சனி, 4 நவம்பர், 2023

தமிழ் அறிவு மரபும், அறிஞர் க.நெடுஞ்செழியன் எனும் தனித்துவ மரபும்.

தமிழ் அறிவுச் செயல்பாட்டின் மரபாகவும் நீட்சியாகவும் இருந்து, தமிழ் அடையாள மீட்பின் அறிவுக் கொடையை வழங்கிய ஆய்வறிஞர் க.நெடுஞ்செழியன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் புகழ் வணக்கம்.

அறிஞரின் தமிழ் ஆய்வுப் பண்பு குறித்தும், வாழ்வும் போராட்டமும் குறித்தும் பேராசிரியர்கள் டி.தர்மராஜ், சே.கோச்சடை, ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் ஆகியோரது 3 கட்டுரைகள் ஒருங்கே தரப்பட்டுள்ளன. அய்யாவின் புகழ் நீடு வாழ்க.

ஏர் மகாராசன்

*

1.

அறிஞர் க.நெடுஞ்செழியன் ஆய்வுகளில் கலகக் குணமும் மாற்றுச் சிந்தனை மரபும்.

:பேரா டி.தருமராஜ்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அரிதானவர்.  அதனால், தமிழகத்தில் அறியப்படாதவர். அறிந்திருந்தவர்களும் நெடுஞ்செழியனை நமட்டுச் சிரிப்புடனே கடந்து போனார்கள்.  

இந்த நமட்டலுக்கு நம்மிடம் வரலாறு உண்டு. பாவாணர், பெருஞ்சித்திரனார் என்று பலரின் மீதும் செலுத்தப்பட்ட அசட்டு நமட்டல் இது.  

நெஞ்செழியன், திராவிட சித்தாந்தத்தில் பயின்று வந்தவர். அதன் பிரதானக் காரணிகளாக கடவுள் மறுப்பையும், சாதி எதிர்ப்பையும், தமிழ்ப் பற்றையும் அவர் உருவகித்திருந்தார்.  இது ஒரு வகையில், திராவிடப் பாரம்பரியத்திலிருந்து கிளைத்து வந்த மாற்று மரபு என்று கூட சொல்ல முடியும்.  

சைவ, வைணவ மதக் கட்டுமானங்களை கட்டுடைப்பது என்று மட்டுமல்லாமல், அதன் மாற்று வடிவங்களை யோசித்ததே நெடுஞ்செழியனின் ஆகப்பெரிய பங்களிப்பு.  இத்தகைய மாற்று வடிவ யோசனைகள் இந்தியா முழுமைக்கும் பொதுவானவை என்பது நமக்குத் தெரியும்.  இந்த மாற்று யோசனைகள் மொத்தமும் பெளத்ததில் சென்று கலந்து விடுகிற காலத்தில், அதிலிருந்து விலகி ஆசீவகத்தை நோக்கி நகர்ந்தது எனக்கு அவர் மீது பெரும் மதிப்பையும் ஆச்சரியத்தையும் அளித்திருந்தது.

இதனால் அவர் மாற்று யோசனைகளின் மாற்றாகவும் விளங்கியிருந்தார்.  பெருஞ்சமயங்களுக்கு எதிரான இந்திய மாற்று  - ‘பெளத்தம்’, என்ற நீரோடையிலிருந்து நெடுஞ்செழியன் விலகியதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன என்று நான் நினைக்கிறேன்.  ஒன்று, பூரண தமிழ்ச் சிந்தனை மரபொன்றை (பெளத்தமும் சமணமும் வேற்றுமொழிச் சிந்தனை மரபுகள்) வரலாற்றிலிருந்து வடிவமைக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்; இரண்டு, அது என்றென்றைக்கும் அதிகாரத்திலிருந்து விலகி இருந்திருக்க வேண்டும் என்றும் நம்பினார்.  

அந்த வகையில் ஆசீவகம், எல்லா வகையான மேலாதிக்கத்திலிருந்தும் விலகியே இருந்திருக்கிறது.  வரலாற்றில் அதை எந்த அரசும் ஆதரித்ததற்கான சான்றுகள் இல்லை;  அரசு மட்டுமல்ல, வெகுஜனத் தளத்திலிருந்தும் கூட ஆசீவகச் சிந்தனையாளர்கள் விலகியே நின்ற சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன.  பெருஞ்சமயங்களின் சாகரமாக விளங்கும் இந்தியச் சிந்தனை நீரோட்டத்தில் ஆசீவகத்திற்கான மரியாதை, கேலிக்கும் கண்டனத்திற்கும் அவதூறுகளுக்குமானது என்பதில் சந்தேகமில்லை.  ஏனெனில், நேரடியான ஆசீவகப் பிரதிகள் எவையும் நமக்குக் கிடைப்பதில்லை.  ஆசீவகத்திற்கு எதிராக எழுதப்பட்ட கண்டனங்களிலிருந்தும், வசைகளிலிருந்துமே நாம் அதனை ஒருவாறு யூகித்துக் கொள்கிறோம்.  இந்திய சிந்தனை மரபில் ஆசீவகத்திற்கு வழங்கப்படும் இடமும் அந்தஸ்தும், நவீன இந்தியாவில் தமிழகத்திற்கு வழங்கப்படும் இடத்தையும் அந்தஸ்தையும் ஒத்தது என்ற யோசனை நெடுஞ்செழியனின் பிரதியெங்கும் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.  

இச்சூழலில், ஆசீவக ஆய்வுகளில் நெடுஞ்செழியன் முன்வைக்கும் கருதுகோள்கள் மரபை மீறிய, சாகச குணம் கொண்டவை.  உதாரணத்திற்கு, அவர் இந்தியா முழுமைக்கும் கிடைக்கப்பெறாத ஆசீவக நேரடிப் பிரதிகளை தமிழ் சங்க இலக்கியப் பாடல்களில் கண்டறியத் தொடங்குகிறார்.  ஏராளமான புறநானூற்றுப் பாடல்களுக்கு அவர் அளிக்கும் விளக்கங்கள் அவற்றை ஆசீவகச் சிந்தனைப் போக்கில் வாசிக்கத் தூண்டுகின்றன.  உதாரணத்திற்கு, பகுத காச்சாயனர் என்ற ஆசீவகச் சிந்தனையாளரை புறநானூற்றுப் பாடலாசிரியர் பஃகுடுக்கை நன்கணியாராக அவர் சித்தரிக்கத் தொடங்குவது புதிய வெளிச்சத்தை அளிக்கக்கூடியது.  அதன் தொடர்ச்சியாக, மற்கலி கோசரையும் புஷ்கரையும் பூரணரையும் மருகால்தலையில் வீற்றிருக்கும் அய்யனார் - பூர்ணா - புஷ்கலா தம்பதிகளிடம் கொண்டு வந்து நிறுத்தும் இடம் நம்மைச் சலனப்படுத்துவது.  

அந்த வகையில், இந்தியச் சிந்தனை மரபின் ஒடுக்கப்பட்ட அதே நேரம் கலகக் குணம் கொண்ட சிந்தனை மரபாக தமிழை யோசிக்கும் வகையில் அவர் ஆசீவகத்தைக் கையாண்டார் என்பதே உண்மை.  அவருக்கு என் பூரண மரியாதையும், அஞ்சலியும்.

https://aerithazh.blogspot.com/2022/11/blog-post_4.html

*

2.

க.நெடுஞ்செழியன் எனும் தமிழ் ஒளி!.

: இரா. மன்னர் மன்னன்.

இந்திய வரலாற்றில் மறைந்து போன மதங்களில் ஒன்று ஆசீவகம். சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாம் அறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு. 

ஆதிநாதர் முதலான 23 தீர்த்தங்கரர்கள் ஜைனர்கள், ஆசீவகர்கள் - ஆகிய இருவருக்கும் பொது. இதனால்தான் இவர்கள் இருவருமே சமணர்கள்.

ஆனால் ஜைனருக்கு மகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர், ஆசீவகர்களுக்கோ மர்கலி 24ஆவது தீர்த்தங்கரர். உண்மையில் ஆசீவகம் ஜைனத்தின் போட்டி மதம். ஆனால் பின்னர் நலிவடைந்த ஆசீவகத்தை, ஜைனம் கைப்பற்றி சுவடே தெரியாமல் போகுமாறு செய்தது. 

அப்படியாக அழிந்து போயிருந்த ஆசீவக வரலாற்றை அதன் கடைசி சல்லிவேரில் இருந்து மீட்டு எடுத்தவர் ஆய்வாளர் க.நெடுஞ்செழியன் அவர்கள். அவரது மறைவின் நாளில் அவரது ஆய்வைப் பற்றி தமிழர்களுக்குக் கூறுவதே அவருக்கான சிறந்த மரியாதையாக இருக்கும் என நினைக்கிறேன்.

தலைமுடியை தனது கைகளால் பிய்த்து (மயிர் பறித்து) மொட்டைத் தலையோடு துறவிகளாகும் ஜைனர்களும், நீண்ட தலைமுடியோடு உள்ள ஆசீவகர்களும் ’சமணர்’ - என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் வழிபாடுகள் கொள்கைகள் வேறுவேறு. ஜைனர்களும் பவுத்தர்களைப் போல ’வானத்தை பூதமாக ஏற்க இயலாது, மொத்தம் 4 பூதங்களே’ - என்ற போது, ’வானமே முக்கியமானது, மொத்தம் 5 பூதங்கள்’ - என்று சொன்னவர்கள் ஆசீவகர்கள். 

எதையும் விவாதித்து விளக்கும் மரபினர் ஆசீவகர்கள், இவர்கள் வசித்த இடங்களான ‘பள்ளி’கள் மக்களுக்குக் கல்வி கொடுத்ததன் தொடர்ச்சியாகவே பின்னர் கல்வி நிலையங்களுக்கு ‘பள்ளி’ என்ற பெயர் வந்தது. 

மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக ஆசீவகர்களைப் பல்வேறு இலக்கியங்கள் குறிக்கின்றன, குறிப்பாக மனநல மருத்துவத்தில் இவர்கள் நிபுணர்களாக இருந்துள்ளனர்.

ஆனால் ‘தீமை என்ற ஒன்று இல்லை, எல்லாம் ஊழ்’ - என்ற வினைக் கோட்பாடு இவர்களை வீழ்தியது. மக்கள் பரிகார லஞ்சங்களோடு வந்த பிற மதங்களின் பக்கம் ஈர்க்கப்பட, அறிவார்ந்த மதமான ஆசீவகம் அழிந்தது.

கி.மு.5-3ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவரை செல்வாக்கோடு இருந்த ஆசீவகம், 13-15ஆம் நூற்றாண்டுகளில் பெரும் தேய்வை சந்தித்தது. ஆசீவகம் கடைசி மூச்சை விட்ட இடமும் தமிழகம்தான்.

தமிழகத்தில் ‘சமணர் கழுவேற்றம்’ - என்று சொல்லப்படுவது பெரும்பாலும் ஆசீவகர் கழுவேற்றமாகவே இருந்துள்ளது, அதற்கு சடைமுடியோடு ஆசீவகர்கள் கழுவேறும் சிற்பங்களும் ஓவியங்களும் சான்றுகளாகின்றன.

அதுபோல சமணர் ஓவியம் என்று சொல்லப்படும் சித்தன்னவாசல் குகை ஓவியங்களிலும் முடிநீண்ட ஆசீவகர்களே உள்ளனர்.

தமிழகத்தில் ஆசீவகர்கள் சங்ககாலத்தில் இருந்தே வாழ்ந்து வருகின்றனர். கி.மு.5ஆம் நூற்றாண்டுவரை பழமையானது எனக் கருதப்படும் மாங்குளம் கல்வெட்டில் சமணர் என்ற பெயர் காணப்படுகின்றது. இவர்களின் சான்றுகளைத் திரித்துதான், ‘தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்தே ஜைனர்கள் உள்ளனர், வடக்கில் இருந்து தமிழருக்கு எழுத்தை அறிமுகப்படுத்தியவர்களே ஜெயினர்கள்தான்’ - என்ற கூற்று முன்வைக்கப்பட்டது.

தங்களுக்கு மொழி இல்லாத காரணத்தால்தான் ஜைனர்கள் சமஸ்கிருதத்தையும் பிராமி எழுத்தையும் எடுத்துக் கொண்டனர் - என்பதுதான் வட இந்திய வரலாறு. ஆனால் எழுத்தே இல்லாதவர்கள் நமக்கு எழுத்து கொடுத்தவர்களாக சித்தரிக்கப்பட்டனர். நாமும் நம்பி வந்தோம்.

அதை உடைத்து, ’சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்தவர்கள் ஜைனர்கள் அல்ல ஆசீவகர்கள். ஆசீவகம் தமிழரின் அறிவை வடக்குக்கு கொண்டு சென்றது, வடக்கில் இருந்து எழுத்தோ, வானியலோ இங்கு வரவில்லை’ - என்று சான்றுகளோடு எழுதியவர் க.நெடுஞ்செழியன் அவர்கள். இதற்காகவே தமிழினம் ஐயா அவர்களுக்குக் கடமைப்பட்டு உள்ளது.

தமிழின் பெயரால் தமிழை அழித்துப் பிழைப்பவர்கள் மத்தியில், தமிழுக்காக வாழ்ந்து மறைந்திருக்கிறார் க.நெடுஞ்செழியன் அவர்கள். நினைவை ஏந்துவோம்!.

https://aerithazh.blogspot.com/2022/11/blog-post_5.html


*

3.

அறிஞர் க.நெடுஞ்செழியன் ஆய்வாளர் மட்டுமல்ல; சமூகப் போராளியும்கூட.

:பேரா சே.கோச்சடை.

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அன்பில் படுகை கிராமத்தில் பிறந்தவர்.இவர் குடும்பம் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்துடன் நெருக்கமாக இருந்தது.பேராசிரியர்  இளமையிலிருந்தே பெரியார் கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தவர்.பேராசிரியர் சக்குபாயைக் காதலித்துச் சாதிமறுப்புத் திருமணம் செய்து  கடைசிவரையில் கருத்தொருமித்து வாழ்ந்தவர். தமிழ் மொழி,இனம், பகுத்தறிவு ஆகியவற்றில் பிடிப்போடு பரப்புரை செய்தவர். சொல் ஒன்று செயல் வேறாக நினைக்காதவர். ஈழ விடுதலைப் போரில் புலிகளை ஆதரித்ததால் இந்திய ஒன்றிய அரசின் கடும் சித்திரவதைகளுக்கு ஆளானவர்.தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையில் பணியாற்றியபோது இராசீவ்காந்தி கொலையை ஒட்டி கர்நாடகத்தைப் பிடிக்கச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக்  கைது செய்யப்பட்டுக் கர்நாடக மாநிலச் சிறையில் அடைக்கப்பட்டார்

இரண்டரையாண்டுகள் அங்கே கழித்தார்.தமிழ்ப் பல்கலைக் கழக வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு வேலை செய்துவிட்டுத் தஞ்சையிலும் திருச்சியிலும் தங்கியிருந்தவரைக் கர்நாடகாவில் இருந்து, வேறு சிலருடன் சேர்ந்து சதி செய்ததாகப் பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது அரசு.தக்க ஆவணங்களைக் காட்டி வாதாடியும்கூட, கண்ணில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டிருக்கும்  நீதித்துறைக்கு அச் சான்றுகளைப் பார்க்க முடியவில்லை.

    ஒரு மகனும்  இரண்டு மகள்களும் பெற்ற அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காகப் போர் புரியப் பொறியியல் பட்டம் பெற்ற தன் மகனை அனுப்பினார்கள். அவர் அங்கே ஈகியானார்.

விடுதலைப் புலிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் மற்ற தலைவர்களுடன் சேர்ந்து செயல்பட்டார்.தமிழகத்துக்கு வந்து பேராசிரியர் உதவியோடு பொருட்களை வாங்கிக்கொண்டு ஈழம் திரும்பிய பதினேழு புலிகள் இந்தியக் கடற்படையின் இரண்டகத்தால் நடுக்கடலில் சயனைடு  அருந்தித் தற்கொலை செய்துகொண்டதை அறிவோம். அவர்கள் தோழர் வீட்டுக்கு வந்து திரும்பியபோது நடந்த துன்பியல் நிகழ்வு அது.அஞ்சா நெஞ்சர் அவர்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தில் கெடுவாய்ப்பாக அவர் எங்களுக்கு எதிரான அணியில் இருந்தார். ஆனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரால் பதவி அடைந்தவர்கள் அவருக்குக் குரல் கொடுக்கவில்லை.மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் முனைவர்.சுரேஷ் வாயிலாக எங்கள் தலைவர் கே.ஜி.கண்ணபிரான் அவருக்காக வாதாட கண.குறிஞ்சி உள்ளிட்ட நாஙகள் முயன்றோம். அப்போது சேலத்தில்  மாநிலச் செய்குழுக் கூட்டம் நடந்தது.புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் தோழர் சங்கரசுப்பிரமணியன்ஆசிரியர் கழகப் பொதுச்செயலர். நாங்கள் செயற் குழுவில் பேசித் தீர்மானம் நிறைவேற்றித் தமிழ் நாடெங்கும் அவரை விடுதலை செய்யக் கோரிக் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். 

   ம.கோ.இரா.அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த பொன்னையன் ஆசிரியர்களுக்கு எதிரான போக்குள்ளவர்.திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் ஈழப் போராளிகளுக்கு ஆதரவாக மறியல் செய்ததற்காகப் பேராசிரியர் நெடுஞ்செழியனையும், நக்சலைட் என்று என்னையும் பொன்னையன் பழி வாங்கும் இடமாற்றம் செய்தார்.சேலம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு 1987இல் மாற்றப்பட்ட நாங்கள் அங்கே ஒரு பண்ணையின் மாட்டுக் கொட்டகையை வாடகைக்குப் பிடித்துச் சமைத்து உண்டு, கல்லூரியில் இரவுக் காவலர்களுடன் படுத்து எழுந்தோம். வெள்ளிக் கிழமை மாலையில் ஊருக்கு வந்துவிட்டுத் திங்கட்கிழமை காலை ஆத்தூருக்கு வருவோம்.நான் காரைக்குடியில் இருந்து பேருந்து ஏறித் திருச்சியில் அவருடன் காலை ஆறரை மணிப் பேருந்தைப் பிடித்துச் செல்வோம்.எளிமையானவர்.

அப்போது ஆத்தூர் கல்லூரியில் உள்ளூர் ஆசிரியர்கள் ஆதிக்கம் செய்தனர்.மாணவர் நலனில் அக்கறை இல்லை.ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுக்காததால் எழுத்துத் தேர்விலும் செய்முறைத் தேர்விலும் பணம் விளையாடியது.நாங்கள் ஆசிரியர் கழகத்தில் பேசித் தீர்மானம் போட்டுக் கல்லூரிப் பாடங்களை ஆசிரியர்கள் ஒழுங்காக நடத்த வைத்தோம்.அவர் சிறைச்சாலையை அறச்சாலை ஆக்கிய மணிமேகலையைக் கற்பிப்பவர் அல்லவா? 

பல்கலைக் கழகத் தேர்வுகளில் நடக்கும் நேரத்தில் நாங்கள் ஊருக்கு வந்துவிட்டோம்.அப்போது முதன்மைத் தேர்வுக் கண்காணிப்பாளராக இருந்தவர் இவருடைய துறைத் தலைவர்.பகலில் தேர்வு நடந்த பிறகு நன்றாகத் தேர்வு எழுதாதவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு,அவர்களை இரவில் வரச் சொல்லி,பழைய தாள்களை உருவி எடுத்துவிட்டுப் புதிய தாள்களைக் கொடுத்துப் பார்த்து எழுதவைத்துச் சேர்த்திருக்கிறார்.இது கல்லூரி இருக்கும் வட சென்னிமலையில் பலருக்குத் தெரிந்திருந்தது.நாங்கள் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தைக் கூட்டிப் பேசிச்  சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு முறையீடு விடுத்தோம்.எங்கள் ஆசிரியர் தலைவர்கள் வாயிலாக விசாரணை ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. எங்களுடன் வேறு சில ஆசிரியர்களும் சென்னைக்கு வந்து சான்றளித்தனர் .1987 முதல்1989 வரை நாங்கள் அங்கே பணியாற்றிய இரண்டு ஆண்டுகளும் நல்ல தேர்ச்சி. 

அங்கே நாங்கள் இருந்தபோது பரிபாடலில் பெருவெடிப்புக் கொள்கைக்கான முற்கோள் (hypothesis).இருந்ததைக் கண்டார்.நான் இயற்பியலுடன் தமிழும் படித்தவன் என்பதால் அந்தப் பகுதியை நான் விளக்கினேன். அப்புறம் அதில் பரிணாம வளர்ச்சி பற்றியும் சொல்லப்பட்டுள்ளது என்று விளக்கியிருர்தார்.என் பங்கு இதில் சிறிதெனினும் என் பெயரையும் சேர்த்தே அக் கட்டுரையை வெளியிட்டார் .

பேராசிரியரின் ஆராய்ச்சி  எழுத்துப் பணி மிகவும் சிறப்பானது.ஆசீவகம் என்ற தமிழர் மெய்யியலை இலக்கியச் சான்றுகளுடன் களப்பணி ஆய்வும் செய்து நிலைநாட்டினார்.அதில் குறை காண்பார்கள் உண்டு.ஆனால் அவரது ஆய்வு புது வெள்ளம் போன்றது.நுங்கும் நுரையும் குப்பையும் கூளமுமாகத்தான் ஆறு தொடங்கும்.ஓட்டத்தில்தான் நீர் தெளியும். பேராசியரது முன்னெடுப்பை மேலும் பலர் தொடரும் நிலையில் கால ஓட்டத்தில் தமிழர் மெய்யியல் முழுமையாக நிறுவப்படும். அவருக்கு வீர வணக்கம்.

https://aerithazh.blogspot.com/2022/11/blog-post_6.html


*

நன்றி:

பேரா டி.தர்மராஜ்,

பேரா சே.கோச்சடை,

ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் ஆகியோரது பதிவுகள்.


ஏர் மகாராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக