வெள்ளி, 2 நவம்பர், 2018

குறுந்தொகைச் சமூகத்தைத் தேடி :- ப.கலாநிதி

குறுந்தொகை என்பது தமிழில் எழுதப்பட்ட உலக இலக்கியம். ஏறக்குறைய இன்றைக்கு தமிழில் எழுதப்படும் எல்லா காதல் கவிதைகளுக்குமான தாய்க்கரு குறுந்தொகையே என்பது என் தாழ்மையான கருத்து. எல்லாவற்றுக்கும் மேலாக குறுந்தொகைக் கவிதைகளின் அழகியலும் இலக்கியச் செறிவும் தெவிட்டாத தேன்; தீராத கள்.

குறுந்தொகையில் யாருக்கும் பெயர்கள் இல்லை; யாருக்கும் சாதிகள் இல்லை; யாருக்கும் மதங்கள் இல்லை.

காதலித்தாலோ அல்லது காதலித்த பெண்ணையே கல்யாணம் செய்தாலோ ‘கொல்லப்படுவோம்’ என்கிற அச்சம் குறுந்தொகைக் காதலர்களுக்கு இல்லை.

’வாழ்க்கையில் அவசரப்படாதீர்கள். பெற்றோர்கள் வரன் பார்க்கும் வரை காத்திருங்கள்’ என்று இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் அறிவிப்புப் பலகைகள் அக்காலத்தில் இருந்திருக்கவில்லை. பெற்றோர்களே வரன் பார்க்கட்டும் என்று 35 வயது வரைக்கும் காத்திருக்கும் குழந்தைகள் அக்காலத்தில் இருந்திருக்கவில்லை.

தெருவுக்குத் தெரு, பிரிவுக்குப் பிரிவு இயங்கும் திருமணத் தகவல் மையங்கள் அக்காலத்தில் இருந்திருக்கவில்லை. ஜாதகக் கட்டங்களை தூக்கிக் கொண்டு, தகவல் மையங்களுக்கும், சுயம்வர நிகழ்ச்சிகளுக்கும் நடையாய் நடக்கும் குடும்பங்கள் அக்காலத்தில் இருந்திருக்கவில்லை.

நிர்வாணத்தை மறைக்க நினைத்தபோதுதான் ஆபாசம் பெருகியது. காதலுக்கு தடைபோட நினைத்தபோதுதான் திருமணத் தடைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

மரபுத் தமிழ்ச் சமூகத்தைப் பொருத்தவரை, காதலில் இரண்டே வகைதான். ஒன்று கற்பு, இன்னொன்று களவு.

‘நாங்களிருவரும் காதலிக்கிறோம், திருமணம் செய்துகொண்டு வாழப் போகிறோம். இதை ஊருக்கு அறிவிக்கிறோம். வந்து வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள்’ என்று சொல்வது கற்பு மணம்.

‘நாங்களிருவரும் காதலிக்கிறோம், திருமணம் செய்துகொண்டு வாழப் போகிறோம். இதை ஊருக்குச் சொல்ல வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. நீங்கள் உங்களின் பாதையில் செல்லுங்கள், நாங்கள் எங்களின் பாதையில் செல்கிறோம்’ என்று சொல்வது களவு மணம்.

இப்படி இருந்தவரைக்கும் எல்லாமே ’சுபம்’தான்.

’என்னைத் தாலாட்ட வருவாளா’ எனப் பாடிய காதலுக்கு மரியாதை தலைமுறையில் இருந்து வந்தவன் நான். எது காதல் என்றே தெரியாத ஒரு தலைமுறை கண் முன் உருவாகி வருவதைப் பார்க்கிறேன்.

இந்தத் தலைமுறைக்கு எது காதல் என்பதை அறிமுகப்படுத்த இங்கே சரியான ஏற்பாடுகள் இல்லை என்றே நினைக்கிறேன். பெற்றோர்கள் மறைக்க நினைக்கிறார்கள். ஊடகங்கள் தவறாக வழிநடத்துகின்றன. வகுப்பறைப் பாடங்கள் மனப்பாடப் பகுதிகளாகிவிட்டன.

செய்தித்தாள் படிக்கும் பழக்கமில்லாத இந்தத் தலைமுறைக்கு, செறிவான தமிழ் இலக்கிய படைப்புகள் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கின்றன.

சாதீய அடுக்குகள், பொருளாதாரக் கணக்குகள், அழகியல் எதிர்பார்ப்புகள் போன்ற எல்லாவற்றிற்கும் அப்பால் ஒரு காதல் உண்டு என்பதை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

காதல் உறவு என்பது காரணங்கள் அற்றது என்பதையும், வாழ்க்கைத் துணை என்பது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இது ஊர்கூடி தேரிழுக்கும் வேலை. ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டிய பணி. அதன் தொடக்கமாக வரவிருக்கும் ‘குறுந்தொகை’ காணொளிகள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

எதிர்காலத்தில் என் மகன் குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தனாக இருப்பானெனில் பெருமகிழ்ச்சியடைவேன்.

ஓவியம்:
கார்த்திகேயன்

1 கருத்து:

  1. காதல் குறித்த இன்றைய குமுகம் புரிந்துள்ளவையும் புரிந்து கொள்ள தவறியவை என்று பதிவு செய்துள்ளார்.

    பதிலளிநீக்கு