்லாமே தூய்மையாக இருக்க வேண்டும் என்னும் போது மொழி தூய்மையாக இருக்க வேண்டாமா? ஆடை என்றாலே தூய ஆடைதான்! தமிழ் என்றாலே தூய தமிழ்தான்! ஆடை அழுக்காகி விட்டால் துவைத்துக் கட்டுவதில்லையா? தூய்மை செய்வதில்லையா? அதே போல் தமிழ் வரன்முரையற்ற பிறமொழிக் கலப்பால் அழுக்காகிக் கிடப்பதால்தான், தமிழையும் தூய்மை செய்ய வேண்டியுள்ளது. கந்தையனாலும் கசக்கிக் கட்டச் சொல்லிக் கொடுத்தது நம் தமிழல்லவா?

எடுத்த எடுப்பில் முடியுமா? முடியாதா? என்ற கேள்வியே தவறு. தேவையா? தேவையில்லையா? என்றுதான் முதலில் கேட்க வேண்டும். அறிவியலைத் தமிழில் சொல்லத் தேவை இருக்கிறதா? இல்லையா? மார்க்சியத்தைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டுமா? வேண்டாமா? தேவைதான், வேண்டும்தான் என்றால், முடியுமா? முடியாதா? முடியும் என்றால் எந்த அளவுக்கு முடியும்? முடியாது என்றால் எந்த அளவுக்கு முடியாது? என்று பேசலாம்.

எல்லாமே தமிழில் அடக்கம் என்ற இறுமாப்பு நமக்குத் தேவை இல்லை.  தமிழில் இல்லாதவற்றைப் பிற மொழிகளிலிருந்து பெற்றுக்கொள்ளும் பணிவும், அவற்றைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்க்கும் துணிவும் நமக்கு வேண்டும். ஐன்ஸ்டீனும் டார்வினும் மார்க்சும் தமிழில் இல்லை, அவர்களையும் தமிழுக்குக் கொண்டுவந்துதான் தமிழ்க் குமுகம் அறிவுவளம் பெற முடியும் என்பதில் மறுப்புக்கிடமில்லை. ஆனால் அவ்வளவு கனமான அறிவியலைச் சொல்லும் திறம் தமிழுக்குண்டா? என்று ஒருசில தமிழர்களே ஐயுறுகின்றனர். தமிழுக்குண்டு என்று தயங்கித் தயங்கி ஒப்புக் கொண்டாலும் தூய தமிழுக்குண்டா? என்று வீடு கட்டுகின்றனர். அதாவது தமிழில் சொல்லலாம், அத்தமிழ் மணிப்பிரவாளமாக இருக்கட்டும், அல்லது தமிங்கிலமாக இருக்கட்டும், அல்லது வரிவடிவத்தில் மட்டும் தமிழாக இருக்கட்டும், பொருளடக்கத்தில் ஆங்கிலம் அல்லது சமற்கிருதமாகவே இருக்கட்டும் என்று தமிழுக்குக் கொஞ்சம் மனமிரங்கிப் பேசுகின்றனர்.

எங்கெல்லாம் உடனே தமிழால் ஒரு செய்திக்கு முழு நீதி செய்ய முடியவில்லையோ, அங்கெல்லாம் பிற மொழியின் துணைநாடுவதை அடியேன் இழிவாகக் கருதவில்லை. ஒரு மொழியில் பிறமொழி கலப்பதற்கு ஆதிக்கம், திணிப்பு அல்லாத வேறு காரணிகளும் உண்டு என்பதையும் ஒரு மொழி பிற மொழிச் சொற்களையும் வடிவங்களையும் உள்வாங்கித் தன்னைச் செழுமையாக்கிக் கொள்ள வேண்டிய தேவையையும் நான் மறுக்கவில்லை. தனித்தமிழ் இயக்கம்தானே தவிர ’தனித்து அமிழ்’ இயக்கமன்று என்று முனைவர் இளவரசு சொன்னதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

மார்க்சோடு பக்கம் பக்கமாய்ப் பழகிச் செல்லும் போது தூய தமிழாக்கம் என்பதில் என் மனத்திட்பம் உறுதிப்படவே செய்கிறது.

இதற்கிடையில் கலைச் சொல்லாக்கத்தில் தூய தமிழின் நற்பயன் உணர்த்த ஒவ்வொன்றாகச் சில எடுத்துக்காட்டுகள் தருகிறேன். முதலில் இயற்கை அறிவியலில் பூதியல் (இயற்பியல்) துறையை எடுத்துக் கொள்வோம். நானும் பேருக்கு இந்தத் துறை மாணவன்தான். Saturation என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் உப்பைக் கரையுங்கள். இன்னும் இன்னும் என்று கரைத்துக் கொண்டே இருங்கள். ஒரு கட்டத்தில் உப்பு கரையாமல் நின்று விடும். நீங்கள் என்ன செய்தாலும் கரையாது. இந்த நிலைக்குத்தான் saturation என்று பேர். அந்தக் கரைசலுக்கு saturated solution என்று பேர். இதற்கு மேல் கரையாது என்ற கட்டத்துக்கு saturation point என்று பேர். இதையே பொருளியலில் சந்தை இதற்கு மேல் ஒரு சரக்கை ஏற்காத நிலையை saturation என்று குறிப்பிடுவதுண்டு.

நான் படிக்கும் காலம் வரை saturation என்பதை பூரிதம் என்றுதான் ’விஞ்ஞான’ பாடத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். பூரிதம், பூரிதக் கரைசல். பூரித நிலை என்றுதான் படித்தோம். பூரிதம் உண்மையிலேயே தமிழ்தானா? அதன் வேர்ச்சொல் யாது? என்றெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. பூரிதத்தைப் புரிந்து கொள்வதைக் காட்டிலும் பூரிதம் பூரிதம் பூரிதம் என்று உருப்போட்டால் போதுமே! ஐயகோ தமிழ்! ஐயகோ அறிவியல்!

எப்போது மாறியதோ, இப்போதெல்லாம் saturation தெவிட்டு நிலை ஆகி விட்டது. இது தூய தமிழ்! குழந்தைக்குக் கூட விளங்கும்! தமிழில் படிப்பதன் முழுப் பயனும் இப்போதுதான் கிட்டும்.

தூய தமிழ் சொல்லாக்கத்தால் அறிவியல் மேலும் அழகாகிறது; மேலும் தெளிவாகிறது. மூலமுதல் தூய தமிழாக்கம் அதனை அறுதியிட்டுரைப்பதாக இருக்கும்.

அறிவியல் தமிழின் நற்பயனுக்கு மேலும் சான்றுகள் எடுத்துக்காட்ட ஆர்வமுள்ள தோழர்களை உரிமைகொண்டு அழைக்கிறேன்.

எழுத்தோவியம்:
ஓவியர் நித்தியன்

தமிழீழம் சிவக்கிறது நூலுக்குத் தடை: கருத்துரிமை மீதான தாக்குதல்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து பழ.நெடுமாறன் எழுதிய தமிழீழம் சிவக்கிறது எனும் நூலை முற்றாக அழித்திட வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இது கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமையைப் பறிப்பதற்கு ஒப்பாகும்; கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும்.

இதைக் குறித்து பழ.நெடுமாறன், வைகோ, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கைகள் வருமாறு:

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை:

“தமிழீழம் சிவக்கிறது” என்ற தலைப்பில் நான் எழுதிய நூலுக்குத் தமிழக அரசு தடை விதித்தது. 2006ஆம் ஆண்டில் என்மீதுள்ள வழக்கைத் திரும்பப் பெறுவதாக அரசின்  சார்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புத்தக தடை வழக்கிலிருந்து நான் விடுவிக்கப்பட்டேன். ஆனால் அரசு கைப்பற்றிய ரூ. 10 இலட்சம் பெருமானமுள்ள 2000ம் நூல்களைத் திருப்பித்தரவில்லை. எனவே எனது நூல்களைத் திருப்பித் தருமாறு நான் தொடுத்த வழக்கு 12 ஆண்டுகாலத்திற்கு மேலாக நீதிமன்றங்களில் நீடித்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தயங்கியது. விசாரணை தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே வந்தது. இறுதியாக இன்று எனது முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, இந்த நூலை அடியோடு அழிக்கும்படி ஆணையிட்டுள்ளது. இந்திய நாட்டு நீதிமன்ற வரலாற்றில் இதுவரை இப்படிப்பட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டதில்லை.

எனது எழுத்துரிமை பறிக்கப்பட்டதாக நான் கருதவில்லை. மாறாக, அனைவருக்கும் சுதந்திரமாக சிந்தித்தல், எழுதுதல் ஆகிய உரிமைகள் பறிக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி மலையாள நாவல் ஒன்றுக்கு தடைவிதிக்கும்படி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவும் மற்றும் இரு நீதிபதிகளும் இணைந்து அளித்தத் தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்- “நாம் ஒரு சர்வாதிகார நாட்டில் வாழவில்லை. சனநாயக நாட்டில் வாழ்கிறோம். சுதந்திரமாக நமது கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒரு எழுத்தாளனின் படைப்புக் குறித்து அவரின் வாசகர்கள்தான் முடிவெடுக்கவேண்டும்.  வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தீர்ப்புக் குறித்து எனது வழக்கறிஞர்களுடன் கலந்துபேசி முடிவெடுப்பேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
___

‘தமிழீழம் சிவக்கிறது’
பழ. நெடுமாறன் நூல் குறித்த வழக்கில்,
நீதிக்குத் தண்டனை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1994 ஆம் ஆண்டு, ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ என்ற நூலை, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் எழுதி, அவரது துணைவியார் வெளியீட்டாளராக நூல் அச்சிடப்பட்டது.

அந்த நூல் தமிழ்நாட்டில் வெளியிடப்படவில்லை.

ஜெர்மனி நாட்டில் உள்ள ஈழத்தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று, அந்த நூல்களை விமானத்தின் மூலமாக ஜெர்மனிக்கு அனுப்ப இருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் அந்த நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திரு பழ.நெடுமாறன் அவர்கள் மீதும், அவரது துணைவியார் மீதும், புத்தகங்களை அனுப்ப ஏற்பாடு செய்த திரு சாகுல் அமீது மீதும், இந்திய தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவு 124 (ஏ) மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவு 10 மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 34, பிரிவு 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், 2006 அக்டோபர் 18 ஆம் நாள், தி.மு.க. ஆட்சியில், தமிழக அரசின் கூடுதல் வழக்குரைஞர், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார். எனவே, தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் போடப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், புத்தகங்களைத் திருப்பித் தரவில்லை. அவற்றைத் திரும்பப் பெற வேண்டி, திரு. நெடுமாறன் அவர்கள், குடிமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

அந்த வழக்கு, 2007 மார்ச் 2 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 11 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. விசாரணையைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தனர்.

இந்தப் பின்னணியில், உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு முரளிதரன் அவர்கள்,  2018 நவம்பர் 14 ஆம் நாள் அன்று, மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்ததோடு மட்டும் அல்லாமல், தீர்ப்பில் கூறி இருக்கின்ற வாசகங்கள் மிகவும் கடுமையானவை; கருத்து உரிமையின் அடித்தளத்தையே தகர்ப்பவை.

இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் 19 ஆவது பிரிவின் கீழ், கருத்து உரிமை, பேச்சு உரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது. உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பின்படி, தமிழ் ஈழம் சிவக்கிறது என்ற இந்த நூலில், தமிழ் ஈழம் என்ற கொள்கை வலியுறுத்தப்படுவதாகவும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக இருப்பதால், இந்த நூலின் கருத்துகள், அந்த இயக்கத்திற்கு ஆதரவான மனப்பான்மையை மக்கள் மனங்களில் ஏற்படுத்தும் என்றும், அது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என்றும், ஆகவே,  நெடுமாறன் அவர்கள் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு மட்டும் அல்லாமல், காவல்துறையினர் பொறுப்பில் உள்ள புத்தகங்களை உடனே அழிக்க வேண்டும் என்றும், நீதித்துறை வரலாற்றில் இல்லாத ஒரு அதிர்ச்சி தரத்தக்கத் தீர்ப்பைத் தந்துள்ளார்.

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதற்காக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொடாவில் நான் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்தியச் சிறையில் 19 மாதங்கள் அடைக்கப்பட்டு இருந்தேன்.

தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் அல்ல என்ற கருத்தைப் பதிவு செய்து நீதி வழங்குமாறு, சிறையில் இருந்தவாறு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன்.  நீதியரசர் ராஜேந்திர பாபு, நீதியரசர் மாத்தூர் ஆகியோர், என்னுடைய ரிட் மனுவை ஏற்றுக்கொண்டு, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது, பொடா சட்டப் பிரிவுகளின் கீழ் வராது என்று, கருத்து உரிமைக்குக் காப்பு உரிமை தந்து, தீர்ப்பு அளித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை உதறி எறிந்துவிட்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளாரா?

தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதால், இந்திய இறையாண்மைக்கு எந்த ஆபத்தும் கிடையாது.

விடுதலைப்புலிகள் மீதான தடையே செல்லாது என்று நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துப் போராடி வருகிறேன்.

திரு நெடுமாறன் அவர்கள் எழுதிய நூலில், இந்திய இலங்கை ஒப்பந்தம், ஈழத்தமிழர்களுக்கு எதிரானது என்பதையும், துளிநீரும் பருகாமல் 12 நாள்கள் அறப்போர் நடத்திய திலீபன்  1987 செப்டெம்பர் 26 இல் உயிர்நீத்த தியாகத்தில் இருந்து, 1992 ஆம் ஆண்டு ஜனவரியில், பன்னாட்டுக் கடல் பரப்பில், விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டு, இந்தியக் கடற்படையினரால் சாகடிக்கப்பட்டது வரையிலான துயர நிகழ்வுகளையும், ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் பட்டியல் இட்டுள்ளார்.

இதில் தவறு ஏதும் இல்லை.

அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்குச் சென்ற இந்திய இராணுவம், ஆயுதம் ஏந்தாத தமிழர்களை ஆயிரக்கணக்கில் படுகொலை செய்தது; தமிழ் மக்களுக்கு எதிராகப் பல கொடுமைகள் செய்தது எல்லாம், அந்தக் காலகட்டத்தில் ஆதாரங்களோடு வெளிவந்தன. அதனால்தான், 1990 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள், இலங்கையில் இருந்து திரும்பி வந்த இந்திய இராணுவத்தை வரவேற்கச் செல்ல மாட்டேன்; என் சகோதரத் தமிழர்களைப் படுகொலை செய்த இந்திய இராணுவத்தை எப்படி வரவேற்பேன்? என்று கேட்டார்.

இலங்கையில் இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் அவர்கள், ஓய்வு பெற்றதற்குப் பின்னர், Intervention in Sri Lanka:The IPKF experience retold இலங்கையில் இந்திய அமைதிப்படை அனுபவங்கள்; இலங்கையில் தலையீடு என்ற தலைப்பில் எழுதிய நூலில், விடுதலைப்புலிகளைப் பாராட்டி உள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்திய அரசு சுட்டுக்கொல்லும்படிச் சொன்னதாகவும், அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நூல் தடை செய்யப்படவில்லை. தளபதி ஹர்கிரத் சிங் இன்றைக்கும் உயிரோடு இருக்கின்றார்.

இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதியரசர் தாமஸ், நீதியரசர் வாத்வா, நீதியரசர் தாத்ரி மூவரும், இந்திய அமைதிப்படை, இலங்கையில் தமிழர்களுக்கு அராஜகம் புரிந்தது என்றே தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

உண்மை இவ்வாறு இருக்கின்ற நிலையில், தமிழ் ஈழத்தைப் பற்றிப் பேசவோ, எழுதவோ கூடாது என ஒரு தீர்ப்பு வருகிறது என்றால், அது தமிழ்நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பா? அல்லது ராஜபக்சே ஆட்சிக்காலத்துச் சிங்கள நீதிமன்றத்தின் தீர்ப்பா? என்ற கேள்வி, தமிழர்களின் மனங்களில் விஸ்வரூபமாக எழுகின்றது.

புத்தகங்களைத் திருப்பித் தருவதா? கூடாதா? என்ற நிலை எடுக்க வேண்டிய வழக்கில், புத்தகங்களை அடியோடு அழிக்கச் சொன்னது, இந்திய நீதிமன்றங்களின் வரலாற்றில் இதுவரை கேள்விப்படாத ஒன்று. அப்படியானால், தளபதி ஹர்கிரத் சிங் எழுதிய புத்தகத்தை, இந்திய அரசு அழிக்கச் சொல்லுமா?

இலங்கையில் உள்ள தமிழ் ஈழ மக்களுக்கு சுதந்திரத் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று, 1976 மே 14 இல், தமிழர் தந்தை செல்வா அவர்கள் வட்டுக்கோட்டையில் பிரகடனம் செய்யப்பட்டது. 

சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற கருத்து, கோடிக்கணக்கான தமிழர்களின் மனங்களில் வரையப்பட்டு விட்டது. அதனை எந்தத் தீர்ப்பும் அழித்துவிட முடியாது.

ஈழத்தமிழர்களின் உரிமைக்காக, முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தங்கள் உயிரை, பற்றி எரிந்த நெருப்புக்குத் தாரை வார்த்தனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டனர்.  இந்தத் தீர்ப்புகளால், தமிழ் ஈழ விடுதலை உணர்ச்சியைத் தமிழகத்தில் பரப்புவதைத் தடுத்துவிட முடியாது.

எனினும், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வார்கள் என்று கருதுகின்றேன். நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை – 8
15.11.2018.

- - - -

பழ. நெடுமாறன் எழுதிய " தமிழ் ஈழம் சிவக்கிறது"எனும் நூலுக்காக 2002ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப் பெற்றார். நூல்கள் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பெற்றது. வழக்கு நடைபெற்றது.2006 ல் இவ் வழக்கைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது. இந்நிலையில் தற்போது இந்நூல்களை அழித்து விடுமாறு சென்னை உயர் நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.ஜனநாயகப்  பண்பின்  அடிப்படை உணர்வுகளான சித்திக்கும், கருத்து தெரிவிக்கும், விவாதிக்கும் உரிமை சார்ந்தது கருத்துச் செயற்பாடு. கடந்த காலங்களில் படைப்பாளர் சுதந்திரம் சார்ந்து நேர்ந்த தளைகளை நீதி மன்றங்கள் தலையிட்டு நீக்கி ,கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றி உள்ளன. எனவே மேற்படி ஆணையை மாண்பமை நீதி மன்றம் மறு ஆய்வு செய்து, படைப்புச் சுதந்திரம் காத்திட வேண்டுகிறோம்.

மாநிலத் தலைவர் சி.சொக்கலிங்கம்,
பொதுச் செயலாளர் இரா.காமராசு,
பொருளாளர் ப.பா. இரமணி.

- - -

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய 'தமிழீழம் சிவக்கிறது' என்ற நூலின் படிகளை அழித்துவிட வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும் அந்தத் தடையை அரசு நீட்டித்துக் கொண்டே வந்திருக்கிறது என்றும், அதற்கு ஆதரவான புத்தகம் மக்களிடையே செல்வது குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும் கூறி, ஏற்கனவே அந்தப் புத்தகத்தை அவரிடம் ஒப்படைக்க இயலாது என்று கீழ்நிலை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அங்கீகரித்ததுடன், ஒரு படி மேலே சென்று காவல்துறையினர் தங்களிடம் உள்ள அந்தப் புத்தகத்தின் படிகளையே அழித்து விட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

2002ஆம் ஆண்டில் அந்தப் புத்தகப் படிகள் அவரிடமிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. ஆயினும் 2006ஆம் ஆண்டில் அந்த வழக்கை தமிழக அரசு விலக்கிக் கொண்டது. ஆனால் புத்தகங்கள் திருப்பித் தரப்படவில்லை. வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டதைக் காட்டி புத்தகப் படிகளைத் திரும்ப ஒப்படைக்கக் கோரி அவர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் மேற்கூறிய காரணங்களைக் கூறி புத்தகங்களைத் திருப்பித்தர ஆணையிட முடியாது என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து நெடுமாறன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் மேற்கண்டவாறு புத்தகப்  படிகளை அழிக்க ஆணையிட்டுளளது.

குறிப்பிட்ட புத்தகத்தின் உள்ளடக்கத்தில் எவரும் கருத்து வேறுபாடு கொள்ளலாம். அரசாங்கத்திற்கும் அந்த புத்தகத்துடன் உடன்பாடு இல்லாமல் போகலாம். புத்தகத்தின்  செய்திக்கு எதிரான கருத்துகளை மக்களிடையே வலுவாகச் சொல்வதற்கான அனைத்து சட்டபூர்வ வசதிகளும் அரசுக்கு இருக்கிறது. ஆனால் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதையே மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் தடுப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

கடந்த காலத்தில் இவ்வாறு பல்வேறு புத்தகங்கள் மீதான தடை நடவடிக்கைகள் வந்தபோதெல்லாம் நீதிமன்றத்தின் துணையோடுதான் அந்தப் புத்தகங்கள் மக்களைச் சென்றடைந்தன. இப்போதோ, ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகப் படிகளை அடையாளமின்றி அழித்துவிட வேண்டும் என்பது கருத்துச் சுதந்திரத்தின் மீது அண்மைக்காலமாக அரசு எந்திரமும் சில அமைப்புகளும் தொடுத்து வருகிற தாக்குதல்களுக்கு வலுச்சேர்ப்பதாக வந்துள்ளது.

உயர் நீதிமன்றம் தனது ஆணையை மறுஆய்வு செய்ய வேண்டும் வேண்டும் என்று தமுஎகச கோருகிறது.
*
- சு.வெங்கடேசன்
மாநிலத்தலைவர்,
ஆதவன் தீட்சண்யா
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் கலைஞர்கள்
சங்கம்.
15-11-2018

வியாழன், 15 நவம்பர், 2018

செம்பச்சை: கருத்தியலும் அரசியலும்:- சுப.உதயகுமாரன் நேர்காணல்

கேள்வி--பதில்:
இருட்டில் உழலும் தமிழினம் இனி என்ன செய்ய வேண்டும்?

[1] தமிழினத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலை என்ன?

ஈழ எழுத்தாளர் நிலாந்தன் 2005-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றை ஓவியர் புகழேந்தி தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கட்டுரையின் வருங்காலம் பற்றிய சில அலசல்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகளும், இடது சாரிகளும், ஈழத்தமிழர்களை கைவிட்டுவிட்டன. சக்தியற்ற சிறிய கட்சிகளும், சிற்றியக்கங்களும், தலித் இயக்கங்களும்தான் ஈழப் பிரச்சினையில் ஆர்வம் கொண்டுள்ளன. எனவே தமிழ்நாடு ஈழ மக்களின் பின்தளமாக இல்லை என்று டில்லி கொள்கை வகுப்பாளர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர். “தனது உபகண்டப் பெருங்கலாச்சாரத்தின் ‘ஒரு கூறாகக்’ காணப்படுகின்ற; சிறிய ஆனால் புரிந்து கொள்ளக் கடினமான, வீரமிக்க ஒரு சனத்திரளைத் தொடர்ந்தும் வன்மத்தோடும் ‘பெரிய இந்தியா’ என்ற ஆணவத்தோடும் டில்லியிலுள்ள கொள்கை வகுப்பாளர்கள் அணுகமுயலும்” அரசியல் சூழலை அழகாகக் கோடிட்டுக் காட்டுகிறார் நிலாந்தன். சுருக்கமாகச் சொன்னால், தில்லியைப் பொறுத்தவரை, ஈழம் ஒரு பிரச்சினை அல்ல, தமிழகம் ஒரு பொருட்டேயல்ல.

[2] தமிழகத்தின் அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது?

தமிழினம் தமிழகத்திலுள்ள ஊழல்மிக்க, தன்னலவாத பெரிய கட்சிகளை, அவற்றின் தலைவர்களை உதறித் தள்ள வேண்டும். பெரும் ஊழல்களிலும், மோசமான வழக்குகளிலும் சிக்கி, திறமையான வழித்தோன்றல்களை உருவாக்கத் தவறி, எந்தவிதமான கொள்கைப் பிடிப்புமின்றி, வருங்கால இலக்குகளுமின்றி தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் அவர்களின் சாயம் வெளுக்கத் துவங்கிவிட்டது. டில்லி கொள்கை வகுப்பாளர்களின் கைகளில் சிக்கிய கைப்பாவைகள் போலவே அவர்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் வாய்ப்பந்தல் போட்டே, நம் வாழ்வை அழித்தவர்கள் இவர்கள். பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் தமிழக அரசியலில் ஒரு பொருட்டேயல்ல என்பதுதான் உண்மை. 

தமிழகத்தில் உருப்பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் வெற்றுப்பேச்சும், வாய்ச்சொல் வீரமும், வெறுப்பு மற்றும் ஆணவம் கொப்பளிக்கும் பாசிச அணுகுமுறையும், உத்திகளற்ற செயல்பாடும் கொண்ட வலதுசாரி தமிழ்த் தேசியம் கறிக்கு உதவாது. முற்போக்குச் சிந்தனையும், முரணில்லாக் கொள்கைகளும், செம்பச்சை (Red Green) விழுமியமும் கொண்ட மிதவாத தமிழ்த் தேசியம்தான் மாற்று. சமூக நீதியும், சமத்துவமும் கோலோச்சும்; மக்கள் அறிவியலை, தக்க தொழிற்நுட்பத்தை, நீடித்த நிலைத்த வளர்ச்சியை, இயற்கை வாழ்வாதாரங்களைப் பேணும் கலப்புப் பொருளாதாரம் செழித்தோங்கும்; மனித உரிமைகளும், அடிப்படைச் சுதந்திரங்களும், மனித மாண்பும் தழைத்தோங்கும் ஏற்பாட்டைத்தான் செம்பச்சைக் (Red Green) கொள்கையாய் ஏற்கிறோம். தமிழ்த் தேசிய வேரூன்றி, மனிதநேய கிளைபரப்பி, ஒரு மரம்போல் வாழ மனங்கொள்வோம்.

[3] சிங்களப் பேரினவாதத்தின் நிலைப்பாடு என்ன?

சிங்களப் பேரினவாதம் தனக்கே உரிய நரித்தனத்தோடு சீனாவின் வலிமையை, தோழமையைக் காட்டி டில்லி கொள்கை வகுப்பாளர்களை தன்வயப்படுத்தி வைத்திருக்கிறது. சிங்கள வெறியர்கள் கடுகளவும் இந்தியாவை விரும்பவுமில்லை, நம்பவுமில்லை, மதிக்கவுமில்லை. இது இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்குப் புரியவில்லை. இந்தியாவைக் காட்டி சீனாவிடமிருந்தும், சீனாவைக் காட்டி இந்தியாவிடமிருந்தும் கறந்து கொண்டிருக்கிறார்கள் சிங்களவர்கள். இந்தியாவும் சீனாவும் ஒன்று சேரும் வாய்ப்போ, தன்னை இனம்கண்டு கொள்ளும் நிலையோ வராது என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும். ஈழத் தமிழர்களையும், தமிழ் மீனவர்களையும் தொடர்ந்து அச்சுறுத்துவார்கள்.

[4] அப்படியானால் தமிழினத்தின் நம்பிக்கை நட்சத்திரம்தான் எது?

பல ஐரோப்பிய நாடுகளில் குடியேறத் துவங்கிய ஈழத்து இளைஞர்களை நேரில் சந்தித்து, சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு 1987 ஏப்ரல் தேதியிட்ட “தமிழ் உலகம்” இதழில் “அன்னிய மண்ணில் அகதிகளாய்” எனும் தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். “கடினமாக உழைத்து கண்ணியமாகவே இருப்பதனால், மேலை நாட்டு மக்கள் இவர்களிடம் வெறுப்புக் காட்டவோ அல்லது இவர்களை வேறுபடுத்திப் பார்ப்பதோ இல்லை. ...ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு சீரான அரசியல் ரீதியில் இவர்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை” என்ற எனது ஆதங்கத்தை வெளியிட்டேன். ஆனால் இன்றைய நிலைமை பெருமளவு மாறிவிட்டிருக்கிறது. அதை இன்னும் மாற்ற வேண்டும்.

ஈழத் தமிழர்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளில் காலூன்றி விட்டார்கள். ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகள் புலம்பெயர் தமிழர்களை ஓர் அரிய வாய்ப்பாகப் பார்க்கின்றனர். நிலாந்தன் துல்லியமாக அறிவிக்கிறார்: “உழைப்பார்வமும் படிப்பில் வெறியும் சேமிப்பில் வெறியுமுடைய விவேகமும் வீச்சுழியும் மிக்க ஒரு தனித்தினுசான புலம்பெயர் சனத்திரளைத் தன்வயப்படுத்துவதன் மூலம் இந்த [தெற்காசிய]ப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் தமக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உருவாகிவருவதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் நம்புகின்றன.” அமெரிக்காவிலுள்ள செல்வாக்குமிக்க ஐரிஷ், யூத சமூகங்களைப் போல, அரசியல் அபிப்பிராயங்களை உருவாக்கவல்ல, அரசியல் அழுத்தங்களைப் பிரயோகிக்கவல்ல ஒரு சனத்திரளாக ஈழத் தமிழர்கள் உருவாகலாம் என்றும் நினைக்கிறார் நிலாந்தன். புலம்பெயர் தமிழர்கள் நிச்சயமாக நமது நம்பிக்கை நட்சத்திரங்கள். அதே போல, உலகெங்கும் பரந்து வியாபித்திருக்கும் தமிழ் மக்கள் தமிழகத்தோடும், தமிழகம் அவர்களோடும் சமூக-பொருளாதார-அரசியல்-கலாச்சாரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதும், தொடர்வதும் மிகவும் அவசியம்.

[5] புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

புலம்பெயர் தமிழர்கள் தங்களை இன்னும் இறுக்கமாக, இணக்கமாக கட்டமைத்துக் கொள்ளவேண்டும். தமிழீழத்திலும், தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் போன்ற பிற நாடுகளிலுமுள்ள தமிழ் இளைஞர்கள் மேம்பாட்டுக்கு, முன்னேற்றத்துக்கு ஆவன அனைத்தும் செய்ய வேண்டும். திறமைமிக்க, பொருளாதார சக்தி கொண்ட, அரசியல் பின்புலமுள்ள ஒரு சர்வதேசக் குமுகமாக நாம் உருப்பெற உதவ வேண்டும். கனடியத் தமிழர் தேசிய அவை (National Council of Canadian Tamils), அமெரிக்காவில் இயங்கும் உலகத் தமிழர் அமைப்பு (World Tamil Organization), நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Government of Tamil Eelam) போன்ற அமைப்புக்கள் இன்னும் பல்கிப் பெருக வேண்டும், பலம் பெற வேண்டும், படையணிகளாய் ஒன்றுதிரள வேண்டும்.

[6] சர்வதேச அரசியலை தமிழினம் எப்படி எதிர்கொள்வது?

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான அவநம்பிக்கை, பகைமை, போட்டி போன்றவற்றை பயன்படுத்தி மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, இந்தியாவோடு நெருங்கிக் கொண்டிருக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் “அகலாது, அணுகாது தீக்காய்வார் போல்” மேற்கத்திய நாடுகளிடம் நட்பு பாராட்டி இந்தியாவைக் கையாளவேண்டும். சீனா உரிமை கொண்டாடும் திபெத், தைவான் போன்ற பகுதிகளின் மக்களோடும், சீனாவை ஐயுறும் பிற தெற்காசிய நாடுகளோடும் நாம் தொடர்பைப் பேண வேண்டும். இந்தியப் பெருங்கடலைச் சுற்றி முத்து மாலை (String of Pearls) ஒன்றைக் கட்டியமைக்க சீனா முயலும்போது, அதில் ஒரு முத்தையாவது நம்மால் உடைத்துக்காட்ட முடியும் என்பதை உணரச் செய்ய வேண்டும். நாம் வல்லாதிக்கக் கனவுகள் கொண்ட குமுகமல்ல; ஆனால் யாருக்கும் அடிமையாக வாழவும் மாட்டோம்.

[7] தமிழினத்தின் அரசியல் இலக்கு என்ன?

நமது வாழ்வுக்காக, வாழ்வுரிமைகளுக்காக, வாழ்வாதாரங்களுக்காக, வருங்காலத்துக்காக, வரவிருக்கும் சந்ததிகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தையும், தமிழீழத்தையும் பெயர்த்து எடுத்துக்கொண்டு, ஆஸ்திரேலியாவுக்கு அந்தப்பக்கமா போகப் போகிறோம்? இல்லை! கேரள, கன்னட, ஆந்திர, சிங்கள மக்களருகேதான் வாழப்போகிறோம். அவர்கள் நம்மை மதித்து, விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் ஓரடி எடுத்துவைத்தால், நாம் இரண்டடி எடுத்துவைக்க அணியமாயிருக்கிறோம்.

[8] கேரள, கன்னட, ஆந்திர, சிங்கள மக்கள்தான் நமது பிரச்சினையா?

இல்லை. நமது முக்கிய பிரச்சினை நாமேதான். நமது சமூக—கலாச்சாரத் தளங்களில் பெரும் மாற்றங்கள் கொண்டுவந்தாக வேண்டும். யார் கொண்டு வருவது? எந்தப் புனிதரோ, தேவதூதரோ கொண்டுவரப் போவதில்லை. நாமேதான் கொண்டுவர வேண்டும். மொத்தத் தமிழினமும் மாறட்டும், நான் உடனே மாறிவிடுகிறேன் என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நிலைப்பாடு. நாம் ஒவ்வொருவரும் உடனே மாறினால், தமிழினம் ஒரே நாளில் மாறி விடும்.

[] சாதி, மத அடையாளங்களைப் புறந்தள்ளி, தமிழராய் நம்மை, நம்மவரை பார்க்கப் பழக வேண்டும். சிறுபான்மையினர், தலித் மக்கள் உரிமைகள், நலன் காக்கும் வழிவகை செய்ய வேண்டும்.
[] கல்வியறிவை, புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை, சமூக-அரசியல் விழிப்புணர்வை, சுற்றுச்சூழல் அறிவை வளர்க்க வேண்டும்.
[] பெண்களுக்கு கல்வியும், முக்கியத்துவமும், பாதுகாப்பும் கொடுத்து, குடும்பங்களை, சமூக உறவுகளைப் பேணியாக வேண்டும்.
[] தமிழ் ஆண்களை, தமிழ்க் குடும்பங்களை சிதைத்துக் கொண்டிருக்கும், மது அரக்கனை அழித்தேயாக வேண்டும்.
[] சினிமா, சின்னத்திரை போன்றவற்றைப் புறந்தள்ளி, நுண்கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
[] பணம் ஒன்றுதான் வாழ்க்கையின் குறிக்கோள், வெற்றியின் அளவுகோல் என்பதை விட்டொழிக்க வேண்டும்.
[] நமது வரலாறு, இலக்கியம், கலாச்சாரம், நிறைகுறைகள் பற்றித் தெரிந்து, எதிர்மறை எண்ணங்களை, அணுகுமுறைகளைக் கைவிட்டு, உயர்ந்த சிந்தனைகளை, மதிப்பீடுகளை, ஒற்றுமையை வளர்த்தெடுப்போம்.

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
நவம்பர் 17, 2013
கார்த்திகை 1, 2044

ஒளிப்படம் :
நித்தியன்

ஞாயிறு, 11 நவம்பர், 2018

வெட்டுப்பட்ட புளியமரம்: முத்துராசா குமார்

தலையின்றி கை கால்களின்றி
இறைச்சி கடையில்
முண்டமாகி கிடக்கும்
கறிவெட்டும் கட்டை
முன்பு புளியமரமாக
தழைத்திருந்தது

வெள்ளாட்டை வைத்து
வெட்டும் போது
கட்டையிலிருந்து சடச்சடவென
புளியம்பழங்கள்
உதிர்ந்தன

அடுத்தடுத்து வெட்டுகையில்
கூடுகள்
கொக்கு முட்டைகள்
விழுந்தன

ஒருகட்டத்தில்
தூளியாடிய சிறுவர்களும்
குதித்தனர்

ஞாயிறு காலையின் கூட்டத்தில்
ஒவ்வொரு வெட்டுக்கும்
எல்லாமும் சேர்ந்து
கிளைகளை உலுப்பின

கடுப்பான கடைக்காரர்
உதிர்ந்ததை
விழுந்ததை
குதித்ததை
மொத்தமாக வெட்டி
கறிகளோடு கலந்து கைமாற்றிவிட்டு கட்டையைத் தூக்கி வீதியில் வீசினார்

வாசலிலேயே காத்துக்கிடந்த
ஆணியடி வாங்கிய முனிகள்
வெட்டுக்காயங்களோடு வந்து விழுந்த
புளியமரத்தை தாங்கிப் பிடித்து
கூட்டிச் சென்றன

எந்த நாய்களும் குரைக்கவில்லை.

- முத்துராசா குமார்

சனி, 10 நவம்பர், 2018

அம்மாச்சி :- முத்துராசா குமார்.


வயக்காட்டில் ஊன்றினால்
நல்லதென்று எரிந்து தணிந்த சொக்கப்பனையிலிருந்து
பனங்கருக்கை பிடுங்கி வந்திருந்தாள்
அம்மாச்சி.

அவள் வருவதற்குள்
மொசைக்கி கற்களால்
பூசப்பட்டிருந்தது வயக்காடு.

தலைவிரிக்கோலத்தில்
கருக்கோடு நடந்தவள்
எத்திசையில் அலைகிறாள் என்று
இன்றுவரைத் தெரியவில்லை.

உடலைவிட பெரிய வாய்கள் கொண்ட
கதிரறுக்கும் எந்திரங்கள்
கொலைப்பசியில் ஊரையே
வேட்டையாடத் தொடங்கின.

முன்னொரு காலத்தில்
மிச்சம் விடப்பட்ட அடிக்கதிரின்
பின்னால் மறைந்திருந்த என்னை
அவைகளின் கண்கள் கண்டுகொண்டு
அருகே வந்து வாய் பிளந்தன.

'சடைப்பிடித்த நெற்களோடு
சாய்ந்து கிடக்கும் கதிர்கள் நானல்ல' என்று கண்ணீரும் சிறுநீரும் வழிய கெஞ்சுகையில்
ஊட பாய்ந்து பனங்கருக்கால்
எந்திரங்களை சங்கறுத்து விட்டு
திரும்பாமல் நடந்தாள் அம்மாச்சி.

(அக்டோபர் மாத 'நடுகல்' இதழில் வெளிவந்த கவிதை)
நன்றி: Pon Muthu

புதன், 7 நவம்பர், 2018

முசிறி: தென்னகத்தின் மொகன்சோதாரோ :- கண. குறிஞ்சி.

கேரளத்திலுள்ள "துறை கடந்த தொல்லியல் அறிவியல் முன்னேற்றத்திற்கான நிறுவனம்" எனும் அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றும் மூத்த தொல்லியல் ஆய்வாளர் பி.ஜே.செரியன், தமிழகத்தின் துறைமுகப் பட்டணமாகிய முசிறி குறித்து ( கி.மு.  300 முதல் கி.மு. 500 வரை ) அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள், தமிழகத்தின் தொன்மையை நன்கு பறை சாற்றுகின்றன.

சங்க காலத்தின் பண்பாட்டு முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, தமிழகத்திலுள்ள இடங்களை மீண்டும் கண்டறிய முயற்சிப்பதாகச் செரியன் குறிப்பிட்டார். அந்த வகையில்  பட்டணம் பகுதியில் 2007 ஆம் ஆண்டில் அவர் அகழாய்வு நடத்தினார்.

முசிரிஸ் எனும் பழங்காலத் துறைமுகத்தின் ஒரு பகுதியாகப் பட்டணம் பகுதி இருந்திருக்கக் கூடும் என்பது அவரது கருத்தாக உள்ளது. பட்டணம் பகுதியில் சிறு அளவுதான் அவர் அகழ்ந்து பார்த்தார். இருப்பினும் அங்கு பெற்ற ஆதாரங்கள், தமிழகத்தின் சங்ககாலப் பகுதிகளோடு பட்டணம் பகுதிக்குத் தொடர்பு இருந்ததை உணர்த்தின.

"பழைய வணிகத் துறைமுகமாகிய
முசிறிஸ் / முசிறிப் பட்டணத்தின் உள்ளடங்கிய பகுதியாகப் பட்டணம் இருந்திருக்க வேண்டும். முசிறிப் பட்டணத்தை "முசிறிஸ்"  என  உரோமானியர்கள் அழைத்தாகச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

கடல் கடந்த வணிக மையமாக இருந்ததால், இப்பகுதி குறித்து இந்திய மற்றும் ஐரோப்பியச் செவ்வியல் இலக்கியங்களில் அதிக அளவு குறிப்புகள் காணப்படுகின்றன.

முசிறியின் ஓர் அங்கமாகப் பட்டணம் பகுதி இருந்ததற்கான தரவுகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அப்படிப் பார்த்தால், பட்டணம் பகுதிதான் தென்னிந்தியாவின் மொகன்சோ தாரோவாக இருந்திருக்க வேண்டும்.

மேலும் இன்றைய தமிழ்நாட்டின் புராதனப் பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் பெரிய அளவிலான தொடர்புகள் இருந்துள்ளன.

இன்றைய கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் பகுதிகள், கேரளத்தின் பட்டணத்தோடும், தமிழகத்திலுள்ள  கொடுமணல், அரிக்கமேடு, வீரம்பட்டினம் மற்றும் காவேரிப்பட்டினம் பகுதிகளோடும் பெருமளவு இணைப்பில் இருந்துள்ளன.

சில பகுதிகள் " பட்டணம் " என்ற பெயரைக் கொண்டுள்ளது, அவைகளுக்கு இடையே உறவு இருந்ததைத் தெளிவாக்குகிறது.

இது ஏதோ இரண்டு அல்லது மூன்று மாநிலங்களோடு குறுகி விடவில்லை. கருத்துக்களும், நம்பிக்கைகளும் கடல் கடந்தும் பகிரப்பட்டன.

உரோமானியர்கள், அராபியர்கள் மற்றும் கிருத்துவர்கள் எனக் கண்டங்கள் கடந்து  இணைப்புகள் இருந்தன " என ஆய்வாளர் செரியன் குறிப்பிடுகிறார்.

மேலும் தமிழகத்திலுள்ள சில பகுதிகளும், பட்டணம் பகுதியும் பல்வேறு பண்பாடுகளும், நம்பிக்கைகளும்  இணக்கமாக இருந்த புகழ் பெற்ற இடங்களாக இருந்துள்ளன.
தமிழ்நாட்டின் சில பகுதிகளும், பட்டணம் பகுதியும் அப்படிச் சிறந்து விளங்கியதற்கான பெளதீகச் சான்றுகள் போதிய அளவு  தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெளிவு படுத்துகிறார்.

"தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோண்டப் பட்ட  40 தொல்லியல் அகழாய்வுகளில், குறைந்தது  20 இடங்களாவது சங்க கால கட்டத்தில் இருந்திருக்கக் கூடும்.

கொடுமணல், அரிக்கமேடு மற்றும் அண்மையில் அகழப்பட்ட  கீழடி ஆகிய பகுதிகள், கேரளத்தின் பெரியாறு ஆற்றங்கரையிலுள்ள பட்டணம் எனும் பகுதியோடு பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்தது. இந்தப் பட்டணம் பகுதி, தென் சீனத்திலிருந்து ஜிப்ரால்டர் வரையிலும் இருந்த 40 துறைமுகப் பகுதிகளோடு தொடர்பில் இருந்தமைக்கான பெளதீகச் சான்றுகள் உள்ளன.

வரலாற்றிலேயே இந்தக் காலகட்டத்தில்
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வேறுபட்ட கண்டங்களின் ஒரு துறைமுகத்திலிருந்து மற்றொரு துறைமுகத்திற்கு முதல் முறையாக மக்கள் பயணங்களை மேற்கொண்டனர்" என்ற அவரது கருத்து,  தமிழ்நாட்டின் தொன்மைக்குச் சான்றாக விளங்குகிறது.

"நீச மொழிக்கு இவ்வளவு சிறப்பா?" என சமஸ்கிருதவாதிகள் பொறாமையால் புழுங்கக் கூடும். என்ன செய்வது?

சூரியனைக் குடை கொண்டு மறைத்து விட முடியாதே?