வியாழன், 11 ஜனவரி, 2024

ஈழத்தின் வலியை, மொழியில் பதிவு செய்திருக்கும் குருதி வழியும் பாடல்: கிருசுண மூர்த்தி


அ.சி.விஜிதரன் அவர்களின் "குருதி வழியும் பாடல்" நூல் குறித்து...

தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்குமான தொடர்பு ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது. சங்கப் பாடல்களிலேயே அதற்கான சான்றுகள் விரவிக்கிடக்கின்றன. தமிழ் நவீன இலக்கியம் வரை இந்தத்தொடர்பு அறுபடவில்லை.

ஈழத்து மகாகவி உத்திரமூர்த்தி, வில்வரத்னம், சிவரமணி, ஆழியாள், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்நதி, அவ்வை எனத் தொடரும் ஈழத்து நவீனக் கவிதை மரபில் சமீபத்தில் இணைந்திருப்பவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் தோழர் அ.சி.விஜிதரன்.

ஏதிலி என்ற நாவலின் வழி தமிழ் இலக்கியத்தில் அழுத்தமான இடம்பிடித்த அ.சி.விஜிதரன் "குருதி வழியும் பாடல்" தொகுப்பின் மூலம் தேர்ந்த மொழிவளம் கைவரப்பெற்ற அரசியல் புரிதலுள்ள கவிஞராகவும் மிளிர்கிறார்.

இதுவரை நாம் அறிந்த ஈழத்துக் கவிதைகள் என்பவை விடுதலையைக் கோருபவையாக,அகதியாக்கப்படுவதின் வலியை சொல்வதாக, சிங்கள ராணுவத்தின் அநியாயங்களை சொல்வதாக, போரை விதந்தோதுவதாக, வீரத்தை மண்ணுக்கே உரியதாக மட்டுமே இருந்த சூழலில், ஏதிலிகளாக அதாவது சட்ட விரோதக் குடியேறிகள் எனும் பெயரில் புலம்பெயர் நாட்டில் படும் வலிகளை முதன்மைப்படுத்தும் பதிவாக குருதி வலியும் பாடல் தொகுப்பு அமைகிறது.

இந்திய ஒன்றிய அரசு சொல்லிக்கொண்டிருக்கும் அகதிகள் பட்டியலில் கூட ஈழமக்கள் கிடையாது என்பதையும் ஒரு பாகிஸ்தானியோ, வங்கத்தேசத்தவரோ இந்தியாவிற்குள் அகதியாக பதிவு செய்ய வாய்ப்புள்ள சூழலில் ஈழத்தவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாக மட்டுமே பதிவு செய்யப்படுகிறார்கள் என்கிற அரசியல் அவலத்தைத் தொகுப்பு முதன்மையாக ஆவணப்படுத்துகிறது.

இன்றைக்கும் தமிழ்ச் சமூகத்தில் புராணக் தைகளைத் தூசி தட்டி அவை யாருக்கான ஆதரவுக் கருத்தியலைக் கொண்டிருக்கின்றன என்று பாராமல் தலையணை தலையணையாக வெளியிட்டு அவை மொழிக்கு வளம் சேர்ப்பதாகவும், மீட்டுருவாக்கம் செய்வதாகவும் சொல்லி இளம்தலைமுறைக்கு வர்க்கப் போராட்ட அரசியல் நீக்கம் செய்துகொண்டிருக்கும் மேதாவிகளுக்கு மத்தியில்தான் தோழர் அ.சி.விஜிதரன்,

" புராணக் கதைகள் என்றால் எவன் கால் பட்டாவது சாபம் நீங்கும் எனலாம். ஆனால், புதைக்கப்படும் நிலம் கூட சொந்தமில்லாமல் மக்கள் சபிக்கப்பட்டதை எப்படிச் சொல்ல" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஏதிலிகளின் வலியைக் கடத்திவிடுகிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஈழ அரசியல் என்பது உணர்ச்சிப்பூர்வமானது. இங்கே ஒரு தலைமுறையே ஈழத்திற்காக உயிர்த்தியாகம் செய்து தொப்புள்கொடி பேசிய வரலாறு உணர்வுபூர்வமாக உண்மையாக இருந்த அதே வேளையில் ஈழ வியாபாரம் செய்தவர்களையும் நாம் கண்டுகொண்டிருக்கிறோம்.

விஜிதரனின் கவிதைகள் எல்லோரையும் குற்றவுணர்வுக்கு ஆளாக்கி சிந்திக்க வைக்க முயற்சிக்கிறது,ரௌத்திரம் தெறிக்கிறது .இயற்கையின் அழகியலை, பூனைக்குட்டிகளை, கூரையில் படர்ந்திருக்கும் பரங்கிப்பூவை ரசித்து எழுதும் ஒருவகை தமிழ்க் கவிதைக் குழுக்களிலிருந்து காத தூரம் விலகி நிற்கிறார் விஜிதரன்.

"இருண்ட காலத்தில் பாடல்கள் இருக்குமா? இருக்கும். இருண்டகாலத்தைப் பற்றிய பாடல்கள் இருக்கும்" என்று தமிழ் முற்போக்கு மேடைகளில் அதிகம் ஒலித்த ஆப்பிரிக்கக் குரலாக பல கவிதைகளை அகதி முகாம் வாழ்க்கை பற்றி எழுதுகிறார் விஜிதரன். எழுத்துப்பிழையாக நினைக்காமலிருக்க ஒரு கவிதையில்,

" சத்தமில்லாக்
கலவி கற்றோர்
பேறு பெற்றோர்"

ஈழத்தமிழர் குடியறுப்பு" என்று முடிக்கிறார்.

இதன்வழியாக சட்டவிரோதக் குடியேறிகளாக அல்லல்படும் முகாம் தமிழர்களின் வாழ்வியலை அம்பலப்படுத்துகிறார்.

தமிழினம் அகதியாகச் சென்றாலும் தூக்கியெறியாமல் சுமந்துசெல்லும் சாபக்கேடுகளுள் ஒன்றான சாதியை ஈழத்தமிழர்களும் விடவில்லை என்பது குறித்து பல்வேறு புனைவுகளைப் பார்த்துள்ளோம் இவரும் சொல்கிறார்,

" எளிய நாயே 
கண்ட கண்ட 
தோட்டக்காட்டோனோடு பழகுவியோ முதல் முறையாய்
 அப்பாவின் முகம் முன்னால் நின்று சொன்னேன் அந்தத் தோட்டக்காட்டான் நாட்டில் தான் 
இப்ப நீ அகதி"

தமிழ்நாட்டில் பலருக்கு ஈழத்தமிழர்கள் குறித்தும்,மலையகத் தமிழர்கள் குறித்தும் புரிதல் இல்லாத சூழலில் மேற்கண்ட கவிதையின் வழியாக ஈழத்தின் மக்கள் பிரிவினரையும் வாழ்வியலையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதாக பல கவிதைகள் இருக்கின்றன.

தமிழக முகாம்களில் அரசு அதிகாரிகள் நடந்துகொள்ளும் முறையும்,அவர்களின் வாழ்விடம் குறித்து இந்திய சமூகம் ஒருபொழுதும் புரிந்துகொள்ள வாய்ப்பில்லாத சூழலையும் ,அவர்களுக்குள் துளிர்த்திருக்கும் பகிரமுடியா காதலையும்,இயல்பான வாழ்வியல் சந்தோசங்களுக்கே வாய்ப்பில்லாத புறச் சூழ்நிலையும் ,இருபது வருட முகாம் வாழ்க்கை வாழும் தோழர் இந்திரா முன்னுரையில் கூறியுள்ளது போல

" எப்போதும் பெருமை பேசி
அழிந்த இனம் நாங்கள் 
இனியாவது சொல்ல வேண்டும் எதார்த்தம் என்னவென்று இனியும் இழப்பதற்கு என்ன இருக்கு " 
என்று இருள் கிழிக்கிறார்.

ஈழத்து மாவீரர்தினம் குறித்து பல்வேறு விமர்சனங்களோடு முன்வைக்கும் கவிஞரின் குரலில் உண்மை இருக்கலாம்.மறுப்பதற்கில்லை.ஆனால் பலர் ரத்தம் சிந்தி உருவாக்கிய ஒரு மாபெரும் விடுதலை இயக்கத்தின் வளர்ச்சிப்போக்குகளில் விஜிதரனின் பார்வை மட்டுமே முழுமையானது என்றும் கொள்வதற்கில்லை.இந்த விமர்சனத்தையும் ஏற்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறோம்.

உலகம் முழுதும் பாசிச சக்திகள் ஆதிக்கம் செய்து சிறுபான்மையினரை ஒடுக்கும்போது அவ்வினம் தனது நிலவுடைமைக் கால,சாதிய மேட்டிமைவாத விழுமியங்களை தூக்கியெறிந்திருக்க வேண்டும் அதனை சரிசெய்யாமல் விடுதலையைப் பேசியதில் உள்முரண்கள் கூர்மைப்பட்டு சிறுபான்மையிலும் சிறுபான்மையினர் நசுக்கப்பட்டு துடிக்கின்ற வலியைத்தான் முதன்மை படுத்துகின்றன விஜிதரனின் கவிதைகள்.

ஒட்டுமொத்தமாக விஜிதரனின் மொழி என்பது ஈழத்திலும் ஒருவகை சார்பான மக்களை மட்டும் கருத்தில் கொண்டு நடத்திய போராட்டத்தால் கைவிடப்பட்டு,அகதியாக்கப்பட்ட நிலத்திலும் கண்டுகொள்ளப்படாத எளிய மக்களின் வலியை ஆவணப்படுத்துவதில் முதன்மை பெறுகிறது. அதனைத் தமிழ் இலக்கியம் கூறும் இடக்கரடக்கல் போன்ற எந்த இலக்கணத்திற்கும் உட்படாமல் வலியின் மொழியில் பதிவு செய்திருக்கிறது "குருதி வழியும் பாடல்".

கட்டுரையாளர்:
கிருசுண மூர்த்தி,
கவிஞர் மற்றும் கல்விச் செயல்பாட்டாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், திருவண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக